நட்சத்திரா 12 – 3

அந்தப் பூங்கா முடிவு வரும் வரை எதுவுமே கதைத்துக்கொள்ளவில்லை. வீடு செல்லும் பாதையில் திரும்பியவள் ஓட்டம் மெதுவாக, அவளுக்கேற்றபடி மெதுவாகினான், டேமியன்.

“வன்னிக்க கடைசிச் சண்டை நடந்த நேரம் அப்பாவும் தம்பியும் இறந்தவே. என்ன மட்டும் பக்கத்து  வீட்டு அன்ரி ஆக்களோட அனுப்பி விட்டவா  அம்மா. இல்லாட்டி நானும் சிலவேளை செத்திருப்பன்.” என்றவள், “செத்திருக்கலாம்” என்றிருந்தாள். குரலில் அத்தனை இறுக்கம். 

பார்வையில் அலைப்புறுதலோடு சொல்லிவிட்டவள், “ ச்சே ச்சே! பிறகு அம்மா தனிய என்ன செய்திருப்பா? நல்ல காலம் நான் சாகேல்ல.” என்றாள், தழுதழுப்போடு. 

அவள் சொன்ன விதத்தில் திகைப்போடு நின்றான், டேமியன்.

“பிறகு, அந்த அன்ரி வீட்ட  இருந்துதான் வளந்தன் டேமியன். அவவிட மகன், என்ர நல்ல ஃப்ரெண்ட். தாறுமாறாச்  சண்டையும் பிடிப்பம். இப்ப அவருக்கு நாலு பிள்ளைகள். அங்க யாழ்ப்பாணத்திலதான் இருக்கிறான்.  தாயாப்  பிள்ளையாப்  பழகினாலும் தொடர்பு விட்டுப்போச்சு. ப்ச்” என்றபோதும் குரலில் கடும் இறுக்கம். சொந்தப்பிள்ளையாகப் பாசம் காட்டிய அதே அன்ரி, தீண்டத் தகாதவள் போல் ஒதுக்கியதும், “தப்பித் தவறியும் எக்காலத்திலயும் உன்ர தொடர்பு எங்களுக்கு வேணாம்.”  என்றதும் உயிர் இருக்கும் வரை மறுக்கவியலாத ஒன்றாச்சே!  

“ஓ!” என்று கேட்டுக்கொண்டான், இவன்.

“அதைவிட …உப்பூபூபூ ” ஆரம்பித்தவளால் அதைப்பற்றி இரண்டாம் நபரிடம் அவ்வளவு இலகுவாகக் கதைக்க முடியவில்லை. இதுவரை, தாயிடம் கூடப்  பகிர்ந்ததில்லையே! 

மறுபுறம் திரும்பிக்கொண்டாள். கண்ணீரை அடக்க முடியவில்லை. நட்பு மட்டுமா? அவளுக்கு எல்லாவுமாக இருந்தவன், இருப்பேன் என்றவன்  சூர்யா! விழிகள் உடைப்பெடுத்தன.  சற்றே வானைப் பார்த்தவாறு முகம் நிமிர, அழுத்தமாகத் துடைத்துக் கண்களின் கசிவை நிறுத்த முயன்றாள். 

டேமியானால் அவள் படும் வேதனையைப் பார்த்திருக்க முடியவில்லை. மனத்தில் வைத்துக் குமைந்து கொண்டிராது கதைத்துவிட்டால், சூர்யாவின் நினைவுகளை விட்டு விலகி வந்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்பில்தான் அந்தக் கேள்வியையே கேட்டான். ஆனால், இப்படி வேதனைப்படுகிறாளே! 

“ ஒண்டும் சொல்லத் தேவேல்ல கல்யாணி. வாங்க போவம்! சொறி, விடியவெள்ளன உங்கட மூட் ஸ்பொயில் பண்ணிட்டன்.” நகர்ந்து அவள் முன்னால் வந்து நின்று பரிவோடு சொன்னான். அதுகூட அவள் கண்ணீரைத்  தூண்டிவிட்டிட்டு.

“பச்! தொடங்கிட்டன், சொல்லிருறன் டேமியன். இவ்வளவு வருசங்களில ஒருநாளும் ஆரோடயும்  நான் இதப் பற்றிக் கதைக்கேல்ல. அதான்…” தன்  வேதனையை மறைத்துச் சிரிக்க முயன்றாள்.

“சூர்யா!  எனக்கு நெருக்கமான ஃ பிரெண்ட். அதுமட்டும் இல்ல, என்ர வாழ்க்கையில எல்லாமாக இருந்தவர். நான் இருந்த வீட்டு  அன்ரிதான் அப்ப எனக்குப் பொறுப்பு. அவவிட்ட வந்து கலியாணம் செய்ய விருப்பம் எண்டு கதைச்சார். தன்ர வீட்டிலயும் கதைச்சார். ரெண்டு பகுதியிலும் சம்மதமும் சொல்லியாச்சு.” என்றுவிட்டு, கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.

“ஆனா… எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பின வேணும் எல்லா டேமியன்? அவரப் போல ஒரு நல்ல மனிசனோட வாழ்நாள்  முழுசும் சேர்ந்து வாழுறதுக்கு எனக்குத் தகுதியில்ல. அது விளங்கின அண்டே நான் விலகிட்டன்.  இப்ப, அவருக்கும்  ரெண்டு பிள்ளைகள் இருக்கினம். ஒரு பொம்பளைப்பிள்ள மற்றது ஆம்பளைப்பிள்ள.” படபடவென்று  சொன்னவள் குரல், கண்ணீரையும் கடந்து கனிந்திருந்தது . எங்கோ பார்த்தபடிதான் சொன்னாள்.

கேட்டு நின்ற டேமியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளைத் தன் கைவளைக்குள் கொண்டுவந்து ‘நீ ஒண்டும் தனியில்ல, தகுதி குறைந்தவளும் இல்ல’ என்று உணர்த்த விரும்பினான். சற்றே அருகில் சென்று நின்றவனுக்கு, அந்தத்  தைரியம் மட்டும் வரவே இல்லை. தயை தாட்சண்யம் இன்றி உதறிவிட்டுத் தள்ளிச் சென்றுவிடுவாளே!

தானாக மீட்டுக்கொண்டு அவனிடம் திரும்பினாள், அவள்.

 “இப்ப எண்டா நீங்க மட்டும் தான் ஃப்ரெண்ட். போதுமா? வாங்க போவம்.”  மீண்டும் நகரத் தொடங்கியவள், அவன் அசையவில்லை என்றதும், “இன்னும் என்ன?” என்றாள்.

“ஒண்டு கேட்டாக் கோவிக்கக் கூடாது கல்யாணி. சரியா?” என்ற பீடிகையோடு ஆரம்பித்தவன், அவள் தலையாட்டலுக்குக் கூடக் காத்திருக்கவில்லை.

 “இன்னும் அந்தச் சூர்யாவ நினைச்சுக்கொண்டா இருக்கிறீங்க?” நெற்றி சுருங்க அவன் கேட்ட விதத்தில் சின்னச் சிரிப்போடு பார்த்தாள், அவள்.

“ப்ச்! பியங்காவ  நீங்க மறந்திட்டிங்களா டேமியன்? இல்ல, மறக்கத்தான் ஏலுமா?” பதில் கேள்வி கேட்டாள், கல்யாணி.

“அதெப்பிடி? நான் இருக்கிற வரைக்கும் இங்க அவள் இருப்பாள்.” சற்றும் யோசியாது, நெஞ்சைத் தொட்டுக் காட்டியபடி சொன்னான், அவன்.

“அப்பிடித்தான் டேமியன் சூர்யாவும் எனக்கு.”

“நோ… அதெப்பிடி? பிரியங்கா என்ர ஃ வைப். சூர்யா அப்பிடி இல்லையே  கல்யாணி!” பட்டென்று சொல்லிவிட்டான், அவன்.

கேட்டவள் முகம் கறுத்துப்போயிற்று.

“அது உங்களுக்கு டேமியன்.  எனக்கு அப்பிடி இல்ல. கலியாணம் செய்யேல்ல எண்ட ஒண்டுக்காக அவரோட பழகின நாள்கள மறக்கோணுமா என்ன? அவர விரும்பத் தொடங்கினதில இருந்து, வேற்று ஆளா நான் நினைச்சதே இல்ல.  நான் எத்தினையையோ கடந்து வந்துதான் இண்டைக்கு இப்பிடி நிக்கிறன் டேமியன். இந்தக் கல்யாணி இப்பிடி இண்டைக்கு நிக்க, நடமாட, அண்டைக்கு அவரோட பழகின நாட்களிட நினைவுகள் தான் துணையா நிண்டது. இப்பயும்  நிக்குது.” என்றவள், “என்னடா இப்பிடிச் சொல்லுறாளே எண்டு பிழையா நினைக்காதீங்க டேமியன். அவர் இப்ப உதயாட கணவர்…என்னைவிட எத்தனையோ மடங்கு அருமையான பிள்ள அந்த  உதயா. எப்பவும் அவவோட மகிழ்ச்சியா அவர் இருக்கோணும்.” என்றபோது, அவள் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்திருந்தன. 

“அதுக்காக நான் அவரோட பழகின நாட்கள, அவர மறக்கத் தேவேல்ல தானே?அவர் எங்கயோ நான் எங்கயோ இருக்கிறம். அந்த நினைவுகள் மட்டும் எனக்குப் போதும்!” என்றபோது, அந்தக் குரலில் இருந்த உறுதி இவனுக்குச் சினம்தான் கொடுத்திட்டு.

“உங்களுக்கு என்ன விசரா கல்யாணி? ஏதோ ஒரு காரணத்தால சரிவராது எண்டு விலகி வந்திட்டு, அந்த நினைவு வாழ்க்க முழுசுக்கும் போதும் எண்டுறீங்க? தனியா வாழுறது எண்டுறது என்ன அவ்வளவுக்கு சுகமான விசயமா? சுமதிம்மா இல்லாட்டி நினைச்சுப் பாருங்க. சுமதிம்மா உங்கள நினைச்சு  எந்த நேரமும் கவலைப்படோணுமா? நிதானமா யோசியுங்க சரியா. இப்ப நீங்கதான் சின்னப்பிள்ளைபோல கதைக்கிறது. வயசு போன பிறகு கதைக்கிறதுக்கு ஆள் இல்லாமல் தடுமாறேக்க காலம் கடந்துபோய்  இருக்கும் !” கண்டிப்பும் சிடுசிடுப்புமாகச் சொல்லியிருந்தான்.

“ஏன் தனியா? அப்பவும்  நீங்க இருப்பீங்க தானே, இப்பிடி?” பட்டென்று சொல்லிவிட்டாள், அவள்.

டேமியன் ஒரு நொடி திகைத்து விழித்தான். மறுநொடி, “அதைத்தானேப்பா நான் கேக்கவே வந்தனான். நான் எப்பவும் உங்களோட இருக்கத் தயார். நீங்களும் தயார் தானே?” விழிகள் சுருங்கிக் கிடக்க, அதில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிய   அவன் கேட்ட விதமிருக்கே!

அதிர்வோடு நின்றாள், கல்யாணி. நாக்கு அசையவில்லை. அவன்தான், “ கல்யாணி!” என்று அழைத்து அருட்டினான்.

“ உங்களிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கேல்ல  டேமியன். இதுக்குப் பிறகு, இதப் பற்றி ஒரு வார்த்த கதைக்க வேணாம். இதுக்கெல்லாம் நான் ஆள் இல்லையப்பா!” என்று சொன்னவள் குரலில் ,பாவனையில் அத்தனை கோபம்.

எதுவுமே சொல்லாது ஓட ஆரம்பித்துவிட்டவளை, இடுப்பில் கை வைத்துப் பார்த்துக்கொண்டு நின்றான், டேமியன்.

“டேய் கல்யாணி! ஃப்ரெண்டா எப்பவும் இருக்க ரெடி எண்டனான். நீங்க வேற எதாவது நினைச்சீங்களா என்ன?” கலைத்து வந்து மோதிய குரலில் சட்டென்று நின்றுவிட்டாள், அவள்.  அதேநேரம், மனத்தில் இருந்த அழுத்தமும் வலியும் சட்டென்று வழிந்ததில் அத்தனை சோர்வாக இருந்தது.

முழங்கால்களில் கைகளை ஊன்றிக் குனிந்து நின்றவள் தலையில் ஒரு தட்டோடு கடந்து ஓடியவன், “கொஞ்சத் தூரம்தான், வாங்க mio caro amico!(my dear friend)” சிரித்துக்கொண்டே சொல்லிச் சென்றான்.

error: Alert: Content selection is disabled!!