வீட்டைத் திறந்து உள்ளிட்டவளோடு, டேமியனின் முறுவலும் பார்வையிலிருந்த வசீகரமும் தொத்திக்கொண்டு வருவது போலிருந்தது. தணிவாகக் கதைத்துக்கொண்டே அத்தனை பாவங்களையும் காட்டும் அவன் குரல், அவனுக்கேயுரிய இயல்போடு காதோரமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் உணர்வு!
அவன் முன்னால், அருகண்மையில் தன் மனமும் சிந்தனையும் அப்படியே மாறிவிடுவது கூட இப்போதுதான் துல்லியமாக அவளுக்கு உறைத்தது. அவனைவிட்டுத் தள்ளியிருக்கும் போது , இது சரியே வராது என்று தோன்றும் விசயம், அவன் அருகண்மையில், ‘எந்த மடையன் அப்பிடிச் சொன்னது?’ என்று அசைட்டையாக, எதிர்மறை எண்ணங்களைத் தட்டி ஒதுக்கிவிட்டு, நேர்மறையான அலைகள் நிறைந்த சுவாசத்தை ஆழ உள்ளிழுத்துக்கொண்டு விடுவதும் புரிந்தது. இத்தனையாண்டுகளில், எவராலும் அருட்டிட முடியாதிருந்த, அவளே, மரித்துப் போய்விட்டதாக எண்ணிய, அவளிதயத்தின், மிக மெல்லிய உணர்வுகளைச் சத்தமேயில்லாது உயிர்த்தெழச் செய்திருந்தான், டேமியன்.
அதன்பிறகு, அவளால் எதையும் நேர் சீராகச் சிந்திக்க முடியவில்லை. குளித்து வெளிக்கிடும் எண்ணமற்று அப்படியே அமர்ந்துவிட்டாள்.
எவ்வளவு நேரம் இருந்தாளோ, கைப்பேசியின் அதிர்வில் திடுக்கிட்டு விழித்தாள்.
சுமதிதான். கவனமாகப் போய்வரும் படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். வேகமாக நேரத்தைப் பார்க்க, ஐயோ என்றிருந்தது.
ஓடிச்சென்று குளியலறைக்குள் புகுந்தவள், அடுத்த கால்மணித்தியாலத்தில் தயாராகிக்கொண்டு வெளியில் வந்தாள்.
கிறிஸ்டினாவும் டேமியனும் கதைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியில்தான் நின்றுகொண்டிருந்தார்கள். அவளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று வேறு சொல்ல வேண்டுமா?
“சொறி அன்ரி, கொஞ்சம் லேட்டாகிட்டு சொறி!” அவதியாகச் சொன்னபடி விரைந்து வந்து நின்றவளை, இரசனையாகப் பார்த்தான், டேமியன். அவளோடு ஒரு பயணம்! கடந்த சில மாதங்களாக, கிழமையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயற்கையோடு இணைந்து சேர்ந்து ஓடுகிறார்கள்தான். அதைவிட, இன்றைய நாளின் பெரும்பகுதியை அவளோடு மட்டுமாகக் கழிக்கப் போகிறானே! நேற்றிலிருந்து எதிர்பார்த்திருந்தான். அது, அன்னை வரவில்லை என்றதும் இரட்டிப்பு மகிழ்வாகியிருக்கே!
கல்யாணி, அவனைப் பார்ப்பதைக் கவனமாகத் தவிர்த்தாள்.
கிறிஸ்டினாவோ, மகனைப் பார்க்காத மாதிரிப் பார்த்துவிட்டு அவளிடம் பார்வையைக் கொண்டு வந்தார்.
“இதில என்ன இருக்கம்மா . ஓடிட்டு வந்தனீங்கள் எண்டு தம்பி சொன்னவர். சாப்பிட்டிங்களோ?” எப்போதும் போல் கரிசனையாகக் கேட்டார். குரலில், மேலதிகமாக அன்பு ஒட்டியிருந்ததை அவர் மட்டுமே அறிவார்.
கல்யாணிக்குச் சட்டென்று பொய்யுரைக்க வரவில்லை. தடுமாறிவிட்டாள்தான். சாதாரணக் கேள்வி, அதற்கே இப்படியா? சின்னப்பிள்ளை பார்! அவள் மனம் கண்டித்தது.
பார்வை டேமியனைத் தொட்டு விலகியது. அவன் பார்வையில் இருந்த நகைப்பில், இந்தா அந்தா என்று எதையோ சொல்லி அவளைச் சீண்டப்போகும் பாவனையில், இன்றைய பயணம் எப்படி இருக்கப் போகிறது என்ற எண்ணமே அவள் தடுமாற்றத்தை அதிகரித்தது.
‘நல்லகாலம் அன்ரியும் வாறா’ ஆறுதல் பட்டுக்கொண்டாள். ‘இப்பிடி நினைக்கிறது , பிறகு சேர்ந்து சைட் அடிக்கிறது…இது ஒண்டுமே உனக்குத் தெரியாதாக்கும். ‘ என்று, மனம் நக்கல் அடிக்க, அவளின் இதயத் துடிப்பு வேகமாகியது.
அவள் பதில் சொல்வாள் என்று பார்த்திருந்துவிட்டு, “லைட்டா ஏதாவது சாப்பிட்டுப்போட்டுப் போகலாம் கனி, உள்ள வாங்கோ!” என்றார் கிறிஸ்டினா.
“இல்ல அன்ரி , சாப்பிட்டிட்டன், போவம் என்ன?” சாதாரணமாக கதைக்க முயன்றாள். என்ன என்றில்லாது கைப்பையைக் குடைந்து எதையோ தேடினாள். டேமியன் பார்வை தன்னில் ஒட்டி நிற்பது விளங்கியது. மேலும் தவிப்பில் ஆழ்த்தியது, அது.
“நான் வரேல்ல மா. விடிஞ்சதில இருந்து ஒரே மண்டை இடியாக்கிடக்கு. கொஞ்சம் களைப்பாவும் கிடக்கு. அதான் ஒரேயடியாத் திறக்கிற அண்டே போகலாம் எண்டு நினைச்சன். நீங்க ரெண்டு பேரும் போவீங்கள் தானே? உங்களுக்குப் பிரச்சின ஒண்டும் இல்லையே!” அப்பாவிபோல் கேட்ட கிறிஸ்டினாவுக்கு என்ன பதில் சொல்வது? திகைத்து விழித்தாள், கல்யாணி.
டேமியன், பொங்கிக்கொண்டு வந்த சிரிப்பை வாய்க்குள் புதைத்து அடக்குவதற்குள் ஒருவழியாகிப் போனான்.
அவனுக்குத் தாயின் மனம் விளங்கிவிட்டது. தன் விருப்பை வாய்விட்டுச் சொல்ல முதலே அவர் புரிந்து கொண்டதில் கூடுதல் மகிழ்வாக இருந்தது.
“அவவுக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகுது அம்மா. நீங்க கனடா போனதால எனக்குக் கிடைச்ச அருமையான நண்பி அவா. என்னோட வர என்ன தயக்கம்? இல்லையா கல்யாணி?” விழிகள் சுருங்க முறுவலித்தபடி கேட்டவனுக்கு, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
தலையை மட்டும் அப்படி இப்படி ஆட்டி வைத்தாள்.
“வாறன் அம்மா!” என்று காரை நோக்கி நகர்ந்துவிட்டான்,டேமியன்.
“பம்பலா போகலாம் எண்டு நினைச்சு இருந்தன் கனி. பாருங்க இந்த உடம்பு மக்கர் பண்ணிட்டு!” மீண்டும் சொன்னார் கிறிஸ்டினா.
“ வடிவா ரெஸ்ட் எடுங்க அன்ரி . போயிட்டு வாறம்.” விட்டால் போதுமென்ற நிலை அவளுக்கு. கிறிஸ்டினாவைக் கூட நிமிர்வாகப் பார்க்கவிடாது செய்கிறானே, என்ன செய்வது இவனை?
கார் அருகில் வர, எட்டி, முன் கதவைத் திறந்து விட்டிருந்தான், டேமியன்.
ஏறியமர்ந்து இருக்கைப் பட்டியைப் போட்டுவிட்டு நிமிர, தாய்க்குக் கையசைத்துக்கொண்டே காரை எடுத்தவனோ, அவ்வளவு உல்லாச மனநிலையில் இருந்தான். பட்டென்று பத்து வயதுகள் குறைந்து போன உணர்வு! வாய்விட்டு அருகிலிருப்பவளிடம் பகிர முடிந்தால்? ஆசை, ஏக்கமானதுதான் மிச்சம்.
கார் ஓட்டுவதில் வலு கவனமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் கடைக்கண் பார்வை கல்யாணியைத் தொட்டு வந்தது. இப்போதைக்கு முடிந்தது இவ்வளவும்தான் டேமியன்!
தலைக்குக் குளித்திருந்தாள். கட்டுப்பாடில்லாது விரித்துவிட்டு வந்திருந்ததில், அணிந்திருந்த மெல்லிய றோஸ் வண்ண கொட்டன் பிளவுஸில் தலைமயிர் தொட்டுக்கொண்டிருந்த இடமெல்லாம் ஈரம் ஊறிக்கொண்டிருந்தது. அதெல்லாம் ஒரு விடயமே இல்லையப்பா, கன்னத்தில் ஒட்டி உறவாடி இவன் பார்வையிலிருந்து அவள் முகத்தை மறைக்கும் தலைமயிர்க் கற்றைகளை அப்படியே காதோரமாக ஒதுக்கிவிடத் துடித்த தன் கரத்தை என்ன செய்வது?
‘நீ இண்டைக்கு அடிவாங்கினாலும் வாங்குவ டேமியன்.’ மனம் எச்சரிக்கை செய்தது. மீண்டும் அவள் முகத்துக்குச் சென்றது பார்வை.
எப்போதும் அவளில் ஒரு இறுக்கமும் நிதானமும் இருக்கும் . இன்றோ, நிலையில்லாத தவிப்பிலுள்ளாள் என்று வெளிப்டையாகவே தெரிந்தது. முன்னால் பார்த்தாள். பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். நகங்களை ஆராய்ந்தாள். இடக்கையில் போட்டிருந்த ஹெயார் பாண்டை கழற்றிவிட்டு மீண்டும் போட்டுக்கொண்டாள். கைப்பேசியைப் பார்த்துவிட்டு மடியில் வைத்தாள். பின் எடுத்துக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள். ஈரத் தலையைக் கோதிவிட்டுக்கொண்டாள். நாலைந்து பெருமூச்சுகள் அவளையும் அறியாதே வெளியேறியும் இருந்தன.
டேமியானால் அதற்கு மேலும் மௌனத்தைக் கடைபிடிக்க முடியவில்லை.
“என்ன வலு அமைதியா வாறீங்க கல்யாணி?” என்று அவன் கேட்க, திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தாள்.
“ஆங்! அப்பிடி எல்லாம் இல்லையே!”
“அப்ப சரிதான், சொல்லுங்க!”
“என்ன சொல்ல?” என்றபோது, அவனறிந்த கல்யாணி எட்டிப் பார்த்திருந்தாள்.
“ம்ம் …ஏதாவது சொல்லுங்கப்பா! இப்பிடி அமைதியா வர , வெளிக்கிட்டாச்சு இவனோட இழுப்படவேண்டிக்கிடக்கே எண்டு வாற மாதிரி இருக்கப்பா!” என்றவன் குரலில் நகைப்பும் ஒட்டும்(நெருக்கம்).