Skip to content
வீட்டில், தன் தாய் செய்த வேலை எதுவும் தெரியாத டேமியன் புதிதாக ஆரம்பித்த உணவகம் வரை வந்திருந்தான். அங்குப் பொறுப்பாக இருப்பவன் மிகவுமே தெரிந்தவன்தான். நண்பனும், உணவகத் தொழிலில் பல வருட அனுபவம் உள்ளவனும் கூட. வேலைக்கு எடுத்திருப்பவர்களும் அனுபவம் உள்ளவர்கள்தான். அதுவே, எவ்விதமான தடங்களுமின்றி உணவகம் செயற்பட்டுக்கொண்டிருந்தது.
ஒன்றரை மணித்தியால காரோட்டத்தில் வந்ததே என்று, இரண்டு மணித்தியாலங்கள் வரை அங்கு நின்றிருப்பான். கிளம்புகையில் அவ்வளவு மனநிறைவு! கிழமைக்கு இரண்டு தடவைகள் வந்தால் சரி என்று நினைத்தபடி வந்தவன், மாலை நான்கு மணியளவில் ‘சிலோன் டேஸ்ட்’ வந்து சேர்ந்திருந்தான்.
வரும் வழியெல்லாம் கல்யாணியின் நினைவுதான். தாய் சிறையில் இருந்தவர் என்று மேலோட்டமாகத் தெரிந்த போதே , அவனை, அவளது கடந்தகாலம் பெரிதாகத் தாக்கிவிட்டிருந்தது. அவர்களோடு பழக உந்துதலாக இருந்ததே அதுதான் என்பான். இப்போதோ, அவன் எண்ணங்கள் முழுதும் சுமதியையும் கல்யாணியையுமே சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருந்தன.
கல்யாணி, சிறுவயதிலிருந்து என்ன பாடுபட்டிருப்பாள் என்று யோசித்து யோசித்து மனம் கனத்திட்டு. அவனறிந்து இப்படிக் கொடுமையான கடந்தகாலம் உள்ளவர்கள் எவரையுமே இதுவரை சந்திக்கவில்லை.
சுமதி போல், அடர்ந்த முற்பற்றைகள் கொண்ட பெரும் மலை போன்ற துன்பத்தை, வேதனையை, முழுங்கிக் கொண்டு வாழ்வு நடத்துவோர் எத்தனை பேரை நாளாந்தம் கடந்து வருகிறோமோ என்றெல்லாம் எண்ணமோடியது.
கட்டாயத்திலோ விரும்பியோ கால் வைத்தது சேறாகிற்று. போனால் போகட்டும் என்று அதிலேயே கிடந்து உழலாது, கிடைத்த சிறு பற்றுக்கோடாகத் தீபாவைப் பற்றி வெளியில் வந்துவிட்ட சுமதியின் மன உறுதியும் துணிச்சலும் அபாரம்தான். அது முடியாது, அப்படியொரு சந்தர்ப்பமே கிடைக்காது எத்தனை பேர் உள்ளார்கள். சுமதி போன்றதொரு சூழ்நிலைக்குள் பிடிபடுவோரின் மிகப் பரிதாபத்துக்குரிய நிலையை எண்ணிக்கொண்டே வந்தான், டேமியன்.
இனிவரும் காலம் முழுமைக்கும் கல்யாணி மகிழ்வோடு இருக்க வேண்டும். ஒரு ஆத்மார்த்தமான நட்பாக, வாழ்க்கைத் துணையாக, தான், அதற்குத் துணையாக நிற்க வேண்டுமென்று, மனத்துள் தீர்மானமே செய்துகொண்டான்.
காரைவிட்டு இறங்காதே மாலைச் சந்திப்பை நினைவுபடுத்தி ஒரு குறுந்தகவலை அவளுக்கு அனுப்பிவிட்டான். உடனேயே பார்த்திருந்தாள். விழிகளை சுருக்கியபடி முறுவலிக்கும் ஸ்மைலி ஒன்று பதிலாக வந்து சேர்ந்தது.
அதையே பார்த்திருந்தவன் முகத்தில் அந்த முறுவல் வந்தமர்ந்துவிட்டிருந்தது. அதுவரையும் மனத்துள் உழன்று கனம் கொடுத்த நினைவுகள் கூட மிதமாகிவிட்ட உணர்வு!
இறங்கி உணவகத்துள் நுழைந்தவன் விழிகள் சுமதியைத் தேடின.
காலையில், சுமதியோடு எதுவும் கதைக்கக் கூடாது என்று, தாயிடம் கண்டிப்போடு சொல்லியிருந்தாலும் மனதோரமாக ஒருவகைப் பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. அவனுக்குத் தாயைத் தெரியும் . தீபாவில் உள்ள கோபத்தில் சுமதியோடு எதையாவது கதைத்துவிட்டால் என்ன எண்ணமும் இருந்தது.
சுமதியை எங்கும் காணவில்லை. திலினியிடம் விசாரித்தான்.
“தன்னால பின்னேரம் வரேலாது எண்டு எனக்கு மெசேஜ் போட்டிருந்தவா. மற்றும் படி ஒண்ணும் தெரியாது டேமியன்.” என்ற திலினிக்குச் சுமதி வராததால் வேலை இரட்டிப்பாகி இருந்தது.
“காலம வேல முடிஞ்சு, வீட்டடியில இறக்கி விடேக்கக் கூட லீவு எடுக்கப்போறன் எண்டு சொல்லேல்ல. சொல்லியிருக்க, இன்னொரு ஆள எடுத்திருக்கலாம்.”என்ற முணுமுணுப்போடு நகர்ந்தாள்,திலினி.
“ஓ” என்றவன் மெயின் பகுதியிலிருந்து ஒரு பெட்டையை இந்தப் பக்கம் மாற்றி விட்டான். மனம், எதுவோ சரியில்லை என்றது. காலையில் தன்னோடு கதைக்கும் போதுகூட ஒன்றுமே சொல்லவில்லையே. முதல், சுமதி மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே விடுமுறை எடுப்பவர்.
புது உணவகத் திறப்பு என்று ஒடித் திரிந்ததில், இங்கு, உணவகத்திலும் BB மாடிக்குடியிருப்பிலும் வேலைகள் நிறைந்து இருந்தும் அவனால் அவற்றில் கவனத்தைக் குவிக்க முடியவில்லை.
வீட்டுக்குப் புறப்பட்டிருந்தான். காரைக் கிளப்பிய நேரம் தீபா அழைத்தார். எடுத்துக் கதைக்க வேண்டும் போல் இருக்கவில்லை. அவரில் அந்தளவுக்கு அதிருப்தியில் இருந்தான். இருந்தாலும் மிகவும் கொடும் நிலையில் இருந்த, யார் எவர் என்றில்லாத பெண்மணிக்கு உதவும் மனம் படைத்தவர் என்ற ஒன்றே, அழைப்பை ஏற்க வைத்திருந்தது.
கதைத்துக்கொண்டே…கதைப்பது என்ன, முதல் எதை? தீபா கதைப்பதைக் கேட்டுக்கொண்டே வீடு நோக்கிக் காரைச் செலுத்தியவன் மனத்தில் எக்கச்சக்கக் கனம் ஏறிக்கொண்டே போனது. ஆவேசமும் ஆத்திரமும் கோபமும் கலந்துகட்டி அவன் நிதானத்துக்குப் பரீட்சை வைத்தன. எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பதே நினைவில் இல்லை.
பிள்ளைகள் மூவரும் ஐந்தாறு நண்பர்களோடு தோட்டத்தில் இருந்த ட்ரோப்பலினில்(trampoline) விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
சின்னவள், பெரியவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு இறப்பர் பந்தாக மேலே சென்று வந்து கொண்டிருந்தவள் இவனைக் கண்டதும் மகிழ்வோடு கத்தினாள்.
அத்தனை இறுக்கத்திலும் ஆவேசத்திலும் அவர்களைத் தவிர்க்கவில்லை, அவன். அருகில் சென்று சில நிமிடங்கள் கதைத்துவிட்டு, கவனமாக விளையாடும் படி, சிசிலியாவை எச்சரித்துவிட்டு வீடு நோக்கித் திரும்பியவன் பார்வை சிறிய வீட்டை நோக்கிப் பாய்ந்தது.
முன் வாயில் அநேக நேரங்களில் மூடித்தானிக்கும். ஆள் உள்ளிருப்பது போலில்லை. ஒருவேளை, உண்மையில் உடல் அசதியாகவும் இருக்கலாம். படுத்துக் கிடக்கிறார் போலும் என்ற எண்ணமும் வந்துபோக, பின் கதவால் தம் வீட்டினுள் நுழைந்தான்.
கிறிஸ்டினா வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். தொலைக்காட்சியில், விஜய் சேனல் தொடர் நாடகம் ஒன்று போய்க்கொண்டிருந்தது. பார்வை அதில் இருந்தாலும் அவர் நாடகம் பார்க்கவில்லை என்று, இவனுக்கு நன்றாகவே தெரிந்தது. சுளித்த புருவங்களும் கோபமான முகமுமாக இருந்த தாய்க்கு முன்னால் சென்று அமர்ந்தான், டேமியன்.
அவனை அந்நேரம் எதிர்பார்க்கவில்லை என்றது, அவர் பார்த்த விதம்.
“என்ன தம்பி நேரத்துக்கே வந்திட்டீங்க?”கேட்கவும் செய்தார்.
“திரும்பப் போகோணும் அம்மா. நிறைய வேலைகள் இருக்கு.” என்றவன், தாயையே பார்த்தான்.
மகனின் பார்வையில் இருந்த கூர்மையை அவரால் தாங்க முடியவில்லை. பட்டென்று தொலைக்காட்சியைப் பார்த்தார். ஆனாலும் நிமிர்வாகவே தான் இருந்தார். அப்படி அவர் என்ன பிழை செய்துவிட்டார்? அவர் இடத்தில், அந்தச் சுமதியோ, கல்யாணியோ, ஏன், பெரும் வியாக்கியானம் கதைக்கும் தி கிரேட் சைக்காட்ரிக் தீபாவோ, இன்னொருபடி மேலே போய் இந்த டேமியனோ இருந்திருக்க அமைதியாகவா இருந்திருப்பீனம்? அவர் மனம் முறுக்கிக்கொண்டது.
எப்படியெல்லாம் தன் செயலை நியாயப்படுத்திக்கொண்டாலும்,“சுமதிம்மாவோட ஒண்டும் கதைக்கேல்லையே அம்மா?”என்று, மகன் கேட்டதும் திடுக்கிட்டுப் போனார்.
இருந்தாலும் விசுக்கென்று முறைப்போடு மகனை ஏறிட்டார்.
“இஞ்ச பாருங்க தம்பி. எது எண்டாலும் வச்சு இழு இழு எண்டு இழுத்தா மிஞ்சப்போறது கவலையும் துன்பமும் மட்டும்தான். உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்ல. இஞ்ச ஆரும் சின்னாக்கள் இல்ல என்ன? அந்தப் பிள்ள கலியாணிய உங்களுக்குச் செய்தா நல்லா இருக்கு எண்டு ஆசைப்பட்டனான்தான். இல்லையெண்டு பொய் சொல்ல மாட்டன். உங்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ கதைச்சிப் பேசிச் செய்ய நினைச்சிருந்தனான்.” என்றபோது, “அம்மா நானும்” என்று இடையிட்டான், டேமியன்.
கிறிஸ்டினா இடம் தரவில்லை. “முதல் நான் கதைச்சிருரன் தம்பி.” இறுக்கத்தோடு சொன்னார்.
“அப்பிடி நான் நினைக்கக் காரணம் நல்ல குடும்பம், தாயும் மகளும்தான், பிக்கல் பிடுங்கல் இல்ல. நீங்க பெறாட்டியும் பிள்ளைகள் மூண்டு பேரும் உங்கட பொறுப்புத்தானே? அவேய, கல்யாணி நல்லா வழி நடத்துவா.பெற்ற தாய் தகப்பனோட வாழத்தான் அவேக்குக் குடுத்து வைக்காட்டியும் உங்களிட்டச் சீரும் சிறப்புமா வாழுங்கள் எண்டு நினைச்சனான்.” பெருமூச்செறிந்துவிட்டுத் தொடர்ந்தார்.
“அது பார்த்தா…இந்த சனம்…அதான் சுமதி பற்றி வெளில தெரிஞ்சா எங்கட மானம் மரியாதை கேள்விக்குறியாகும் எண்டுறது வேற கதை தம்பி. அதைப்பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையில்லை எண்டுகூட நீங்க சொல்லலாம். ஆனா, அந்தப் பிஞ்சுகள் மூண்டு பேரிட எதிர்காலமும் என்ன ஆகும் சொல்லுங்க? நிச்சயம் பாழாப்போயிரும். அதனாலதான், சுமதியக் கூப்பிட்டுத் தன்மையா எங்கட நிலமையச் சொன்னனான்.” என்றவரில் சிறு தடுமாற்றம் தெரிந்ததுதான். அவர் சுமதியோடு கதைத்த விதத்தில் ‘தன்மை’யின் அசுமாத்தமே இருக்கவில்லையே! சமாளித்துக்கொண்டார்.
“மனிசி உடனே வீட்ட விட்டு எழும்புறம் எண்டிட்டா. சரிதான் எண்டன். சோலி முடிஞ்சிட்டு!” மனத்திலுள்ளதை, இதுதான் என் முடிவு என்பதைத் தீர்மானமாகவே சொல்லிவிட்டார், கிறிஸ்டினா. தான் சொல்ல சொல்ல மகன் முகம் இரும்பாகிவிட்டதை, விழிகள் சிவந்து கோபாக்கினியைக் கக்கியதை எல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை.
error: Alert: Content selection is disabled!!