நட்சத்திரா 25 – 2

“என்ன நீங்க …நான் வெளில போகோணும் கல்யாணி…”அவன் சொன்ன தோரணையில் சுதாகரித்திருந்தாள்.

‘கடுவன் பூனை கணக்கில திரிஞ்ச மனுசன்   செய்யிற அலும்பு இருக்கே!’ மனத்துள் சொன்னவள், “அதுக்கு நான் என்ன செய்ய?  போயிட்டு வாங்கவன். புது ரெஸ்ட்டோரண்ட்க்கு  போகேல்லையோ?” கேட்டுக்கொண்டே, பழங்கள் இருந்த தட்டை எடுத்துவிட்டாள். 

கண்ணிமைப்பொழுதில் அவனைக் கடந்து ஓடியவள், “வந்திருந்து பழம் சாப்பிட்டுபோட்டுப் போங்கோ!” என்கிறவளுக்குப் பதிலாக ,அவனை முந்திக்கொண்டு அவன் நகைப்புக் கலைத்து வந்தது.

“சுவிமிங் கிளாஸ் இருக்குத்தானே?”டேமியன் கேட்க, தலையாட்டினார்கள், மூவரும்.

“நான் கூட்டிக்கொண்டு போறன்.”என்றாள் கல்யாணி.

“ அப்ப நான் வர லேட்டாகும்.” என்றபடி பழங்களை வாயில் வைத்தவன், தமக்கை அழைக்க ஏற்றுக்கொண்டான். வீடியோ அழைப்பு. எடுத்தும் கல்யாணியின் முகம் தெரிய ஜாக்குலின் முகம் சுணங்கியது. 

“அம்மா கனடா வெளிக்கிடுறா எண்டோன்ன முகத்த நீட்டிக்கொண்டு இருக்கிற மூண்டு பேரையும் பார், என்ன மலர்வா இருக்கினம் எண்டு. உங்கட கனி அன்ரிய கண்டோன்ன, என்ர அம்மாவ வெளில கலைச்சு விட்டாச்சி என்ன? வயசுபோன மனுசி எண்டு யோசிக்கேல்ல!”ஆரம்பத்தில் பகிடியாக ஆரம்பித்த ஜாக்குலின்,  சொல்லி முடிக்கையில் கல்யாணியை உறுத்து விழித்திருந்தாள்.

 அதுவரை அவ்வளவு மலர்வும் முறுவலுமாக  இருந்த கல்யாணியின் முகம் சுண்டிப்போயிற்று.

“அக்கா என்ன கதையிது? அதும் பிள்ளைகளிட்டப் போய். அம்மாவ ஆருமே போகச் சொல்லேல்ல எண்டு தெரிஞ்சும். இனி இப்பிடிக் கதைக்க வேணாம் அக்கா!” வெடுக்கென்று கண்டிப்போடு சொல்லியிருந்தான், டேமியன். 

ஜாக்குலின் முகம் கறுத்திட்டு . கல்யாணிக்கு முன் வைத்து என்ன தொனியில் கதைத்துவிட்டான். நாளைக்கு அவள் தன்னை மதிப்பாளா என்ன?

“ இப்ப நான் அப்பிடி என்ன சொல்லிப்போட்டன் எண்டு இந்தக் கத்துக் கத்துற நீ டேமியன். அதும் பிள்ளைகளுக்கு முன்னால வச்சு. நான் கரவு வச்சு ஒண்ணும்  சொல்லேல்ல. அப்பிடி இல்ல எண்டா குத்தவும் குடையவும் தேவேல்ல எல்லா. கதைக்க எடுத்த என்னச் சொல்லோணும். மகிழ்ச்சியா இருங்க, நான் வைக்கிறன்.” பட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

பரிதவிப்போடு பார்த்தாள், கல்யாணி.

“பச்! இவேட கதைகளப் பெரிசா எடுத்திராதீங்க கல்யாணி.” என்றவன், “சாப்பிடுங்க வாறன்.” தமக்கைக்கு அழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் நகர, கல்யாணியின் பார்வை  விசுக்கென்று செல்பவனையே தொடர்ந்தது.

அவன் அழைத்ததும் ஜாக்குலின் எடுத்துவிட்டாள். அழைப்பான் என்று மனக்குமுறலோடு  பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

 “சொல்லு என்ன விசயம்?” என்று வெடுக்கென்றுதான் கேட்டிருந்தாள். ஒன்றுமே கதைக்காது தமக்கையை ஆழ்ந்து பார்த்தான், டேமியன்.

“ நேற்றுக் கண்ட மனிசிக்கு முன்னால வச்சு என்னோட சீறுற அளவுக்கு வந்திட்டு. பிறகு என்ன? யோசிச்சுப் பாத்தா அம்மா அங்க இருந்து வெளில வந்ததுதான் சரி. என்னட்ட இந்தக் கத்து கத்துற நீ, அவவிட்டயும் கத்தி இருப்ப. அதானே அந்த அழுகை அழுதவா.” படபடவென்று சொல்லி அழுதாள்.

டேமியன் முகம் கல் போல் இறுகிப் போயிற்று. சற்று முன்வரை உணர்ந்த மகிழ்வெல்லாம் எங்கு போனதென்று தெரியவில்லை. அவனுள் கோபம் சீறிக்கொண்டு வந்தது.

“இஞ்ச பாருங்க அக்கா, நான் ஏற்கனவே சொன்னதுதான். கல்யாணி ஆரோ இல்ல. இன்னும் பத்து நாளில என்ற வைஃப். எனக்குத்  தாற மரியாதைய அவவுக்கு நீங்க குடுக்கோணும். அவ்வளவும்தான் .”அவன் முடிக்க முதல் இடையிட்டாள், தமக்கை.

“மரியாத எல்லாம் கேட்டு வாங்கிற விசயம் இல்ல டேமியன். ஒரு மனுசர் நடந்து கொள்ளுற, வாழுற விதத்தில குடுக்கிறது.” 

“ஓ! கல்யாணி மரியாதைக் குறைவா உங்களோட நடந்தவாவோ? தாயும் மகளும் ஒத்த சதம் , உதவி எண்டு ஆரிட்டையும் போய் நிக்கிறேல்ல. கடும் உழைப்பாளிகள். இனி  மரியாதை குடுக்கலாம் தானே?” உறுமிய சகோதரனை எரிக்கும் பார்வை பார்த்தாள், அவள்.

“ஒத்த சதம் எல்லாம் ஏன், மொத்தச் சொத்துக்கும் வளையம் போட்டாச்சே!”முணுமுணுப்பாகத்தான் சொன்னாள், டேமியனுக்குக் கேட்டுவிட்டது. 

கைப்பேசித் திரைக்குள் முகத்தைப் புதைக்கும் அளவிற்குச் சென்றவன் விழிகள் சிவந்து இருந்தன.

“இனிமேல்பட்டு இப்பிடி ஒரு வார்த்தை உங்கட வாயில இருந்து வரோணும், பிறகு, தம்பி இல்லை எண்டு நினைச்சுக்கொள்ளுங்க.  உங்கட கற்பனைகளுக்கு எல்லாம் நாங்க ஆளில்லச் சரியோ?”  என்றவன், தமக்கை கண்ணீர் விடவும் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான்.

பியங்காவைத் திருமணம் செய்ய இவனுக்குத் துணை நின்றவள் தமக்கை. இப்போது?

கல்யாணியை  நினைக்கக் கவலையாக இருந்தது.

“அவவுக்கு ஆரும் என்னத்துக்கு, நான் இல்லையா?” என்று முணுமுணுத்தவன், “ என்பாட்டில சும்மா இருந்தனான் எல்லா?  கலியாணம் கட்டு கட்டு எண்டு என்ன பாடு படுத்தினீங்க? பிறகு, கட்ட வந்த பிள்ளய மனிசி அது இது எண்டுகொண்டு. உண்மையா இது நல்லாவா இருக்கு அக்கா. அவவிட இடத்தில நீங்க இருந்து, அத்தார் வீட்டு ஆக்கள் இப்பிடிச் சொன்னா எப்பிடி இருந்திருக்கும் யோசியுங்க. அதோட, இப்பிடிக் கதைச்சு அம்மாட கோவத்தக்  கூட்டாதீங்க சொல்லிட்டன்.” என்றவன், “வைக்கிறன், ரெஸ்ட்டோரண்ட்  போகோணும். பை.” என்று வைத்துவிட்டான்.

‘உப்ஸ்!’ பெரிய மூச்சொன்றை வெளியேற்றிவிட்டுத் திரும்பினால், அவன் விட்டுவிட்டு வந்த பழக்கிண்ணத்தோடு  நின்றுகொண்டிருந்தாள், கல்யாணி.

“ஓ! சாப்பிடாம வச்சிட்டு வந்திட்டன், தேங்க்ஸ் கல்யாணி.” கிண்ணத்தை வாங்கிக்கொண்டவன் பார்வை அவள் முகத்தில் தான்.

“இப்பிடி இருங்கவன்.”என்றவன், படியில் அமர்ந்துவிட்டான். அவள் அமரவில்லை. 

“இதைச் சாப்பிட்டுட்டு நான் வெளிக்கிடச் சரியா இருக்கும் . புது ரெஸ்ட்டோரண்ட் போயிட்டு, அநேகமா இரவுக்கு  வரப்  பிந்தும். இங்க ஒருக்கா பாப்பீங்க எல்லா?” என்றுகொண்டே, அவள் கரம் பற்றித் தன்னருகில் அமர்த்தியும் இருந்தான்.

“ம்ம்” என்றாள், அவள். சற்று முன்வரை, அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி, முற்றிலும் துடைத்து வழித்தாற்போல்  இல்லாது போயிருந்ததைப் பார்த்தவனுள் வருத்தம்தான். 

“அக்கா அப்பிடிக் கதைச்சத்துக்கு உண்மையாவே சொறி கல்யாணி!” இறங்கிவிட்ட தொனியில் சொன்னான்.

அவளுக்கோ, கலங்கும் விழிகளைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் தேவையிருக்கவில்லை. மன இறுக்கத்தைக் கமுக்கென்று அமுக்கிக்கொண்டு சாதாரணமாக நடமாடுவதற்குப் புதியவள் அல்லளே!

திடீரென்று எதிர்பாராது வந்த மகிழ்வுப் பேரலை, அதை, முற்றிலும் மறக்கச் செய்யவில்லை என்று அக்கணம் உணர்ந்தாள், கல்யாணி.

உன் தமக்கை கதைத்தது, என்னை ஒன்றுமே செய்யவில்லை என்ற கணக்கில் முறுவலித்தாள். முகம் நிர்மலமாகிவிட்டிருந்தது. 

 “அவா ஒண்ணும் நடவாததச் சொல்லேல்லையே! உண்மை அதானே டேமியன். விடுங்க. கிறிஸ்டி அன்ரி கனடா போய்ச் சேர்ந்தோன்ன நான் எடுத்துக் கதைக்கிறன்.” கைவிரல்களையும்  நகக்கண்களையும் ஆராய்ந்தபடி சொன்னவளையே பார்த்துக்கொண்டிருந்தான், அவன்.

“ஒண்டு சொல்லவா கல்யாணி? சுற்றி இருக்கிற எல்லாருக்கும் ஏற்றது போல வாழ வெளிக்கிட்டால் சரியான சிரமம். எல்லாரையும் திருப்திப்படுத்திறதே வேலையாப்  போயிரும். நாங்கள் ஆருக்கும் கெடுதல் செய்யேல்ல. இடைஞ்சல் செய்யேல்ல. எங்கட வாழ்க்கையை வாழப்போறம். இதில, நாங்கள் தெளிவா இருந்தாச் சரி என்ன? ஓம் தானே? நான் ஏதாவது ஏறுக்கு மாறாச் சொன்னா மட்டும் தான் இந்த முகம் மாறோணும்.” இடக்கையால் அவள் நாடியைப் பிடித்துத் தன்னைப் பார்க்கும் படி திருப்பினான்.

என்ன கட்டுப்படுத்தியும் கேளாது விழிகள் மின்ன, முறுவலிக்க முயன்றாள், அவள். 

“ அம்மாவோட நீங்க ஒண்ணும் கதைக்கத் தேவேல்ல. அவா வருவா. கெதியா. இனி அந்தக் கதைய விடுங்க.”என்றுவிட்டு,  பழத்தைச் சாப்பிட்டு முடித்தான். 

“நாளைக்கு எல்லாரும் ஷொப்பிங் போகலாம். பிள்ளைகள் உங்களுக்குக்  கலியாணத்துக்கு என்ன மாதிரி உடுப்பு எண்டு  கனி அன்ரியோட சேர்ந்து யோசிச்சு வையுங்க. இப்ப நான் போயிட்டு வரட்டா?” என்றவன், கல்யாணியை  அதிகமாகவே ஈர்த்தான்.

அவன் விடைபெற்றுச் சென்ற கையோடு, ரெட் வெல்வெட் கேக் செய்ய அவளை இழுத்துக்கொண்டு சென்றார்கள், மூவரும்.

error: Alert: Content selection is disabled!!