நட்சத்திரா 24 – 2

“நான் ஒருக்கா ஹக் பண்ணலாமா கல்யாணி?” கேட்டவன், அவள் அனுமதிக்காகக் காத்திராது அவளை அணைத்திருந்தான். இறுகவே! 

“சொறி!”மீண்டும்  முணுமுணுத்தவன் தலை அவள் தோள் வளைக்குள் தஞ்சம் தேடிச் சாய்ந்தது. மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்கும் பாவனையும் அவன் செய்கையும் திகைப்பில் ஆழ்த்தி அவளை ஆட அசைய விடவில்லை. கரங்கள் அவள் அனுமதிக்கெல்லாம் காத்திராது அவனை முதுகோடு வளைத்துக் கட்டிப்பிடித்துக்கொண்டன. 

கண்கள் கலங்க, “எனக்கு, நீங்க முதல் கலியாணம் செய்தவர் எண்டு தெரியாதா டேமியன்?அல்லது நான் முதல் லவ் பண்ணினனான் எண்டு உங்களுக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாமல் குழம்பாதீங்க ப்ளீஸ்!” என்றாள் சின்னக் குரலில்.

அவள் நல்ல திடம், தெளிவு  கொண்டவள் என்று தெரியும் . அதைக் கண்கூடாகக் கண்டிருந்தாலும் இக்கணம் அந்த திடமும் தெளிவும் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. 

தலையை நிமிர்த்தி அவள் விழிகளையே பார்த்தவன் முகம்  மெதுவாக நெருங்க, அவன் பார்வையின் வசியத்தில் அம்பிட்டு  நின்றவள் என்ன ஏதென்று உணரும் முன்னரே  அவள் இதழ்களில் தன்னுதடுகளை மெல்ல ஒற்றி எடுத்திருந்தான்.

“ அடி வாங்குவீங்க நீங்க! பிள்ளைகள் வந்தா?” பட்டென்று தள்ளி விட்டு விலகி நின்று முறைத்தாள், கல்யாணி.

வாய்விட்டுச் சிரித்தாலும் பிள்ளைகள், கிறிஸ்டினா என்று யார் நின்றாலும் இறுக அணைத்து, உதட்டில் கொஞ்சிவிட்டுச் செல்லும் பியங்கா மீண்டும் நினைவில் துள்ளிவந்து நிற்க, அவனுக்கு ஐயோ என்றிருந்தது. மீண்டும் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் .

“டேமியன்..சத்தியமா அடிச்சுப் போடுவன். இவ்வளவு நாளும் என்ன நடிப்புக் காட்டி நடந்திருக்கிறீங்க ? கெட்டவன் நீங்க. என்னை விடுங்க, நான் வீட்ட போறன். சமையுங்க சாப்பிடுங்க. நான் இந்த விளையாட்டுக்கு வரேல்ல.” விடுபடத் திமிறியவள் தோற்றுப் போய் நின்றதுதான் மிச்சம். அவள் கழுத்து வளைவினுள் முகம் புதைத்தவன் சில நிமிடங்கள் கடந்து அவளை விடுவிக்கையில் கழுத்தில் தொடங்கி கன்னம் உதடுகள் என்று கொஞ்சிவிட்டே விலகினான்.

விசுக்கென்று அங்கிருந்து விலக முயன்றவள் கரம் பற்றி, “நான் உங்களுக்கு மட்டும்தான் கெட்டவன். மற்றும்படி அதெல்லாம் ஒண்ணும் நடிப்பு இல்ல.” கண்ணடித்துச் சொன்னவன், “எப்பவும் என்னைவிட்டு ஓடிரலாம் எண்டு மட்டும் நினைச்சிராதீங்க. விடவே மாட்டன்.” பகிடிபோல் சொன்னாலும் கலங்கிய விழிகளோடு அவன் சொன்னதில், இவளாக நெருங்கி அவனைக் கட்டிப்பிடித்திருந்தாள்.

மீண்டும் அவன் முகம் அவள் தோளில் தஞ்சம் அடைந்து விட்டது. 

“அந்த ஃபோட்டோவ எடுப்பம் என்ன?” அந்நிலையில் நின்றே கேட்டிருந்தான்.

“என்ன ஃபோட்டோ?”  என்றுவிட்டே , அவர்களின் திருமணப் படம் என்று விளங்க, “டேமியன், இஞ்ச ஒருக்காப்  பாருங்க .” அவனை   விலத்தி நிறுத்திவிட்டு நேராகப் பார்த்தாள்.

“அந்த ஃபோட்டோ அதில இருக்கிறதால உண்மையாவே எனக்குப் பிரச்சின ஒண்டும் இல்ல. இருக்கட்டும். இந்த வீட்ட அவாவும் நீங்களுக்குமா பாத்து பாத்துக் கட்டினது பற்றி அண்டைக்குச் சொன்னீங்க தானே? பியங்காடயும் தானே இந்த வீடு? முதல்  ஃபோட்டோவ எடுத்தா…” என்றுவிட்டு அவனைப் பார்த்து முறுவலித்தாள். 

“உண்மையாவே எனக்கு ஒண்டும் இல்ல. அது அதிலேயே இருக்கட்டும்!” மீண்டும் அவளாகவே நெருங்கி அவனை அண்ணைத்துக்கொண்டாள்.

அவன் பதில் பேசவில்லை. உச்சியில் அழுந்தக் கொஞ்சிவிட்டு விடுவித்தவன்,  

“sheet pan chicken saltimbocca with roasted potato and crispy kale செய்யலாமா?” என்றான்.

“சிம்பிளா ஏதாவது செய்யலாம் டேமியன்.” 

“இதே சிம்பிள் தான். நீங்க இப்பிடி இருங்க.” என்றுவிட்டு, கதிரையை இழுத்து அவளை அமர்த்தினான். 

“ நான் செய்யிறன்.” என்று அவன்  நகர, இவளும் எழுந்துவிட்டாள்.

“நீங்க சிக்கன செய்யுங்க, நான் பொட்டாட்டோவும் கேலும் செய்யிறன். நாங்களும் வடிவாச் செய்வம் ஓகே” என்றாள், வாயைச் சுழித்து.

“இது உங்கட வீடு மேம். என்ன சொன்னாலும் கேக்க நான் ரெடி! என்ன, முதல் முதல் சமைச்சுக் குடுத்து ஐஸ் வைப்பம் எண்டு பாத்தா விடுறீங்க இல்லையே!” கண்ணடித்தபடி கடித்தான். இந்தக் கலகலப்பான, இலகுவான டேமியன் அவளுக்கு என்றால் மிகவுமே புதிது. 

கல்யாணியோ, இயல்பிலேயே பெரும் வாய்க்காரி! இடையில் அதையெல்லாம் மறந்திருந்தவள் மீண்டும் புதிதாகப் பிறந்தாள். அவன் அருகண்மையில். அவன் சகவாசத்தில். 

“ஹலோ! எங்களுக்கு எல்லாம்  ஐஸ் வைக்கிறது சரியான சிரமம். முயற்சி செய்யிற நீங்கதான் சளி,காய்ச்சல் எண்டு அந்தரிக்க  வேண்டிவரும். மினக்கடாதீங்க சரியோ!”பதில் கொடுத்தாள்.

இப்படியே, இருவரும் மாமி மாறிக் கடிபட்டபடி சமையலைப் பார்த்தார்கள். 

ஒரு மணித்தியாலம் கடந்திருக்கும், அச்சமையலறைக்குள்  சுவையான உணவு மணத்தோடு,நிறைவான மகிழ்வும்  கலந்திருந்தது. அது, அங்கு நின்ற இருவரையும் தழுவிக்கொண்டு அப்படியே கசிந்து வீட்டையும் நிறைக்கத் தொடங்கியிருந்தது.

chicken saltimbocca, roasted potato,  crispy kale என்று உணவுகளை மேசையில் எடுத்து வைத்துவிட்டு, பிள்ளைகளுக்குக் குரல் கொடுத்தான்,டேமியன். ஓடி வந்தமர்ந்தார்கள். 

“யம் யம்” என்றுகொண்டு கதிரையில் ஏறி நின்று கொண்டு தனக்குப் பரிமாற எத்தனித்தாள், சின்னவள் சிசிலியா. 

“நான் போட்டுத் தாறன் இரு!”என்றபடி எழுந்தாள் பெரியவள் பபிதா. மூவரும் தமக்குரிய வேலைகளைப்  பெரும்பாலும் தாமே பார்க்கும் படிதான் பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள். கிறிஸ்டினாவின் மேற்பார்வை மட்டும்  இருக்கும். அவர் கனடா சென்றிருந்த நேரம் கல்யாணி நின்றாளானால் பார்த்துக்கொண்டிருக்க மனம் வராது, உதவுவாள். ஆரம்பத்தில், “ இல்ல கனி  அன்ரி, நான் செய்யிறன்.” என்றவர்கள்தான். பிறகு பிறகு விடுவார்கள். 

அதுவே, “நீங்க இருங்கோ, அன்ரி  போட்டுத் தாறன்.”என்று சின்னவளைப் பிடித்து அமர்த்த வைத்திருந்தது. 

“வெயிட்! அன்ரிக்கும் பிள்ளைகளுக்கும் நான் சமைச்சதச்  சாப்பிடுறதில உள்ள அவசரத்தப் பாருங்கவன்.”பெருமையாகச் சொன்ன டேமியன்,  “முதல் ஒரு ஃபோட்டோ எடுத்து அப்பம்மாவுக்கு அனுப்புவமா?” சாப்பாட்டறைச் சுவற்றில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்தபடி கேட்டான்.

 பிள்ளைகள் “ஓம் ஓம்” என்றார்கள். கல்யாணி அமைதியாக நின்றாள். கிறிஸ்டினாவை அவர்கள் தேடுவது புரிந்தது. மகளின் பிள்ளைப்பேறு என்று சென்றிருந்த போதே அவரைத் தேடிக்கொண்டே இருப்பவர்கள், இன்று, கோபித்துக்கொண்டு சென்றிருக்கிறார் என்றால் விடுவார்களா! என்ன சமாதானம் செய்தாலும் தன்னால்தான் என்ற குற்றவுணர்வு  எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அதுமட்டுமில்லாமல், “அப்பம்மாவை மிஸ் பண்ணுறம். எப்ப வருவா? நாங்களும் கனடா போகோணும்.” என்று, பிள்ளைகள் சொல்ல  சட்டென்று அந்த இடத்தில் அந்நியமாக உணர்ந்தாள்.

டேமியன் எதுவும் கதைக்கவில்லை. “அப்பம்மா இப்ப ஃபிளைட்டில இருப்பா. எண்டாலும் அனுப்புவம்.” என்றவன்,  உணவோடு சேர்த்துப் பிள்ளைகள் தெரிய சற்றே முன்னால் ஓரமாக வந்து நின்றவனின் கரம் கல்யாணியைச் சுயாதீனமாக இழுத்துத் தன்னோடு அணைத்துப் பிடித்துக்கொள்ள, அவள் கரம் சின்னவள் தோளை வளைத்திருந்தது.

எடுத்துவிட்டு, புகைப்படத்தைப் பார்த்த டேமியன் விழிகள் கலங்கிப் போயின. விருட்டென்று சமையலறைக்குள் புகுந்துகொண்டான். மீண்டும் பியங்கா நினைவில் வந்தாள். கசிந்த கண்களைத் துடைத்துக்கொண்டு நின்றவன் தோளில் தட்டி, ‘என்ன’ தலையசைவால் வினவினாள், கல்யாணி. தாயை நினைத்துக்கலங்குறானோ என்றுதான் எண்ணினாள்.

ஒன்றுமில்லை என்று தலையாட்டியவன், அவள் விழிகளையே சில கணங்கள் பார்த்து நின்றான். 

“அஞ்சு வருசங்களுக்குப் பிறகு இப்படிக் குடும்பமா நிண்டு ஒரு ஃபோட்டோ, ஒரு சாப்பாடு கல்யாணி!” தொண்டை கரகரக்கச் சொன்னவன்,  பியங்கா உன்னில் தெரிகிறாள் என்று சொல்ல வந்ததை விழுங்கிக்கொண்டான். அவனுக்கே அதைச் சொல்லப் பிடிக்கவில்லை. இந்தப் பெண், பெண் என்றில்லை எவர் அதை விரும்புவர்? இருவரையும் பிரித்து உணரப்பார் டேமியன் என்று, தன்னையே தான் அதட்டிக்கொண்டவன், அவளை இறுக அணைத்துவிட்டே சாப்பாட்டறைக்குள் நுழைந்தான்.

அன்று, ஐவருக்கும் கல்யாணி பரிமாறிக் கொடுத்தாள். டேமியனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புதுவுணர்வு. அளவை மட்டும் பார்த்து, போதும் போதும் என்றார்கள்.

கலகலவென்று கதைத்தபடி உண்ண ஆரம்பிக்கையில் ஜாக்குலின் அழைத்தாள்.

“சாப்பிட்டுட்டு எடுக்கலாம்.”என்ற டேமியன், தமக்கைக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டுவிட்டு உண்ணத் தொடங்கினான்.

error: Alert: Content selection is disabled!!