நட்சத்திரா 29 -2

 

மருமகன் கதைத்ததைக்  கேட்ட கிறிஸ்டிக்கு நெஞ்சிடித்தது. சுமதி ஒரு விபச்சாரி என்று சொல்ல எவ்வளவு நேரமாகும். மறுநொடியே, அவர் பெற்றவன் வருவானே ! விபச்சாரி ஆக்கியதே அவர் தம்பி என்று சொல்லிவிடுவானே! 

‘கர்த்தரே! என்ன பாவம் செய்திட்டன் எண்டு இப்பிடியெல்லாம் சோதிக்கிறாய்!’மனம் அலற, கண்ணீரோடு பெட்டிகளை உருட்டிக்கொண்டு வந்தவர் மகள் பைகளோடு வைத்தார். 

இவற்றைப் பார்த்த பிள்ளைகள் மூவரும் கல்யாணி வீடு நோக்கி ஓடினார்கள்.

அங்கோ, கல்யாணி எதுவும் கதைக்கவில்லை. உடைந்த கண்ணாடித்துண்டுகளை அப்புறப்படுத்தி வாக்கியூம் பிடித்துவிட்டாள். பார்வை அடிக்கடி டேமியனைத் தொட்டு வந்தவண்ணம் இருந்தது. 

அவனோ, கையிரண்டும் சோஃபாவில் ஊன்றியிருக்க நிலத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு அசைவோ கதையோ இல்லை. 

கல்யாணியின் கண்கள் நிறைந்து வழிந்தன. இந்தத் துன்பம் டேமியனுக்குத் தேவையா? எல்லாம் அவளால் வந்தது. அவளுக்காகத் தேவையே  இல்லாத சுமையைச் சுமக்கிறான். பழியைக் கேட்கிறான்.

 இவள் “ஏய்” என்றதும் பாய்ந்து வந்து வாய் பொத்திக்கொண்டு அவன் பார்த்த பார்வையும் “எதையும் கதைத்துவிடாதே” என்றதும் அவள் மறுப்பு, அவனை, எந்தளவுக்குப் பாதிக்கும் என்று காட்டியது. அவளுக்கு மட்டும் அது இலகுவில் முடியுமா? 

ஆனாலும் கிறிஸ்டினாவை வெளியே அனுப்பி, அவரை வருத்தி, அவர் சாபத்தின் மேலா அவளுக்கு ஒரு வாழ்வு வர வேண்டும்?  கொஞ்சமும் ஏற்க முடியவில்லை. டேமியனை நெருங்கிச் சென்று கதைக்கவும் துணிவு வரவில்லை.

அந்நேரம் ஓடி வந்த பிள்ளைகள், அங்கு டேமியனைக் கண்டதும் ஒன்றாக வந்து அணைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

மறுநாள் கலியாணம் என்று குதூகலத்தோடு இருந்தவர்கள் ஆச்சே! இப்போது, பெரும் சண்டை என்று விளங்கினாலும் இவர்களின் கதை பேச்சு, பிரச்சினை எல்லாமே அவர்களின் புரிதலுக்கு அப்பாற்றபட்டு இருந்தது. பெரியவள் அழுதுகொண்டே கிறிஸ்டினாவும் ஜாக்குலினும் வெளிக்கிடுவதைச் சொன்னாள்.

அவர்களைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் அப்போதும் ஒரு வார்த்தை கதைக்கவில்லை. 

சில நிமிடங்கள் கடந்திருக்கும் அவன் முன்னால் கஃபே  ஒன்று வந்து நின்றது. சடக்கென்று நிமிர்ந்தவன் அந்தக் கோப்பையை ஏந்தி நின்றவள் விழிகளையே பார்த்தபடி வாங்கிக்கொண்டான். தாமதிக்காது மடமடவென்று குடிக்கவும் செய்தான்.

கப்பை வைத்துவிட்டு, “சுமதிம்மா!” என்றழைத்தபடி எழுந்தான், டேமியன்.

அதுவரை நேரமும் சமையலறை நிலத்தில் அமர்ந்திருந்தார் சுமதி. விழிகள் திறந்திருக்க, எக்கட்டத்திலும் அவ்வளவு இலகுவில் நின்றுவிட மாட்டோம் என்ற மூச்சு என்னவோ  சீராக வந்து கொண்டிருந்தது. ஆனாலும் சிந்தனா சக்தி என்பது முற்றாகவே வேலை நிறுத்தம் செய்திருந்தது. எதிரே ஒரு ரெட் அபடவிட்(Red avadavat) பறவை. அதன் சின்னஞ்சிறு வாயில், குட்டியாய் வெண் இறகு ஒன்று. சிவப்பும் கறுப்பும் சிறு வெண்புள்ளிகளுமாக விரித்திருந்த வடிவான செட்டைகளுகுப் போட்டியாக,  தூக்கிப் பிடித்திருந்த கால்களிடையே குட்டியாக மரவேலைப்பாடுகள் செய்த புகைப்படச் சட்டம். அச்சட்டத்தினுள், தாய் மகள் இருவர் முகங்களும் நிர்மலமான சிரிப்போடு இருந்தன. அவர் பார்வை அதைவிட்டு அகலவேயில்லை. 

அப்போதுதான் டேமியன் குரல் அருட்டி இருந்தது. திடுக்கிட்டு எழுந்தவர் உடல் உலாஞ்சியது. சுவரைப் பிடித்து ஒருவாறு நிலைப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தார்.

அவரை எதிர்பார்த்து நின்ற டேமியன்,  “இனி நீங்க இங்க இருக்க வேணாம் சுமதிம்மா!” என்றிருந்தான். அதில் அவ்வளவு தீர்மானம்.

கேட்டவர் இதயம் குலுங்கிற்று. கடைசியில் அவனுமா?

கல்யாணி கூட  அதிர்ந்து போனாள்.  அவன் இதையெதையுமே கவனிக்கவில்லை. பிள்ளைகளோடு நகர்ந்தான்.

“எப்பிடியும் நாளையில இருந்து கல்யாணி அங்கதானே இருக்கப் போறா. நீங்க இஞ்ச இருந்து என்ன செய்யப்போறீங்க?  இப்பவே வந்திருங்க.” என்ற வேகத்தில் கல்யாணியைப் பார்த்தான்.

“கீழ இருக்கிற பெரிய அறைய அம்மாக்குக்  குடுங்க கல்யாணி. இஞ்ச இருக்கிற  சாமான்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா எடுக்கலாம். இப்ப  கூட்டிக்கொண்டு வாங்க.”என்றவன், அவர்கள் இருவரும் அசையாது நிற்கவும், கல்யாணியைக் கூட்டிக்கொண்டு வரும்படி பிள்ளைகளிடம் சொன்னவன், சுமதியின் கரத்தைப் பற்றியபடி விறுவிறுவென்று பெரிய வீடு நோக்கிச் சென்றான்.

 “தம்பி! அய்யோ  வேணாம் தம்பி. நான் இஞ்சயே இருக்கிறன்.” சுமதி பதற்றத்தோடு சொன்னவை அவன் காதிலும் ஏறவில்லை. 

இவர்களோடு அவன் உள்ளிட்ட நேரம்,  கிறிஸ்டினா ஆட்கள்  வெளியேற ஆயத்தமாக நின்றார்கள்.

அதைக் கவனியாது, அருகிலிருந்த அறையைத் திறந்தான், டேமியன்.

 “இதான் இனி உங்கட அறை சுமதிம்மா. இது உங்கட மகள்ட வீடு. அப்பிடி எண்டா உங்கடையும் தான் சரியா. போய் ரெஸ்ட் எடுங்க.”  உள்ளே அனுப்பிவிட்டான்.

அடுத்த நொடியே கல்யாணியைத் தூற்றிக்கொண்டு ஜாக்குலினும் கிறிஸ்டினாவும் வெளியேற, “என்ன டேமியன் இதெல்லாம்?” கையாலாகாத நிலையில் அவனைக் கட்டிப்பிடித்து முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு வெளியேறினான், டேவிட்.

 ஜாக்குலின் மகளோ, வரவே மாட்டேன் என்று வீரிட்டு அழுதபடி, தாயின் பிடியில் இழுப்பட்டுச் சென்றுகொண்டிருந்தாள்.

அவர்கள் கண்ணிலிருந்து மறைந்ததும் பொத்தென்று சோஃபாவில் அமர்ந்துவிட்ட டேமியன் விழிகளால் கண்ணீர் வழிந்தது.

பிள்ளைகள் மூவரும் சென்று அவனோடு அணைந்து அமர்ந்துகொண்டார்கள். எப்படி, என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. என்ன பிரச்சினை என்றே தெரியவில்லையே! 

இவ்வளவு நாட்களும் மிகவும் பிடித்தவராக இருந்த கனி  அன்ரியில் அப்பம்மாவுக்கு என்ன கோபம் என்றும்  விளங்கவில்லை. அலங்க மலங்க விழித்தாலும் மூவர் கரங்களுமே தகப்பன் என்று வரித்தவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் தட்டிக் கொடுத்தன. பரிவோடு தடவின.  அவன் கண்ணீரைத் துடைத்து விட்டன.

அக்கணம், வாய் விட்டு உரத்துக் கத்திட வேண்டும் போலிருந்தது,டேமியனுக்கு.

எல்லாம் பின்னால் செல்ல,பெற்ற தாய், தான் உயிரிலும் மேலாக மதிக்கும் பெண்மணி, தன்னைப் பார்த்து ‘மலடு’ என்றதை அவனால் சீரணிக்கவே முடியவில்லை.

அறை வாயிலில் சாய்ந்து நின்ற சுமதி மகளைத்தான் பார்த்திருந்தார். அக்கணம் வரை அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்துள்ளது என்று எத்தனை மகிழ்ந்தார். அது தவறிவிடக்கூடாது என்றும்தான். அவள் வாழ்வின்  மலர்ச்சிக்கு எதையுமே செய்யத் தயாராகவும் இருந்தார். இப்போதும் இருக்கிறார். ஆனால், அந்த வாழ்வு, பெற்ற தாய் ஒன்றின் சாபத்தில் மலர வேண்டுமா? முதல் மலருமா?

மகளையே பார்த்தவர் கண்ணீர் வழிய வழிய அவளை அருகில் வரச்சொல்லி அழைத்தார். 

உறைந்து நின்றிருந்த கல்யாணியுள்ளும் அதே எண்ணம் தான். இருவர் மட்டுமே குடும்பம் என்று வாழ்ந்தவள் ஒரு பெரிய குடும்பத்தினுள் நுழைந்து, அதன், விரிந்த தோகை நிழலில் தானே இளைப்பாற நினைத்தாள். அது பார்த்தால் அந்தக் குடும்பத்தின் பெரியவரை வெளியேற்றி, சகோதரியின் வெறுப்பைச் சம்பாதித்து என்று,   தனக்கு ஒரு வாழ்வு தேவையா? இதற்கா இத்தனை காலமும் காத்திருந்தாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டு தாயை நோக்கி நடந்தாள்.

மகள் முகத்தையே பார்த்த சுமதி மிகவும் நிதானமாக வார்த்தைகளை விட்டார்.

“போயிருவம் குஞ்சு. இதெல்லாம் எங்களுக்கு வேணாம். ஒரு குடும்பத்தப்  பிரிச்ச பாவம் வேணவே வேணாம். அப்பிடி  என்ன செய்தமோ, இந்த பிறப்பில  எவ்வளவோ   அனுபவிச்சிட்டம். இதுவும் சேர வேணாம். போயிருவம் பிள்ள!” வெடித்த விம்மலை அடக்கிக்கொண்டு சொன்னார்.

கல்யாணி சற்றும் கூட யோசிக்கவில்லை, “போயிருவம்.” என்றுவிட்டிருந்தாள்.

 தாயின் கரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டவள் பார்வை, ஒன்றாக இருந்த பிள்ளைகளிலும் டேமியனிலும். தம் முடிவு சரியே என்றது அவர்கள் இருந்த துக்கம் தோய்ந்த விதம்.

இருவரும் கல்லாகிப்போன இதயத்தோடு, உறுதியாக அவர்களை நோக்கிச் சென்றார்கள்.

 

error: Alert: Content selection is disabled!!