நட்சத்திரா 18 – 1

அன்று, ‘Salerno’ இல் இருந்து வீடு திரும்புகையில் கதைப்போம் என்றிருந்தான், டேமியன். அந்நேரத்துக்காகக் கல்யாணியும்  காத்திருக்கத் தொடங்கிவிட்டாள். தம்மிடையேயான நட்பு,  நேசமானது தெரிந்து, சிலநாட்களேதான் என்றாலும்  எப்படிப் பொறுமையாக இருந்தாள் என்று யோசிக்கும் வகையில், அவனோடு மனம் திறந்து கதைத்துவிட வேண்டும் என்று தவித்தாள், அவள்.  அது என்னவோ, அன்றையான் பொழுது நீட்டுக்கும் இழுபடும் உணர்வு! இத்தனைக்கும் உணவகத்தில்  நல்ல சனம். உணவு பரிமாறுவதை  மேற்பார்வை செய்தபடி நின்றாலும் இவளுமே ஓய்ந்து நிற்கவில்லை.

பகல் பொழுதுக்கு மேல் கிறிஸ்டினா, பிள்ளைகளோடு சுமதியும் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானார்.

“கவனமாப் போங்க அம்மா, நான் வரப் பிந்தும். டேமியனோட வாறன்.” என்ற மகளின், தலையை வருடிய சுமதியின் கரத்தில் நடுக்கம் தெரிந்தது. மனத்தில் முட்டிக்கொண்டு நிற்கும் மகிழ்வை அடக்குவதால் வந்த தளம்பல் அது.

 இன்று காலையில் வந்த நேரம் தொட்டு, அப்பப்போ பரிமாறப்பட்ட சுவையான உணவுகளை உண்டாரோ இல்லையோ, மகளையும் டேமியனையும் பார்த்துக் கொண்டேதான் இருந்தார். இதற்கு மேல், அவர்கள் வந்து வார்த்தைகளால் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. இருவருக்கும் இடையிலான நேசத்தை, அது நட்பைத் தாண்டிய உறவென்று அவர்களைத் தெரிந்தவர்களுக்குத் துல்லியமாக உணர்த்திவிட்டிருந்தார்கள்.  

“என்னம்மா இப்பிடிப் பாக்கிறீங்க?” என்ற கல்யாணியின் வதனத்தில் சுமதி ஒருபோதும் காணாத வெட்கம். தன் மகள் இவ்வளவு வடிவானவளா என்றுகூட எண்ணிவிட்டார்.  கண்கள் நிறைந்து போயின. 

“அம்மா!” இரு கரங்களாலும் அவர் விழிகளைத் துடைத்துவிட்டாள், கல்யாணி.

 “வீட்ட வந்து எல்லாம் சொல்லுறன் என்ன.” அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிக்கொண்டே, தாயை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

சுமதியின் கரங்களும் இறுக்கமாக மகளை வளைத்துக்கொண்டன.

கல்யாணிக்கு அழுகை வரும் போலிருந்தது. கட்டுப்படுத்தப்  பெரும் பாடுபட்டாள்.

 தாய்க்கு நான், நான் மட்டுமே  என்று இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்தவள் ஆச்சே! இப்போ அப்படியில்லை, எங்களுக்கு, எனக்கு, எனக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தோடு என்று ஒரு உறவு!

அதற்கெல்லாம்  வாய்ப்பே இல்லை என்று இருந்தவளாச்சே! பெரும் அணையாக, துணையாக  ஒருவன் வருவான் என்றோ, அவன் பேச்சும் பார்வையும் நடத்தையும் தன்னை அவனுள் சுருட்டி பொத்திக்கொள்ளும் என்றோ, கனவில் கூட எண்ணியதும் இல்லையே! 

உள்ளத்தில் முகிழ்ந்த மகிழ்வு விம்மலாக வெடித்துவிடுமோ என்று பயந்து போனாள். கட்டுப்படுத்த நினைத்தாள். அந்நேரம் கிறிஸ்டினா வந்து பரிவும் பாசமுமாகத்  தலையை வருடி விட்டாரா! வாயை இறுக மூடிகொண்டவளால் விழிக் கசிவைத் தடுக்க முடியவில்லை.

“என்ன இங்க நடக்குது? வெளிநாட்டுக்கு அம்மாவ அனுப்புற கணக்கில என்ன இது கல்யாணி?” அவள் முதுகில் தட்டிவிட்டு, சின்னவளைத் தூக்கிக் கொஞ்சியபடி நின்று அவளையே பார்த்தான், டேமியன்.

“ப்ச்!” என்றுவிட்டு விழிகளும் நெற்றியும் சுருங்க என்னவென்று கேட்டான்.

 “கண்ணைத் துடையுங்க”  என்று வாயசைத்தான். அவளும் தாமதிக்கவில்லை. தாயை விட்டுவிட்டு அழுத்தமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள். இதழ்கள் முறுவலில் நெளிந்தன.

கிறிஸ்டினா பார்வை மகனில்தான். அகத்திலும் முகத்திலும்  அவ்வளவு மகிழ்வு! சொல்லுறானா பார் என்றதும் தான். 

அதுவே , “எப்பிடி இருந்தது அம்மா?” என்றானா. “எதைக் கேட்கிறீங்க தம்பி?” என்றுகொண்டே கல்யாணியைப் பார்த்தவர் பார்வையில் சீண்டல்.

“அம்மா!” தாயை அணைத்து விடுவித்தவன், “வேற எதை?  புது ரெஸ்ட்டோரண்ட் பற்றிக் கேக்கிறன். நீங்க என்ன எண்டு நினைச்சீங்க? ம்ம் ” பதிலுக்குச் சீண்டினான்.

“நாங்க நினைக்கிறதுகள் இருக்கட்டும் தம்பி.  நீங்க நினைக்கிறதுகளை இந்தக் கிழவிகளிட்டையும் சொன்னாச்  சந்தோசப்படமாட்டமா? என்ன சுமதி நீங்க சொல்லுறீங்க?” என்றபடி கல்யாணியையும் பார்த்தார்.

கல்யாணியின் இருதயம் வேகமாக அடித்துக் கொண்டது. டேமியனைப் பார்த்தாள்.

“அதாரு கிழவிகள்? இப்பிடியெல்லாம் சொல்லி வேலைகளில இருந்து தப்ப நினைக்கக்கூடாது. என்ன கல்யாணி? இனித்தான் தெம்பா இருக்கோணும்.”பேச்சில் அவளை இழுத்துவிட்டான். அவளுக்கு வார்த்தைகள் வந்தால்தானே. 

முகம் சிவப்பது அப்படியே தெரிந்தது. எப்போதும் விறைப்பாக இருப்பவள் ஆச்சே! அதுவே அவளில் தெரியும் மாற்றங்கள் பளிச்சென்று தெரிந்தன. டேமியன் விழிகள் ரசனையில் மின்னின.

பார்வை அவளில் இருக்கவே, தாய்க்குக்  கதை சொன்னான், மகன்.

“எல்லாமே வீட்ட வந்தப் பிறகு கதைப்பம் சரியோ. என்ன சுமதிம்மா சரிதானே? இப்ப ஏறுங்க.” காருக்குள் ஏற்றிவிட்டான்.

இருவரும் அருகருகில் நின்றபடி கையசைத்து வழியனுப்பினார்கள். கிறிஸ்டினா, சுமதி மனத்துள் இக்காட்சி அப்படியே பதிந்துபோயிற்று. தம்முள் மனம் விட்டுக் கதைக்கும் ஆவல் இருந்தாலும் டேமியனும் கல்யாணியும் ஆரம்பித்து வைக்கட்டுமே என்று பொறுமையாக அமர்ந்திருந்தார்கள்.

அன்று, உணவகம் மூடிய பிறகே புறப்பட முடிந்தது. தனிமையை எதிர்பார்த்திருந்த உள்ளங்களுக்கு ஏமாற்றமாகவும் இருந்தது. டேமியனின் நண்பனும் அவன் மனைவியும் இவர்களோடுதான்  வந்தார்கள்.

அடுத்தநாள், கல்யாணிக்குக் காலை ஏழு மணிக்கு வேலை. அவளை முதலில் இறக்கிவிட்டுவிட்டே நண்பனின் வீடு செல்கிறேன் என்றான், டேமியன். கல்யாணி அமைதியாக  இருந்துவிட்டாள். 

“ நாளைக்குப் பின்னேரம்  அஞ்சு மணிக்கு வேலை முடிஞ்சிரும் தானே கல்யாணி?” என்றவனுக்குத் தலையாட்டினாள்.

“அதுக்குப் பிறகு உங்கட நேரத்தில எனக்குக் கொஞ்சம் வேணும்.” என்று அவன் சொன்ன விதத்தில், அவனருகில் இருந்த நண்பன் இவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, கல்யாணிக்கு அருகில் அமர்ந்திருந்த  தன் மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான். 

“Presto, Facciamo una grande festa (வலு கெதியா எங்களுக்கு ஒரு பெரிய பார்ட்டி இருக்கு!/Soon, We have a big party)” என்று அவன் சொல்ல, கல்யாணியின் முகம் சூடாகிற்று. 

முகம் மினுங்க இருந்தவளைத்  திரும்பிப் பார்த்தான் டேமியன். முழுமனமாகவே நண்பனையும் அவன் மனைவியையும் ஏற்றிப்  புறப்பட்டவனுக்கு, அந்நிமிடம், இருவரும் பெரும் இடைஞ்சலாகத்  தெரிந்தார்கள். இருண்டு கிடந்த பாதையைப் பொருட்படுத்தாது இறக்கிவிட்டுவிட்டுச் சென்றால்…கணம் இப்படியும் எண்ணிவிட்டான். அதுவே  வாய்விட்டே சிரிக்க வைத்திட்டு. 

 காரணம் கேட்டுக்  கடித்தெடுத்தாள், நண்பனின் மனைவி.

“சொன்னா அடிப்பீங்க!” என்று, மேலும் சிரித்தான், அவன்.

“என்னையும் உன்னையும் உதைச்சித் தள்ளிட்டு,  தாங்க ரெண்டு பேரும் போக நினைச்சிருப்பன்  இவன். இது தெரியாட்டி நான் என்ன ஃப்ரெண்ட் சொல்லு!”  என்றான் நண்பன். 

டேமியன் சிரித்த சிரிப்பில், அதன்பின் நடந்த கலகலப்பில், கதை பேச்சில், முகத்தைப் பொத்திக்கொண்டாள், கல்யாணி. அக்கணம், கடந்துவிட்ட பல வருடங்களை ஊதி அழித்துவிட்டு, இளம் பெட்டையாக, டேமியனின் காதலியாக உணர்ந்தாள், அவள். 

*****

 

error: Alert: Content selection is disabled!!