Skip to content
சிலோன் டேஸ்ட் வரை, டேமியன் எப்படி வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. அந்தளவுக்கு அவன் மூளையில் சுமதி பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தன. குடும்பம் சிதைந்து அழிந்து, அதை உணரும் முன்னே பிணம் திண்ணிக் கழுகளால் தினம் தினம் கொத்திக் குதறப்பட்டு…
இதெல்லாம் அவன் சிந்தைக்கு எட்டாததாக இருந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த மனிசியா அவர்? சற்றுமே நம்ப முடியவில்லை. இதில், ஒரு மகளாக, கல்யாணியின் மனநிலை பற்றி எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை.
பியங்காவின் பிரிவில், தனக்கு, ஏன் இத்தனை பெரிய தண்டனை என்று துடித்து மருகி நின்றிருக்கிறான். இன்றளவும் அந்த எண்ணம் உண்டே! அப்போ இதெல்லாம்? கல்யாணியால் எப்படி இதற்கெல்லாம் முகம் கொடுத்துத் தாண்டி வர முடிந்தது? எத்தனை நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும்? உடனே அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்தவே போராட வேண்டியிருந்தது. மாலையில் சந்திக்கத்தானே போகிறாய் டேமியன் என்று, தனக்குத்தானே அதட்டல் போட்டு அடக்கிவிட்டே உணவகத்தினுள் உள்ளிட்டான்.
விழிகள் அவனையும் அறியாதே சுமதியைத் தேடின. முன்பகுதியில் சிலமன் இல்லை. பின்னால் நிற்கிறாரோ!
காலை வணக்கங்கள் காதுகளை உரசின. பொதுவாகச் சிறு தலையசைப்பைச் சரி வழங்கி விடுவான். இன்றோ, எதுவும் இல்லை. இறுகிய முகத்தோற்றத்தோடு விறுவிறுவென்று உள்ளே செல்பவனை, காலையுணவுப் பகுதியில் நின்றவர்கள் ஒரு சாதியாகப் பார்த்தார்கள்.
கோபத்தில் போகிறானோ! எல்லோருக்கும் அதே எண்ணம்தான் .
முதல் நாளைய புது உணவகத் திறப்புவிழா பற்றி, கல்யாணியுடனான இவன் உறவை அவன் மறைக்காது நடந்து கொண்டது பற்றித்தான் அதுவரை அங்குக் கதை போய்க்கொண்டிருந்தது. சுமதியைப் பிடித்து ஒரு வழிபண்ணிக்கொண்டிருந்தார்கள். அதுபார்த்தால் இவன் இப்படி வருகிறானே! அங்கு நின்றவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்துக்கொண்டார்கள்.
டேமியன் சமையல் பகுதிக்குள் நுழைந்த நேரம் சுமதி அப்பம் சுட்டுக்கொண்டு நின்றார். அவரையே பார்த்துக்கொண்டு நின்றான், அவன்.
இதைக் கண்ட திலினிக்கு யோசனை. அருகில் நின்றவளை இழுத்து, ஏதாவது பிரச்சினையோ என்று குசுகுசுத்தாள்.
ஐந்து சோடி அப்பம் ஓடர் வந்திருந்தது. சுட்டுவிட்டுத் திரும்பிய சுமதி, டேமியன் தன்னையே பார்த்து நிற்கிறான் என்றே எண்ணவில்லை. மலர்வோடு, “வணக்கம் தம்பி, அப்பம் சாப்பிடுறீங்களா?” என்றார்.
அவர் விழிகளையே உற்றுப் பார்த்தான், அவன். இதுவரை, அவரைப் பார்க்க இந்தளவுக்கு அவன் நேரம் செலவிட்டதில்லை. விழிகள் இரண்டும் கல்யாணியினுடையதே போல், ஆழ்கடலை ஒத்திருந்தது. மேலோட்டமாகப் பார்க்கையில் சாதாரணமாகத் தெரிந்தாலும் அடியாழத்தில் உறைந்து நிற்கும் வேதனையின் சாயல் தெரிகிறதோ!
கனத்துக் கிடந்த மனம் பிசைந்தது. உண்மையில், நிலைகுலைந்து போன நிலை அவனுக்கு.
“தம்பி” அவனுக்கு முன் வந்து நின்று அழைத்தார், சுமதி. அவர் கரம் நீண்டு, அப்பம் உள்ள பையைத் திலினியிடம் கொடுத்துமிருந்தது.
“அப்பம் ரெண்டு சுடவோ? சாப்பிடுறீங்களா?” எப்போதும் போலக் கேட்டு முறுவலித்தார்.
அவனையும் அறியாதே இருகரம் விரித்து அவரைக் கட்டிப் பிடித்திருந்தான், டேமியன்.
“தம்பி!” என்றவருள் ஆச்சரியமும் சற்றே அசௌகர்யமும். மகன் போன்றவன். அதுவும் இப்போதெல்லாம் மகனேதான். இருந்தாலும் வேலையிடத்தில் அவருக்கென்று சிறு சலுகையும் அவனிடத்தில் இருந்ததில்லை. அவரும் அதை எதிர்பார்த்ததில்லை.
முதுகில் தட்டிக் கொடுத்தவர், “என்ன தம்பி ?” என்றார்.
டேமியனுக்கு சுயவுணர்வு வந்திருந்தது. இப்போ நான் என்ன செய்துவிட்டேன். பச்! தன்னுள் சலித்துக்கொண்டாலும் அவரை இறுக அணைத்துக் கொண்டவன், “உங்களுக்கு மகள் மட்டுமில்ல மகனும் இருக்கிறான் சரியாம்மா!” என்று, அவர் முகம் பார்த்துச் சொன்னவன் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.
சுமதி விம்மிவிட்டார். கல்யாணியின் திருமண விடயம் சம்பந்தமாகக் கதைப்பான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர், இதைச் சற்றுமே எதிர்ப்பார்க்கவில்லை.
“நான் அப்பிடித்தான்… என்ர மகன் மாதிரித்தான் நினைக்கிறானான் தம்பி.”தழுதழுத்தார்.
“Non come un figlio, solo tuo figlio(மகன் மாதிரி இல்ல, உங்கட மகனேதான் )” என்றவன், “ஒரு சோடி அப்பமும் கட்டச் சம்பலும் தாங்கோம்மா.”என்றான்.
எப்போதும் சுமதியம்மா என்றுதான் அழைப்பான். ஆனாலும் இன்று ‘அம்மா’ என்றது சுமதியின் நெஞ்சாழம் வரை சென்று தொட்டிருந்தது.
சுமதியின் மனம் நிறைந்திருந்தது. இதைவிட அவருக்கு என்ன வேண்டும். இந்தக் கணம் இறந்தாலும் மகிழ்வும் நிறைவுமாகச் செல்வார். மகள் வாழ்க்கை பற்றி, அதுவரை அழுத்தி அரித்துக்கொண்டிருந்த கவலை எங்கே போனதென்று தெரியவில்லை.
கைகள் நடுங்கின. அருகில், அவன் நின்று பார்த்துக்கொண்டு நிற்பது கூட உறைக்கவில்லை. ததும்பும் விழிகளை மேல் கையால் இடையிடை துடைத்தபடி அப்பம் இரண்டைச் சுட்டெடுத்துத் தட்டில் வைத்தார். கட்டைச் சம்பலைச் சிறு கிண்ணத்தில் போட்டு வைத்துவிட்டுத் திரும்பினால் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான், டேமியன்.
“ஓ! இதில தான் நிக்கிறீங்களா? வந்திருந்து சாப்பிடுங்க தம்பி.”அங்குக் கிடந்த சிறு மேசையில் உணவை வைத்தார். அங்கு ஓரத்திலிருந்த தண்ணீர் தொட்டியில் கரங்களை அலம்பிவிட்டு, திசுவால் துடைத்துக்கொண்டே வந்தமர்ந்தவன், ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தான். அதில் நிற்க முடியாது அடுத்து ஓடர் வந்திருக்க அடுப்படிக்கு நகர்ந்தார், சுமதி.
இரு அப்பங்களையும் சற்று நேரமெடுத்தே சாப்பிட்டான். அப்படியே, உணவகம் பற்றிக் கதைத்துவிட்டு எழுந்து செல்கையில், தீபா சொல்கையில் இருந்த அதிர்வும் மனவுளைச்சலும் எங்கே என்றில்லாது காணாமல் போயிருந்தன.
கொடூர நினைவுகளை வென்று நிற்பவர் இனிச்சரி மகிழ்வோடு, அமைதியாக வாழ வேண்டும். அதற்குத் தன்னால் இயன்றளவு உதவ வேண்டும் என்றதே அவனுள் வியாபித்து நின்றது.
தாயைச் சம்மதிக்க வைக்க வேண்டும். கல்யாணியை விரைவில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தோடு விடைபெற்று, சிலோன் டேஸ்ட் பிரதான உணவகப்பகுதிக்குள் நுழைந்தான், டேமியன்.
*****
error: Alert: Content selection is disabled!!