Skip to content
விறுவிறுவென்று வந்து காரில் ஏறியமர்ந்த பின்னரே டேமியனின் தலை வீட்டை நோக்கித் திரும்பியது. கல்யாணி இன்னமும் அதே நிலையில்தான் நின்றுகொண்டிருந்தாள்.
மறுநொடி காரை இயக்கியிருந்தான். சிலோன் டேஸ்ட் நோக்கிச் சென்றுகொண்டிருந்தவன் கரத்தில் மெல்லிதாக நடுக்கம்.
அவள் மீதான உன் விருப்பம் அவளுக்குத் தெரியட்டும் என்றால் வெளிப்டையாகக் கதைக்க வேண்டும் . அதுதான் ஒரு முதிர்ந்த மனிதனுக்கு அழகு. இதென்ன வேலை செய்துவிட்டு வந்தாய்? எடுத்ததும் ‘ஃப்ரெண்ட்’ என்று சொல்லும் நீ, அந்தப் பிள்ளையை, பாம்பு என்று நினைத்துக் கடக்கவும் முடியாது கயிறு என்று நினைத்து மிதித்துவிட்டுச் செல்லவும் இயலாத ஒரு நிலையில் நிறுத்தியிருக்கிறாயே!
உள்ளம் சொன்ன உதாரணத்தில் முகம் சுளித்தான், டேமியன்.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கு. இல்லையோ, இருவருள்ளும் நல்ல நட்பிருக்கு, நாள்ப்போக்கில் நேசமும் பிடித்தமும் தன்பாட்டில் வந்துவிடும். கல்யாணம் செய்வோமா என்று கேட்பதை விடுத்து, என்ன வளவளவென்ற கதை பேச்சு வேண்டியிருக்கு?
மனம் போட்ட அதட்டலில் ‘கிரீச்’ என்று பிரேக்கிட்டிருந்தான். பின்னால் வந்த கார்களின் ஹோர்ன் ஒலி ரியர்வியூவில் மன்னிப்பைக் கேட்க வைத்தது.
காரை ஒதுக்கமாக நிறுத்தியவன், தலையைப் பிடித்துக்கொண்டான். எப்படித்தான் யோசித்தாலும் கல்யாணியின் சம்மதம் கிடைப்பது அவ்வளவு இலகுவல்ல என்ற முடிவே கிட்டியது. அதுதானே அவனை இப்படிச் சுற்றிச் சுழன்று அதையிதைச் செய்ய வைக்கிறது. தன்னை, தன் விருப்பை உணர்த்த இந்தப் பாடுபடவும் வைக்கிறது.
ஒன்று நிச்சயம். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கு. மதிக்கிறாள். அவனது பாராமுகம் அவளைப் பாதிக்கிறது, வெகுவாகவே. அவனைத் தேடுகிறாள். உச்சகட்டமாக அவனோடு கோபப்பட்டுக் கதைக்கிறாள்!
அதெல்லாம் கடந்து, இன்று, சட்டென்று அணைத்தானே, மிக மரியாதையான அணைப்புத்தான். மனத்துள் நட்பை மட்டுமே வைத்துக்கொண்டு அணைத்தான் என்று சொல்ல முடியுமா என்ன?
அதுவும் ஒரு எல்லை வகுத்துப் பழகும் கல்யாணியுடன் அப்படி நெருங்க எவருமே துணிய மாட்டார்கள். இவனோ, வலு உரிமையாக அவள் கண்ணீரை வேறு துடைத்துவிட்டிருந்தான். சற்றுமே யோசியாமல் செய்தவை அவை.
அதுபோலவே, அவள் சற்றும் யோசியாது இயல்பாக அவனிடம் வர வேண்டும். நிச்சயம் வருவாள். அடுத்த நாளே கல்யாணம்தான்!
இப்போது, அவன் நெற்றியில் இருந்த சுருக்கங்கள் விடுபட்டுவிட்டன. முகத்தில் மலர்வோடு உதடுகளில் முறுவல் வந்தமர்ந்து கொண்டது. காரை உயிர்ப்பித்தான்.
அவன் வீட்டிலோ…
பயணம் செய்த களைப்பில், கிறிஸ்டினா சற்று ஓய்வெடுக்க விரும்பினார். பிள்ளைகளில் மூத்த இருவரும் பாடசாலைச் சுற்றுலா சென்றிருந்தார்கள். வர இரவாகும். சின்னவள் வர நேரம் இருந்தது. டேமியன் அழைத்து வருவான். மதிய உணவும் வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தான். அதற்குள் சற்றே சரிந்து எழுந்துவிடும் எண்ணத்தில் முன் வாயில் கதவை மூடுவதற்காக வந்தார். அப்போதுதான், மகனும் கல்யாணியும் கேட்டடியில் நின்று கதைப்பது தெரிந்தது.
மிகத் தீவிரமாகக் கதைக்கிறார்களோ! வந்த வேலையை விட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டு நின்றார்.
தான் விட்டுச் சென்ற சில மாதங்களில் மகனில் உருவான தெளிவு , மாற்றம் கண்டவர் பழைய டேமியன் திரும்பிவிட்டான் என்றும் அறிந்துகொண்டார்.
கனடாவில் இருக்கையில், சிரித்துக் கலகலப்பாகக் கதைக்கும் அவன் முகம் கைப்பேசித் திரையில் தெரிந்த போதெல்லாம் அவர் மனம் நிறைந்து போயிற்று.
சரிக்குச் சமனாகத் தோள் கொடுக்கும் வாழ்க்கைத் துணையமைவது பெரும் வரம்! அது, தனக்கு உண்டு என்பான் டேமியன். இப்படியிருக்கையில், மனைவியின் மறைவில் முற்றாக நொறுங்கிப் போனவன், பியங்கா அவன் வாழ்வில் ஏற்படுத்திச் சென்ற இடைவெளியை நிரப்புவானா என்ற ஐயத்தோடும் பயத்தோடும் ஏக்கத்தோடும் இருந்தார், கிறிஸ்டினா.
சில தடவைகள் அதுபற்றிக் கதைக்க ஆரம்பித்துவிட்டு, மகனின் மூர்க்கமான பார்வையிலும் பதிலிலும் வாய்பொத்தி விடுவார்.
அப்படியிருக்கையில், பழைய டேமியனைக் கண்டதும் மகிழாமல் இருக்க முடியுமா? அது எதனால் என்ற ஆராய்ச்சி செய்யாது தான் இருக்க முடியுமா? விடை கல்யாணியுடனான பழக்கம் என்று கிடைத்திருந்தது.
பிள்ளைகளும் அவனும் கதைக்கையில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கல்யாணியின் பெயர் இழுபடாது இருக்காது. அவர்களும் அவருக்குக் கிடைத்த விடை சரியென்று உணர்த்தினார்கள்.
ஆனாலும் அந்தப் பழக்கம் இந்தளவுக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை. மூன்று வருடங்களுக்கும் மேலாக, இவ்வளவு அருகில், ஒரே வளவினுள் இருந்தும் நின்று நிதானித்துக் கதைத்து என்று அவர் அறிந்ததே இல்லையே!
அப்படியிருக்கையில் அவள் கலங்குவதும் அவன் கண்ணீரைத் துடைப்பதுமாக மாறும் என்று நினைக்கவில்லை.
என்ன என்றாலும் அவருக்குச் சுமதியிலும் கல்யாணியிலும் பிடித்தம் கடந்த மரியாதையுண்டு.
மகன் சென்றபின்னும் அவள் ஆடாது அசையாது நின்ற விதம் நெற்றி சுருங்க வைத்தது. யோசனையோடு அவளை நோக்கி வந்தார், கிறிஸ்டினா.
“ என்ன இதில நிக்கிறீங்க கல்யாணி? பிரச்சனை ஒண்டும் இல்லையே?”
திடுமென்று கேட்ட குரலில் விதிர்விதிர்த்துப் போனாள், அவள். பதில் சொல்ல வரவில்லை. அலங்க மலங்க முழித்தாள். சிலபல நொடிகள் கடந்த பின்னரே சுற்றம் உறைத்தது. கிறிஸ்டினாவின் ஆராயும் பார்வையில் மிகவுமே தடுமாறிப் போனாள்.
“இல்ல அன்ரி. இது…இது இந்தப் பூக்கண்டுகளப் பாத்துக்கொண்டு நிண்டனான். நான்தான் நட்டனான், வடிவா இருக்கு என்ன? அதை விடுங்க, பயணம் எல்லாம் எப்பிடி இருந்தது? அக்கா, பிள்ளைகள் எல்லாரும் சுகம் தானே? உங்கள மிஸ் பண்ணப் போகினம். இஞ்ச சின்னாக்கள் மூண்டுபேரும் நீங்க வாறீங்க எண்டோன்ன ஒரே துள்ளல்தான்.”என்று, பதில் சொல்ல இடம் தராது கதைத்தபடி நகர்ந்தாள். அவளின் செய்கையில் முறுவலோடு சேர்ந்து நடந்தார், கிறிஸ்டினா.
அடுத்து ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் வீட்டருகில் நின்று கதைத்திருப்பார்கள்.
error: Alert: Content selection is disabled!!