கல்யாணி தூரவே அவனைக் கண்டுவிட்டாள். தெரியாத பாவனையில் சட்டென்று தோட்டத்துள் இறங்கிச் சென்று விடு என்ற கட்டளை மனத்துள் வீழ்ந்தது. கேட்டாளா என்ன? அவன் முகத்தையே பார்த்தபடி முன்னேறினாள். அவனும் வலு இயல்பாகத்தான் வந்துகொண்டிருந்தான். போதாக்குறைக்கு, அருகண்மையில் வந்ததும் வலு மரியாதையாக வரவேற்றான்.
இயல்பு தொலைத்து நின்றாள், கல்யாணி. அதைக் கவனித்தவன் மனத்தில் துள்ளல். வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
“ அம்மா வந்திட்டா தெரியும் தானே? கொஞ்சம் அவசர வேலை, போயிட்டு வாறன் கல்யாணி.” என்று நகர்ந்தவனை விடாது, சட்டென்று அரங்கி அவன் முன்னால் நின்றவள், “ஏன் டேமியன் என்னோட ஒரு மாதிரி இருக்கிறீங்க? ஏதாவது கோவமா?” கேட்டுவிட்டாள். எவ்வளவோ முயன்றும் இயலாது விழிகள் ஊற ஆரம்பித்திருந்தன.
இதென்ன கதை என்ற கணக்கில் நெற்றி சுருக்கியவாறு பார்த்தான், அவன்.
“கோவமா? உங்களோடையா? இல்லையே! அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல கல்யாணி !” என்றவனுக்கு, தன் மனத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.
அவனையும் மீறி பெருமூச்செறிந்தான். இடக்கை இடுப்பில் அமர, வலக்கையால் தலையைக் கோதினான். அப்போதுதான் பார்ப்பதுபோல், தோட்டத்தின் அப்பாலும் இப்பாலும் பார்த்தபடி, பிடரித் தலையைக் கோதிக்கொண்டு நின்ற டேமியனைக் கல்யாணிக்குத் தெரியாது.
‘உண்மையிலும் ஏதாவது பிரச்சினை போல! இதுக்க நீ வந்து நிண்டுகொண்டு அலட்டுற கல்யாணி. ‘ என்று தன்னையே சாடிக்கொண்டு விடைபெற்று நகர நினைத்தாள்.
“டேமியன் …” என்று ஆரம்பிக்க அவளைப் பார்த்தவன், “நிறைய வேலைகள் கல்யாணி. அதோட, நீங்க நல்ல ஃப்ரெண்ட் எண்டு நினைச்சு நான் பகிடியா ஏதாவது சொன்னாலே வேற ஒரு அர்த்தம், வேற மாதிரி விளங்கிக் கோவிக்கிறீங்க! அதான் கவனமா இருந்திருந்திருவம் எண்டு நினைச்சன்.” என்றிருந்தான்.
அவ்வளவும் தான். இவளுக்கு முகம் இறுகிற்று.
“அப்பிடி நான் என்ன வேற மாதிரி விளங்கினன்? இஞ்ச பாருங்க, உங்களுக்குக் கதைக்க விருப்பம் இல்லையோ பிரச்சின ஒண்ணும் இல்ல. நான் இனிமேல் பட்டு நீங்க இருக்கிற பக்கமே பாக்க மாட்டன். அதைவிட்டுட்டு என்னில பழி போடுற வேலை இஞ்ச வேணாம் சரியோ! வேற மாதிரி விளங்கிறனோ! நீங்க ஃப்ரண்டா மட்டும்தான் நடந்தீங்க என்ன ? ம்ம்” படபடவென்று பொரிந்துவிட்டாள்.
அவளின் கோபத்தைப் பார்த்தவனுக்குத் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தான், டேமியன்.
“சிரிப்பா இருக்கோ? நீங்க என்ன சொன்னீங்க எண்டு விளங்கித்தான் சொன்னீங்களா டேமியன். நீங்க கதைக்காம விடுற அளவுக்கு அப்பிடி என்ன நான் பிழையா விளங்கிட்டன்? இஞ்ச நாங்க இருக்கிறது உங்களுக்குச் சிரமம் எண்டா, சொன்னாப் போயிருவம் சரியா? நான் ஏற்கனவே வீடு பாக்கத் தொடங்கிட்டன். கெதியா எழும்பிருவம். அதுக்குப் பிறகு எங்களச் சகிச்சுக்கொள்ள வேண்டிய அவசியமே இராது!” என்றவளை, இப்போ முறைப்போடு பார்த்தான், அவன்.
“இதென்ன அலட்டல் கதை கதைக்கிறீங்க? வீட்டுக்கதை எங்களுக்குள்ள எப்ப வந்தது? கோவம் வர வச்சிராதேங்க சொல்லீட்டன். வீடு பாக்கிறவாம் வீடு. ஏலும் எண்டா இஞ்ச இருந்து போய்ப் பாருங்கவன்.” அடிக்குரலில் உறுமிவிட்டு அவளைத் தாண்டிச் சென்றான்.
நாலெட்டு வைத்தவன், அதே வேகத்தில் திரும்பி வந்து அவள் முன்னால் நின்றான்.
அவன் உறுமலில் அவளுக்கு நெஞ்சுள் சில்லிட்டுப்போயிற்று. ஆரம்பத்தில் அறிமுகமாகியிருந்த டேமியன் இவன்தான். பயத்தில் அவன் கூறியதில் இருந்த உரிமையுணர்வு கருத்தில் பதியவில்லை.
“சொ…றி!” இந்த வார்த்தை, அவளையும் அறியாது திக்கலாக வந்தது. கண்களோரம் முத்தாகத் திரண்டிருந்த கண்ணீர் எந்நேரமும் வெளியில் உருள ஆயத்தம் என்றன.
தீர்க்கமான பார்வையால் அவளைப் பார்த்து நின்றான், டேமியன். சில கணங்கள்தான். அவள் சொன்ன ஒற்றை வார்த்தை ‘சொறி’ அவன் மனத்துள் இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விரட்டி விட்டிருக்க, இடக்கையால் அவளை அணைத்துக்கொண்டான்.
விதிர்விதிர்த்துத் திமிறி விலக முயன்றாள், கல்யாணி. தடுக்கவில்லை. முறுவலோடு கையை எடுத்துக்கொண்டவன், “எனக்குப் போய் சொறி எல்லாம் சொல்வீங்களா என்ன? வீடு பாக்கிறன் எண்டு சொல்லி இங்க அடிச்சிட்டீங்க கல்யாணி!” நெஞ்சைத் தட்டிக் காட்டியவன் கதைத்த விதத்தில் அத்தனை மென்மை.
“ப்ச்! ஆர் அடிபோட்டது? என்ர ஃப்ரெண்ட் தானே? வலி போயிரும்.” நெஞ்சைத் தடவிவிட்டுக் கொண்டவன், அவள் விழிகளோரம் தேங்கி நின்ற கண்ணீர் முத்துக்களை உருள விட்டான்.
அவளுக்குக் குரலே எழும்பவில்லை. அங்கிருந்து அசையவும் முடியவில்லை. அப்படியே சிலையாக நின்றிருந்தாள். ஒன்றுமட்டும் வெட்ட வெளிச்சமாக அவளுக்குப் புரிந்தது. டேமியன் என்பவன் அவளில் மிகவும் இலகுவாக ஆதிக்கம் செலுத்துகிறான். ஆழமாகவே! அவளோ, கையறு நிலையில் நின்று விழிக்கிறாள். அதுவும் கசப்புணர்வு இருப்பதாகவும் தெரியவிலையே! தடதடவென்று இதயம் அடிப்பது அவளுக்குக் கேட்க, அவனையே பார்த்து நின்றாள், கல்யாணி.
“பெரிசா அதையித நினைச்சுக் குழம்பாதேங்க ஃப்ரெண்ட்!” என்றவன், “ நீங்களே பாக்கிறீங்க தானே, சம்மர் வந்திட்டு. வேலை வேலை வேலை. வேற ஒண்டும் இல்ல. டேமியன் எப்பவும் ஒரே மாதிரித்தான் இருக்கிறான். இந்தக் கல்யாணி விசயத்தில் இனி எப்பவும் அவன் மாறமாட்டான்.”என்றவன் மனத்தில் இருந்த அன்பு, விழிகளால் கசிவதைத் தடுக்க முடியவில்லை.
அவள் தலையைப் பிடித்து அப்படியும் இப்படியும் ஆட்டிச் சிரித்தான். வெகு உரிமையாகக் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“கேள்விப்பட்டிங்களோ தெரியாது, ஒருக்கா நேரயே கூட்டிக்கொண்டுபோய்க் காட்டுவம் எண்டுதான் சொல்லேல்ல. புதுசா, குட்டியா, சிலோன் டேஸ்ட் சாளரினோவில(salerno) திறக்க எல்லா ஆயத்தமும் முடிச்சிட்டன். வாற சனிக்கிழமைதான் திறப்பு. நீங்க இல்லாமலா? வேலையிருந்தா லீவு சொல்லீருங்க. விடியப்புறமே நான் வெளிக்கிடேக்கக் கூட்டிக்கொண்டு போறன். ஒரு சாட்டும் சொல்ல ஏலாது சரியோ!” கன்னத்தில் மென்மையாகத் தட்டிவிட்டு, அவள் எதிர்வினையைப் பார்க்கும் துணிவு வராது விறுவிறுவென்று வெளியேறியிருந்தான், டேமியன்.
அவள்தான் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்.