நட்சத்திரா 17 – 1

எண்ணிச் சில நாட்களுக்கு முன்தான், புது உணவகம்  திறக்கும் அன்று வைத்தியசாலையில் விடுமுறை எடுக்கும்படி  டேமியன் சொல்லியிருந்தான். கல்யாணி, பதிலே சொல்லாது நகர்ந்திருந்தாள். இப்போதோ, இரு நாட்களுக்கு முன்னரே விடுமுறை எடுத்துவிட்டாள். அதுமட்டுமா? ஆளைப்பிடிக்கவும் முடியவில்லை. டேமியனும் அவளுமாக விடியவெள்ளனவே ‘Salerno’ சென்று விடுகிறார்கள். வீட்டுக்குத் திரும்ப நள்ளிரவாகிவிடுகிறது.

வேலைகளும் நிறையவே இருந்தன. உணவுப் பிரியர்களுக்கு, அதுவும் ஆசிய உணவுகளை விரும்புகிறவர்களுக்கு   மிலானில், ‘சிலோன் டேஸ்ட்’  தெரியாதிருக்க வாய்ப்பேயில்லை.  அதுவே, புது உணவகத்துக்கு நல்ல விளம்பரம் ஆகியிருந்தது.

கோடைக் காலமாச்சே, உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியும் பிராந்தியமும் கூட. முதல் நாளே அதிகமான  ஆட்களை எதிர்பார்த்தார்கள். கல்யாணிக்கு ஏற்கனவே உணவக வேலைகள் பழக்கமாதலால் டேமியனுக்கு மிகவுமே உதவியாக இருந்தாள். 

ஒரே கல்லில் இரு மாங்காய்கள், பழங்கள் என்றும் சொல்லலாம். இருவரும் ஒருவர் ஒருவரின் அருகண்மைக்காக ஏங்கத் தொடங்கியிருந்தார்களே, கிடைக்கும் ஒவ்வொரு சிறு சந்தர்ப்பத்தையும்  பயன்படுத்திக்கொண்டார்கள்.

சில நிமிடங்களே ஆனாலும் சேர்ந்திருந்து அதை இதைக் கதைத்தபடி  தேநீர், கோப்பி அருந்தினார்கள். மூன்று வேளைச் சாப்பாடும் அப்படியே! எவ்வளவுதான்  களைத்திருந்தாலும் அங்கிருந்து புறப்பட முதல் சிறு பொழுது என்றாலும் ‘ Porticciolo’  கடற்கரையில் சென்று நின்றுவிட்டே திரும்பினார்கள். 

உலகப் பிரசித்திபெற்ற, உல்லாசப்பயணிகளைச் சுண்டியிழுத்திடும்  ‘Amalfi’ கடற்கரைப்பகுதி  இந்த ஊரின் எல்லையிலிருந்து ஆரம்பிப்பதைச் சொல்லி “அந்தக் கடற்கரையில இருக்கிற ஒவ்வொரு ஊருக்கும் போகோணும் கல்யாணி.” என்றான், டேமியன்.

அவளும் இன்ஸ்ட்டாவில் அந்தக் கடற்கரையின் அழகைக் கண்டுள்ளாள். அதுவே, ஆவலோடு ஒன்று ஒன்றையும் கேட்க வைத்தது. அவள் கேள்விகளுக்குப் பதிலிறுக்கையில் தன்னோடு அவளை சேர்த்தே கதைத்தான், அவன். அதுமட்டுமா? 

உரிமையும் அன்புமாக நேருக்கு நேராகப் பார்த்துக் கதைக்கையில் எல்லாம் இவள்தான் தடுமாறிவிடுகிறாள். மனத்தைக் காட்டும் விழிகள் அவனது என்று இப்போதுதான் தெரிந்தது. சில நொடிகளுக்கு மேல் அந்தப் பார்வையைத் தாங்கி நிற்கும் சக்தி இவளுக்குத்தான் இருப்பதில்லை. “ ம்ம்”  கொட்டிக்கொண்டே முன்னால் சலசலக்கும் கடலைப் பார்த்திருப்பதே இவள் வேலையாகிற்று. 

“இது மட்டும் இல்ல கல்யாணி, கட்டிடக்கலைக்கு பெயர்போன Pompeii, Herculaneum,Paestum எண்டு எல்லா இடமும் சுத்தோணும்.” என்றவன், “இந்த சம்மருக்கு எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு. முடியாட்டியும்  அடுத்த சம்மருக்கு Mt. Vesuvius ஏறோணும். நானும் நீருமா மட்டும் சரியா?” என்றதற்கு ‘ம்ம்’ கொட்டவும் மறந்து நின்றாள், கல்யாணி. இதைவிடவும் வேறெப்படி மனத்தை, அதில் முகிழ்ந்து கசியும் அன்பை வெளிப்படுத்துவதாம். 

அவள் தடுமாற்றத்தை ரசித்தான், டேமியன். அதேநேரம், அவளுள் அவன்பாலுள்ள விருப்பை ஒரு சில சொற்களில் என்றாலும் வாய் திறந்து சொல்ல மாட்டாளோ என்ற ஏக்கமும் எழாதில்லை.

“அங்க…அந்த Mt. Vesuvius  ல எல்லா எரிமலைக்குன்று (Volcano) இருக்கு? நான் அங்க எல்லாம் வரேல்லப்பா!” 

“இப்பிடிச் சொன்னா ஆர் விடுறதாம்? குண்டுக்கட்டாத் தூக்கிக்கொண்டு போயிருவமே!” கண்சிமிட்டி, இவளை மூச்சடைக்க வைத்தான். சரளமாகக் கதைப்பவளை வாயடைக்கவும் செய்துவிட்டான்.

“கிபி 79 இல அந்த எரிமலையால அழிஞ்ச ஊர் தான் Pompeii.” என்றவன், “ 1944 க்குப் பிறகு இன்னும் அது ஆக்ட்டிவ் ஆகேல்ல. பயமில்ல கல்யாணி.” என்றான்.

“ஆனா… இன்னும் உலகத்தில உள்ள active volcano ல இதும் இருக்கே.” என்றவளுக்கு, அங்கு போவதை நினைக்கவே விருப்பம் இல்லை. 

அவளும் Pompeii பற்றி வாசித்திருக்கிறாள். அந்த ஊரையே முழுங்கிவிட்ட அந்த மலையில் ஏறுவதை நினைக்கவே மனத்துள் எதுவோ செய்தது.  மிகப்பழமை வாய்ந்த அந்தக் கிராமத்தின் எச்சங்கள் இன்றளவுக்கும் மிகக்கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, தினம் தினம் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைச் சுண்டியிழுத்தபடி இருக்கிறன. 

‘Pompeii’ ஊரில் அந்த நேரம் வாழ்ந்தவர்கள் , அருகில் உயர்ந்து பரந்து கிடந்த ‘Vesuvius’ மலையை எத்தனை தடவைகள் இரசித்துப் பார்த்திருப்பார்கள்! அப்படியிருக்க, என்ன நடக்கிறது என்று தெரியாதே, அது உமிழ்ந்த தீக்குழம்பில், சேர்ந்து வந்து மூடிய சாம்பலில் மூச்சடங்கிப் புதைந்தே போனார்களே! அதை வாசிக்கையிலேயே, வன்னி வாழ்வும் இறுதிச் சண்டையும் இழப்பும் வலியும் வேதனையும்தான் அவளுக்கு நினைவிலாடும்.   

அவள், ரணமாக்கிய நினைவுகளைத் தொட்டு நிற்க, அவள் எரிமலையை எண்ணிப் பயப்படுகிறாள் என்று நினைத்தான் டேமியன்.

“பயப்படுறீங்களா என்ன? என்ன எண்டாலும் நானும்தானே உங்களோட வரப்போறன், பிறகென்ன?” என்றவனுக்கு, முகத்தையோ கலங்கிவிட்ட விழிகளையோ  அவள் காட்டவில்லை. 

வாய்விட்டுச் சொல்லாவிட்டால் என்ன? அவளையே பார்த்து நின்றவனுக்கு, அவளை நெருங்கிட, கரம்பற்றி… இல்லை தோளோடு அணைத்து… இப்படி அடுத்து அடுத்துச் செல்லும்  மனத்தின் முனைப்புகளுக்கு அணைபோட பெரும் பாடு படவேண்டியிருந்தது.

பெருமூச்செறிந்து சமாளிக்கப் பார்த்தான். 

சுதாகரித்துவிட்டவள், உணவகம் சம்பந்தமாகக் கதைக்கத்  தொடங்க, தங்கு தடையின்றிச் சென்றது பேச்சு!

இப்படி, எப்படித் தம்முள் நேரடியாக வெளிப்படுத்திக்கொள்ளாது ஒருவர் ஒருவருக்கு உணர்த்திக் கொள்கிறார்களோ, அதுபோலவே அவர்களிடையேயான அன்பை, பார்ப்பவர்கள்  துல்லியமாகவே விளங்கிக்கொள்ளும் வகையில்தான்  இருவரும் நடந்துகொண்டார்கள்.

இவர்கள் பற்றிய கதை, அரசல் புரசலாக  சிலோன் டேஸ்ட்டிலும் கதைபடத் தொடங்கியிருந்தது.

டேமியனில் முதலாளி என்ற பயம் கலந்த மரியாதை. அந்த எல்லைக்கோட்டைக் கடந்து நட்பாக  எவரோடும் அவன் அங்குப் பழகுவதில்லை. விதிவிலக்காகிப் போனவள் கல்யாணி மட்டும்தான். 

கல்யாணி என்றால் அங்கு அநேகருக்குப் பிடித்தமானவள். சுமதியின் மகள் என்றது மட்டுமன்றி, இன்முகமாக  அவள் பழகும் விதம் இயல்பிலேயே உள்ள துடிதுடிப்பும் சுறுசுறுப்பும் அங்கு எல்லோருக்கும் பிடிக்கும். தம் வீட்டுப் பிள்ளையென்ற உணர்வு. பிறகு, மகிழ்வுக்குக்  குறையிருக்குமா என்ன?

சுமதியிடம்  வெளிப்படையாக நெருங்கிப் பழகுபவர்கள் நேரேயே கேட்டுவிட்டார்கள்.

அவர்தான் பதில் சொல்ல இயலாது தடுமாறிப்போனார்.  மகளோ, டேமியனோ தன்னிடம் சொல்லாது ஊகத்தில் சொல்வதெப்படி? மகளிடம் கேட்போமா என்று உன்னுவதும் விடுவதுமாக இருந்தார். 

எது எப்பிடியோ, அவரால் மகிழ்வைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியவில்லை. எந்தச் சந்தர்ப்பம், நேரம் என்றாலும்  தடுமாறாது, ஏற்கனவே ப்ரோகிராம் செய்யப்பட்ட இயந்திரம் போல் இயங்கும் மனிசியில் இப்போவெல்லாம் அவ்வளவு  தடுமாற்றம், இளக்கம்!

கூட வேலை செய்பவர்களே அதைக் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நடந்துகொண்டார், சுமதி.  கல்யாணி திருமணத்தை விரும்பவில்லை, தட்டிக் கழிக்கிறாள் என்றளவில் அங்கு அவர்களுக்குத் தெரியும். அதுவே, “சுமதிக்கு மகிழ்ச்சியில  கண்மண் தெரியுதில்ல. பால் அப்பம் செய்யிறன் எண்டிட்டு உப்பைக் கொட்டிக் குடுத்திரப் போறீங்க கவனம்.”  என்றெல்லாம் கடித்தார்கள்.

 ஒருபோதுமின்றிய முறுவலில், இந்த வயதிலும் அவர் அவ்வளவு வடிவாகத் தெரிந்தார். திலினி அதைச் சொல்லி, “இளம் வயசில என்ன வடிவா இருந்திருப்பீங்க என்ன?” என்றதும் அவர் உள்ளம் கிடுகிடுவென்று நடுங்கியது. அந்தளவுக்குத் தன்னுருவை வெறுத்தார், அவர்.

நினைக்கவே கூடாதென்று இருந்தாலும் முடியவில்லை. மனதாழத்தில் உறைந்து கிடந்த கடந்த காலம் தன்னிருப்பை உணர்த்திற்று. மிகையாகவே மருட்டியும் பார்த்தது. 

 

error: Alert: Content selection is disabled!!