Skip to content
அன்று மாலை, சுமதி வேலைக்குச் சென்றிருந்தார். ஆறு மணிவாக்கில் சாம்பாரை வைத்துவிட்டு, பொரித்த செத்தல் மிளகாயில் சம்பல் செய்த கையோடு தோசைகளைச் சுட்டெடுத்தாள், கல்யாணி.
ஆறரை மணியைப் போல், கிறிஸ்டினா வீட்டினருக்கான சாப்பாடோடு அவர்கள் வீடு நோக்கி நடந்தாள். பெரியவர் இல்லாத இந்தச் சில மாதங்களில், தினமும் சிறிது நேரமேனும் பிள்ளைகளோடு கழிப்பது அவள் வழக்கமாகியிருந்தது. இன்று, இன்னமும் சந்திக்கவில்லையே!
கதவில் தட்டிவிட்டு உள்ளிட, கிறிஸ்டினா டேமியனோடு அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தார்.
இவளைக் கண்டதும், “வாங்கம்மா கனி ” என்றுவிட்டு, கதைப்பதைத் தொடர்ந்தார்.
“டின்னர் ”வாயசைவில் சொல்லிக்கொண்டே உணவை மேசையில் வைத்துவிட்டுத் திரும்ப, “அவவுக்கு நேரம் இருக்குமோ தெரியா டேமியன். எதுக்கும் கேட்டுப் பாக்கிறன்.” என்று மகனிடம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்,கிறிஸ்டினா.
அவர் நினைத்தது போல் மகனுக்குக் கல்யாணியில் உள்ள விருப்பு உறுதியாயிற்று. மகிழ்ச்சியில் நிறைந்து போனவர் அதை வெளிக்காட்டிவிடாதிருக்க வெகுவாக முயன்றார். கல்யாணி மனத்தில் என்ன இருக்கு என்பது அவருக்குத் தெரியாதே! அதைத் தெளிவாக்கும் வரை அமைதி காப்பது அவசியம். அவர்கள் இருவரும் கதைத்துப் பேசிவிட்டுச் சொல்லட்டுமே! அப்போதைக்கு இப்படி முடிவெடுத்துக்கொண்டவர் கல்யாணியிடம் திரும்பினார்.
அதற்குள் பிள்ளைகள் மூவரும் வந்துவிட்டார்கள். சிறிது நேரம் அந்த இடம் கலகலத்தது. அன்றைய பாடசாலைக் கதைகள், படிப்பு, சாப்பாடு என்று நால்வரும் கதைப்பதை முறுவலோடு பார்த்திருந்தார், கிறிஸ்டினா.
வசதி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் வீடு இது. வீட்டில் பெரியவராக இவர் இருந்தாலும் மொத்தப் பொறுப்பையும் பார்த்தது பியங்காதான். அவள் மறைவு உண்டாக்கிய வெற்றிடத்தின் பாதிப்பு கொஞ்சம் அல்லவே!
கிறிஸ்டினாவால் நிரப்பவே முடியாத பள்ளம் அது. கடந்த ஐந்து வருடங்களாக உயிர்ப்புத் தொலைத்த வீடாக இருந்தது, இச்சில மாதங்களில், இத்தனை கலகலப்பாகியிருக்கே! முக்கிய காரணி யார்?
இதோ, பிள்ளைகள் மூவரோடும் கலகலத்துக்கொண்டிருப்பவள்தான் என்று கண்டுபிடிக்க, பெரிய அறிவெல்லாம் தேவையே இல்லை.
மூன்றாண்டுகளுக்கு மேலாக, தோட்டச் சாமான்களோடு பூட்டிக்கிடந்த சிறு வீட்டுக்கு வாடகை தந்துவிட்டு நன்றியோடும் மரியாதையோடும் பழகி வந்தவள், இன்று, வேறு விதமாக அன்போடு பார்க்க வைத்தாள். அவளையேதான் பார்த்திருந்தார், கிறிஸ்டினா.
“சரி, சாப்பாடு ஆற முதல் சாப்பிடுங்க, போயிட்டு வாறன்.” என்று அவள் எழவும், “கனி ஒரு விசயம்மா!” என்று நிறுத்தினார், கிறிஸ்டினா.
“நாளைக்குக் காலம டேமியன் புது ரெஸ்ட்டோரண்டுக்கு போக இருக்கிறார். நானும் போகப்போறன். உங்களுக்கு நாளைக்கு ஃபிரீ தானே? நீங்களும் வந்தீங்க எண்டா அங்க உதவியா இருக்கும் எண்டவர் தம்பி. அதான்,போயிட்டு வருவமேம்மா? உங்களுக்கு நேரம் இல்ல, வேற வேல இருக்கு எண்டா …பரவாயில்ல.” இழுத்து நிறுத்தினார்.
கேட்டவளுக்குத்தான் , சட்டென்று பதில் சொல்ல வரவில்லை. அதுவரை இருந்த இயல்பு மாயமாகிப்போய் இருந்தது. மத்தியானம் உச்சந்தலையில் வெதுவெது நீர் கொட்ட கொட்ட நின்றாளே, அந்நேரம், இனிமேல் டேமியனை விட்டு விலகி நிற்பது என்று இறுதி முடிவு எடுத்திருந்தாள். இப்போதோ, ‘நீயாக இறுதி எண்டு சொன்னாச் சரியா கல்யாணி!’ என்று, எள்ளி நகையாடியபடி, அம்முடிவு பலமாக ஆட்டம் கண்டது.
அதுவும், “பரவாயில்ல கனி, நான் தம்பிட்டச் சொல்லுறன். வேற ஆரையாவது ஒழுங்கு செய்வார்.” என்று கிறிஸ்டினா சொல்லவும், “இல்ல அன்ரி, நான் ஃபிரீ தான், வாறன்.” என்றிருந்தாள்.
“அப்பச் சரி, விடியவே போகோணும் எண்டவர், ஆறரைக்கு ரெடியா இருந்தாச் சரியம்மா.” என்று விடைகொடுத்தார், அவர்.
தலையை ஆட்டிக்கொண்டு வெளியே வந்தவள் மனம் அவள் வசமில்லை. அவள் என்ன நினைத்துக்கொண்டு இப்படி நடக்க நினைக்கிறாள். இது எங்கு கொண்டு போய்விடப் போகிறது.
சூர்யாவை, அவளே சகலமும் தன்னை விடவும் முதன்மையானவள் என்றிருந்தவனை, அந்த உயிர் நேசத்தை விட்டு எதற்காக விலகினாள்? அவன், அந்தளவுக்குத் தன்னையே உருக்குழைய வைக்கும்படி குடித்துக்கொண்டு திரிகையில், ஆசையாகத் தொடங்கிய தொழிலைக் கவனியாது, சொந்த வீட்டினரிடமே ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு, மது மயக்கத்தில் வீழ்ந்து கிடைக்கையில் எல்லாம் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு, அதுவும் மறைவில் நின்று பார்க்கும் அளவில் நின்றதுதான் ஏன்? அந்தக் காரணம் இன்னமும் இருக்குதே! என்றைக்கும் இருக்கும்!
அப்படியிருக்க, ‘டேமியன …டேமியன நான் எப்பிடி?’ அவள் மனம் திக்கித் திணறியது. நினைவுகளையே வளர விட முடியவில்லை.
சகிக்க முடியாத வலியுணர்வோடு தத்தளித்துத் துவண்டாள், கல்யாணி. டேமியன் பற்றிய எண்ணமே, அவளைப் பலவீனம்தான் கொள்ள வைத்திட்டு. மீண்டும் அழுதாள். விதி, கடவுள், இன்ன பிறவற்றைப்பற்றி எண்ணுவதையே விட்டுவிட்டவள், இன்றோ, இதுதான் தன் தலைவிதியோ என்று எண்ணியழுதாள்.
டேமியனைச் சந்திக்காது இருந்திருக்கலாமே! பியங்கா இறக்காதும் இருந்திருக்கலாம். வலியில் சுருண்ட உள்ளத்துக்கு, நினைவுகளைக்கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்வதைத் தவிர்த்து, வேறெதையும் செய்யத் தெரியவில்லை.
இரவு வேலை முடிந்து வந்த சுமதியால், பகல் பார்த்தும் அமைதியாகப் போனது போல் இருக்க முடியவில்லை.
“என்ன விசயம் கல்யாணி? முகமெல்லாம் இப்பிடி வீங்கிச் சோர்ந்திருக்கு?” பொறுக்க முடியாது இறுக்கமாக வினவினார்.
“இதான் பிரச்சின எண்டு சொன்னா இந்த அம்மாவால என்ன செய்திர ஏலும்? இவவத் திரும்ப எப்பச் சந்திச்சனோ அண்டு தொட்டு எனக்குப் பிரச்சினதானே எண்டு நினைக்கிறியாம்மா?” என்று, இழுத்துப் பிடித்த மூச்சோடு, கவலையைச் சுமந்தபடி கடினமாக அவர் கேட்ட விதம் இவளை, வாரிச் சுருட்டிக்கொண்டு நிமிர வைத்திட்டு.
தாயின் நேரடியான கேள்வியில், கல்யாணி வெகுவாகவே தடுமாறிப்போனாள்.
“என்ன கதை இது அம்மா? இனிமேல்பட்டு இப்பிடிக் கதைச்சா எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப்போட்டன்.” தாய்க்குத் தாயாக அதட்டினாள்.
கண்ணீரோடு தளர்ந்து நின்றார்,சுமதி.
“ஒண்டுமே இல்ல எண்டு பொய் சொல்ல மாட்டன் அம்மா. கொஞ்சம் மனக்குழப்பம். பச்! எல்லாம் சரியாகிரும். நீங்க அதையித யோசியாதீங்க! பசிக்குது, வாங்க சாப்பிடலாம்.” என்றவள், சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
அவள், தம்மிருவருக்குமாகத் தோசைகளைச் சுட்டு எடுத்து வைக்கவும் குளித்து வீட்டுடைக்கு மாறிய சுமதி வந்தமரவும் சரியாக இருந்தது.
பொதுவாகக் கதைத்தபடி உண்டார்கள். தாய் அப்படிக் கேட்கும்படி நடந்து கொண்டதில் தன் மீதே கோபம் அவளுக்கு. முயன்று கலகலப்பாகக் கதைத்தாள். அவள் முயற்சி விளங்கியும் காட்டிக்கொள்ளாது இருந்தார், சுமதி.
“அம்மா, நாளைக்கு விடிய கிறிஸ்டினா அன்ரி அவேட புது ரெஸ்ட்டோரண்ட பாக்கப் போறாவாம். அங்க என்னவோ வேலைகள் கிடக்காம், என்னையும் வந்தா உதவியா இருக்கும் எண்டு கேட்டவா. போயிட்டு வாறன் என்ன?” என்றதும் , “இதெல்லாம் கேக்கவா வேணும், தாராளமாப் போயிட்டு வாம்மா!” என்றிருந்தார், அவர்.
சிலோன் டேஸ்ட், வைத்தியசாலை, ஊர் உலகச் செய்திகள் என்று தாயும் மகளும் சிறுபொழுது கதைத்துக்கொண்டிருந்தார்கள். சுமதியின் முகம் ஓரளவுக்கென்றாலும் தெளிந்திருந்தது.
error: Alert: Content selection is disabled!!