நட்சத்திரா 23 – 3

எதிர்பார்க்காத இச்செயலில் அவளுள்ளம் மிகவுமே தடுமாறியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தளம்பித் ததும்பி நிற்க, நீ என்ன பருவ வயதுப் பெட்டையா என்று, தன்னைத்தான் கேட்டுச் சுதாகரிக்க  முயன்றாள்.

அவனோ, உறைந்து நின்ற முறுவலோடு அவளையே பார்த்தான். கரத்தை விடவே இல்லை. சேர்த்திருந்த தம் கரத்திற்குப் பார்வையை மெதுவாக நகர்த்தியவன் திடுமென்று வாய்விட்டுச் சிரித்தான்.

“எதிர்பாக்கவே இல்ல கல்யாணி. உண்மையாவே எதிர்பாக்கேல்ல!” தம் கரத்தை அவள் முகத்துக்கு முன்னால் காட்டிச் சொன்னவன், அப்படியே நெஞ்சோடு சேர்த்து அழுத்திக்கொண்டான்.

“இந்தக் கை எனக்கே எனக்கா எண்டு …” என்றவன் பார்வை திறந்திருந்த கதவால் வெளியில் சென்று அலைந்தது.

“ போன அஞ்சு வருசங்கள் போலத்தான் என்ர மிச்ச வாழ்க்க போகப்போகுது எண்டிருந்தன் . அதுக்கெண்டு அதை நினைச்சு எல்லாம்  கவலைப்படேல்ல. பியங்கா இல்லையே எண்ட துக்கம் இருக்கேல்ல எண்டா  அது முழுப்பொய். அம்மாவும் பிள்ளைகளும் போதும் எண்டுதான் இருந்தனான். மிச்ச சொச்சம் இல்லாமல் வேலை வேறு. இப்ப நினைச்சா… நெஞ்சுக்க என்னவோ செய்யுது.” என்றவன் நெஞ்சில்  அவள் கரம் அழுந்தமாகப் பதிந்தது.

“என்ர வாழ்க்கையில, எதுவுமே அவ்வளவு இலகுவா கிடைக்கேல்ல கல்யாணி. ஆறு ஏழு வயது வரை வடிவாக்  கதைக்காமல் இருந்தனான். எனக்கும் நினைவிருக்கு . ஸ்பீச் தெரப்பி அது இது எண்டு அம்மாவும் அப்பாவும் கூட்டிக்கொண்டு அலைஞ்சவே. பிறகு, இப்ப ஒரே உறுமல்தான்.” விழிகள்  நகைப்பில் சுருங்கச் சொன்னான்.

“பிறகு படிப்பில பெரிசாச் சிரமங்கள் எண்டு  இருக்கேல்ல. மிச்சம் எல்லாமே, அப்பாட இழப்புக்குப் பிறகு நட்டத்தில் போன சிலோன் டேஸ்ட்ட நடத்திறதில தொடங்கி, பியங்காவ  கலியாணம் செய்யிறது, பிறகு அண்ணாவோட விளையாட்டுகள், மூண்டு சின்னப்பிள்ளைகளப் பொறுப்பெடுத்து வளக்கிறது  எண்டு நான் சந்திச்சது ஏராளம் . கனக்க ஏன்,  இந்தக் கல்யாணிய என்ன விரும்ப வைக்கிறது மட்டும் எனக்கு இலகுவா நடந்ததா என்ன?” என்றவன்,பட்டென்று அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.  நெற்றி ஏறியிறங்கக்  கேள்வி கேட்டவனைப் பாராது நகரப்  பார்த்தாள், அவள். அங்கோ இடமேயில்லை. 

“ப்ச்! இப்ப நீங்க தள்ளி இருக்கப் போறீங்களா இல்லையா?” கண்டிப்பாகக் கேட்க நினைத்தாள் . கேட்டதோ அவ்வளவு மென்மையாக.

“மாட்டவே மாட்டன். இப்பிடித்தான் இருப்பன். ம்ம் என்ன செய்திருவீங்க? பளாரென்று ஒண்டு தந்திருவீங்களா?”  சீண்டினான்.

“என்ன சின்னப் பெடியன் எண்ட நினைப்போ?”

“ச்சே ச்சே அப்பிடியெல்லாம் இல்ல. vecchio uomo (கிழடன்)  எண்டே வச்சுக் கொள்ளுங்கவன். ஆனாலும் இப்பிடித்தான்.” என்றவன் கரம், பட்டென்று தோளோடு அவளை வளைத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டது.

விழிகள் மின்ன அவள் அதிர்ந்து பார்த்தது சில கணங்கள்தான், பட்டென்று அவன் தோள் வளைவில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

“அதானே பாத்தன், நேற்று ஓடி வந்து கட்டிப் பிடிச்ச கல்யாணி துலஞ்சு போனாவோ எண்டு கொஞ்ச நேரத்தில பயந்திட்டன்.” என்றவன், “அம்மா கனடா போய்ட்டா கல்யாணி, என்னோட கோவிச்சுக்கொண்டு .” என்றான்,அவள் முகம் பாராது. 

பட்டென்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், விலகப் பார்த்தாள். அவன் விடவில்லை.

“கிறிஸ்டி அன்ரிக்கு, இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்ல என்ன? தீபா அன்ரி எல்லாம் சொன்னா போல! நானே நேற்று உங்களோட கதைக்கேக்க எல்லாம் சொல்லத்தான் இருந்தனான். அதுக்குப் பிறகும் உங்களுக்கு விருப்பம் எண்டால் பாப்பம் எண்டுதான் சொல்ல இருந்தன்.” என்றவள், விழிகளால் வழிந்த கண்ணீரை அவன் அணிந்திருந்த டீ-செர்ட் உறிஞ்சிக்கொண்டது.

அவனுக்கோ, வார்த்தைகள் பிடிபடவில்லை. இவர்கள் பற்றி தீபா எல்லாம் சொன்னார்தான். ஜோசப் பற்றியும் அல்லவா சொல்லியிருக்கிறார். என் தாய்க்கு இப்படியெல்லாம் கொடுமை நடந்தது என்று அவளால் இவனிடம் சொல்ல முடிகிறது. அதுபோல், அந்த வதையை ஆரம்பித்து வைத்து, அவள் தாயைப் படுகுழிக்குள் தள்ளியதே என் மாமா தான் என்று, இவளிடம் சொல்ல முடியுமா? அதன் பின்னும், இப்படி, அருகில், உரிமையாக இருந்து கதைத்துக் கொண்டிருப்பாளா? மனம் கொதிக்க அப்படியே அமர்ந்திருந்தான், டேமியன். அவன் மௌனம் கல்யாணியை மிகவுமே பாதித்தது.

“நானும் நீங்களும் சின்னாக்கள் இல்ல டேமியன். இப்பவும் சரிவராது எண்டு நினைச்சா விட்டிரலாம். எனக்கு…எனக்கு…. எப்பவும் அம்மா முக்கியம் டேமியன். ஆருக்காகவும் அவவ விட்டுத் தரேலாது. அவாவுக்கு நடந்த கொடுமை எதுக்குமே அவா பொறுப்பில்ல.” விம்மியவள், கதைத்ததற்கு நேர் மாறாக அவன் தோளில் வாயை அழுத்தி விம்மலை அடக்க முயன்றாள்.

“அடி வாங்குவீங்க கல்யாணி. முதல் இங்க என்ர முகத்தைப் பாருங்க ஒருக்கா.” அவளை நிமிர்த்தி முகம் பார்க்க முயன்றான். தோற்றுத்தான் போனான். 

அவள் விம்மலையும் அழுகையையும் கையாலாகாத்  தனத்தோடு பார்த்து நிற்கப் போகிறானா?

“சுமதிம்மா வாழ்க்கையில நடந்த எல்லாம் எனக்குத் தெரியும் கல்யாணி.  இதுதான் கடைசி, இனிமேல்பட்டு அவவிட பாஸ்ட் பற்றிக் கதைக்கிறேல்ல. அம்மாட கோவம் எத்தனை நாளைக்குச் சொல்லுங்க? அவவால என்னையும் பிள்ளைகளையும் விட்டுட்டுக் கனக்க  நாளைக்கு அக்காவோட இருக்கேலாது.” என்றவன், “நீங்க மட்டும் இப்ப இந்த அழுகைய நிப்பாட்டேல்லையோ நான்…” என்ற அவன் குரல் பேதமே, அவள் தலையை விசுக்கென்று நிமிர்த்திவிட்டிருந்தது.

 கண்களைத் துடைத்துக்கொண்டே விசமமாகச் சிரித்தவனை முறைத்தாள். 

“முதல் தள்ளி இருங்கோ டேமியன்.  இல்லையோ நான் எழும்பிறன், விடுங்கோ!” எழ முயன்றவளை விட்டால்தானே!

கன்னமிரண்டையும் பற்றி ஆழ்ந்து அவள் விழிகளைப் பார்த்தவன் அவளில் அசைவை நிறுத்திவிட்டிருந்தான். 

விடாது கசிந்த விழிகளை, அவன் பெருவிரல்கள் இரண்டும்  மெல்லத் துடைத்துவிட்டன.  

“இப்ப என்னத்துக்கு அழுறீங்க? அதான் சொன்னனே நான் அறிஞ்சு, சிரமப்படாம எனக்கு ஒண்டும் அவ்வளவு கெதியாக் கிடைக்கிறேல்ல எண்டு. அப்பிடியிருக்க, இந்தக் கல்யாணி  மட்டும் கெதியா என்னட்ட வந்திருவாவா என்ன?  நான் பாத்துக்கொள்ளுறன்,  ஒண்டையும் யோசியாதேங்க.”என்றவன், அவள் சற்றும் எதிர்பாராதே கன்னமிரண்டிலும் கொஞ்சியிருந்தான்.

விழிகள் விரிய அதிர்ந்திருந்தவள் முகத்தினருகில் மீண்டும் அவன் நெருங்க, ஒரே துள்ளலில் எழுந்து விலகி நின்றாள், கல்யாணி.

வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே எழுந்தான், அவன். 

“இன்னும் ஒன்பது நாளில கலியாணம்” என்று, தன்  திட்டங்களைச் சொன்னவன், “இதைவிடவும் வித்தியாசமா உங்களுக்கு  என்ன விருப்பம் இருந்தாலும் சொல்லுங்க.” என்றான்.   

“இல்ல…எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இதே எல்லாம் நல்லாத்தான் இருக்கு.  எது எண்டாலும் ஆகப்பெரிசா வேணாம் டேமியன்.”  என்றாள் அவள்,  சின்னக்குரலில். 

“நாளைக்கு அல்லது நாளாண்டைக்கு  உடுப்புகள் எடுக்கப் போவம்.” என்றவன், “இப்ப வாறீங்களா அங்க வீட்டில சாப்பாடு செய்து சாப்பிடுவம். சரியாப் பசிக்குது. பிள்ளைகளும்  சாப்பிட்டிராயினம்.”என்று சொல்லி, அவளைக்  கையோடு அழைத்துக்கொண்டு தங்கள் வீடு நோக்கி நடந்தான்.

error: Alert: Content selection is disabled!!