நட்சத்திரா 23 – 2

சற்றும் தாமதியாது சகோதரனுக்கு அழைத்துவிட்டாள். அவள் கதைப்பதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான், டேமியன்.

“அக்கா, கலியாணம் செய் செய் எண்டீங்க தானே? எனக்குப் பிடிச்ச பிள்ளையச் செய்யிறதில உங்களுக்கும் அம்மாக்கும் என்ன பிரச்சின? அம்மா சொல்லுறது போல இல்ல கல்யாணி. நல்ல பிள்ள!  சுமதிம்மா பெரும் பாவம் அக்கா. நீங்க கதைச்சு இருக்கிறீங்க தானே? ஆக்கள மதிப்பிடுற அளவுக்கு உங்கட தம்பி இல்ல எண்டு நினைக்கிறீங்களா என்ன?” என்று, தன்மையாகவே கேட்டான்.

“நானும் ஒண்ணும் இளந்தாரி இல்ல எல்லா அக்கா. முதல் கலியாணம் செய்து பத்து வருசங்கள் பியங்காவோட வாழ்ந்தனானும் கூட. அம்மா இப்பிடியெல்லாமா சொன்னா?” தன் தாயா இப்படி என்று, அவனுக்கு நம்ப முடியாதிருந்தது. 

“அதான் எனக்கும் யோசனையாக்  கிடக்கு. அம்மாவே சோலி சுரட்டு இல்லாத ஆக்கள் எண்டு அன்பாத்தான் சொல்லுறவா. இப்ப என்ன இப்பிடிப் பேசுறா. இங்க அவா வந்து நிண்ட நேரம் அவேதானே அங்க பிள்ளைகளுக்கு உதவியா இருந்தவே. அப்ப எல்லாம் நல்ல மாதிரிக் கதைச்சு இருக்கிறா. இப்ப என்ன திடீரெண்டு?”அவள் சந்தேகத்தைக் கேட்டாள்.

இவன் எதையென்று சொல்வது? கல்யாணி, சுமதியின் கடந்தகாலம் பற்றி மூச்சும் விடுவதில்லை என்ற முடிவில் இருப்பவன், “ஆருக்கு அக்கா தெரியும்? கொஞ்ச நாளில எல்லாம் சரிவரும்.” என்றவன், “நீங்க கலியாணத்துக்கு வருவீங்களா? இன்னும் பத்து நாள்கள் இருக்கு அக்கா. ரெஜிஸ்டர் செய்திட்டு, இங்க வீட்டில சின்ன விருந்து  ஒண்டு குடுக்கலாம் எண்டு நினைச்சு இருக்கிறன்.”என்றானா.

கைப்பேசித்  திரையூடாகவே சுட்டுப்பொசுக்கினாள் , அவன் தமக்கை ஜாக்குலின்.

“இதெல்லாம் என்ன டேமியன். அம்மா தான் முரண்டு  பிடிக்கிறா எண்டா நீயுமா? ஏதோ சொந்த பந்தம் இல்லாத ஆள் போலக் கதைக்கிற? நான் வரோணும் எண்டு மனசார நினைச்சிருந்தா திகதி பாக்க முதல் எல்லா கேட்டிருக்கோணும்.” சீறியவளைச்  சமாதானப்படுத்தவே முடியவில்லை. 

அவன் மனம், ஒரு பக்கம், எவ்வளவு விரைவில் முடியுமோ கலியாணத்தை நடத்திடச் சொல்கிறது. கல்யாணிடம் கேட்டால், விழிகள் பளபளக்க ஒரு பார்வை பார்த்தாளேயொழிய வாய் திறந்து எதையும் சொல்லவில்லை. அவளோடு மனம் விட்டுக் கதைக்க இன்னமும் சந்தர்ப்பம் அமையவும் இல்லை.  அந்தப் பார்வை சொல்லும் சம்மதம் புரிந்தவன் மறுநாளே என்றாலும் திருமணம் செய்துவிடும் முனைப்பில் நின்றான்.

 இவ்வளவு அவசரப்பட என்ன காரணம் என்று அதட்டினாள், ஜாக்குலின். 

என்னவென்று சொல்வது?  சுமதியிடம் எவ்வளவு சொன்னான். இருந்தும் அவர் முழுமையாகச் சமாதானம் அடையவில்லை. திருமணம் நடக்குமா என்ற சந்தேகத்தோடு பரிதவிக்கிறார் என்பது இவனுக்கு நன்றாகவே விளங்கியது. அதோடு, கிறிஸ்டினா பார்வையில் பட்டு விடாதிருக்க வேண்டும் என்பதற்காகப் படாத  பாடுபடுகிறார். 

இவைதான் காரணம்  என்று சொல்லிக்கொண்டாலும் அவனுக்குள்,  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கல்யாணி மனம் மாறிவிட்டால் என்ற பயமும் இருக்கிறது. 

வீம்பு பிடித்தவளாச்சே! அவன் தாய் கதைத்த கதை முழுதாகத் தெரிய வந்தால் எப்படி வினையாற்றுவாள்? வீட்டை விட்டுப் போ என்று தவணை வேறு வழங்கியிருந்தாரே கிறிஸ்டினா. சரிதான் என்று சென்றுவிட்டால் என்ற பயமே விடன் துடனென்று கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னது.

  “இஞ்ச பார் டேமியன், அம்மாவோட நான் கதைக்கிறன். நானும் வாறன். கதைச்சுப் பேசி ஒரு திகதி முற்றாக்குவம்.”என்றாள் ஜாக்குலின்.

“அம்மா சமாதானம் ஆனா அதவிட வேறென்ன வேணும் . ஆனாக்கா, கலியாணத் திகதில மாற்றம் இல்ல. நீங்க நினைச்சா வரலாம்.” உறுதியாகச் சொன்னான், அவன்.

“என்ன அதுக்கிடையில எல்லா ஒழுங்கும் செய்தாச்சா? இத நான் நம்போணுமா? ” கோபமாகக் கேட்டாள், தமக்கை.

“நாளைக்கு எல்லா அலுவலும் பாத்திருவன் அக்கா. ஃப்ரெண்ட்ஸ் பொறுப்பா  எல்லாம் செய்திருவினம். நான் அத்தானிட்டையும் சொல்லுறன், கட்டாயம் நீங்க எல்லாரும் வரோணும்.”  என்று, தன் பிடியில் நின்றவனைக் கோபமாக எரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள், அவள்.

மறுநாள்,பாடசாலையிலிருந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு வந்து பார்த்தால் கிறிஸ்டினா விமானநிலையத்துக்குச்  சென்றிருந்தார். வெருட்டுகிறார் என்றுதான் இவன் நினைத்திருக்க, உண்மையாகவே புறப்பட்டுச் சென்றுவிட்டார்.  அதை, அவன் தமக்கைதான் இவனிடம் தெரிவித்தாள். மிகுந்த கோபம் டேமியனுக்கு. கட்டுப்படுத்திக்கொண்டான்.

அன்று, கல்யாணிக்கு வேலையில்லை. அப்படியான நேரங்களில், வீட்டில் தோயல் கழுவல் துடையில் என்று வேலைகளை முடித்துக்கொண்டு, சிலோன் டேஸ்ட் சென்றுவிடுவாள். இன்று, அந்தப் பக்கமே போகவில்லை. 

இரவு நல்ல உறக்கமும் இல்லை. டேமியனோடு மனம் விட்டுக் கதைக்கும் நேரத்தைப்  பெரும் ஆவலோடு எதிர்பார்த்தபடி வந்து, என்னவோ எல்லாம் நடந்தாயிற்று. என்றாலும் மனத்தில் ஒரு அமைதி வருவதாயில்லை. மகிழ்வில் திளைக்கவும் முடியவில்லை. 

நன்றாக நேரம் செல்லவிட்டே எழுந்தாள். முகம் கழுவி ஒரு கோப்பியை அருந்திய பின்னரே சற்றுப் பரவாயில்லாமல் இருந்தது. மெதுவாகவே வீட்டைத் துடைத்து தோயல் அலுவல்களைப் பார்த்துவிட்டு தோய்ந்துவிட்டு வந்தால், ஊபர்  வரவழைத்து, கிறிஸ்டினா வெளிக்கிட்டுப் போவதைக் கண்டாள். 

அவர், தாயோடு கதைத்திருக்கிறார் என்று, முதல் நாள் டேமியனும் தாயும் கதைத்திலிருந்து விளங்கினாலும் மேற்கொண்டு அதுபற்றிக்  கதைக்கவே சுமதி மறுத்துவிட்டார்.

“அதான் தம்பி முடிவாச்  சொல்லிட்டாரே. உங்களுக்கும் விருப்பம். இனி நடக்க வேண்டியதுகள் மட்டும் பாப்பம்மா!” தழுதழுப்போடு சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டார்.  அதன்பின் அவர், தன் வழமையான வேலைகளில் ஆழ்ந்துவிட்டது போல், இவளால்தான் அவ்வளவு இலகுவில் முடியவில்லை. 

வார்த்தைகளால் பரிமாறாதே அன்பு பரிமாறப்பட்டுவிட்டது. கல்யாணம் எப்போது என்று திகதியும் சொல்லிவிட்டான். குழந்தைகள் ஓடி வந்து கட்டிப்பிடித்துத் தம் விருப்பைச் சொல்லிவிட்டார்கள்.

இதுவெல்லாம் கடந்து,  கிறிஸ்டினாவோடு கதைக்க விரும்பினாள். புது உணவகத் திறப்பன்று  அங்கிருந்து விடைபெறும் வரையிலும் அவ்வளவு அன்போடு கதைத்துக்கொண்டிருந்தவர் தானும் டேமியனும் விரும்புவதை நிச்சயம் அனுமானித்திருப்பார் என்று தெரியும் . கனிவும் அன்புமாக கன்னம் வருடிவிட்டு அல்லவா காரிலேறியிருந்தார். பின் திடீரென்று இந்தக் கோபம் ஏன்? அதுவே, அவள் மூளைக்குள் வண்டாகக் குடைந்துகொண்டிருந்த கேள்வி!

 தீபா கதைத்திருப்பாரோ! திடுமென்று தான் இந்த அனுமானம் வந்தது. நிச்சயம் கதைத்திருக்கிறார்.  வேறொரு காரணமும் பிடிபடவேயில்லையே!

தீபா அன்ரி எல்லாம் சொல்லியிருக்கிறார். பிறகு எப்படி கிறிஸ்டி அன்ரி  ஓமெண்டு சொல்லுவார். 

அவளுக்கு மிகவுமே  பயமாக இருந்தது. அவளுக்கும் குடும்ப வாழ்வுக்கும் தூரம் அதிகமோ! கடந்துவிட முடியாத அளவுக்கு அந்தக் குடுப்பினையே இல்லையோ என்றெல்லாம் எண்ணியதுள்ளம்.

 எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் அவளால், தாயை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வளவும்தான். எத்தனையோ பார்த்தாயிற்று. இழப்புகளுக்கு முகம் கொடுத்துக் கடந்தும் வந்தாயிற்று.பார்க்கலாம். இந்த முடிவுக்கு வந்த பிறகே சீராக இயங்க முடிந்தது.

 இருந்தாலும் கிறிஸ்டினா இப்படி விலகிப் புறப்பட்டுப் போவார் என்பதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. எங்கு போகிறார் என்று தெரியாததில் தவிப்போடு அமர்ந்திருந்தாள்.

அன்று காலை வேலை முடிய அப்படியே கடைகளுக்குச் செல்லலாம் என்றிருந்தார், சுமதி. இவளையும் வரும்படிக் கூறிவிட்டுச் சென்றிருந்தார்.  பதினோரு மணிவாக்கில் அழைத்தார்.

 “இன்னொருநாளைக்குப் போகலாம் மா.இல்லையோ, நீங்க திலினியோட போங்க. எனக்குப் பஞ்சியா இருக்கு. ” என்றுவிட்டாள்.

இனி, சுமதி வர இரவாகும் . மாலை வேலையையும் முடித்துக்கொண்டேதான் வருவார். மதியச் சமையல் என்று ஒன்றுமே தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டு அப்படியே எவ்வளவு நேரம் இருந்தாளோ, அசந்து தூங்கிவிட்டாள். 

கதவு மெதுவாகத் தட்டப்பட்டது. திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். மீண்டும் தட்டுப்பட, ஓடிச்சென்று திறந்தாள். 

நெற்றி மேலேறி இறங்க, ஒரு முறுவலோடு உள்ளிட்ட டேமியனின் பார்வை அவளில் இருந்து  அங்கிங்கு அசையவில்லை. 

மிகவுமே தடுமாறினாள், கல்யாணி.

“இருங்கோ! பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வந்தீங்களோ?” நேரத்தைப் பார்த்தபடியே கேட்டவளுக்கு, அதற்கு மேல் என்ன கதைப்பதென்று இருந்தது.  வார்த்தைகள் வராது அந்தரித்தாள்.

“ஓம், நித்திரையா இருந்தீங்களோ? இண்டைக்கு நீங்க நிக்கிறீங்க எண்டத மறந்திட்டன். இல்லாட்டிப் பிள்ளைகளக் கூட்டிக்கொண்டுவர  உங்களிட்டச் சொல்லி இருப்பன்.” என்றபடி அமர்ந்தவன், “ஏன்  நிக்கிறீங்க இருங்கோவன்.” தனக்குப் பக்கத்தில் தட்டிச் சொன்னான்.

“கிறிஸ்டி அன்ரி எங்கயாவது பயணம் போய்ட்டாவோ?” அவன் பார்வையைத் தாங்கியபடி கேட்டவளுக்கு, உடனே பதில் சொல்லவில்லை, டேமியன்.

“முதல் வந்திருங்க, சொல்லுறன்.” எழுந்தவன், அவள் கரத்தைப் பற்றித் தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டான். 

error: Alert: Content selection is disabled!!