Skip to content
காலை வேலை முடிய, வழமைபோல் திலினியோடு வீட்டுக்குப் புறப்பட்டார்,சுமதி. அவரில், வழமையை விடவும் உற்சாகமும் மகிழ்வும் நிறைந்திருந்தது அப்பட்டமாகப் பார்வைக்குத் தெரிந்தது.
திலினி, பகிடி பண்ணியபடிதான் காரோட்டினாள்.
“ மருமகன், நான் உங்கட மகன் எண்டு சொல்லி, எல்லாத்தையும் சொல்லாமல் சொல்லிட்டார், டேமியன். இனி என்ன? உங்கட ரெஸ்ட்டோரண்ட்ல இந்தச் சிநேகிதிக்கு எப்பவும் வேலை இருக்கும் தானே சுமதி?” என்று அவள் சொல்ல, “சும்மா இருங்கோ பிள்ள” என்று, அவள் தோளில் தட்டிச் சிரித்த சுமதி, திலினிக்கு முற்றிலும் புதிது! அவரில் அவ்வளவு மகிழ்வு.
வாழ்வில் மிகப் பலமாக அடி வாங்கியவர். இள வயதில் கணவர், மகன் என்று உள்நாட்டுப் போரின் கோரப் பசிக்குத் தீனியிட்டவர் என்று மட்டுமே திலினிக்குத் தெரியும் . திருமணமே வேண்டாம் என்று கல்யாணி இருப்பதில் எத்தனை வருந்துகிறார் என்று, அவர் சொல்லாவிட்டாலும் ஒன்றாகப் பல மணி நேரம் வேலை செய்பவளுக்குத் தெரியும். அதுவே, கல்யாணிக்கும் அவர்களின் மதிப்புக்குரிய டேமியனுக்கும் திருமணம் என்பதில் மிகவும் மகிழ்ந்தாள். அப்போ, பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும்!
“இண்டைக்கு மகளோட கதைச்சிட்டு டேமியனிட அம்மாவோட கதைக்கோணும் திலினி.” மகளின் திருமணம் பற்றி, முதல் முதல் வாய்விட்டுக் கதைத்தார்,சுமதி. அப்படியே, திருமணத்தை எப்படி எப்படியெல்லாம் நடத்தலாம் என்றெல்லாம் கதைத்துக் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுச் சென்றாள், திலினி.
பொங்கும் உவகையோடு கேட்டைத் திறந்து உள்ளிடுகையில் கிறிஸ்டினா அழைத்தார்.
வாசலில் இருந்த கதிரையில் அமர்ந்திருந்திருப்பது தெரிந்தது. நெருங்கிச் சென்றபோதுதான் அவர் முகத்தில், அமர்ந்திருந்த தோரணையில் வேறுபாடு உணர்ந்தார், சுமதி.
பார்வையில் அருவருப்பா, கோபமா? சுமதி திடுக்கிட்டுப் போனார். உள்ளத்தில் தளும்பி நின்ற மகிழ்வு பட்டென்று வெடித்துவிட்ட பலூன் போல் கிழிந்து தொங்கிற்று!
உள்ளுணர்வின் எச்சரிக்கை தப்பாகப் போவதில்லை. மனத்தில் நடுக்கத்தோடுதான் அவரை நெருங்கினார்.
எப்போதுமே உள்ளே அழைத்து அமர வைத்தே கதைப்பது கிறிஸ்டினா வழக்கம். அறிமுகமானதிலிருந்து ஒரு சகோதரியின் அன்பைக் காட்டிய பெண்மணி. முதல் நாள், வாய்விட்டுச் சொல்லவில்லை என்றாலுமே கல்யாணியைத் தன் மகனோடு இணைத்து அவர் பார்த்ததை இவர் உணர்ந்தாரே. ‘நீங்கள் எங்கள் உறவு’ என்ற இதம் அவரிடமிருந்து வந்ததே. இன்று, களைத்துப் போய் வருகிறார் என்று தெரிந்தும் வாங்க, வந்திருங்க என்ற வார்த்தை சொல்லவில்லை. இதயம் வேகமாக அடித்துக்கொள்ள அவர் முன்னால் நின்றார், சுமதி.
அவரைக் கூர்மையாக அளவிட்டார், கிறிஸ்டினா.
ஒன்றுமே நடவாத பாவனையில் இருக்க இந்த மனிசியால் எப்படி முடிகிறது? நம்பவே முடியவில்லை.
இவ்வளவு ஒளிவு மறைவு உள்ளவர்களிடம் இன்னும் என்ன என்ன இருக்கோ என்ற எண்ணம் தான் எழுந்தது.
அவரின் பார்வையைத் தாங்கி நிற்க முடியாது சுமதி வாய் திறந்தார்.
“சொல்லுங்க கிறிஸ்டி” எப்போதும் அவர் குரலில் அதிர்வு இருக்காது. மென்மையாகக் கேட்டவரை எரிப்பது போல் பார்த்தார், கிறிஸ்டினா.
“என்ன சொல்லோணும். ம்ம்ம் என்ன சொல்லோணும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டு வந்தீங்க. இல்ல கேக்கிறன்.” அடிக்குரலில் உறுமினார்.
திகைப்பும் அதிர்வும் சுமதியை வினையாற்றவிடவில்லை.
“என்ன ஒரு நடிப்பு? அப்பப்பா!” வியந்தவர், “இஞ்ச பாருங்க, உங்களப் போல நடிக்க எனக்குச் சுட்டுப்போட்டாலும் வராது.” நக்கலாகச் சொன்னார். மேலும் கீழுமாக ஒரு அருவருப்பான பார்வை பார்த்துக்கொண்டே, “நேற்றுத் தீபா கதைச்சவா.” நிதானமாகச் சொன்னவர், சுமதியின் விழிகளையே கூர்மையாகப் பார்த்தபடியிருந்தார்.
சுமதியின் முதுகுத் தண்டு சில்லிட்டுப் போனது.
“உங்களப் பற்றி எல்லாமே சொன்னவா.” என்றவர், அந்த ‘எல்லாமே’ என்கையில் கொடுத்த அழுத்தமும் எள்ளல் சிரிப்போடு முகத்தில் காட்டிய பாவமும் சுமதியை அவ்விடத்திலேயே உறையச் செய்திருந்தது.
தீபாவா? “இதில உங்கட பிழை எண்டு ஒண்டுமே இல்ல” என்று சொல்லி சொல்லியே அவரைத் தேற்றி, இன்று, இந்தளவுக்கு நடமாட விட்டவரே அவர்தானே! முடிந்த விடயம் பற்றி கதைபேச்சு வேணாம் என்பவர், “உனக்கு எண்டு ஒரு வாழ்க்கை வேணும் கல்யாணி” என்று, வலியுறுத்துபவர் அவர்தானே?
நெஞ்சுக்குள் வலியெடுத்தது. சோர்ந்து தொங்கிய கரத்தைச் சுமந்து உயர்த்தி நீவிக் கொண்டார், சுமதி. கிறிஸ்டினாவுக்கோ, அவர் தோற்றம் பரிதாபத்துக்குப் பதில் கோபத்தை அதிகரிக்கச் செய்தது.
“வாயால கதைக்கவே கூசுற அளவுக்குக் கேடுகெட்ட சனம் எண்டு முதலே தெரிஞ்சிருக்க, சத்தியமா, எங்கட வீட்டுக்க அண்ட விட்டிருக்க மாட்டன். கொஞ்ச நாள்களுக்கு முதல் தான், சிறைக்க இருந்ததே தெரிஞ்சது. ஐயோ பாவம் எண்டு பரிதாபம்தான் பட்டனாங்க. ஆனா இப்ப…செய்க்! இஞ்ச பாரும் , இப்பவும் மரியாதையாக் கதைக்கிறன் எண்டா, அது, என்ர பெருந்தன்மை எண்டு விளாங்கோணும். எங்களுக்கு, எங்கட தொழிலுக்கு எண்டு ஒரு தகுதி தராதரம் இருக்கு. விபச்சாரம் செய்தவேயோட எல்லாம் சகவாசமோ சம்பந்தமோ வச்சிக்கொள்ளுற அளவுக்கு நாங்கள் தெய்வப் பிறப்பு இல்லையப்பா… இல்ல!” கோபமும் எள்ளலுமாகச் சொல்லிக்கொண்டு எழுந்து நிமிர்ந்து நின்றார், கிறிஸ்டினா.
“தயவு செய்து வேல, வீடு ரெண்டுக்கும் வேற இடம் பாரும். இவ்வளவு நாளும் இருக்க விட்ட குற்றத்துக்கு இன்னும் ஒரு மாசம் பொறுத்துக் கொள்ளுறன். அதுக்கு மேல, இஞ்ச ஒரு நாள் இருக்கக் கூடாது! ரெண்டு பேருமே. இருக்கிறவரைக்கும் என்ர கண்ணில பட்டிரவும் வேணாம்.செய்க்!” விசுக்கென்று உள்ளே செல்லத் திரும்பியவர், அதே வேகத்தில்,சுமதியின் முன்னால் வந்து நின்றார்.
“ முக்கியமா, உங்கட குட்டு இஞ்ச தெரிஞ்சிட்டு எண்டு உம்மட மகளிட்டச் சொல்லி வையும். அவளுக்கு என்ன நினைப்பு? ஆர், ஆர் வீட்டுக்குள்ள நுழையப் பாக்கிறது? பியங்கா … வெளிநாட்டுக்காரியா இருந்தாலும் ஊர் மேஞ்ச பொம்பள இல்ல. என்ர மகனுக்கு, ஐஞ்சாம் தாரமா அறுவது வயசில கலியாணம் நடந்தாலும் வாறவளுக்கு எண்டு ஒரு தகுதி தராதரம் இருக்கோணும். விளங்கிச்சோ! ம்ம்…கெதியா இடத்தக் காலி பண்ணும்.” உறுமிய வேகத்தில், விருட்டென்று உள்ளே சென்று கதவை அடித்துச் சாத்தியிருந்தார், கிறிஸ்டினா.
விசுக் விசுக் என்று வந்த கூர் ஈட்டிகள், பாய்ந்து குத்திக் குதறிவிட்ட கணக்கில் வலியால் துடித்தாலும் வெட்கம் கெட்ட தேகம், சிலையாக அப்படியே உறைந்து நின்று கொண்டிருந்தது.
சரசரவென்று வழிந்த கண்ணீர் அவர் வாங்கிய அவப்பெயருக்காக இல்லை, இனி, அவர் மகள் வாழ்வு? என் மகள் என்ற குற்றத்திற்காக இன்னும் எத்தனையை அனுபவிப்பாள்? விடயறியாத கேள்விகள் சுமதியை வளைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டன.
error: Alert: Content selection is disabled!!