அழைப்பை ஏற்றதும் “கல்யாணி!”என்று, அவதியாக அழைத்திருந்தான், டேமியன். அந்தக் குரல், அவள் நெஞ்சாழம் வரை ஊடுருவியது. அதையெண்ணி, உணர்ந்து வியக்கக் கூட அவளால் முடியவில்லை.
“அங்க ஒண்ணும் பிரச்சின இல்லயே!” தொடர்ந்தான், அவன்.
கல்யாணியோ, சட்டென்று வினையாற்ற முடியாது சில கணங்கள் மௌனம் சாதித்துவிட்டாள்.
“கல்யாணி …இருக்கிறீங்களா? ஒரு பிரச்சினையும் இல்லயே? அம்மா ஏதாவது சொல்லிப்போட்டாவோ?” என்றவன் குரலில் இருந்த அந்தரமும் அவதியும் அப்போதுதான் அவளுக்கு உறைத்தது.
“அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்ல டேமியன்.” என்றவளுக்கு, தழுதழுக்கப்பார்த்த குரலைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது. எத்தனை எத்தனையோ துன்பங்களை, கொடும் வலி வேதனைகளை எல்லாம் மற்றவர் முன்னால் சொட்டும் கண்ணீர் விடாது கடந்தவள், அவள். பெற்ற அன்னைக்கே தன் மனத்தைக் காட்டிக்கொள்வதில்லையே! அந்தக் கல்யாணியின் நெஞ்சுரம் இப்போது எங்கே போய்விட்டதாம்? இவன் குரல் அவளை மிகவுமே பலவீனப்படுத்துகிறதே! அவளுக்கு, அவளில் மிகவும் கோபம் தான் வந்தது.
“நீங்க முதல் வீடியோ ஓன் பண்ணுங்க சொல்லுறன். வீட்டிலயா நிக்கிறீங்க? கல்யாணி என்ன சத்தம் இல்ல?” பொறுமை பறந்துவிட்டிருக்க, அழுத்தமாக வந்தது டேமியன் குரல்.
“ப்ச்! என்ன எண்டு சொல்லுங்க டேமியன். நான் பாத்ரூமுக்க நிக்கிறன்.” என்றவள் குரலில் வேறுபாடு இருக்கோ! அவன் நெற்றி சுருங்கியது
“அக்கா, அம்மா ஆக்கள் ஏதாவது சொன்னவையா கல்யாணி?” நேராவே கேட்டுவிட்டான்.
“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லையே. ஏன் கேக்கிறீங்க? இப்பத்தான் வந்தவே. பகல் சாப்பாடு பற்றிக் கேட்டனான். தாங்களே பாத்துக்கொள்ளுறம் எண்டிச்சினம். இங்க அம்மா தனியா இருந்து கிஃப்ட் பாக் ரெடியாக்கி கொண்டு இருந்தவா எண்டு வந்தனான் டேமியன். அயர்ன் பண்ணுறதுக்கும் கிடக்கு.” ஒரே மூச்சில் சொன்னவள், “எத்தனைக்கு வீட்ட வருவீங்க?” என்று கேட்டு, ஒன்றுமே நடக்கவில்லை என்று அவனுக்குக் காட்ட முயன்றாள். இருந்தபோதும் அவள் குரலின் வேறுபாடு அவனுக்கு இப்போது தெளிவாகவே தெரிந்தது.
“ நான் வரப் பிந்தும் .” என்றுவிட்டு வைத்தவன், வேலை ஓடாது நின்றான்.
இங்கோ, அழைப்பைத் துண்டித்தவள் கட்டிலில் கைப்பேசியைப் போட்டுவிட்டு அப்படியே குப்புற விழுந்துவிட்டாள். பேச்சுக்குரல் ஓய்ந்ததும் மெல்லக் கதவைத் திறந்து பார்த்த சுமதி என்னவென்று நினைப்பார்.
மகள் அழுகிறாளோ என்றுதான் சந்தேகம் வந்தது. போய்க்கேட்டால் சொல்லிவிடுவாளா என்ன? நெஞ்சிடிக்க, செய்வதறியாது கதவடியில் சுவரோடு சாய்ந்து அமர்ந்தே விட்டார், அவர்.
டேமியன் வீட்டில் …
பிள்ளைகளுக்கு என்று, மதிய உணவைத் தயார் செய்திருந்தாள், கல்யாணி. அவளுக்கும் சுமதிக்கும் ஏசிக்கொண்டேதான் பிள்ளைகளுக்கு உணவைக் கொடுத்தார்கள், தாயும் மகளும். தம் மூவருக்கும் ரெஸ்ட்டோரண்டில் ஓடர் செய்து, உணவு வரவும் உண்டார்கள்.
“நான் கொஞ்சம் கண் மூடிட்டு வாறன்.” என்று,மகனோடு அறைக்குள் புகுந்துகொண்டான், டேவிட்.
பிள்ளைகள் மூவரும் தம் அத்தை மகளோடு குதூகலமாக விளையாட ஆரம்பித்திருந்தார்கள்.
வரவேற்பறையில் வந்தமர்ந்த கிறிஸ்டியும் ஜாக்குலினும் அமைதியாக இருக்க முடியாது திண்டாடினார்கள். பயணக் களைப்புத்தான், ஆனாலும் ஓய்வெடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு, மனத்துள் நிறைந்து கிடந்த கோபமும் ஆத்திரமும் எதையும் செய்யவிடாது இறுகப் பற்றியிருந்தன.
தாம் வந்தது தெரிந்தும் வீட்டில் இருந்தும் சுமதி வந்து பார்க்கவில்லை என்பதைப் பெரும் அவமரியாதையாக உணர்ந்தார், கிறிஸ்டினா.
“ரெண்டும் தரம் கெட்ட கழிசடைகள்! அண்டைக்கு அவ்வளவு சொல்லியும் அசையேல்லையே! எல்லாம் இந்த டேமியன் குடுக்கிற இடம் தானே?” மகளிடம் ஆத்திரப்பட்டார்.
“ என்னம்மா சொல்லுறீங்க, கழிசடைகளா? அவே இஞ்ச வந்ததில இருந்து நல்லமாதிரித்தானே சொல்லுறனீங்க? ஏனம்மா, நல்ல ஆக்கள் இல்லையோ?” விழிகள் இடுங்கக் கேட்டாள், ஜாக்குலின்.
“பின்ன என்ன அலுவலுக்கு ஒண்டுக்க மண்டா பழகினனீங்க. சரி, வேல குடுக்கிறது கூடப் பரவாயில்ல. வீட்டுக்க , அதும் பிள்ளைகளோட எல்லாம் பழக விடேக்க இதெல்லாம் தெரியாதோ?” கோபமாகவே கேட்டாள்.
பதில் சொல்ல முடியாது, கோபத்தை விழுங்கியபடி அமர்ந்திருந்தார், கிறிஸ்டினா.
“ சரி, எல்லாத்தையும் விட்டுத் துலையுங்க. இப்ப எப்பிடிக் கலியாணம் செய்யிறது? முதல், அதுகள் அப்பிடி எண்டு டேமியனுக்குத் தெரியுமா? சொல்லுங்கவன் அம்மா, நான் அவனோட கதைக்கிறன்.” தாயின் அமைதியில் எரிச்சலும் குழப்பமும் மிகையாகக் கேட்டவளிடம் கிறிஸ்டினா என்னவென்று சொல்வார். பிறகு, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் சகோதரன் குட்டு வெளிவந்துவிட்டால் என்ன செய்வதாம்?
தாயின் அமைதியைக் கோபம் என்று நினைத்தாள், கல்யாணி. அதோடு, விசயம் ஒன்றும் அந்தளவுக்குப் பெரிதில்லை என்றும் எண்ணினாள்.
“சரி விடுங்கம்மா. ஆனா, இப்பவே அவே ரெண்டு பேரையும் நல்லாத் தட்டி வைக்கோணும். கலியாணம் செய்தாலும் எங்களிட்ட நொட்ட ஏலாது எண்டு அவேக்குத் தெரியோணும். பயம் இருக்கோணும்.” தொடர்ந்தாள்.
“ப்ச்! நான் இந்தக் கலியாணமே நடக்கக் கூடாது எண்டுறன். நீ என்ன பிள்ள?” மகளிடம் சீறினார், தாய்.
“அப்ப ஏன், என்ன விசயம் எண்டு சொல்லுங்கவன். இல்லையோ, நடக்கிறதக் கதையுங்கம்மா. விடிஞ்சாக் கலியாணம். நாளைக்கு இந்நேரம் இது அந்தப் பொம்பளைக்கு உரித்தான இடம்!” எரிச்சல் மிகுதியில் பதிலுக்குச் சீறினாள், மகள்.
அந்நேரம், வீட்டுத் தொலைபேசிக்கு டேமியனின் நெருங்கிய நண்பன் அழைத்தான்.
கல்யாணி அங்குதான் நிற்கிறாள் என்று டேமியன் சொல்லியிருந்ததில், அழைத்தவன் கிறிஸ்டினா எடுக்கவும் , “ஓ நீங்களா அன்ரி, கனடால இருந்து எப்ப வந்தனீங்கள் ?” என்று கதைத்தவன், “கல்யாணி நிக்கிறாவோ அன்ரி, ஒருக்காக் குடுங்கோ!” என்றானா! நெஞ்செரிய எரிய அமைதி காத்தார் கிறிஸ்டினா. இந்தளவு குறுகிய காலத்தில் மகன் வாழ்வில் நுழைந்தாள் என்றால், எண்ணிச் சில நாட்களுள் அவர் வீட்டினுள்ளும் அல்லவா வந்துவிட்டாள்.
வீட்டினருக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லை என்பதை, நெருங்கிய நட்புகளிடம் சொல்லி இருந்தான், டேமியன். அதுவே, அந்த நண்பனைச் சுதாரிக்க வைத்திருந்தது.
“சரி, நீங்க நிக்கிறீங்க தானே அன்ரி. ஆறுமணி போல, பின் தோட்ட அலங்காரம் செய்ய வருவம்.” என்றவன், “மலர் வளைவுக்குத் தனி வெள்ளைப்பூ, இலையோட, றோஸ் நிறமும் ஒரேஞ் நிறமும் கலக்கலாமா , விருப்பமா எண்டு கல்யாணிட்டக் கேக்கோணும் . கூரைச்சீல சிவப்புத்தானே, தாலி கட்டுறது எண்டும் டேமியன் சொன்னவன், அப்ப நிறங்கள் சேர்ந்தாத்தான் சரியா வரும் என்ன அன்ரி? எதுக்கும் கலியாணப் பொம்பளையிட விருப்பம் தானே முக்கியம் . அவவுக்கு நான் எடுக்கிறன்.” என்றுவிட்டு வைத்துவிட்டான்.
தாலி கட்டுவது பற்றி கிறிஸ்டினாவுக்கு எதுவுமே தெரியாது. ஜாக்குலினோடு கதைக்கையில் டேமியன் சொன்னான்தான். அவளிருந்த கொதிப்பில் அதைக் கருத்தில் எடுக்கவில்லை. இப்போது கேட்டதும் “தாலி கட்டுறதாமே, எந்த முறையில? சைவத்திலயா?” என்று மகளிடம் கேட்ட கிறிஸ்டினாவுக்கு, அவ்வளவு கோபம். மகனில் தான்.
“இத இப்பிடியே விட்டுட்டு, நடக்கிறத இருந்து பாக்க நான் ஒண்டும் பொன்னச்சி இல்ல. நாண்டு கொண்டு சாகிறது போல நாலு கேட்டாத்தான் என்ர மனம் ஆறும் .” என்றபடி, விடுவிடுவென்று வெளியேறினார், அவர்.
“அம்மோய்! வீணாச் சண்ட வேணாம். டேமியன் அவேட பக்கம் தான் நிப்பான். பரிசிகேடு எங்களுக்குத்தான்!” என்று, எச்சரித்தாலும் பின்னால் ஓடினாள், ஜாக்குலின்.
சுமதி வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. அப்படியே வெறித்தபடி அமர்ந்திருந்தார், சுமதி.
டேமியனின் நண்பன் அழைத்திருந்தான். உண்மையில் எதுவுமே சொல்லும் மனநிலை இல்லை என்றாலும் அப்படியே செய்யுங்க என்றுவிட்டு வைத்தாள், கல்யாணி.
அவளால் அறையை விட்டு வெளியில் வந்து தாய் முகம் பார்க்க முடியவில்லை. எல்லாம் கடந்து, அவள் என்ன இளம் பெட்டையா? இந்த வயதில், இந்தளவுக்குக் குத்து முள்ளும் ஏச்சுப் பேச்சும் அவமரியாதையும் பட்டு, ஒரு கலியாணம் தேவையா என்ற எண்ணம் வேறு வந்திருந்தது.
தாய், இப்போ கொஞ்ச நாட்களாகத்தான் அமைதியாக இருக்கிறார். மகளுக்குக் கலியாணம் நடக்கவில்லையே என்பது மட்டும்தான் அவருக்குக் கவலை. இப்போ, அது நடந்து இழுபறிப்பட்டால் தாங்குவாரா என்ன?
இப்படி எண்ணிய மனமே, மறுநொடியே, டேமியனில் உள்ள அன்பில் ‘கல்யாணம் வேண்டாம்’ என்ற புள்ளியைத் தொடவே முனையாது சண்டித்தனம் செய்தது.
கல்யாணி இப்படி, தானே தன்னோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கையில்தான் கிறிஸ்டினாவும் ஜாக்குலினும் வீட்டினுள் நுழைந்தார்கள்.
அவர்கள் உள்ளிடுவதைக் கண்ட சுமதிக்கு, கனவோ என்ற ஐமிச்சம்.
கண்களைச் சிமிட்டிக்கொண்டே எழுந்து நின்றார். ஆனாலும் வாய் திறந்து வாவென்று சொல்லவில்லை. காரணம் அந்தக் காட்சியை அவர் கொஞ்சம் கூட நம்பவில்லை. இவ்வளவு நாட்களுக்கு, ஒரு தடவை கூட இந்த வீட்டுக்குள் கிறிஸ்டினா வந்ததில்லையே!
தாம் உள்ளே நுழைந்த பின்னும் அப்படியே நிற்பவர் கன்னத்தில் இழுக்கும் ஆவேசம் கிறிஸ்டினாவினுள். அற்பமான, அரியண்டமான பார்வையோடு சுமதியை நெருங்கினார். சுமதியின் செய்கையில் ஜாக்குலினுமே அதிர்ந்து போனாள்.
“அம்மா ப்ளீஸ், கோவப்படாமல் கதையுங்க. நைஸாதான் இதுகள ஹாண்டில் பண்ணோணும். எல்லாம் இவன் டேமியனால. என்னத்தக் கண்டு இதுக்க வந்து நிண்டு தொங்குறானோ!” என்றபடி பின்னால் வந்தாள், அவள்.
“என்ன அப்பிடிப் பாக்கிற? இந்த மிலானுக்கு நீயும் உன்ர மகளுமா வந்த நிலைய மறந்திட்டியா நீ? பாவம் பாத்து, இருக்க இடமும் வேலையும் தந்தது நான். என்ர மகன் இல்ல. அதால தானே , இப்பிடி, எனக்கு முன்னால நிமிர்ந்து நிக்கிற தைரியம் உனக்கு வந்திருக்கு.” அடிக்குரலில் உறுமியவாறே நெருங்கினார், கிறிஸ்டினா.
“என்ன, என்ர வார்த்தைய உதாசீனப்படுத்த நினைச்சனி என்ன! அப்பிடி இல்ல எண்டுவியோ? அண்டைக்கு, அவ்வளவு சொன்ன பிறகும் நாளைக்குக் கலியாணம் எண்ட வரைக்கும் கொண்டுவந்திருக்கிறியே! நான் வெளில போய்ட்டன் எண்டோன்ன, அப்பாடா சோலி முடிஞ்சிது எண்டு நீ இங்கால உன்ர வேலையைக் காட்டுற என்ன?” வினையாற்றத் தெரியாது உறைந்து நின்ற சுமதி, அவர் ஆத்திரத்தை அதிகரிக்கக் குரலுயர்த்தினார், கிறிஸ்டினா.
“ உனக்கு எல்லாம் சும்மா ஒரு ஆம்பிள கிடைச்சாளே விடமாட்ட. இதுக்க, சொத்துப் பத்தோட ஆள் கிடைச்சா விடுவியோ? மகளக் காட்டி வளைச்சுப் போடப் பாத்திட்ட என்ன? இதெல்லாம் தான் உனக்குக் கை வந்த கலையாச்சே!”
இப்படி, குரல் உயர அவர் சீறிக்கொண்டு செல்கையில், “ஏய்!” என்றபடி, கல்யாணி அறைக்குள்ளிருந்து பாய்ந்த நேரம், “அம்மாஆஆஆ !” என்ற உறுமலோடு வீட்டினுள் உள்ளிட்டிருந்தான், டேமியன்.

