நட்சத்திரா 28 -2

 

பின்னால் சுமதியும் கல்யாணியும் பார்த்துக்கொண்டு நின்றார்கள். இதைவிடவும் ஒரு அவமானம் இருக்க முடியுமா? ஜாக்குலின் வெடித்துவிட்டாள்.

 “ஹலோ ஹலோ ! ஆர்… எங்க இருந்து கிளம்பிறது? இஞ்ச எனக்கும் எல்லா உரிமையும் இருக்கு. இல்ல எண்டுவியோ? இந்த வீடு வேணும் எண்டா உன்ரயா இருக்கலாம். ஆனாலும் அது வாங்க எங்க இருந்து காசு வந்தது? சிலோன் டேஸ்ட் அப்பா தொடங்கினது. அவரிட மூண்டு பிள்ளைகளுக்கும் அதில உரிமை இருக்கு. நீ ஏமாத்தி உன்ர பேருக்கு மாத்தினனி. இந்த அம்மாக்கு விசர். அதான் மாத்திக் குடுத்திட்டு இப்ப உன்னட்டக் கேவலப்பட்டு நிக்கிறா. இத நான் சும்மா விடப்போறது இல்ல.  எங்களுக்கு வரவேண்டியதத்  தா, இந்தப் பக்கம் ஏனெண்டும் கேக்க வர மாட்டன்.” திடுமென்று தன் தேவைக்குத் தாவியிருந்தாள், ஜாக்குலின். தமக்கையை வெறித்தான், டேமியன். நிதானமாகத் தாயைப் பார்த்தான். 

“என்ன அங்க பார்வ? எங்கட அப்பாட சொத்து, கடைசியில கண்ட கேடுகெட்டப் பரதேசிகளும் இருந்து பிரண்டு அனுபவிக்கவோ!”என்ற தமக்கையின் கன்னத்தில், பளாரென்று இழுத்து விட்டிருந்தான்,டேமியன்.

“டேமியன்  என்ன இது?”மீண்டும் அடிக்க முனைந்தவன் முன்னால் வந்து நின்று, அவன் கைகளைப் பற்றி எரிக்கும் பார்வை பார்த்தாள், கல்யாணி. 

“என்ன செய்யிறீங்க? உங்களுக்கு விசர் பிடிச்சிட்டா என்ன?”அவன் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பார்த்தாள்.

அதுபார்த்தால், அவள் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து இழுத்து விலத்தியிருந்தார், கிறிஸ்டினா. 

“இது எங்கட குடும்ப விசயம். நடுவுக்க வர நீ ஆரடி? எல்லாம் உன்னால எண்டு உனக்கு விளங்கேல்ல என்ன? ஒண்ணுமே தெரியாத மாதிரி நல்ல பிள்ளைக்கு நடிச்சு நடிச்சு நாடகம் எல்லா போட்டனி ? சாயம் வெளுத்த பிறகும் என்ன நடிப்பு வேண்டிக்கிடக்கு? உன்ர சீத்துவக்கேட்டுக்கு என்ர மகன் கேக்கிறானோ?” ஆவேசமாகக் கையோங்கிவிட்டார். டேமியன் கரம் குறுக்கே வரவில்லையோ, கல்யாணியின் கன்னம் பழுத்திருக்கும். பல்லுகூடத் தெறித்திருக்கும்.

அந்தளவு ஆவேசம் கிறிஸ்டினாவுக்கு. மூத்த மகனால் பிரச்சனைகள் வந்திருந்தாலும் குடும்பத்தில் இப்பிடியான நாடகங்கள் நடந்ததில்லை. இன்று?

அவ்வளவு வேதனையாக இருந்தது. “அப்பிடி என்ன பிழையாச் சொல்லிட்டன்?”மகன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார். 

“ ஒரு விப…” ஆரம்பித்த வேகத்தில் சுமதியைப்  பார்வையால் எரித்தவர், அந்த வார்த்தையை விழுங்கிவிட்டார். மகள் நிற்கிறாளே!

“உனக்கு ஒரு மகளோ மகனோ இருந்திருந்தா, இப்பிடி ஒரு இடத்தில கலியாணம் செய்து குடுப்பியோ நீ? அதான் உனக்கு எண்டு ஒரு பிள்ள இல்லையே. மலடுகளுக்கு எப்பிடி இந்த  விசயம், என்ர  மனம் விளங்கும்? செய்க் !”என்ற தாயை, அசைவின்றி நின்று வெறித்துப்பார்த்தான், டேமியன். 

அவன் நெஞ்சு படீர் படீரென்று அடித்துக்கொண்டது. அவன் தாயா இது? இனிமேல் என்றாவது, அவர் வாயால் வந்த ‘மலடு’ என்ற சொல்லை, அதைச் சொன்னபோது அவர் பார்த்த இகழ்ச்சியான பார்வையை மறக்கவியலுமா? தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது போராடினான், அவன்.

“ம்மா …விட்டுத் துலையுங்க. எத்தின நாளைக்கு இவளோட இவன் வாழுறான் பாப்பமே. அதுக்கு முதல் சொத்துகளப்  பிரி சரியோ? அக்கா எண்டும் நினையாமல் என்னையே அடிச்சிட்ட எல்லா? இத்தின வயசில வாங்கின முதல் அடி. இதுக்கே உனக்குத் தண்டனை தருவான் கடவுள். நீ கடைசிவரை நல்லாவே இருக்க மாட்ட. இத என்ர சாபமாவே நினைச்சுக்கொள்ளு!” என்றுவிட்டு, தாய் கையைப் பற்றிக்கொண்டு வெளியே செல்ல ஓரெட்டு எடுத்து வைத்தவளுக்கு முன்னால் வந்து நின்று மறித்தான், டேமியன்.

கல்யாணியும் சேர்ந்து வந்து நின்றாள். மீண்டும் அடித்து விடுவானோ என்ற பதற்றம் அவளுள். பொலிஸ் அது இதுவென்று போய் வீண் பரிசிகேடாகப் போகுதோ! நெஞ்சு கலங்கிற்று.

“கிட்டத்தட்ட எண்டு கூடச் சொல்லேலாது, வங்குரோத்து நிலையில இருந்தது சிலோன் டேஸ்ட். வெளியிலயும்  ஒண்டுக்கு மூண்டு சீட்டு, வட்டிக்கு வாங்கினது எண்டு எத்தின கடன்கள். அப்பா ஆசையாத் தொடங்கின தொழில  அப்பிடியே விட்டிர மனம் கேக்கேல்ல. அதால, ரெஸ்ட்டோரண்ட மட்டுமா, அப்பாட அவ்வளவு கடன்களையும் பொறுப்பெடுத்தனான். இது எல்லாம் முறையாப் பதிவாகி இருக்கு.  அம்மா ஒண்டும் சும்மா தூக்கி ஒண்டையும் தரேல்ல. கடன்களையும் பொறுப்புகளையும் தான் என்ர தலையில போட்டவா. இல்ல எண்டு சொல்லுங்கோ பாப்பம்.” தாயையும் சகோதரியையும் கூர்பார்வை பார்த்தபடி கேட்டான்.

“ உன்ர  கலியாணச் செலவுகள்,  சீதனம் எண்டு குடுக்காட்டியும் மொத்தமா நகை நூற்றியைம்பது பவுன் தாண்டி இருக்குமே. அதுக்கெல்லாம் கணக்கா கேட்டனான். அதுக்குப் பிறகும் எவ்வளவு செய்தாச்சு. மூத்த மகன் பட்ட கடன்கள், பெற்றபிள்ளைகள் எல்லாம் என்ர பொறுப்பாகேல்லையா?  நானும் பியங்காவும்  முகம் சுளிச்சமா என்ன?” என்றவனுக்கு அவ்வளவு கோபம், ஆத்திரம். அதையும் கடந்து கடும் வேதனையாகவும் இருந்தது. இவர்களுக்காகவே என்று அல்லவா ஒன்று ஒன்றையும் செய்வது.

“ இவ்வளவுக்கும் பிறகு, நீ என்னட்ட வந்து சொத்துக் கதை கதைக்கிற. இவா பாத்துக்கொண்டு நிக்கிறா. என்னட்ட இருக்கிற  ஒவ்வொரு ஆணியும் நான் உழைச்சது.” நிமிர்வாகச்  சொன்னவன் பார்வை தாயையும் சகோதரியையும் துளைத்திட்டு.

“ நான் உனக்குத்  தம்பி தானே ஒழிய, தகப்பன் இல்ல. தகப்பனா இருந்தாலுமே பதினெட்டுக் கடந்தாலே தங்களத்  தாங்களே பாக்கோணும். பெற்றோராச் செய்யிறது வேற, எடுத்து வை எண்டு கேக்கிற விளையாட்டு இருக்கக் கூடாது. நீ என்ன சொத்தியா முடமா? இனிமேல்பட்டு, என்னட்ட இருந்து ஒத்த சதம் வராது. தர வேண்டிய தேவையும் இல்ல. நல்லது கெட்டதுகளுக்குக் கூட என்னட்ட இருந்து ஒண்டும் வராது!” என்று, உறுமிக்கொண்டு கை நீட்டித்  தமக்கையை எச்சரித்தான். தாய், மகள் முகங்கள்  பேயறைந்தது போலாயிற்று.

“இன்னும் என்னத்துக்கு இஞ்ச நிக்கிறீங்க? போயிருங்க.  இனி என்ன செய்தாலும் இஞ்ச விடுபட்டது பட்டதுதான்.” தன்  நெஞ்சில் படீர் படீரென்று அடித்தவனைப் பார்க்கப் பெரும் பாவமாக இருந்தது. தளர்ந்து நகர்ந்தவன் அங்கு கிடந்த இருக்கையில் தொப்பென்று விழுந்திருந்தான்.

error: Alert: Content selection is disabled!!