“டேமியன்” என்று, கல்யாணி அழைத்த விதமும் சுமதியும் அவளும் வந்து நின்ற தோரணையும் தளர்ந்து போய் பிள்ளைகளின் அணைவில் இருந்தவனைச் சுதாகரிக்க வைத்தது.
பிள்ளைகள் மூவரையும் பார்த்தான். இன்றைய நாளுக்கு அவர்கள் முன்னால் நிகழ்ந்தவை அதிகம், மிகவுமே அதிகம். என்ன பிக்கல் பிடுங்கல், சோகம், துக்கம், கோபம் என்றாலும் ஒரு அளவிற்கு மேல் அவர்கள் முன்னால் வினையாற்ற மாட்டான். பார்த்து பார்த்து நடப்பவன், அவன்.
அதுவே,இப்போதும் உள்ளே செல்லச் சொன்னது. அவர்கள் லேசில் அசையவில்லை.
“போய்ப் படியுங்க, அல்லது கதைப்புத்தகம் வாசியுங்க!”என்று, அழுத்திச் சொல்லவும் சிறிதும் விருப்பமேயின்றி எழுந்தவர்கள் கல்யாணியைத்தான் பார்த்தார்கள்.
மறுநாள் கல்யாணம், அவர்களின் வழமையான எல்லா வேலைகளையும் அதற்குப் பிறகுதான் என்று ஒத்தி வைத்திருந்தார்கள். மறுநாளையை விசேசத்தை வரவேற்கும் ஆயத்தங்களில் துள்ளிக்கொண்டு திரிந்தவர்களாச்சே!
பார்த்திருக்க வீட்டின் நிலை மாறிவிட்டதில் அவர்களுக்கும் மனக்குழப்பம்.
“அப்பம்மா இனி வர மாட்டாவா பப்பா?” சின்னவள், தயங்கினாலும் கேட்டுவிட்டாள் .
“ஆனியும் எங்களோட சேர்ந்து விளையாட வரோணும். எங்க போய்ட்டினம்? எங்களோட நிறைய நாள்கள் நிக்கப்போறன் எண்டு சொன்னவா.” பெரிய பிள்ளைகள் விழுங்கிக்கொண்டு நின்ற கேள்விகளைச் சின்னவள் மெல்ல மெல்லக் கேட்டாள். ஜாக்குலின் மகள் ஆனியோடு அவ்வளவு ஒட்டு. அழுதபடியே சென்றிருந்தாளே!
எதை எப்படிச் சொல்வதென்று தடுமாறினான், டேமியன்.
“போய் மேல இருந்து கார்ட்டூன் பாருங்க, அவே பிறகு வருவினம்.” குரல் இறுகச் சொல்ல, மீண்டும் கல்யாணியைப் பார்த்தார்கள்.
அவர்களுக்குப் போகவே விருப்பம் இல்லை. எப்போதும் தங்களளவுக்கு இறங்கி, தங்களுள் ஒருத்தியாக நிற்பவள் கல்யாணி. அவளிடம் சரி தங்கள் மனங்களில் உள்ள கேள்விகளைக் கேட்டுப் பதில்களை வாங்க மாட்டோமா என்ற எண்ணம். அதையும் விட்டு, தளர்ந்து சோர்ந்திருக்கும் டேமியனை விட்டுச்செல்ல மனம் வரவில்லை. ‘சித்தப்பா’ என்பதை மறக்கச் செய்தவன். அவர்கள் மட்டில் ‘பப்பா’என்று அழைப்பது வார்த்தைக்காக இல்லை. பெற்ற தந்தை என்ற உணர்வில் எழும் விளிப்பு, அது.
அவன் பேச்சை மீறி நடக்கவெல்லாம் இதுவரை எண்ணியவர்கள் இல்லை. அதுவே, எங்கேயும் போகத் தேவையில்லை, இருங்க என்று கல்யாணி சொல்வாளோ என்ற எதிர்பார்ப்போடு அவளைப் பார்த்தார்கள்.
அவளும், “உள்ள போயிருந்து படியுங்க!”என்றுவிட்டாள்.
திரும்பி திரும்பிப் பார்த்தபடி மாடியேறினார்கள்.
அவர்கள் உரு மறைந்ததும் இவர்களிடம் திரும்பினான், டேமியன்.
“ஏன் நிக்கிறீங்க, வந்திருங்கவன் சுமதிம்மா.” இருக்கையைக் காட்டிச் சொன்னவன் பார்வை கல்யாணியில்.
‘இப்பிடிப் பக்கத்தில வந்து இருக்கிறியா?’ என்று, உள்ளத்தில் கேட்டவன், பார்வையால் அதை உணர்த்த முயன்றான். அதைப் படிக்கும் மனநிலை அவளிடம் இருக்கவில்லை என்பதை அறியானே!
சுமதியும் அசையவில்லை. “இல்ல தம்பி… வந்து… நாங்க வெளிக்கிடுறம்.” தடுமாறினாலும் சொல்லிவிட்டார். திடுக்கிடலோடு பார்த்தான், டேமியன்.
“அதான் சொன்னனே மா, இனி இங்கயே நீங்க இருக்கலாம். மகளோட சந்தோசமா இருக்கிறத விட்டுப்போட்டு, அங்க தனிய இருந்து என்ன செய்யப்போறீங்க?” இங்கிருக்க ஒரு மாதிரி இருக்கிறதாக்கும் எப்போதும் போலவே தோட்ட வீட்டிலேயே இருந்துவிடுகிறேன் என்கிறார் என்பதாகவே அவன் எடுத்துக்கொண்டான்.
“ம்மா பொறுங்க , நானே கதைக்கிறன்.”என்ற கல்யாணியின் குரல்தான், நீ நினைப்பது விசயம் இல்லை என்று எண்ண வைத்தது. நெற்றி சுருங்கியது. விழிகள் இடுங்க அவளைப் பார்த்தான்.
அந்தப் பார்வையில், அவனை எதிர்கொள்ள முடியாது தடுமாறிப்போனாள், அவள். பெருந்துயர் பிடித்து உலுக்கித் தள்ளியது. இதுவரை அவள் அனுபவிக்காத துயர் உண்டா என்ன? அவற்றையெல்லாம் விடவும் பெருந்துயர் என்ன இருக்கப் போகிறது என்று, வாழ்வில் எத்தனையோ கட்டங்களில் எண்ணியுள்ளாள். இதோ இருக்கிறதே! நிதர்சனம் நெற்றியில் படீரென்று அறைந்தது. டேமியனைப் பிரிந்துவிடலாம் என்ற அவள் முடிவு எள்ளி நகையாடியது.
எல்லாம் கடந்து, சக்தியனைத்தையும் ஒருங்கே கூட்டிக்கொண்டு, நிமிர்வாகவே அவனை எதிர்கொள்ள முயன்றாள்,அவள்.
“எங்கட வாழ்க்கையில நடந்த எல்லாம் உங்களுக்குத் தெரியும் டேமியன். இத்தனைக்கும் பிறகு, நான் …நான் உங்கள விரும்பி இந்த வீட்டுக்கு நிறைவான மனத்தோட வரத் தயாரானதுக்கு நீங்க …நீங்க மட்டுமோ, உங்கட அன்பு மட்டுமோ காரணம் இல்ல. அம்மாட விருப்பமும் காரணம் இல்ல.” என்றதும் டேமியன் நெற்றி சுருங்கியது. உடல் மொழி மாறியது. நிமிர்ந்தமர்ந்தவன் முகம் இறுக ஆரம்பித்தது.
“கிறிஸ்டினா அன்ரி, பிள்ளைகள் மூண்டு பேரும் நீங்களுமா வாழுற வாழ்க்கை, இந்தக் குடும்பமும்தான் காரணம் டேமியன். ஆனாப் பாருங்க, இண்டைக்கு என்னாலேயே நான் பாத்து ஆசைப்பட்டக் குடும்பம் பிரிஞ்சுட்டு. பிள்ளைகள் தவிச்சுப் போய் நிக்கினம். நீங்க…நீங்க… தேவையே இல்லாமல் எத்தின ஏச்சுப் பேச்சுக் கேட்டுட்டீங்க!ஆசையா வந்த அக்காவோட பிரச்சினை. இப்பிடி இடிஞ்சு போய் நீங்க இருக்கிறதப் பாக்க, நான் ஒருக்காலும் ஆசைப்படேல்ல டேமியன்.” என்றபோது, கட்டுப்படுத்த முடியாது கேவி விட்டாள்.
அதுவரை அமர்ந்திருந்த டேமியன் விசுக்கென்று எழுந்துவிட்டான். ஒரே எட்டில் அவளை அணுகியுமிருந்தான்.
“என்ன எல்லாம் கதைக்கிறீங்க கல்யாணி, விசரா உங்களுக்கு?” கடிந்துகொண்டான்.
“நீங்க என்ன சொன்னாலும் இப்ப நடந்த பிரச்சனைக்கு நான்தானே காரணம்?”அவள் முடிக்கவில்லை, “ நான்தான் குஞ்சு எல்லாத்துக்கும் காரணம். நீ என்ர பிள்ளையாப் பிறந்தே இருக்கக் கூடாது!” விம்மினார் சுமதி.
“அம்மா!” அடிக்குரலில் அதட்டினாள், மகள்.
“எங்க சுத்தி எப்பிடி எப்பிடி எங்களச் சமாதானப்படுத்திற மாதிரிக் கதைச்சாலும் இந்த வீட்டில நடந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் நான் உங்கள விரும்பினதுதான் காரணம் டேமியன். அதால …” இறுக்கமாகவே சொன்னவள் அவனைவிட்டுத் தள்ளியும் நின்றிருந்தாள்.
“அதால ….” இடுங்கும் பார்வையோடு கேட்டவன் உடல்மொழியில் அவ்வளவு இறுக்கம் வந்துவிட்டிருந்தது. அவள் வாயிலிருந்து, எந்த வார்த்தையைக் கேட்கக் கூடாதென்று, இன்று அவ்வளவு பதறினானோ அதையே சொல்லப் போகிறாளோ!
அவன் நெஞ்சு திடும் திடுமென்று அடிக்க ஆரம்பித்திருந்தது. அக்கணம், தன் முன்னால் நிற்பவளை எந்தளவு நேசிக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான், அவன்.
ஆணோ பெண்ணோ, உயிரான காதலைத் தாங்கி அனைத்துமாக வாழ்ந்தவர் மரித்துப் போய், மறக்கவியலாத ஞாபகங்களாக மனதாழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கையிலேயே, இன்னொரு துணையை உயிராக நேசிக்க முடியாதென்று யார் சொன்னதாம்?
அவன் விழிகள் மெல்ல மெல்ல கலங்குவதைப் பார்த்தாலும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டாள், கல்யாணி.
“நானும் அம்மாவும் இங்க இருந்து போயிருறம் டேமியன். கலியாணம் அது இதெல்லாம் சரி வராது. இப்பவரை நீங்க எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறீங்க . அம்மாக்கு நல்ல சம்பளத்தோட வேலை தந்திருக்கிறீங்க. எல்லாத்துக்கும் நன்றி எண்ட ஒரு சொல்லுத்தான் எங்களிட்ட இருக்கு. எப்பவும் நீங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கோணும்.” இறுகிய குரலில் சொன்னவள், அவன் பார்வையைத் தாங்கியவாறே தொடர்ந்தாள்.
“இண்டைக்கே வெளிக்கிடுறம்.” தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு திரும்பி ஒரு அடிதான் வைத்திருப்பாள், “இந்த மலடனக்கட்டி என்ன பிரயோசனம் எண்டு நினைச்சு ஒதுங்கிப் போறியா கல்யாணி?” என்ற டேமியன் குரலால் அந்தக் கூடமே நிறைந்திருந்தது.
சுமதியும் கல்யாணியும் அதிர்ந்து ஆடிப் போனார்கள். “இதென்ன விசர்க்கதை?” என்றபடி இருவருமே திரும்பி இருந்தார்கள்.
டேமியன் ஒரு சிரிப்புச் சிரித்தான். அது கல்யாணியின் இதயத்தை மட்டுமன்றி, சுமதியின் நெஞ்சுக்குள்ளும் சுர்ரென்று குத்தி வலிக்கச் செய்தது.
“என்ன இந்தளவுக்கு அதிர்ச்சியாகிறீங்க? பெத்த அம்மாவே சொன்ன வார்த்தைதான் அது. இவ்வளவு நாளுக்குப் பிறகு, இப்படி ஒருத்தன, அதுவும் ஒண்டுக்கு மூண்டு பிள்ளைகளோட கலியாணம் செய்யிறது பெரிய மடத்தனம் எண்டு இப்பத்தான் உனக்கு விளங்கினது போல! அத நேரடியா இதான் காரணம் எண்டு சொல்லிப் போட்டுப் போகலாமே கல்யாணி. உனக்கு என்ன அந்தளவுக்குத் தைரியமோ துணிச்சலோ இல்லையா என்ன? “அவள் புறப்பட அதுதான் காரணம் என்ற மாதிரி சொன்னவன் முகம் கலங்கியிருந்தது.
இருவரும் பழக ஆரம்பித்த பின்னர், எத்தனை எத்தனையோ இனிய பாவங்களைக் காட்டி அவளைத் தன்பால் இழுத்தவன், ஒருநாளும் இப்படிக் கையறு நிலையில் நிற்கும் தோற்றத்தைக் காட்டியதே இல்லை. துக்கமும் துயரமும் பிடித்தழுத்தினாலும் நசுக்கினாலும் எப்பாடுபட்டாயினும் அதிலிருந்து மீண்டிடுவேன் என்று துணிந்து நிற்பவன், இன்றோ …
அவளை ஒருமையில் விழித்தது கூட இல்லையே! பன்மை விழிப்பிலேயே அவ்வளவு நெருக்கத்தை உணரச் செய்வானே!
அவளையும் அறியாது தாயின் கரத்தைப் பிடித்திருந்த பிடி நழுவியது. கேவிக்கொண்டே அவனை நோக்கிப் பாய்ந்தாள் கல்யாணி.
இரும்புச் சுவராக நின்றவன் நெஞ்சில் படீரென்று மோதியவளின் அழுகை ஒலியில், மாடியில் இருந்த பிள்ளைகள் எட்டிப்பார்த்தார்கள்.

