நட்சத்திரா 21 – 2

டேமியன் விசுக்கென்று எழுந்துவிட்டான். நிதானமாக வந்து தாய்க்கு முன்னால் நின்றான். அவரைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனால், அவர்,அவனை மிகவுமே காயப்படுத்திவிட்டாரே!

 கிட்டத்தட்ட கண்ணாடிப்பாத்திரத்தைக் கையாளும் விதமாகத்தான் கல்யாணியோடு பழகியிருந்தான். அவள் மனத்துள் நுழைந்துமிருந்தான். அவளின் சுபாவத்துக்குச்  சுமதியை அவமதித்தது, வருத்தியது தெரிந்தால் யோசியாது தூக்கிக் கடாசிவிட்டுவிடுவாளே!

கண்கள் கலங்கிக் கிடக்க, தாயைப் பார்த்தான். 

“பியங்கா போன பிறகு, ஒரு கணம் கூட இன்னொரு பொம்பள என்ர  வாழ்க்கைக்குத் தேவை  எண்டு நான் நினைக்கேல்ல. பிள்ளைகள் மூண்டு பேரும் நீங்களும்தான் என்ர  வாழ்க்கையா நினைச்சனான்.” என்றவன் குரல் கரகரத்தது. செருமிக்கொண்டான். 

“அப்பிடி இல்ல, உனக்கு எண்டு ஒரு வாழ்க்க இருக்கு, அத நீ வாழோணும் எண்டு என்ர மனமே அதட்டிச் சொன்னது கல்யாணியோட பழகத்  தொடங்கின பிறகுதான் அம்மா. அவாவும் கலியாணம் எண்டதைப் பற்றியே யோசிக்காமல் தானும் தன்ர பாடுமா இருந்தவா எண்டு உங்களுக்கும் தெரியும். நானா அவவிட மனசில விருப்பத்த உருவாக்கினன். விரும்புறன் எண்டு சொல்லி அவவச் சம்மதிக்கவும் வச்சிருக்கிறன்.” என்றபோது, இன்னமும் அவளிடம் வெளிப்டையாகக் கதைக்கவில்லை என்பதையே மறந்திருந்தான்.

“இந்தளவுக்கு வந்த பிறகு, இப்ப, அவா சம்பந்தமே படாத ஒரு விசயத்தச் சாட்டா வச்சு, எல்லாத்தையும் விட்டிரு எண்டு சொல்லுறீங்களே அம்மா. உங்களுக்கே இது நியாயமாப்படுதா?” அதட்டலாகத்தான் கேட்டிருந்தான்.

கிறிஸ்டினா, மகனை முறைப்போடு பார்த்தார்.

“உங்களுக்குத் தம்பி  நான் என்ன சொல்லுறன் எண்டு விளங்கேல்ல என்ன? இஞ்ச பாரய்யா,  வேற ஏதும் விசயங்கள் எண்டாப் பரவாயில்ல. அந்த மனிசி ஒரு விபச்சாரி!” என்று ஆரம்பித்தவரிடம், “அம்மா!” என்று அவன் உறுமியதில், தண்ணீர் எடுக்க வந்த சின்னவள் அதிர்ந்து நின்றுவிட்டாள். அதைக் கண்டதும் தன் முகபாவத்தை மாற்ற முனைந்தான், டேமியன்.

அவள்  மீண்டும் வெளியில் சென்றதும், “சொல்லக் கூடாது எண்டு பார்த்தன், சொல்ல வைக்கிறீங்க அம்மா!” என்றுவிட்டு, அடிக்குரலில் அவன் சொன்ன விசயத்தில், உறைந்து போய்விட்டார், கிறிஸ்டினா. அவர் நெஞ்சு கிடுகிடுவென்று அடித்துக்கொண்டது. மகன் முகத்தில் பதிந்த பார்வை ஆடாது அசையாது அப்படியே ஒட்டி நின்றது.

“கல்யாணிட அப்பா படுகாயமா இருக்கேக்க ஆமியோட  அங்க நிண்ட ஒரு தமிழ் எம்பிதான் கதைச்சு ஆஸ்பத்திரிக்குக்  கொண்டுபோக உதவி இருக்கிறான். அவர் இறந்து போக, திரும்ப முகாமுக்கு வந்திருக்கிறா சுமதிம்மா.” என்றவனை, ஒரு சாதியாகப் பார்த்தார், கிறிஸ்டினா.

 இப்ப என்னதான் சொல்ல வருகிறான்? இன்னும் எத்தனைக்கு ஒரே கதையைக் கேட்பது? சலிப்பை வெளிப்படையாகவே காட்டினார்.

டேமியன் அதையெல்லாம் கவனிக்கவில்லை. உள்ளத்தில் இருந்த கொந்தளிப்பு அதைக் கவனிக்க விடவுமில்லை.

“முகாம விட்டு வெளில அனுப்பவும் கல்யாணியத் தேடவும் உதவுறன் எண்டு சொல்லி இருக்கிறான் அந்த எம்பி. மகனும் மனுசனும் கண்ணுக்கு முன்னால செத்துப் போக, மகள் உயிரோட இருக்கிறாளா எண்டே தெரியாத நிலையில, அவன்ர கதைய நம்பியிருக்கிறா சுமதிம்மா. ரெண்டு நாளில நான் செய்யப்போற பெரிய உதவிக்கு, நீ செய்ய வேண்டியது எண்டு ஒண்டு இருக்கு எண்டிருக்கிறான் அவன். அப்பாவி மக்களக் காப்பாத்துறதுதான் தன்ர ஒரே குறிக்கோள் எண்டு நிண்டு படம் போட்ட அந்தப் பெரிய மனிசன் கேட்ட விலை என்ன தெரியுமா?” தாயை அதட்டலாகக் கேட்டிருந்தான், டேமியன். எத்தனை தடவைகள் ‘விபச்சாரி என்ற வார்த்தை அவர் வாயால் வந்துவிட்டது.

“ஐயோ தம்பி எனக்கு அவவப் பத்தி ஒண்ணுமே தெரிய வேணாம். அவா கட்டாயத்தில விபச்சாரி ஆகியிருந்தா என்ன, விரும்பி இல்லாமையில அந்த வழில போயிருந்தாத்தான் எனக்கு என்ன?” அசைட்டையாகச் சொல்லிவிட்டு எழ முயன்றார், கிறிஸ்டினா.

தோள்களிரண்டையும் அழுந்தப் பற்றி அவரை அமர்த்தியிருந்தான்,டேமியன். உண்மையில் திகைத்துப் போனார், அவன் அன்னை. 

“தம்பி, என்ன இது?” என்றதைக் கருத்தில் கொள்ளாது தொடர்ந்தான்.

 “கொஞ்ச நாளைக்கு என்னோட இரு. விரும்பினா எப்பவுமே இருக்கலாம் எண்டு சொல்லி, அவவில கை வைச்சிருக்கிறான், அந்த ராஸ்கல். சுமதிம்மா, கன்னங்கள் ரெண்டிலும் இழுத்திருக்கிறா.” என்றுவிட்டு, இடுப்பில் கையூன்றிக்கொண்டு பட்டென்று மறுபுறம் திரும்பி நின்றுகொண்டான், டேமியன்.

தீபா சொல்ல சொல்ல கேட்டபடி எப்படிக் காரை ஓட்டினான் என்றே அவனுக்குத் தெரியாது. உடலெல்லாம் எரிந்தது. அந்த எளியவனைப் போட்டுக் காலில் மிதிக்கும் வெறிதான் வந்தது.

“இந்த வீண் கதைகள விட்டுப்போட்டு உங்கட வேலைகளப்  பாருங்க தம்பி.” என்ற கிறிஸ்டினா திரும்ப வைத்தார்.

“வெறி பிடிச்ச அந்தப் பேய்  அவன்ர ஆசைக்குப்  போட்டுப் படாதபாடு படுத்திப்போட்டு ஆமிக்காரங்களிட்ட தள்ளி விட்டிருக்கிறான். பிறகு… இப்ப உங்கட வாயால அவவ நீங்க என்ன வார்த்த சொல்லுறீங்க?” மகனின் உறுமலில் உண்மையில் பயந்து போனார், அவர்.

“தம்பி, நான் என்ன செய்தன் எண்டு இப்பிடிக் கோவிக்கிறீங்க? இதென்ன அநியாயமாக் கிடக்கு! எப்ப இருந்து பெத்த தாய் என்னவிட அந்த ஆக்கள் உங்களுக்கு முக்கியமாகப் போனவே!”என்றவர், மகனின் உக்கிர உடல்மொழியிலும் பார்வையிலும் பேச்சை நிறுத்தினார். மனத்துள் மிகவுமே கலங்கிப் போனார். அவன் கோபம் என்ன ஏதென்று யோசிக்க விடவும் இல்லை.

“நீங்க ஒண்ணுமே செய்யேல்ல. ஆனா… உங்கட தம்பி செஞ்சிருக்கிறான். நீங்க உயிரா நினைச்சு, வார்த்தைக்கு வார்த்த பெருமையாக் கதைக்கிற உங்கட தம்பிதான் அந்தக் கொடூரப் பேய்! எளிய நாய்! தெரிஞ்சு சுமதியம்மா. இன்னும் எத்தனையோ? கிழட்டு ராஸ்கல்! இதுக்க, தமிழையும் தமிழரையும் காக்கப் பிறந்த கணக்கில கதை! என்ன அப்பிடிப் பாக்கிறீங்க? சுமதிம்மாவ அந்த நிலையில தள்ளினது பெருமதிப்புக்குரிய இன்றைய கல்வி அமைச்சர் ஜோசப்! உங்கட உடன் பிறப்பு!” என்று அவன் சொல்ல, உடல் நடுங்க எழுந்துவிட்டார், கிறிஸ்டினா. 

அவரின் தம்பியா?  

“இல்ல இல்ல…இப்பிடி அநியாயமாப் பொய்ப் பழி போடாத  தம்பி!” கிரீச்சிட்டார்.

“தீபா அம்மாதான் என்னட்டச் சொன்னவா. நீங்க தாங்கவே மாட்டீங்க எண்டு, உங்களிட்டச்  சொல்ல வேணாம் எண்டனான். ஆனா நீங்க… உங்களப்  போலத்தானே சுமதிம்மா? அவர என்ன சொல்லி வீட்ட விட்டுப் போறன் எண்டு சொல்ல வச்சீங்க?” உறுமலாகக் கேட்ட மகன் முற்றிலும் புதியவன், அவருக்கு.

“இப்ப  சொல்லுறன், இந்த வீட்டில கல்யாணி ராணியா, என்ர பெஞ்சாதியா இருப்பா! சுமதிம்மாவும். அது, அந்த எளியவன் ஜோசப் காதுக்குப் போகோணும். பிறகு நடக்குறதுகள நான் பாத்துக்கொள்ளுறன்.  எவ்வளவு கெதியா ஏலுமோ எங்கட கலியாணம் நடக்கும் அம்மா. நீங்க விரும்பாட்டிலும் நடக்கும்! கலியாணத்துக்கு உங்கட தம்பி குடும்பத்தையே கூப்பிடுங்க!” வார்த்தைகளைத் கடித்துத் துப்பியவன் விருட்டென்று வெளியேறியிருந்தான்.

மனம் சில்லு சில்லாக உதிர்ந்து போக, உடல் தொய்ந்து இடிந்து போய் அமர்ந்துவிட்டார், கிறிஸ்டினா.

 

error: Alert: Content selection is disabled!!