நட்சத்திரா 16 – 2

அவளுக்கோ, பதில் சொல்ல முயன்றும் முடியாதிருந்தது. 

“இல்ல, அம்மா தானும் வாறன் எண்டோன்ன சரியெண்டு வெளிக்கிட்டு இருப்பீங்க . இப்ப, இந்தத் தடியனோட போகோணுமே எண்டு நினைச்சாலும் நினைப்பீங்க…” அவன் முடிக்கவில்லை, சரேலென்று ஒரு பார்வை பார்த்தாள். 

“அது விளங்கினாச்  சரிதான்.” அவள் முணுமுணுத்தது கேட்டும் கேட்காத பாவனையில், அடக்கப்பட்ட முறுவலோடு  எதிர்ப்பட்ட ‘மக்டொனால்ட்’ ட்ரைவ் துருவினுடாக காரைச் செலுத்தினான், அவன்.

“என்ன சாப்பிடுறீங்க?” 

“எனக்கு என்ன… ஒண்ணும் வேணாம் டேமியன்.” 

“ சாப்பிடேல்ல எல்லா? ஓடினதும். அதும் இண்டைக்கு நல்ல வேகமான ஓட்டம்.  பிறகு என்ன ஒண்ணும் வேணாம்?” உரிமையாக அதட்டிவிட்டு, இருவருக்கும் McMuffin Bacon & Egg சொல்லி  கஃபே இரண்டும் சொன்னான்.  

மறுக்கவோ அவனோடு வாதாடவோ போகாது பார்த்திருந்தாள், அவள்.  

காரை மெதுவாக உருட்டிச்சென்று அடுத்த யன்னலில் தந்த உணவுப் பையையும் கஃபே அடங்கிய பெட்டியையும் வாங்கிக்கொண்ட வேகத்தில், “ம்ம் இந்தாங்க.” வலு சுவாதீனமாக ஒன்று ஒன்றாக அவள் மடியில் வைத்தான்.

“போய்க்கொண்டே சாப்பிடுவம் என்ன? ஹைவே ஏறின பிறகு என்ரயத்  தாங்கோ!” என்றவன்,“ஹாண்ட் பாக்க  பின்னால வையுங்க கல்யாணி”அவள் கரமிரண்டும் மஃபினிலும் கஃபேயிலும் கவனமாக இருக்க, தானே எடுத்துப் பின்னால் வைத்துவிட்டே காரை எடுத்தான்.  

அவளால் ஒற்றை வார்த்தை உதிர்க்க முடியவில்லை. ம்ம்ம் கொட்டவும் இயலவில்லை. காலையில் சேர்ந்து ஓடினானே , அப்போதையைவிட இப்போ, இன்னும் அதிகமாக நெருக்கம் காட்டுவதாக உணர்ந்தவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

“ஹலோ தூங்கேல்லையே! நானுமே சாப்பிடேல்ல கல்யாணி   பசிக்குது.” ஒற்றைக்கையால் வயிற்றைத் தடவியவன், அப்போதும் அவள் அசையாது இருக்க, “சரி சரி, நானே எடுத்துச் சாப்பிடுறன்.” மஃபின் பையைத் திறக்க முனைந்தான். 

“பச்! ரோட்டைப் பாத்துப் போங்க, தரலாம்.” வெடுக்கென்று பார்த்து முறைத்தாள், அவள்.

“அப்பாடா! எங்கட கல்யாணி நித்திரையெல்லாம் இல்ல டேமியன்.” சத்தமாகச் சொல்லி, என்ன ஏதென்று இல்லாது சிரித்து, அவள் முறைப்பை அதிகமாக்கினான். அதிலும் அந்த ‘எங்கட’ சொன்ன விதம் இருக்கே!

“விசர் பிடிச்சிட்டு!” முணுமுணுத்தாள், அவள். 

“ஒரு வகையில பாத்தா  உண்மைதான்.” அவள் சொன்ன அதே தொனியில் சொல்லி விழிகளால் நகைத்தான், அவன்.

அதோடு, அவளுள் இருந்த தயக்கம் தடுமாற்றத்தையும் விரட்டி விட்டான்.

“உண்மையாவே உங்களுக்கு விசர்தான் பிடிச்சிட்டு. எப்பவும் நான் ஈ எண்டுகொண்டு இருக்க மாட்டன் டேமியன். விளையாடாதீங்க சரியா?” சிடுசிடுத்தாள். அதில் காரமே இருக்கவில்லை. பிறகு எப்படி அவன் பெரிதாக எடுப்பான். 

“விளையாட்டா? என்ர கல்யாணியோடையா?”என்றவன், பயந்துவிட்ட பாவனையில், “ இல்லப்பா. உண்மையா என்ர ஃப்ரெண்ட் கலியாணியோடையா எண்டுதான் கேக்க வந்தன்.” என்றான்.

 அவள் முகம் இறுகுவதைப்  பார்த்துவிட்டு,  “அச்சோ, கல்யாணிக்குக்  கோவம் வந்திட்டு! டேமியனுக்கு பயம் வந்திட்டு!”என்றபடி, பேப்பரைப் பிரித்து உண்ண வசதியாகத் தந்த மஃபினை வாங்கிக்கொண்டான்.

அவள் அதற்கு மேல்  அவனைப் பார்க்கவில்லை. வார்த்தைகளாலும் பாவனைகளாலும் அவளைச்  சீண்டுகிறானே! அதுவும் இப்படி வெளிப்படையாக. வெளியில் முறைக்க முனைந்தாலும் மனத்தில் இதமாக இரசிக்க முனையும் தன்னை என்ன செய்வது? 

‘உண்மையா உனக்குத்தான் விசர் பிடிச்சிருக்கு எரும மாடே!’ தன்னைத்தானே அதட்டிக்கொண்டாள். இழுத்துப் பிடித்துக்  கடினத்தைக் கொண்டுவரப் போராடினாள் . அருகண்மையில் இருந்து வந்துகொண்டிருந்த காந்தம் போன்ற சக்தி அதற்கு அனுமதிக்கவேயில்லை.

மஃபினை உண்ணத் தொடங்கியவளுக்கு பதற்றமாக இருந்தது. தம்மிருவரிடையேயான  பழக்கம் சத்தமே இல்லாமல் அடுத்த கட்டத்துக்குக்  கைகோர்த்து நகர்வது புரிந்தது. இதோ,   இருவரும் ஒன்றாகச் சுவைக்கும் உணவும் அதன் வாசமும் போல்!

எதுவரை இது சாத்தியமாகும் என்ற பெரும் ஏக்கம் அவளுள் வந்துவிட்டிருந்தது. 

அவனைப் பார்த்தாள் . அதேநேரம் அவனும் பார்த்தான். விழிகளில் கலக்கத்தோடு அவள் பார்க்க, ‘இப்ப என்ன பிரச்சினை உனக்கு?’ என்று கேட்க உன்னியது, அவனுள்ளம். பார்வையோ, அவளின் உதட்டோரம் ஒட்டி நின்ற செடார் சீஸில். 

வலக்கையின் முதலிரு விரல்கள் மஃபினை பற்றியிருக்க, மிகுதி மூன்றும் போட்டிபோட்டுக்கொண்டு அவளின் உதட்டோரத்தைத் துடைத்துவிட நகர்ந்திருந்தன.

 அவன் என்ன செய்ய வருகிறான் என்ற திகைப்போடு நகர்ந்து கதவோடு சாய்ந்துவிட்டாள், கல்யாணி. அவளையும் அறியாது பயம் விழிகளில் பளிச்சிட்டது. அவன் மீது அவளுக்குள்ள நம்பிக்கைக்கு அளவேயில்லை. ‘இதெல்லாம் என்ன? அந்தளவுக்கு சீப்பா நினைச்சிட்டாரோ’ கணமே என்றாலும் இந்த எண்ணம் வந்து போயிற்று.  

‘அண்டு அணைச்சுக் கண்ணீரத் துடைச்சுவிட்ட நேரமே வடிவாச்  சொல்லியிருக்கோணும் நீ!’ காரமாகவே  கடிந்தது  உள்ளம் . 

“ஒண்ணும் இல்லப்பா, வாயடியில சீஸ் ஒட்டியிருக்கு அதான்…” அவள் முகமாற்றத்தைக் கவனித்தும் கவனியாத பாவனையில் இயல்பாகச் சொல்லிக்கொண்டே ஒருவாய் மஃப்பினை கடித்தவன்,  “ஒருக்காப் பிடியும் கல்யாணி” அவளை வினையாற்றவே விடவில்லை. 

தன் மஃபினை அவள் கரத்தில் திணித்துவிட்டு பாதையில் கவனம் குவித்தான். உண்மையில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தது.  லேன் மாறி மாறி முன்னேறுவதில் கவனம் குவித்தவனை, அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.

அவனைப் பார்க்க பார்க்க, எரிச்சலும் சுணக்கமும் எழுந்த வேகத்தில் மறைவதை உணர்ந்தவள் சோர்ந்துதான்  போனாள். 

உண்மையாவே சீஸ் இருக்குதானே என்று நினைத்தபடி  துடைத்துக்கொண்டவள், “ஆறப்போகுது டேமியன், ஒரு கடி கடிச்சிட்டு…” மஃபினை அவன் வாயடியில் பிடித்தது அவளே எதிர்பாராத செயல்!

அவன் விழிகள் பளிச்சிட ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு வாய் கடித்தவன், தன்னுள் பொங்கிய மகிழ்ச்சியை  கரைந்த செடார் சீஸோடு சேர்த்து முழுங்கி வைத்தான்.

அந்தக் கணம் இருவரிடையேயும் வெளிப்டையாகக் கதைத்துக்கொள்ளாதே வந்திருந்த நெருக்கமும் இதமும் அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்தது. மனத்தின் அதட்டலுக்கும் முணுமுணுப்புக்கும் எதிர்மறையான சிந்தனைகளுக்கும்  அறவே இடம் கொடாத கல்யாணி டேமியனோடு இழுப்பட்டாள்.

‘Salerno’   தங்கியிருந்து சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் என்றான் டேமியன்.  ஒருதடவை எல்லாருமாக இங்கு வருவோம்  என்றான். அவளையும் அறியாதே சம்மதமாகத் தலையசைத்துவிட்டு, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

டேமியன் கண்சிமிட்டிச் சிரிக்க, மூச்செடுக்க மறந்து தடுமாறிப் போனவளுக்கு, இது, தான் தானா என்ற சந்தேகமே வந்துவிட்டிருந்தது. கண்கள் கலங்கிவிட்டிருந்தன. ஆண்டுகள் பலதுகளை அப்படியே அழித்துவிட்டு, தாய் தகப்பன், சகோதரன் இல்லை என்று ஆனபின்னும் அதிலிருந்து மீண்டு, துடியாட்டமாக கலகலத்துக்கொண்டிருந்த கல்யாணி இன்னும் உயிரோடுள்ளாள் என்று அவளுக்கே உணர்த்திய நாளாக அது இருந்தது.

அந்தளவுக்கு, ‘Salerno’ சென்று சேர முதல் அவள் வாய்ப்பூட்டை இலகுவாகவே தகர்த்தெறிந்திருந்தான், டேமியன். கிட்டத்தட்ட அவன் தனியாகவே கலகலவென்று கதைத்துக்கொண்டு வந்ததில் அது நிகழ்ந்திருந்தது. 

‘சிலோன் டேஸ்ட் ரெஸ்டாரண்ட்’ சற்றே  சிறிதான வடிவில் அங்கு காட்சி தந்தது. 

வெளியில் பத்து குடைகள் போட்டு மேசைகள் போடப்பட்டிருந்தன. அது சற்றே பெரிதாக இருந்தது.

அங்குச்  சென்றபின்  கதை பேச்சுக்கு நேரம் இருக்கவில்லை. 

அந்த உணவகம், அங்கு அவளால் செய்யமுடிந்த வேலைகள், அதோடு சேர்த்து அங்கு கொட்டிக்கிடந்த  இயற்கை அழகு எல்லாம் கடந்து, மனத்துக்குப்  பிடித்துப்போன துணை என்று, அன்றைய பொழுது கல்யாணியின் வாழ்வை அப்படியே திருப்பிப் போட்டுவிட்டது. 

இருவரும் வாய்விட்டு எதையும் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் விளங்கியிருந்தது. பிடித்துமிருந்தது. டேமியன் வாய் திறக்கட்டும் என்று அவள் இருக்க, உடனே சொல்லி, இன்று உருவான இணக்கத்தில் சட முட வர வைக்க விரும்பாது, இன்னும் சிலநாட்கள் அவளோடு பழகிவிட்டே சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தான், டேமியன்.

நினைப்பவை நடந்து விட்டால், எம்மை மீறிய சக்தியென்று எதற்காம்?

 

error: Alert: Content selection is disabled!!