பிள்ளைகள் மூவரும் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். கையில் ஐஸ் கோன்.
கல்யாணி, அவ்வீட்டினுள் எத்தனையோ தடவைகள் வந்து போயிருக்கிறாள். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவளாக வந்து போவதற்கும் வீட்டின் உரிமையாளன் கை பிடித்து உள்ளே அழைத்து வருவதற்கும் தான் எத்தனை வித்தியாசம்!
வாயிலால் நுழைகையில் அவ்வுணர்வு மொத்தமாக அவளைத் தனதாக்கியிருந்தது. டேமியனோடு சேர்ந்து வந்தவள் நடை சற்றே பின்னிற்று. இக்கணம் உண்மையா என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டிருந்தது. அவள் மனத்தின் தடுமாற்றத்தைத் தப்பாது அவன் பிடிக்குள் இருந்த கரம் உணர்த்திவிட்டிருந்தது.
வியர்த்துப் போய் நடுங்கிய அவளது கரத்தைச் சற்றே தூக்கிப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான், டேமியன்.
“உங்கட வீட்டுக்க, வாங்க எண்டு நான் வரவேற்கத் தேவையில்ல தானே கல்யாணி?”என்று அவன் கேட்டதும் அக்குரலிருந்த கனிவும் அவள் மனத்தின் மகிழ்வை அதிகரித்திட்டு. இல்லையென்பதாகத் தலையசைத்தாள்.
“Va bene”(that’s good) என்றுவிட்டு உள்ளிட, அவர்களைக் கண்டுவிட்டு, ஓடி வந்து அணைத்து வரவேற்றார்கள், பிள்ளைகள்.
“கனி அன்ரி எப்ப இங்கயே இருக்க வருவீங்க?” என்று கேட்டபடி அவளோடு ஒட்டிக்கொண்டு நின்ற சின்னவள் கையில் இருந்த கோனை நீட்டி, “வேணுமா?” என்றாள்.
“நோ நோ புதுசு எடுத்துக் குடுப்பம்.” என்றுகொண்டே, சமையலறைப் பக்கம் திரும்பினான்,ஜெரிக்சன்.
“இல்ல இல்ல, எனக்கு இப்ப வேணாம் டா. நீங்க குடியுங்கோ!”என்று, மூவரோடும் நின்று அவள் அளவளாவ, உள்ளே நகர்ந்து வந்து நால்வரையும் மலர்வோடு பார்த்து நின்றான், டேமியன்.
வீணான வீம்போடு, தாய் கோபித்துவிட்டுச் சென்றிருந்தாலும் அக்கணத்தில், நிறைவான மகிழ்வை அவன் உணர்ந்தான். அவரும் இப்படியொரு கணத்திற்காகக் காத்திருந்தவராச்சே! அது தெரிந்தவன், வீண் பிடிவாதத்தை எப்போ விடுவாரோ என்று சலித்துக்கொண்டே, நால்வரும் பெரிதாகச் சிரிக்கும் சத்தத்தில் அவர்களை நோக்கினான்.
பாடசாலைக் கதைகள் கதைத்துச் சிரித்தபடி நின்றார்கள். அக்கணம் அவனையுமறியாது பியங்காவின் உரு கல்யாணியில் தெரிந்தது. டேமியன் திடுக்கிட்டுப் போனான்.
திடுக்கிடலை மீறி, பியங்கா, அவன் எண்ணங்களை ஆக்கரமித்தாள். இப்படித்தான் அவளும். எங்கு அவள் நின்றாலும் அந்த இடம் கலகலத்துவிடும். அதுவும் பிள்ளைகளோடு சிநேகிதி போல்தான் பழகுவாள். அவன் கண்கள் கலங்கிவிட்டன.
பார்வை, அந்த வரவேற்பறையின் ஒரு பக்கச் சுவரை நிறைத்திருந்த புகைப்படங்களை நோக்கி வேகமாக ஓடிற்று. அதில் நடுநாயகமாக, அவனும் பியங்காவும் திருமணத்திற்கு எடுத்த புகைப்படம் தான் இருந்தது. அதையேதான் பார்த்து நின்றான்.
பிள்ளைகளோடு கலகலத்துக்கொண்டிருந்த கல்யாணி, டேமியன் சத்தமே இல்லாது நிற்பதை உணர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் பார்வையோடு நகர்ந்தது, அவள் பார்வை.
அந்தப் புகைப்படத்தை அவள் பார்க்கவில்லையா என்ன? இங்கு வரும் போதெல்லாம் பளிச்சென்று பெரிதாக மாட்டியிருக்கும் அதைப் பாராது நகர முடிவதில்லை. பியங்காவுக்காக மிகவுமே வருந்தவும் செய்வாள். ஆனால், இப்போது, டேமியன் கண்ணீரோடு பார்த்து நிற்பதைப் பார்க்க மனத்துள் எதுவோ செய்தது. எதுவோ என்ன, உள்ளமும் அதனுள் புதிதாக வந்து சேர்ந்திருந்த நேச உணர்வுகளும் பிசைந்தன.
ஏக்கமா, துக்கமா சொல்லத் தெரியவில்லை. தொண்டை அடைக்கும் உணர்வு. எச்சிலைக் கூட்டி விழுங்கிச் சமாளிக்க முயன்றாள். பிள்ளைகள் கேக் செய்வோமா என்று கேட்டதற்குப் பதில் சொல்லவும் இல்லை.
“இண்டைக்கு ரெட் வெல்வெட் கேக் செய்வம் அன்ரி. ஓகேவா? கனி அன்ரி, பின்னேரம் உங்களுக்கு வேல இல்லயே? ஓகே தானே?” பெரியவள், அவள் வலக்கரத்தைப் பற்றி ஆட்டவும் தான் சுதாரித்தாள். பார்வை மட்டும் டேமியனை விட்டு நகரவில்லை.
பிள்ளைகளும் சேர்ந்து அவனைப் பார்த்தார்கள்.
மேற்கைகளால் மாறி மாறி விழிகளைத் துடைத்துக்கொண்டு திரும்பிய டேமியன், செவ்வரிகளோடிய விழிகளால் கல்யாணியின் பார்வையைச் சந்தித்தான்.
சட்டென்று தடுமாறினாலும் கணத்தில் சமாளித்துவிட்டான். முறுவலித்தான். விழிகளை மூடித் திறந்தான்.
இருவருள்ளும் சிறு காலப் பழக்கம்தான். இருப்பினும் அவளோடு உணர்வுகளால் உறவாட முடிந்தது. பார்வையை விலக்காது அருகில் வந்தான்.
அவளிதழ்களில் மென்முறுவல் வந்துவிட்டிருந்தது. அவள் முகத்தின் மலர்வைக் கண்டதும் தான், டேமியன் சீராக மூச்சு விட்டான். ஒரு கணம், அவள் மனம் நொந்திருப்பாளோ என்று யோசித்துக் கலங்கி விட்டானே!
கடந்த காலத்தை, அதுவும் மிக மிக அழகான, ஆத்மார்த்தமான கடந்த காலத்தை மறப்பது இலகுவில் முடியாதது. அதை மேவியதாக நிகழ்காலம் இருக்கலாம், கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு முழு முயற்சி செய்வான். இதை உறுதியாகத் தீர்மானித்தபடி அவளின் இடக்கரத்தைப் பற்றிப் பொத்திக்கொண்டான்.
பிடிக்குள் அகப்பட்டிருந்த கரத்தைத் தூக்கி மணிக்கட்டில் அழுந்தக் கொஞ்சினான். அதில் ஒட்டி நின்ற மெல்லிய தங்கக் கைச்சங்கிலி அவன் உதடுகளை நன்றாகவே உரசியது. அவள் முகத்தில் படிந்த பார்வையை விலக்கவும் இல்லை.
கல்யாணி, முழுதாகத் தடுமாறிப் போனாள். இருந்தும் உணர்வுகளைக் கொட்ட முடியவில்லை. அருகில் நிற்கும் பிள்ளைகள்தான் அவள் நினைவில். அவர்களைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது.
“டேமியன், கையை விடுங்கோ!” அந்தரமாகச் சொல்லித் தயக்கத்தோடு பிள்ளைகளைப் பார்த்து மிகவுமே சங்கடமாக முறுவலித்தாள். அவர்களோ, வெகு இயல்பாக மலர்வோடு இருவரையும் பார்த்து நின்றார்கள்.
டேமியனுக்கோ, பிள்ளைகளைப் பார்த்துச் சங்கடப்படுகிறாள் என்று சட்டென்று தோன்றவில்லை. அவள் கரத்தை விடுவிக்காதே, “சொறி!” என்றான்.
“ஏ …ன்?” தடுமாற்றமாகக் கேட்டாள்.
“பிள்ளைகளுக்கு முன்னால இதெல்லாம் என்ன டேமியன்?” அவனுக்குக் கேட்கும் வகையில் முணுமுணுத்தவள் கரத்தை விடுவிக்க முயன்றாள்.
நெற்றியை ஏற்றியிறக்கியவன், “சரி , நானும் கல்யாணி அன்ரியும் சாப்பாடு செய்திட்டுக் கூப்பிடுறம். நீங்க டிவி பாருங்க.” என்றுவிட்டு, அவளோடு அவன் சமையலறைப் பக்கம் நகர, மறுபேச்சில்லாது தலையாட்டிய பிள்ளைகள் மீண்டும் தொலைக்காட்சியில் லயித்துவிட்டார்கள்.
அடுத்த நிமிடம், பத்துப் பேர்வரை உண்ணக்கூடிய வகையில் ஓவல் வடிவ மர மேசையும் கதிரையுமாக போடப்பட்டிருந்த சாப்பாட்டறையைக் கடந்து சமையலறைக்குள் வந்திருந்தார்கள். அங்கு, ஒரு சிறு மேசை போடப்பட்டிருந்தது. இரு கதிரைகள் மட்டுமே இருந்தன. அநேகமாக அவனும் பியங்காவும் இதில் அமர்ந்திருந்துதான் உண்பது.
அவன் நினைவுகள் மீண்டும் தடம் மாறின.