நட்சத்திரா 26 – 1

அன்று மாலை,வேலை முடிந்து வீடு வந்த சுமதியை முதலில் ஈர்த்ததே, பெரிய வீட்டிலிருந்து வந்த கலகலப்புத்தான்.பிள்ளைகள் குரலோடு சேர்ந்தொலித்த கல்யாணியின் குரல், அவள் அங்குதான் என்றது. 

சிலோன் டேஸ்டில் வைத்து,  கிறிஸ்டினா கனடா புறப்பட்டுவிட்டதை டேமியன் சொன்ன போது, எப்படி வினையாற்றுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. அந்தளவுக்குத் தடுமாறிப்போனார். எல்லாம் தலைகீழானது அவரால் அல்லவா?  துக்கமும் கலக்கமும் இயலாத தன்மையும் போட்டிபோட மறைக்க முடியாத  தவிப்போடு பார்த்தார், சுமதி.

அவர் முகமாற்றத்தைக் கவனித்தான்,டேமியன். இதை எதிர்பார்த்தானும். எதைச் சொல்லித் தேற்றுவது? வார்த்தைகளைத் தேடினான்.

 “எல்லாம் சரியாகும் சுமதிம்மா, ஒண்டுக்கும்  யோசிக்கக்கூடாது என்ன.” என்றுவிட்டுத்தான் போயிருந்தான். அதற்கென்று யோசிக்காதிருக்க முடியுமா என்ன? 

கண்காணாது சென்றுவிட்டால் என்ன என்று ஒரு எண்ணம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கிறது.  அதன்பின், அவர் மகள் மகிழ்வாக வாழ்வாள் என்றால் பரவாயில்லை. 

இயலா மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, இரு கைகளிலும் இருந்த பைகளை ஒற்றைக் கைக்கு மாற்றிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினார். 

“அம்மாதான்.” கல்யாணி வருவது கதவிலிருந்த கண்ணாடியால் மங்கலாகத் தெரிந்தது. வால் போல் பிள்ளைகளும்.

“நீங்க இருந்து கதைப்புத்தகம் வாசியுங்க, அம்மாவோட வீட்ட போயிட்டுக் கொஞ்ச நேரத்தில வாறன்.” என்று, பிள்ளைகளுக்குச் சொல்லி, கதவைச் சாத்திவிட்டு, தாயின் கையிலிருந்த பைகளை வாங்கிக்கொண்டாள், கல்யாணி.

“என்னம்மா இவ்வளவு? நாளைக்குக்  கடைகளுக்குப் போகலாம் எண்டவர் டேமியன். கலியாண உடுப்புகள் வாங்குவம் எண்டார். அவேக்கு மட்டும் வாங்கினாப் போதும் போலக் கிடக்கே!”என்றுகொண்டே, வீட்டுக்குள் நுழைந்த வேகத்தில் பைகளில் இருந்தவற்றை ஆராய்ந்தாள். 

சேலைகளை ஒன்று ஒன்றாக விரித்துப் பார்த்தாள். தோளில்  போட்டுக்கொண்டே அறைக்குள் புகுந்து அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பொருத்தமா என்று பார்த்தாள். 

“வடிவா இருக்கோம்மா?”ஏழெட்டு சேலைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் இதைக் கேட்க மறக்கவில்லை.

“ எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு அம்மா. என்ன எல்லாமே எனக்கு மட்டுமா? உங்களுக்கு ஒண்ணும் வாங்கேல்லையோ?” என்று, ஒவ்வொரு பைகளையும்   ஆராய்ந்தவள் தாய்க்குப் புதியவள். மிகவுமே புதியவள்!

புதிதாக உடை வாங்கிக்கொடுத்தாலோ, அவளே வாங்கினாலோ அதை அணியவே பல மாதங்கள் பிடிக்கும். சேலை என்றால் கேட்கவே வேண்டாம். கோவில் குளமென்று தாயும் மகளும் செல்வதில்லை. விசேசங்களுக்கு என்று  சொன்னால், இனிமேல் என்று தவிர்க்க முடியாதவற்றுக்கு மட்டுமே செல்வது வழக்கம். சேலையெல்லாம் அணியமாட்டாள்.

சுமதியின் கண்கள் நிறைந்துவிட்டன. மகளுக்கு முதுகு  காட்டித் திரும்பிவிட்டார். 

“கலியாணத்துக்கு எண்டு நான் வாங்கேல்லம்மா. கூரச் சீல நாளைக்கு வாங்கலாம். என்னட்டப் புதுசா நிறையச் சீலைகள் கிடக்கு. அதில ஒண்டக் கட்டலாம்.” என்றவர், “கிறிஸ்டினா, கனடாக்குப் போய்ட்டார் என்னம்மா?” என்றார், குளியலறைக்குள் புகுந்துகொண்டு.

“ம்ம் …” என்றவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனாலும் தாய் மனத்தில் புழுங்கித் தவிப்பாரே!

“இதில எங்களுக்குக் கதைக்க என்ன இருக்கு அம்மா. அப்பிடி இருக்க, காலம டேமியனிட்ட நேரவே சொன்னனான்.”என்றுவிட்டுத் தயங்கினாள்.

“என்ன சொன்னனீங்க?”  என்று கேட்டிருந்தார், சுமதி.

“அவரிட தாய்க்கு இந்தளவுக்கு விருப்பம் இல்ல எண்ட பிறகு ஏன்  தேவையில்லாமல். வடிவா யோசிச்சு முடிவெடுங்க டேமியன் எண்டனான் அம்மா.” என்றபோது, சுமதியின் நெஞ்சில் பாரமேறியது. மகள் கலியாணம் நடவாது போய்விடுமோ என்ற அச்சம் பொங்கிக்கொண்டு வந்தது. குளியலறைக் கதவில் சாய்ந்து நின்று பெரிய மூச்செடுத்துவிட்டுச் சமாளிக்க முயன்றார்.

“அவர் என்ன சொல்லுவார் எண்டு தெரியும் தானேம்மா? கிறிஸ்டி அன்ரிட கோவம் கொஞ்ச நாளுக்குத்தான் எண்டவர். ஜாக்குலின் அக்கா கலியாணத்துக்கு வருவாவாம்.”என்றவள், மதியம் ஜாக்குலின் எடுத்துக் கதைத்ததைச் சொல்லவில்லை.

 மகள் உற்சாகமும் நம்பிக்கையுமாகக் கதைத்ததில் சுமதியின் மனக்கிலேசம் சற்றே மட்டுப்பட்டது. குளித்துவிட்டு வெளியில் வந்தார்.

“இண்டைக்கு அங்கதான் சமையல், சாப்பாடு எல்லாம். இதப் பாருங்கவன்.” என்று,டேமியன் எடுத்த புகைப்படத்தைக் காட்டினாள்.

பார்த்தவர் விழிகள் நிறைந்து கண்ணீர் உருண்டு தெறித்தது. குடுகுடுவென்று சென்று கைப்பைக்குள் இருந்த மூக்குக்  கண்ணாடியை அணிந்துகொண்டு வந்தார். 

“இஞ்ச ஒருக்காத் தாம்மா, வடிவாப் பாக்க.” கைப்பேசியை வாங்கிக்கொண்டு சென்று அமர்ந்துகொண்டார். அப்புகைப்படத்தை நன்றாக விரித்து விரித்துப் பார்த்தவர் கரம் நடுங்கியது.  உள்ளத்துள் ததும்பிய மகிழ்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. டேமியன் நிச்சயம் கல்யாணியை மகிழ்வோடு வைத்திருப்பான். அவளும்தான். துளிர்விட்ட நம்பிக்கையின் பசிய வாசம் அவருள் சூழ ஆரம்பித்திருந்தது.

“ம்மா, ஒரு படத்த இவ்வளவு நேரமாப் பாக்கிறீங்க!” நக்கலாகக்  கேட்டாள், கல்யாணி. அவள் கண்களிலும் கசிவுதான். மாறாக உதடுகளில் முறுவல். திடீரென்று தங்கள் வாழ்வில் வந்துவிட்ட மகிழ்வைக்  கிரகித்து அனுபவிக்க  முதல், இருவருமே தடுமாறிப்போகிறார்கள். ஏமாற்றமும் வலியும் வேதனையும் மட்டுமே அனுபவித்தவர்களால், இத்தனை மகிழ்வுக்கும்  முகம் கொடுக்கவே தடுமாற்றமாக இருந்தது.

 

 

error: Alert: Content selection is disabled!!