நட்சத்திரா 19 – 1

“நிறைய அலுவல் கிடக்கம்மா, தீபா அன்ரியோட பிறகு வந்து கதைக்கிறனே. உங்களோடையும் தான்.” என்று, அவசரம் அவசரமாக வெளிக்கிட்ட மகனைப் பிடித்தமர்த்தி, “ஒரு அஞ்சு நிமிசம் தான் தம்பி .” என்று சொல்லி,  தீபாவுக்கு அழைத்திருந்தார், கிறிஸ்டினா. 

உண்மையைச் சொன்னால் அவர் மனத்தில் இப்போது கலவரமே மூண்டிருந்தது. மகனிடம் வெளிக்காட்டவில்லை. அவனோ, அடுத்து அடுத்து என்றிருந்த வேலைகளில் கவனம் வைத்துக்கொண்டு, ஒரு வகை எரிச்சலோடுதான் அமர்ந்தான்.

தீபா, இவர்களின் அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  எதை, எப்படிக் கதைப்பது என்ற போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் கல்யாணி. அவளையும் சுமதியையும் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். எவ்வளவு வலிகள், வேதனை இழப்புகள்  என்றிருந்தாலும் வாழ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தில் அவருக்கு எப்போதுமே வியப்புண்டு. மரியாதையுண்டு. அதுவே, தன்னால் இயன்ற உதவிகளைச்  செய்து விடுவதும். 

 அதுவும் கல்யாணி…தன்னை மீறி, தனக்கான வாழ்வை உதறிவிட்டுச் செல்லும் வகையில், பெற்ற தாயில் அவள் வைத்திருக்கும் அன்பு இருக்கே! அவளுக்கு ஒரு நல்வாழ்வு என்றால் மகிழ்பவர் தான் இவர். அவரே, சூர்யாவைக் கடந்து வா, உனக்கு என்று ஒரு குடும்ப வாழ்க்கை  கட்டாயம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியும் இருக்கிறார்.

ஆனால், கிறிஸ்டினாவும் டேமியனும்? கல்யாணியை விடவும் நெருக்கமும் முக்கியமுமானவர்கள். 

ஒரே ரிங்கில் வீடியோ அழைப்பை ஏற்று முகத்தைக் காட்டினார், தீபா.  

எப்போதும்,  “எனெர்ஜி பொம் அன்ரி நீங்க.” என்பான், டேமியன். இன்று, கலகலப்பு இல்லாது வறண்டு வந்தது  ‘ஹலோ’. சிரிக்க வேண்டுமே என்று சிரித்தும் வைத்தார்.  

“என்ன அன்ரி ஒரு மாதிரி இருக்கிறீங்கள்?” என்றுதான் டேமியன் ஆரம்பித்ததே. கிறிஸ்டினாவின் பார்வை நண்பியைத் துளைத்துக்கொண்டிருந்தது. அவர் மனமோ, எதுவோ வேண்டாத விசயம் வரப்போகிறது என்றது.

“அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்ல டேமியன்.” என்றுவிட்டு, புது உணவகம் பற்றிக்  கேட்டார். 

“ அவரே  இந்தா  வெளிக்கிடுறன்,  அவசர அலுவல் கிடக்கு எண்டுகொண்டு நிண்டவர் தீபா. பிடிச்சு வச்சிருக்கிறன், என்ன விசயம் எண்டு சொல்லும். எனக்கும் என்னவோ ஏதோ எண்டு இருக்கு.” தாமதியாது விசயத்துக்கு வந்தார், கிறிஸ்டினா.

டேமியனின் விழிகளோடு இணைந்து நெற்றி சுருங்கியது. தாயைப் பார்த்துவிட்டு, “என்ன அன்ரி என்ன விசயம்?  எது எண்டாலும் சொல்லுங்கோ! உங்களுக்குத் சொல்ல, நாங்களும் ஒரு ஹப்பி நியூஸ் வச்சிருக்கிறம் ?” என்றான், அவரையே பார்த்தபடி.

தீபாவால்  பட்டென்று வாய் திறக்க முடியவில்லை. பெரிதும் அந்தரப்பட்டார். அந்த ‘ஹப்பி நியூஸ்’ தானே பிரச்சினையே என்று, எப்படி விளங்க வைப்பார். முதல், டேமியன் மிகுந்த பிடிவாதக்காரன். பியங்கா விடயத்தில் அதைக் காட்டியும் இருந்தான்.கல்யாணி விசயத்தில் என்ன முடிவுக்கு வருவான். அனுமானிக்க முடியவில்லை. 

“அந்த ஹப்பி நியூஸ் என்ன எண்டு நானே  சொல்லீட்டன் தம்பி. கேட்ட தீபா ஒரு வார்த்த கதைக்கேல்ல தெரியுமா? உங்களோடையும் கதைக்கோணும் எண்டவா. அதான் இப்ப எடுத்தனான்.” என்று சொன்ன கிறிஸ்டினா குரலில் இருந்த தவிப்பும் தடுமாற்றமும் டேமியனுள்ளும் புகுந்து கொண்டது.

“அன்ரி, நானும் கல்யாணியும் விரும்புறம். அம்மா சொல்லிட்டா எண்டு எனக்குத் தெரியா. சும்மா சொல்லுங்க, அப்பிடி என்ன விசயம்? கல்யாணி பற்றியா? என்ன எண்டாலும் சொல்லுங்க.” நேராகப்  பார்த்துக் கேட்டவன் நிமிர்ந்து அமர்ந்துகொண்டான்.

தான் சொல்லப்போவது முழுவதுமாக சுமதியின் பிரத்தியேக விசயம். அதை விவாதிக்கவோ,  பகிரவோ அவருக்கு உரிமையே இல்லை. அன்று, சுமதி சிறையில் இருந்தவர் என்றதையே  வாய்தவறித்தான் கிறிஸ்டினாவிடம் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது ,டேமியன் எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டிய நிலையில் நிற்கிறானே. நாளைக்கு, நீ சொல்லவில்லையே என்று கேள்வி கேட்கும் நிலையில் தன்னை நிறுத்தினால்?

எப்போதும் நிமிர்வும் தெளிவும் உள்ள அவர் முகத்தில்,  மாறிய உணர்வுகளையே பார்த்திருந்த டேமியனுள், எதுவோ சரியில்லை என்ற உணர்வு. தாயிடம் திரும்பினான். 

“என்னம்மா?” என்றுவிட்டு, தீபாவைப் பார்த்தான்.

“கல்யாணியும் நானும் விரும்பிறத அம்மாட்டக் கூட வெளிப்படையா இன்னும் சொல்லேல்ல அன்ரி . இந்தா  இப்பதான் சொல்லுறன். என்ர மிச்ச வாழ்க்கைக்கு நல்லதொரு துணையா அவா இருப்பா எண்ட முழு நம்பிக்கை எனக்கு இருக்கு. சொல்லுங்கோ, ஏதாவது பிரச்சினையா? அவாவுக்கா?  வருத்தம் எண்டு ஏதாவது இருக்கோ?” இப்படித்தான் அவன் சிந்தை சென்றிட்டு.

“ச்சே ச்சே… ஐயோ அப்பிடி வருத்தம் எல்லாம் ஒண்டும் இல்ல தம்பி. அதோட அவா அருமையான பிள்ள. அவா பற்றி…சூர்யா எண்ட  ஒரு பெடிய விரும்பியிருந்தத,  சுமதி ஆமிட்ட பிடிபட்டது, சிறைக்க  இருந்து வந்தது எல்லாம்…” என்று இழுத்தார்.

“இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே அன்ரி. திரும்ப என்னத்துக்கு?” என்றவன் குரலே, அந்தக் கதையைக் கதைக்க விரும்பவில்லை என்றது. 

“இல்ல அது வந்து…நான் இப்பவரைக்கும்  சொல்லேல்ல  எண்டு நீங்க குறையா நினைக்கக்  கூடாது. சொல்லத்  தேவேல்ல எண்டு விட்டனான். ஆனா, இப்ப நீங்க அந்தப் பிள்ளையக் கலியாணம் செய்யப்போறன் எண்டு சொல்லேக்க, உங்கள் இரண்டு பேருக்கும் அதெல்லாம் தெரியோணும் எண்டு நினைக்கிறன்.  அதான்…” சொல்ல வந்ததை நறுக்கென்று சொல்லிவிடும் தன் சுபாவம் மறந்தவராக அதையிதைக் கதைத்தார், தீபா.

“இன்னும் நீங்க விசயம் இதான் எண்டு சொல்லேல்ல அன்ரி. ப்ளீஸ்! என்ன எண்டாலும் வெளிப்படையாச் சொல்லுங்க!” என்ற டேமியன் குரலில் கடினம் வந்திருந்தது. 

அவனுக்கு, என்னதான் என்றாலும்  கல்யாணி பற்றி இப்படி இருந்து கதைக்கவே ஒரு மாதிரி இருந்தது. குறுகிய காலம்தான். ஆனாலும் அவளை வேறாக எண்ண முடியவில்லை. அதையே,  குரலிலும் முகபாவனையிலும் வெளிக்காட்டி இருந்தான். 

“சிறைக்க இருந்தவா எண்டனான் எல்லா?” என்றவர், கிறிஸ்டினாவைப் பார்த்தார். மிகவுமே தயங்கினார்.

“அவங்கள்…அவங்கள்…” அவர் தடுமாற, டேமியன் பொறுமை பறந்திருந்தது.

 “இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே அன்ரி, மிச்சத்தச் சொல்லுங்க.” என்றிருந்தான்.

 “பிடிச்சுக்கொண்டு போனது சிறைக்கு இல்ல கிறிஸ்டி . அங்கயே தனிய வச்சிருந்து …எப்பிடிச் சொல்ல …அவவ மட்டும் இல்ல… உங்களுக்கு விளங்குதுதானே?”என்றவர் குரல் கரகரத்திட்டு.

“சீரழிச்சுப் போட்டான்கள். மாதக்கணக்கில வச்சிருந்திட்டு பிறகு ரெட் லைட் ஏரியாவில கொண்டுபோய்த் தள்ளி விட்டுட்டான்கள்.”என்றவர், சிறிது நேரம் கதைக்கவில்லை. சுமதியை அவர் முதன் முதலில் கண்ட  நிலைதான் நினைவுக்கு வந்தது.

டேமியனும் கிறிஸ்டினாவும் ஆடாது அசையாது அதிர்ந்திருப்பதைப் பார்த்தவர், தன்னைச் சுதாரித்துக்கொண்டு மெல்ல ஆரம்பித்தார்.

“ அங்க கிட்டத்தட்ட ரெண்டு வருசங்கள் இருந்திருக்கிறா. ஒரு நோயாளியா, உருக்குலைஞ்சு இருந்த சுமதிய  நான் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில கண்டனான். அவவிட கதையக் கேட்டிட்டு, எங்கட  செல்வாக்கால வெளில கொண்டு வந்திட்டன். அது கூட சுகமா இருந்தது. ஆனா…  அந்த நினைவுகளில இருந்து அவா வெளிய வர ஆண்டுக்கணக்குப் பிடிச்சது. ஆள் ஓகே எண்ட பிறகுதான் கல்யாணிட்டச் சொல்லிச் சேர்த்து வச்சம்.” என்று  அவர் சொல்ல சொல்ல, தாயும் மகனும் உறைந்து போய் இருந்தார்கள்.

அன்று, சுமதி, இராணுவத்திலிருந்த கர்ண கொடூர  மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்டு விபச்சாரி ஆக்கப்பட்டவர். ஒற்றை வரி விளக்கம் இதுதான்.

‘இராணுவம்’ என்ற ஒரு அடையாளம், சம்பளம் வாங்கிக்கொண்டே என்றாலும் குடும்ப உறவுகளை நாட்டுக்காகப்  பிரிந்து அர்ப்பணித்து வாழ்பவர்கள் என்று போற்றப்படும். அதேவேளை, கொடும் மிருங்கங்களைத்  தன்னகத்தே கொண்டோரும் உண்டு என்று புரியவைக்க, உலகளாவிய ரீதியில்  நடந்துள்ள, நடக்கிற சம்பவங்கள் பலவுண்டு.

 

error: Alert: Content selection is disabled!!