நட்சத்திரா 14 – 2

 

“சரி அன்ரி, அப்பப் பின்னேரம் கதைப்பம். இரவுக்கு ஒண்டும்  செய்ய வேணாம். நான் உங்களுக்கும் சேர்த்தே சமைச்சிருறன். போயிட்டு வாறன்.”  என்று விடைபெற்றவள், அப்போதும் தடுமாற்றம் அகலாதுதான் சென்றுகொண்டிருந்தாள்.

இரவு வேலை செய்துவிட்டு வருகிறாள் என்பது புரிந்தது. என்றாலும் இந்தளவுக்குச் சோர்ந்துபோய் அவளைக் கண்டதில்லை. ஏதாவது பிரச்சினையோ? அவள் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே வந்தார், கிறிஸ்டினா. 

அப்படியே அறைக்குள்  நுழைந்து படுக்கையில் சாய்ந்தவரின் எண்ணமெல்லாம் மகன் பற்றித்தான்.

அவர் மகள் ஜாக்குலின் கூட, “ அவனோட கதைக்கப் பயந்து இப்பிடியே இரு எண்டு விட்டிருவீங்களா? தானா லவ் பண்ணுவான் எண்டாலும் நான் நினைக்கேல்ல. சிரிச்சுக்  கலகலப்பா இருந்தாத் தானே ஆராவது அம்பிடுவினம். அதோட, டேமியனுக்குப்  பிள்ளைகளும் பிறக்காது. நாங்க அதை ஒரு  குறையாப்  பாக்காட்டியும் சனம்…மற்றவேய விட்டாலும் கட்ட வாற பொம்பளைகள் பாப்பினம் தானேம்மா?” என்றிருந்தாள். மகன் குறையைச் சுட்டிக்காட்டியதில் இவர் முகம் கன்றிச் சிறுத்துவிட்டது. 

அதைக் கவனியாத ஜாக்குலின், “விதவை, டிவோர்சி, ஏன் பிள்ளைகளோட இருந்தாலும் சரிதான். ஏற்கனவே மூண்டு பிள்ளைகளத்  தத்து எடுத்து வளக்கிறான். அதோட இவையளும் இருக்கட்டும். வேறென்ன சொல்லச்  சொல்லுறீங்க?”என்றவள், தாயின் அமைதியில் அவரைத் திரும்பிப்பார்த்தாள்.

“இதில கோவப்பட என்ன இருக்கு அம்மா? அந்தப் பிள்ளைகளத் தத்து எடுக்கேல்ல எண்டாச்  சரி கலியாணம் செய்யாத பொம்பளையாப் பாக்கலாம். அதான் பெரியண்ணாவும்  அந்தப் பொம்பளையும் ஆடிக்கொண்டு இன்னொண்டு இன்னொண்டு எண்டு அலைஞ்சு திரிய வசதியா, நீங்க பிள்ளைகளத்  தம்பிண்ட தலையில கட்டிப் போட்டிங்களே, பிறகென்ன!” வெடுக்கென்று அவள் சொல்ல விம்மியழுதார், கிறிஸ்டினா.

“சும்மா அழாதீங்க அம்மா. நான் சொல்லுறதில என்ன பிழை கிடக்குச் சொல்லுங்க? சனி மனிசி, மூண்டு பிள்ளைகளப்  பெத்துப் போட்டு, மூண்டாவது மனுசனோட பிறந்தநாள் கொண்டாடி பேஸ்புக்கில ஃபோட்டோ போடுது!” கோபத்தோடு, பற்கள் நெரிய நெரியச்  சொன்னாள். 

“அந்தக்  கழிசடைய எல்லாம் ஏன்  நீ பாக்கிற? அந்தப் பிள்ளைகள் என்ன பாவம் பண்ணினதுகள். நான் ஆதரிக்க இல்லையோ, டேமியன் தத்தெடுக்க இல்லை எண்டு வை,  அரசாங்க உதவியில எங்கயோ  ஒரு இத்தாலி வீட்டில வளருங்கள். வாழ்க்கை எப்பிடி எப்பிடி இருக்குமோ! எங்களுக்குப்  பொறுப்பு இல்லை எண்டுறியோ?” மூத்த மகனை நினைத்துக் கோபத்தோடு அழுதார், கிறிஸ்டினா. 

“சரி சரி, இப்ப அந்தக் கதைய விடுங்க. ஒண்டையும் மாத்தேலாது. நீங்க அங்க போன வேகத்தில டேமியனுக்குக்  கலியாணம் செய்யிறதுதான் முதல் வேலை. தீபா அன்ரிட்ட இலங்கையில பாக்கச் சொல்லிச் சொல்லுங்க. இத்தாலியிலும் பாக்கலாம். நானும் பாக்கிறன்.” என்றிருந்தாள், அவர் மகள்.

அது பார்த்தால், கண்ணுக்கு முன்னால்  பெண் இருக்க வெளியில் தேடுவானேன். கல்யாணியை நினைத்தபடி கண்களை மூடினார், கிறிஸ்டினா.

வீட்டினுள் நுழைந்த கல்யாணியோ, கைப்பையை நிலத்தில் போட்டுவிட்டு சோஃபாவில் அமர்ந்துவிட்டாள். உடலோடு சேர்ந்து மனமுமே அத்தனை சோர்வாக இருந்தது. வைத்தியசாலை சென்று வந்தால் நேரே குளியலறை செல்பவள் இன்று அப்படியே கால்களைத் தூக்கிபோட்டுக் குரண்டிக்கொண்டு படுத்துவிட்டாள்

கண்களை இறுக மூடிகொண்டவள் மனமோ வேகமாகச் சுழன்றடித்தது. திரும்பும் பக்கம் எல்லாம் டேமியன் ஏதோவொரு விதத்தில் அவளை அலைக்கழித்தான்.

அவனை ஒரேயடியாதகத் தவிர்க்க நினைத்தால் அதிலும் அல்லவா தவறவிட்டுவிடுகிறாள். அந்தளவுக்கு, அவன், அவள் வாழ்க்கையில் முக்கியமானவனோ என்ற கேள்வி மனத்தில் எழுந்த கணம், சுரீர் என்று வலியோடு ஒரு நினைவு எழுந்தது.

எப்படி அவளால் முடிந்தது? மரணம் மட்டுமே  அவன் நினைவுகளைத் தன்னைவிட்டுப் பிரிக்க முடியும் என்று எண்ணியிருந்தவள் எப்போதிருந்து அவனை மறக்கத்  தொடங்கினாள்? கடந்த சில நாட்களாகவா? 

‘ சில நாட்களாகவா? பொய் சொல்லாதே கல்யாணி. மாதங்கள் எண்டு சொல்லன் ’  என்று, எள்ளலாக மனம் முணுமுணுத்துத் தொலைத்தது. 

மேல் கைகளால் தலையை இறுக நெரித்துக் கொண்டவளுக்கு, வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. அழுதாள்.விம்மி விம்மி அழுதாள்.

எல்லாவுமாக இருந்த சூர்யாவை விட்டு ஏன் விலகினாள்? அதுவும் அவனுக்குக் கொடும் வலியைப் பரிசாகக் கொடுத்துவிட்டு!

இதயம் முக்கி முனகித் துடித்தது. வருடங்கள் மட்டுமே உருண்டோடியுள்ளன. மிகுதி எல்லாம் அப்படியேதான் இருக்கு. எதுவுமே என்றுமே மாற்ற முடியாதவை. அப்படியிருக்க, ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா கல்யாணி?’ அவள் மனசாட்சி எகத்தாளமாகக் கேட்டு எள்ளி  நகையாடியது. அழுகை அதிகரித்ததுதான் மிச்சம். 

சூர்யாவைப் பிரிந்த போதிருந்த வலியை விடவும் இக்கணம் வேதனை மிகுதியாக இருந்தது. அந்நேரம், இனி இல்லவே இல்லையென்று இருந்த அன்னை அவள் கை சேர்ந்திருந்தார். அவருக்காக எதையுமே செய்ய அவளும் தயாராக இருந்தாள். கொடும் வலியை உணர்ந்து கொண்டேயென்றாலும்  சீராகச்  சுவாசிக்க முடிந்தது. இப்போ, அது  முடியாது கரடுமுரடாக வெளியேறியது, சுவாசம்.

டேமியன் வெளிப்படையாகத்  தன்  அன்பைக் சொன்னால் அவள் பதில் என்னவாக இருக்கப் போகிறது. சுனிமலுக்குச் சொன்ன பதிலா? எப்படி அவனைத் தவிர்க்கப் போகிறாள்?

தலை விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கியிருக்க, கரங்கள் கொடுத்த அழுத்தம் அதிகரித்தது. மனம் சிந்திக்க மறுத்துத் துவண்டு போயிற்று. நினைவுகள் கூட சுற்றிச் சூழல  முடியாது தொய்ந்து துவண்டிட்டு. 

அக்கண  வலிக்கும் வேதனைக்கும்  சிறு விடுதலையாக தன்னுள் இழுத்துக்கொண்டாள், நித்திரா தேவி!

error: Alert: Content selection is disabled!!