திடுமென்று கிறிஸ்டினாவின் குரல் கேட்க, விசுக்கென்று எழுந்தமர்ந்திருந்தாள், கல்யாணி. அவர்கள்தான் என்பதை முதலில் நம்ப முடியவில்லை. சுதாரித்து எழுந்து வெளியே வர முதல், வார்த்தைகளை நெருப்புக் கோளங்களாக அள்ளித் தெறிக்கவிட்டிருந்தார், அந்தப் பெரிய மனிசி.
கல்யாணியினுள் ஆவேசம்! அப்படியே பிடித்துத் தலையைச் சுவரில் அடித்து நசுக்கிவிடும் ஆவேசம்! பாய்ந்து வெளியே வந்திருந்தாள்.
அவள் உச்சக்குரலில் கத்திய, ‘ஏய்’ க்கும் மேலாக, டேமியன் குரல் ஒலித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், கணம் உறைந்து தளர்ந்து நின்ற சுமதியைப் பார்த்தவன் எப்படிக் கல்யாணியினருகில் வந்தான் என்று, அவர்களுக்கு மட்டுமல்ல அவனுக்குமே தெரியாது.
அவளைப் பிடித்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான். அவன் இடக்கரம் அவள் வாயில் அழுத்தமாகப் படிந்திருந்தது . வலையில் அம்பிட்டுவிட்ட மீனாக விடுபடத் திமிறினாள், கல்யாணி. அவள் ஒரு கரம் அவன் அணைப்பில் சிக்குண்டு கிடக்க, அவன் முகுப்புறத்தால் அந்தரத்தில் தொங்கிய கையால் முதுகில் குத்தினாள், நுள்ளினாள். அடித்தாள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. அவளையும் அவ்வளவாக அசையவே விடவில்லை. இந்தவகையில், தன் பலத்தை அவளுக்குணர்த்த, ஒரு கணம் கூட அவன் எண்ணியிருக்கவில்லை.
ரத்தமாகச் சிவந்திருந்த விழிகள் அவள் முகத்தில் ஆழ்ந்து படிந்தன. வாயோ, “ப்ளீஸ்! கொஞ்சம் அமைதியா நில்லுங்க!” கெஞ்சலாகத்தான் சொல்லியிருந்தான்.
அந்தச் சிவந்த விழிகளில் யாசிப்பைக் கண்டாள், கல்யாணி. ஆனால், இங்கு, படுகேவலமாகத் தாக்குப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு நிற்பவர், அவள் அன்னை! வாயில்லாத பூச்சி! இவ்வளவுக்கும் பிறகு ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை. ஆடாது அசையாது உறைந்து நிற்கிறார். இதைக் கேட்காவிட்டால் அவள் மகளாக இருந்து என்ன பிரயோசனம்? எதிர்த்தரப்பில் நிற்பது, தான் உயிராக நேசிப்பவன் தாயாக இருந்தாலுமே!
பொல பொலவென்று கண்ணீர் வழிய அவனைப் பார்த்தவள் விடுபடத் திமிறுவதை நிறுத்தவில்லை. அதேநேரம், ‘இது…இந்தக் கலியாணம் கடைசிவரை சரி வாராது டேமியன்!’ வாய் வார்த்தைகளை உதிர்க்க விடாது மறித்தால் சரியா? மனத்துள் பெருங்குரலெடுத்துக் கத்தினாள். நெஞ்சடைக்க, உயிர் துவளக் கதறிக்கொண்டே மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.
டேமியன் அதையுணர்ந்தானோ என்னவோ, அவள் நெற்றியில் அழுத்தமாகக் கொஞ்சினான். அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்துவிட்டு மீண்டும் மீண்டும் கொஞ்சினான். அதுவே கிறிஸ்டினாவுக்கும் ஜாக்குலினுக்கும் செருப்பால் அடித்தது போலிருந்தது.
உலகமே இயக்கம் தொலைத்துவிட்டது போல், உறைந்து நின்றிருந்த சுமதியில், மெல்ல மெல்ல புது இரத்தம் பாய்ச்சிய உணர்வைக் கொடுத்தது, டேமியன் செய்கை. அவருள் இருந்த நம்பிக்கை மலர், கருகி உதிரும் தருவாயில் போதியளவு சுவாசம் கொடுத்திருந்தான், அவன். உணர்த்தியதோடு நிற்கவில்லை.
“நீங்க ஒண்டும் தனியாள் இல்ல கல்யாணி. உங்கட அம்மா எனக்கும் அம்மாதான். விளங்குதா உங்களுக்கு ?” அவள் விழிகளுள் கூர்ந்து பார்த்தபடி கேட்டவன் குரல் உயர்ந்திருந்தது. எக்கச்சக்கக் கோபம் கலந்ததாக இருந்திருந்தது. பெற்ற தாயாக, சகோதரியாக இருந்தாலுமே மிகவும் கீழ்த்தரமாக அவர்கள் நடந்து கொண்டதை மறுக்க முடியாதவன், தன் செயல்களாலும் வார்த்தைகளாலும் அவர்களுக்கு, கன்னம் கன்னமாக அறை கொடுத்தான்.
“எங்களுக்குள்ள இருக்கிற அன்பு சத்தியமா, இப்ப நீங்க ஒரு வார்த்த கதைக்கக் கூடாது!” அழுத்தமாகச் சொன்னவன் மெதுவாகப் பிடியைத் தளர்த்தினான். இருந்தும் அவன் ஒரு கரம் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டது. அவள் உடல் கோபத்தில் நடுங்கியது. அதை அவனால் உணர முடிந்தது.
சினத்தோடு திரும்பியவன், அப்போதும் உறைந்து நின்ற சுமதியைப் பார்த்ததும், “ நீங்க அம்மாவப் பாருங்க கல்யாணி!” அவளைப் பிடித்து அவர் புறமாக விட்டான்.
“அம்மா!” பெரும் கேவலோடு பாய்ந்து கட்டிப்பிடித்துப் பொங்கி அழுதாள், அவள். சுமதியின் கண்கள் அப்போதுதான் கரையுடைந்தன. வார்த்தைகள் வரவில்லை. வாய் அழுத்தமாக மூடிக்கிடந்தது.
அவர் மனம், என்றோ சுக்கு நூறாகச் சிதறிப் போனதொன்று. மணமாகிப் பத்து வருடங்களுக்கு மேல் குடும்பம் நடத்தி, இரு பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தவர் உடலோ, எவன் எவனோ இச்சைக்கு இரையானதொன்று. இன்றளவும் அவரால் வெறுத்து ஒதுக்கப்படுவது. அவர் பெற்ற மகளுக்காக, உயிரோடு நடமாட வேண்டும் என்ற ஒன்றே, இந்த உடல் என்ற ஊடகத்தைக் காத்து வருகிறது.
‘அவள் மகிழ்வாக இருப்பாள், நீ செத்துப் போ!’ என்ற உறுதி கிடைத்தால், மறுநொடி, மனம் நிறைந்த மகிழ்வோடு செத்துப் போய்விடுவார்.
அன்று கதைத்த கிறிஸ்டினா, அதை மறைமுகமாகவேனும் சொல்லியிருக்க, இன்று இந்த நிலை இல்லையே!
இக்கணம், டேமியன் மகள் வாழ்வை விட்டு விலகப்போவதில்லை என்பது நெத்தியில் அடித்த உண்மையாகப் புரிந்தும் மகிழ முடியவில்லை. அவருக்கு மகள் பற்றித் தெரியும். டேமியனை உதறிவிடுவாள். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது. சுமதிக்குத் தலை கிறுகிறுத்தது.
தடாலென்று மயங்கி விழவில்லை. சுள்ளென்ற நெஞ்சுவலியில் சுருண்டு விழவில்லை. புத்தி கூடப் பேதலிக்கவில்லை. தொண்டைக்குள் அடைத்து நிற்கும் துயரும் துக்கமும் மூச்சை நிறுத்தவில்லை. இன்னும் என்ன என்னவோ எல்லாம் இருக்கு. இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, ‘பார்த்து வதை படு!’ என்று, சாபமிடுவதாக உணர்ந்தார், அவர். அந்தளவுக்கு, அவர் இழைத்த கொடும் பாவம் தான் என்ன?
ஓவென்று நெஞ்சுக்குழிக்குள் இருந்து வந்த ஓலம் கூட வெளியே வரவில்லை. மகளை வளைத்துப் பிடித்தவர் அவள் தோளில் முகம் புதைத்து மனத்துள் ஓலமிட்டார். அக்கணம், பல வருடங்கள் கடந்து சென்ற நினைவில் அன்புக் கணவனும் செல்ல மகனும் இறந்த கொடுமையை மேவி, ஒரு ஒருத்தனும் அவர் உடலைப்படுத்தியபாடெல்லாம் படம் போல் ஓடித் திரிந்தது. நெடுநாள்களுக்குப் பிறகு கிடுகிடுவென்று தேகம் நடுநடுங்க நின்றார், அந்த அறுபது வயது கடந்த மனுசி.
“கல்யாணி, அம்மாவ உள்ள கூட்டிக்கொண்டு போங்க! ஏதாவது குடிக்கக் குடுங்க! போங்க !” என்ற டேமியன் குரலை மீற முனையாது தாயோடு நகர்ந்தவளுள், தாய்க்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம்.
“ அம்மா …இஞ்ச பாருங்க அம்மா” தாயைப் பிரித்து நிறுத்தி கன்னத்தில் தட்டித் தன்னைப் பார்க்க வைத்தாள்.
“ஆரும் எங்களப் பற்றிக் கண்டதும் சொன்னா அதெல்லாம் நாங்களாக மாட்டம் அம்மா. அவையள் அவ்வளவும்தான் எண்டு நினைச்சிட்டு, எங்கட வேலைகளப் பாக்கோணும். இந்த நாட்டுக்கு வந்த அண்டில இருந்து ஒருத்தரிட்டக் கையேந்த இல்ல. இந்த வீட்டுக்கு உரிய காசு குடுத்துத்தான் இருக்கிறம். வாங்கிற சம்பளத்துக்கு மேல, நீங்க வேல செய்யிறீங்க! பிறகென்ன? கண்டவேட கதைகளையும் காதிலயும் வாங்க வேணாம். பாவம் பாத்து, மன்னிச்சு விட்டுட்டு வாங்க எங்கட வேலைகளப் பாப்பம்.” என்று நகர்ந்தாள்,கல்யாணி.
“ஆருமா? பாவம் பாக்கட்டாமே. கண்டவே எண்டு எல்லாம் சொல்லுறா. இப்பிடிக் கதைக்க எந்தளவுக்குத் திமிர் இருக்கோணும். இவ்வளவு நேரமா நானும் இதுகளுக்குப் போய்ப் பாவம் பார்த்தன். இப்ப சொல்லுறன், ரெண்டு பேரும் இங்க இருந்து வெளில போகலாம். ஒரு நிமிசம் இருக்கேலாது. வக்கிலாத நேரமே இந்தளவு எண்டால்.” குரல் உயர்த்திப் படபடத்தாள், ஜாக்குலின்.
“அதான்” என்று தொடங்கிய கிறிஸ்டினா, தன்னை நெருங்கி நின்ற மகனை வெறுப்போடு பார்த்தார்.
“எனக்கு முன்னால வச்சே அவளக் கொஞ்சு. அப்ப, எல்லாம் முடிஞ்சிது போல! நான் சொன்னதில என்ன பிழை? இத்தின நாளும் எங்க எண்டு அலைஞ்சுகொண்டு இருந்தவள் போல!”வெறுப்போடு சொன்னவருக்குக் கையோங்கிவிட்டான், டேமியன். அதே வேகத்தில் கலீரென்ற சத்தத்தோடு நொறுங்கியிருந்தது, அவனுயரத்தில் இருந்த சிறு அலங்கார அலுமாரி!
“பெத்த தாய் எண்டு பாக்கிறன். இல்லையோ…இல்லையோ…” கண்ணாடிகள் சிதற உடைந்து கிடந்த அலுமாரியைக் காட்டியவன், “ இது உங்களுக்குத் தர வேண்டியது!”உறுமினான்.
இப்படியெல்லாம் ஒருபோதும் மகன் நடந்து கொண்டதில்லை. அதுவே கிறிஸ்டினாவை ஆடாது ஆசையாது நிறுத்திவிட்டிருந்தது. ஜாக்குலின் மூச்சு விடப் பயந்து நின்றாள். மனத்துள் கொதித்துக்கொண்டிருந்த கோபம் இந்தா அந்தா என்று சீறத் தயாரானது.
“எங்களுக்குள்ள எத்தின அசிங்கங்கள வச்சுக்கொண்டு, ஆரைப் பாத்து என்ன கதை கதைக்கிறீங்க? ஃபோனைப் போடுங்க உங்கட தம்பிக்கு! அசிங்கம் ஆர் எண்டு ஒருக்காக் கேட்டுப் பாப்பம்.” தொண்டை நரம்புகள் வெடித்துவிடுமோ என்றளவுக்கு கத்தினான், டேமியன்.
பயந்து பின்னால் சென்றார்,கிறிஸ்டினா. சகோதரனை இழுக்கிறானே! மகளிடம் கூடச் சொல்லவில்லை. எல்லாம் இப்போது அம்பலமாகிவிடுமோ என்ற நெஞ்சிடி வந்துவிட்டிருந்தது.
“நீ எல்லாம் ஒரு மகனா? எல்லாமே என்ர மகன்தான் எண்டு அம்மா தலையில தூக்கி வச்சிருந்ததுக்குச் செய்யிற கைம்மாறு இதுதான் என்ன? பெத்த அம்மாவையே அந்த அன்னக்காவடிகளுக்கு முன்னால வச்சு இப்பிடி எல்லாம் ஏசுர? இதுக்கா நான், அங்க வந்தவாவ அந்தப் பாடுபட்டு கூட்டிக்கொண்டு வந்தனான்.” அழுதுகொண்டே சகோதரனை அதட்டினாள், ஜாக்குலின்.
“போதும் வாய மூடு! இஞ்ச நீ ஒண்டும் கதையாத சரியா! என்ன அலுவலுக்கு இஞ்ச வந்தனி? என்ர கலியாணத்துக்குத்தானே? அத மட்டும் பாத்திட்டுக் கிளம்பிற வழியப் பார்!”தமக்கையிடமும் சினந்தான், டேமியன்.

