Skip to content
கிறிஸ்டினாவும் சுமதியும் அதையிதை என்று பொதுவாகக் கதைத்தபடி வந்தார்கள். டேமியன் கல்யாணி பற்றிக் கதைக்க இருவருக்குமே வார்த்தைகள் துருத்திக்கொண்டு நின்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் சிறு பிள்ளைகள் இல்லையே! அவர்களாகவே தொடங்கட்டும் என்றதே இவர்கள் எண்ணமாக இருந்தது.
சிலோன் டேஸ்ட்டில் இறங்கிக்கொள்வதாகச் சொல்லியிருந்தார், சுமதி. அவரை இறக்கிவிட்டுவிட்டு வீடு வந்த கிறிஸ்டினாவிற்கு, மனத்தில் ததும்பிக் கொண்டிருந்த மகிழ்விற்கும் சுறுசுறுப்பிற்கும் ஏற்ப உடல் ஒத்துழைக்கவில்லை. மிகுந்த களைப்பாக இருந்தது. எறும்பு போன்ற சுமதியின் சுறுசுறுப்பில் பொறாமையாகக் கூட இருந்தது. என்ன செய்வது? ஒரு ஒருத்தர் உடல்வாகும் வாழ்க்கை முறையும் அப்படி. தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். சற்றேனும் சாய்ந்திருந்து எழுந்தால்தான் சரிவரும்.
பிள்ளைகள் மூவரும் தத்தம் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். வரவேற்பறையில் இருந்த சாய்மனைக் கதிரையில் வந்தமர்ந்தார்,கிறிஸ்டினா.
அரை உறக்கத்தில் இருக்கையில் கனடாவிலிருந்து மகளின் அழைப்பு வந்தது.
இதுவரை, அவளிடம் கூட கல்யாணி பற்றி, மகனுக்கு அவளில் விருப்பம் என்று எதையுமே கதைக்கவில்லை. இப்போதுதான் ஐயமறத் தெரிந்திட்டே. மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார். அதுவும் ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் சகோதரன் திருமணம் பற்றி மகள் கதைத்த விதம் இவரை நன்றாக வலிக்கக் குத்தியிருந்தது.
இரண்டாம் தாரம், பிள்ளை பிறக்காது, பிள்ளையோடு ஒரு பொம்பளையைப் பார்க்கலாம் அப்படி இப்படி மகள் கதைத்தவற்றை அவர் ஒன்றும் மறந்துவிடவில்லை. அதுவே, கல்யாணி அருமையான பிள்ளை என்று, அவள் பற்றியே கதைக்க வைத்திருந்தது.
கேட்டவளுக்கும் சந்தோசம் தான். முதலில் அதைத்தான் வெளிப்படுத்தினாள்.
அதே வேகத்தில், “ஆனாம்மா….” என்று இழுத்தாள்.
“அந்தப் பிள்ள…பிள்ள எண்டு என்ன சொல்லுறது, நாப்பதாகப் போகுது என்ன?” என்றதும் , “ச்சே ச்சே முப்பத்தியாறு எண்டு நினைக்கிறன். இல்லையோ முப்பத்தியேழு வயதுதான் இருக்கும் “ என்று, அவசரமாகக் குறுக்கிட்டிருந்தார், கிறிஸ்டினா.
“முப்பத்தியஞ்சு கடந்தா நாப்பதுதான் அம்மா. சரி விடுங்க, டேமியனுக்கும் அப்பிடித்தானே? அவா லவ் ஃபெயிலியர் எண்டு முந்தி ஒருக்காச் சொன்ன நினைவு, அது டேமியனுக்கும் தெரியுமா அம்மா? அதையும் விட்டுத்தள்ளலாம், இவனும் தானே ரெண்டாம் தாரம்.” என்ற மகளைக் கைப்பேசியின் ஊடாக முறைத்தார், கிறிஸ்டினா.
“ அதெல்லாம் தம்பிக்குத் தெரியும் ஜாக்குலின். முதல், அது எப்பவோ நடந்த விசயம். இப்ப என்னத்துக்குக் கதைப்பான் சொல்லுங்க.” அதிருப்தியோடு சொன்னார்.
“அதான் அம்மா, விடுங்க எண்டனானே. ஆனா, அவா சைவம் எல்லா? வேதத்துக்கு மாறுவாவோ?அதைப் பற்றிக் கதைச்சீங்களா?” தீவிரமாகவே கேட்டாள்.
உண்மையில், இதுவெல்லாம் கிறிஸ்டினா நினைவிலேயே வரவில்லை.
“சொந்தக்காரர் எண்டு அங்க ஆரும் இருக்கீனமா? என்ன சாதி எண்டு தெரியுமா அம்மா? அதெல்லாம் பாக்க மாட்டன் , எந்தக் காலத்தில இருக்கிறீங்க எண்டு டேமியன் சொன்னாலும் எங்களுக்கு அதும் முக்கியம் எல்லா அம்மா? எதுக்கும் தீபா அன்ரிட்ட ஒருக்கா வடிவாக் கதச்சிருங்க!” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள், அவர் மகள் .
எங்கோ ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த கிறிஸ்டினாவை, சடக்கென்று பிடித்துக் கீழ் நோக்கி இழுத்த உணர்வு. மகள் சொல்வதிலும் பிழையில்லையே என்றது மனம்.
“யோசிச்சுப் பாருங்கவன் அம்மா, சும்மா கிடந்த தோட்ட வீட்டில வாடகைக்கு இருக்க, எங்கட தேவைக்கு நல்ல சமையல்காரி எண்டு ஒரு வேலையைப் போட்டுக் குடுக்க எல்லாம் அவேட குடும்பப் பின்னணி, சாதி, மதம் எல்லாம் பாக்கத் தேவேல்ல. கலியாணம் செய்யத் தேவை எல்லா?” படபடவென்று சொல்லி, கிறிஸ்டினா வாயை அடைத்துவிட்டாள், ஜாக்குலின்.
“ மாடா உளைச்சுச் சேத்து வச்சிருக்கிற சொத்துகள் எல்லாம் பிறகு அவவுக்கு எண்டும் ஆகும் தானே? ஏற்கனவே அண்ணா பெத்திட்டுப் போன மூண்டும் இருக்குதுகள். இதுக்கக் கலியாணியும் தாயும். இவன் டேமியன் பிறந்ததே ஊருக்கு உழைச்சுக்கொட்ட எண்ட போல ஆகிரும்.” என்று மகள் தொடர, கிறிஸ்டினாவினுள் பயமே வந்திட்டு.
அதை அதிகரிக்கும் வகையில் ஜாக்குலின் பேச்சு இருந்தது. “டேமியனுக்கு நல்லது நடந்தா ஆருக்கு அம்மா மகிழ்ச்சி இல்ல. இப்பவே எல்லாம் விசாரிச்சிருறது நல்லம் எண்டுறன். சும்மா டேமியன் சொல்லுறான் எண்டு தலையாட்ட வேணாம். பியங்கா விசயத்திலயும் இதானே நடந்தது. இத்தாலிக்காரி எண்டு வேணாம் எண்டதக் கேட்டவனா? அது அரைகுறையில போயிட்டுது. இப்ப நான் வெளிக்கிட்டு வந்திருவன், சின்னாக்களோட கரைச்சல் எண்டு யோசிக்கிறன்.” மூச்சு விடாது கதைத்திருந்தாள் , ஜாக்குலின்.
மகள் கதைத்த விதம், தொனியில் திகைத்துப் போயிருந்தவரால் ஒரு வார்த்தை திரும்பிச் சொல்ல வரவில்லை. கண்கள் கலங்க அமர்ந்திருந்தார் , கிறிஸ்டினா.
இரவு முழுதும் யோசித்தார். இதுவெல்லாம் ஜாக்குலின் சொல்லும் அளவுக்குப் பெரிய விசயமே இல்லை என்றது அவருள்ளம். அதேநேரம், சுமதி, கல்யாணி பற்றி தீபாவோடு கதைப்பதிலும் பிழையில்லையே என்ற முடிவுக்குத்தான் வர முடிந்தது. மதம் மாறுவது பற்றியும் சுமதியோடு கதைக்க வேண்டும் என்றும் குறித்துக்கொண்டார்.
மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாகச் சிநேகிதிக்கு அழைத்தார்.
சுக நலவிசாரிப்புகளைச் சுருக்கமாகவே முடித்துக்கொண்டு கல்யாணி என்று ஆரம்பிக்கவே, ஆர்வமாக அவர்களின் சுகநலன்கள் பற்றிக் கேட்டுக்கொண்டார்,தீபா.
முதலில், பொதுவாகக் கல்யாணி குடும்பம் பற்றி விசாரித்துவிட்டே மகன் விரும்புவதைச் சொல்ல வேண்டும் என்று கிறிஸ்டினா நினைத்திருந்தார். அது பார்த்தால் எடுத்ததும், “நான் சொல்ல வந்ததக் கேட்டா நீர் சந்தோசப்படுவீரப்பா!” என்றிருந்தார்.
“அப்பிடி என்ன விசயம்?” என்ற தீபா,“உங்கட கல்யாணியும் என்ர மகனும் விரும்பினம் !” என்று கிறிஸ்டினா சொன்னதை எதிர்பார்க்கவில்லை. சில கணங்கள் சத்தமேயில்லை. திரையில் தெரிந்த தீபாவின் முகத்தில் வந்து குந்திய அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
கிறிஸ்டினா அதைப் பெரிதாக எடுக்க எண்ணவில்லை.
அதுவே, “என்ன கிறிஸ்டி சொன்னனீர்?” என்று மீண்டும் கேட்க, மலர்ந்த சிரிப்போடு, “ எல்லாம் சரியாத்தான் கேட்டிச்சு தீபா. கல்யாணியும் டேமியனும் விரும்பினமாம். கெதியா கல்யாணம் செய்து வச்சிரலாம் எண்டு இருக்கிறன். உம்மட மகள் போல எண்டு சொல்லுறனீர் எல்லா, நீரும் வாருமன். “ என்றிருந்தார்.
தீபாவின் வாய் அசையவில்லை. மனத்தில் ஓடிய அதிர்வில் நா உறைந்திருந்தது.
“அதான், அவையளிட சொந்தபந்தம் குடும்ப விபரங்கள் ஒண்டும் பெரிசாத் தெரியா எல்லா? கேப்பம் எண்டு எடுத்தனான்.” என்றவருக்கு, பதில் சொல்லவும் முடியவில்லை. ஆனால், பதில் சொல்லியே ஆக வேண்டியவர் அவர்.
“டேமியன் வீட்டில நிக்கிறாரா கிறிஸ்டி?” ஒரு முடிவோடு வினவினார்.
“பிள்ளைகளப் பள்ளிக்கூடத்தில விடப் போயிட்டார்.” என்றவர், “கெதியா கலியாணத்த நடத்தலாம் எண்டு நினைக்கிறன் தீபா.” என்று, மகன் திருமணத்திலேயே நின்றார்.
“அப்ப… டேமியனும் வந்தோன்ன எனக்கு ஒருக்கா எடுக்க ஏலுமா? கட்டாயம் எடும் கிறிஸ்டி, பாத்துக்கொண்டு இருப்பன்.” என்றவரை, கிறிஸ்டினா முறைத்தார்.
“நான் சொன்னதுக்கு ஒண்டுமே சொல்லேல்ல . கல்யாணி மகள் போல எண்டுறனீர் எல்லா? சந்தோசம் இல்லையா என்ன? ஏன், டேமியன் ரெண்டாம் தாரம் எண்டு யோசிக்கிறீராப்பா? கல்யாணிக்கு விருப்பம் எண்டுதானே சொல்லுறன், பிறகு என்ன? ” என்று முறுக்கிய தோழிக்கு, எதை எப்படிச் சொல்வார். தீபாவினுள் பெரும் போராட்டம் .
“நீ எடன் கிறிஸ்டி கதைப்பம்.” அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தார்.
தான் எவ்வளவு மகிழ்வாகப் பகிர்ந்த விடயம்! சினேகிதி என்ன மாதிரி வினையாற்றி இருக்கிறார்? கிறிஸ்டினா மிகவுமே குழம்பிப் போனார். யோசிக்க யோசிக்க அது கவலையானது.
error: Alert: Content selection is disabled!!