தாமும் அதற்கு விதிவிலக்கல்ல என்று இலங்கை இராணுவமும் நிரூபித்தது. தாயை, சகோதரியை, மனைவியைத் துளி நேசிப்பவனாலும் செய்ய முடியாத கொடூரங்களைப் பலருக்குச் செய்தார்கள். அதில் சுமதியும் ஒருத்தியாகிப்போனார்.
சில வருடங்களே என்றாலும் கட்டாயத்தில் தான் என்றாலும் விபச்சாரி விபச்சாரிதானே! கிறிஸ்டினாவுக்குக் கேட்டதைச் சீரணிக்கவே முடியவில்லை. சிந்தை மரத்த நிலையில் இருந்தார்.
“இதெல்லாம் சூர்யா வீட்டுக்குத் தெரிஞ்சு, பிரச்சினை வந்து தாய் திரும்பவும் மனநோயாளி ஆகிட்டால் எண்டும் தன்ர முழுக்கவனமும் தாயில மட்டும் இருக்கோணும் எண்டும் தான், கல்யாணி சூர்யாவை விட்டு ஒதுங்கினது. சூர்யா வீட்டுக்கு விபத்து, இறப்பு எண்டு அவா பற்றிப் பொய் சொன்ன நேரம், நான் எவ்வளவோ சொன்னனான், அவா கேக்கேல்ல.” தீபா சொல்லிக்கொண்டு சென்றார்.
கிறிஸ்டினா சடக்கென்று மகனைப் பார்த்தார். ‘சூர்யா வீட்டில என்ன பிரச்சினை வரும் எண்டு நினைச்சா?’அவர் மனத்தில் இந்தக் கேள்விதான். அதே விசயம் இப்பவும் இருக்கே! பிறகு எப்படி அந்தப் பெண் தன் மகனை விரும்பலாம்? விபச்சாரி மகள் எப்படி அவருக்கு மருமகள் ஆகலாம்? தான் இங்கிருக்கும் வரை டேமியன் பக்கமும் திரும்பாது இருந்துவிட்டுச் சந்தர்ப்பம் கிடைத்ததும் தாயும் மகளும் சொகுசா இருக்க வழிதேடிவிட்டார்களோ! மிகுந்த கோபம் கொண்டார், கிறிஸ்டினா.
‘ கனி’ என்று, அதுவரை கல்யாணியில் பாசத்தை மட்டுமே காட்டியவர், மகன் வாழ்வில் அவள் வருவதை மகிழ்வாக ஏற்றவர், எதிர்பார்த்தவர், இக்கணம் அதையெல்லாம் அடியோடு மறந்துவிட்டார். சுமதியின் கடந்தகாலம் அந்தளவுக்கு மறக்கச் செய்திருந்தது. சாதி, சமயம், உற்றார் உறவு பற்றி விசாரிக்க வேண்டும் என்றதையே அவர் மகள் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாள். இதைக் கேட்டால்?
மனத்துள் மூண்ட கோபத்தை முதலில் தீபாவில் காட்டினார்.
“நீர் இப்ப சரி இதுகளச் சொன்னீரே! அதெப்பிடி தீபா இவ்வளவு பெரிய விசயத்த மறைச்சு அவையள இங்க எங்களிட்ட அனுப்புவீர்? அண்டு,சிறைக்க இருந்தது எண்டதச் சொன்ன நேரமே கேக்க நினைச்சனான். எங்களிட்ட உதவி கேட்டு அனுப்புறீர், ஆனா, அவே பற்றி உண்மையை மறைச்சு. என்ன தீபா இதெல்லாம்? “ சீறினார்.
“ இத்தாலிக்கு, அதும் மிலானுக்கு எண்டு ஆர் இலங்கையாக்கள் வந்தாலும் அவே அங்க எவ்வளவு பெரியாக்களா இருந்தாலும் ‘சிலோன் டேஸ்ட்’ வராமல் போறதில்ல எண்டு உமக்கு நல்லாத் தெரியும் தீபா. அப்ப, அந்த மனிசிட்டப் போனவங்கள் கூட வரச் சந்தர்ப்பம் இருக்கு என்ன? எங்கட மரியாத என்னாகிறது சொல்லும் ?” அவர் முடிக்கவும், “அம்மா!” என்று உறுமியிருந்தான், டேமியன்.
“இஞ்ச பாருங்க தம்பி, நான் ஒண்ணும் இல்லாத பொல்லாததுகளக் கதைக்கேல்ல. எனக்கு அந்தப் பழக்கமும் இல்லை. உங்கட அண்ணா, நான் பெத்தவன் என்ன? நடத்தை அவ்வளவு சரியில்ல, லவ் கிவ் எண்டுகொண்டு, கண்ட கண்ட பொம்பளைகளுக்குப் பின்னால திரியிறான், ஒண்டுக்கு மூண்டு கலியாணம் கட்டிப் பரிசிகெடுக்கிறான் அது இது எண்டு ஊருப்பட்டதுகள் சொல்லி எல்லா, நீங்களும் உங்கட அப்பாவும் ஒரே பிடியில் நிண்டு இந்த வீட்டுக்குள்ள அவன் வரக்கூடாது எண்டு சொன்னனீங்க? ஓமா இல்லையா சொல்லுங்க? அப்ப பெரிசாத் தெரிஞ்ச மானமும் மரியாதையும் இந்தச் சனம் இஞ்ச இருக்கப் போகாதோ? எங்கட ரெஸ்ட்டோரண்டில வேலை செய்யலாமா அந்தச் சீரழிஞ்ச மனிசி?”என்று, கோபமாகவே தொடர்ந்தார்.
“அம்மா வேணாம், இதோட நிப்பாட்டுங்க!” என்றுகொண்டு எழுந்துவிட்டான், டேமியன்.
“சுமதிம்மாவுக்கு எத்தினை வயது? உங்களைப் போலத் தானம்மா அவாவும். இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க!” என்றபோது, அவன் கண்கள் நிறைந்து போயின.
அதைப்பார்த்தக் கிறிஸ்டினா நெஞ்சம் பதறியது. ‘இவன் என்ன இதுக்குப் பிறகும் கல்யாணிதான் எண்டு நிக்கப் போறானா?’ என்று அவருள் எழுந்த பயம், தீபாவில் கோபமாகப் பாய்ந்தது. கத்துக் கத்தென்று கத்திவிட்டார்.
தீபாவோ அதிர்ந்தமர்ந்திருந்தார். அவர் எதற்காகச் சொல்ல வெளிக்கிட்டார், இப்போ என்ன நடந்துவிட்டது!
இனி ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என்று கிறிஸ்டினா சொல்லும் அளவிற்குப் போயிருந்தது.
தாயைச் சமாளிக்க வேறு வழியில்லை என்றதில் கோபத்தில் உறுமினான், டேமியன்.
“இஞ்ச பாருங்கம்மா, எப்பவோ நடந்ததுக்குச் சும்மா தேவையே இல்லாமக் கத்தாதீங்க சரியோ! நடந்ததில சுமதிம்மாட பிழை எண்டு ஏதாவது இருக்கா சொல்லுங்க பாப்பம் ? அப்பிடி ஒரு சந்தர்ப்பத்தில இருந்திருந்தா, உங்களுக்கோ தீபா அன்ரிக்கோ கூட இது நடந்திருக்கலாம் எண்டத நல்லா நினைவில வச்சிருங்கோ சரியோ!” என்றுமில்லாவண்ணம் சீறியிருந்தான்.
“இத உங்களிட்ட எதிர்பார்க்கேல்ல அன்ரி . த கிரேட் சைக்காட்ரிக் தீபா ரஞ்சன் இப்பிடிச் செய்யலாமா என்ன? சரி, சொல்லோணும் எண்டு இருந்தாலும் என்னட்டச் சொல்லி இருக்கலாம். ப்ச் …விடுங்க!” என்ற வேகத்தில் தாயிடம் திரும்பினான்.
“ இனி இதைப்பற்றி நீங்க தயவு செய்து ஒண்டும் கதைக்க வேணாம் அம்மா. அதோட, இந்தக் கதை எங்கள் மூண்டு பேருக்கையும் மட்டும் இருக்கோணும். என்ன கதைக்கிறது எண்டாலும் இரவுக்கு நான் வந்தோன்ன கதைக்கலாம். பச்! அழுது பிரஷர் தான் ஏறும்.” தாயைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரைத் துடைத்து விட்டவன், அந்தப் பரிவுக்கு நேரெதிராகக் கண்டிப்போடு பார்த்துக் கதைத்தான்.
“திரும்பவும் சொல்லுறன், எங்கள் மூண்டு பேர் தாண்டிப் போகக் கூடாது! சுமதி அம்மாட்ட ஏதும் கதைச்சீராதீங்க என்ன? பிறகு உங்கட மகன்…வேணாம் நான் சொல்லேல்ல…நான் என்ன சொல்ல வந்தனான் எண்டு உங்களுக்கு நல்லாவே விளங்கும்.” என்றுவிட்டு, விருட்டென்று வெளியேறி இருந்தான்.
சிநேகிதி, சொந்தம் என்று எந்தச் சகவாசமும் இனி வேண்டாம் என்று அழைப்பைத் துண்டித்த கிறிஸ்டினா அழுதபடியே அமர்ந்திருந்தார்.
மனத்தில் எண்ணங்கள் புரண்டபடி இருந்தன. மகன் கல்யாணியை நோக்கி வைத்த காலை பின்னெடுப்பான் போலில்லையே! அதில் சந்தேகமா என்றது மனச்சாட்சி. என்னதான் தீர்வு!
கல்யாணி என்பவள் ஒருநாளும் அவருக்கு உறவாக முடியாது. ஒரே வழி அவர்களாக விலகுவது மட்டுமே!
மகனின் எச்சரிக்கையை இந்த விடயத்தில் அவர் ஒரு பொருட்டாகவே எடுக்கப் போவதில்லை. அவ்வளவும்தான்.
காலை நேர வேலை முடிந்து சுமதி வரும் நேரத்திற்காக, வாயிலையே பார்த்தபடி அமர்ந்திருந்தார், கிறிஸ்டினா.