நட்சத்திரா 32 – 1

கல்யாணியின் நடுங்கும் மெல்லிய விரல்களால் பேனையைப் பிடிக்கவே முடியவில்லை, தடுமாறின! ஒருபோதுமின்றி உள்ளங்கை கசகசவென்றானது! இழப்புகளையும் வலி வேதனைகளையும் அதிகமாகச் சுவாசித்த நெஞ்சமாச்சே!  மரத்தல்லவா கிடந்தது. மெல்ல மெல்ல இளகி,  நேசத்துளிர் ஊன்றி, மொட்டு விட்டு முகிழ்ந்துள்ளதே! அதிலிருந்து கசியும் நேச வாசம், அவள்  விழிகளைக் கலங்கடித்துப்  பார்வைக்குத் திரையிட்டது. 

என்று டேமியனை விரும்புகிறாள் என்று உணர்ந்தாளோ,  நேசத்தைப் பகிர்ந்துகொண்டார்களோ, அக்கணத்திலிருந்து இந்நாளை எதிர்பார்த்திருந்தாள். அவ்வளவாக நாட்கள் இருக்கவில்லை என்ற போதும், ஒரு ஒரு ஆயத்தங்களையும்  தானும் முன்னெடுத்துச் செய்திருந்தாள். சற்று முன்னர், வீட்டிலிருந்து புறப்பட்டு வருகையில், இங்கு வந்து கால் மணி நேரத்துக்கும் மேல் காத்து நிற்கையில் எல்லாம் மீராவோடும் பிள்ளைகளோடும்  கதைத்துக்கொண்டு சாதாரணமாகத்தான் நின்றாள். இருந்தும் இக்கணம் கனவோ…கைக்கெட்டிடாத கனவோ  என்றிருந்தது. 

முதல் நாள் வரை எத்தனை பிரச்சினைகள், தடைகள்! எப்போது வேண்டும் என்றாலும் அறுந்து போகலாம் என்றவகையிலான,  சிதிலமடைந்த ஆடுபாலத்தின் துணைகொண்டு, அதள பாதாளத்தைக்  கடக்கும் உணர்வோடு ஒவ்வொரு நாளையும் கடந்தவளாச்சே! 

ஆழ்மூச்செடுத்து விட முயன்றாள். அந்த அசைவுகூடக் கடினமாக இருந்தது. 

சுற்றி நின்றவர்கள் பார்வை மொத்தமாக அவளில் குவிந்திருக்க, விரிந்த முறுவலோடு அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்,டேமியன்.

அவள் மனம் புரிந்தது. அவளில் அவனுக்குள்ள அன்பு அதிகரித்தது. 

“கல்யாணி சைன் பண்ணுங்க!” காதருகில் மெல்லச் சொன்னான். 

அவன் குரலோடு சேர்ந்து மீசை உண்டாக்கிய குறுகுறுப்பில், பேனா முனை காகிதத்தில் குத்திட்டு நிற்க தன்னருகில் தெரிந்த அவன் முகம் பார்த்தாள், அவள். 

“ப்ச்! என்ன நீங்க…” அவளின் பெரிய விழிகளுள் தன்னுருவைக் கண்டவன் கண்கள் கலங்கிப் போயின. கசியத் தொடங்கிய அவளது  விழிகளை வலக்கரத்தால் மெல்லத்  துடைத்து விட்டவன் இடக்கரம், அவள் தோளில் கொடுத்த அழுத்தம் அவளைச் சுதாரிக்க வைத்திருந்தது.

“சைன் பண்ணுங்க கல்யாணி!” நிறைந்த மனத்தோடு மீண்டும் சொன்னான்.

 இனிமேல், இவன், தனக்கே தனக்கென்று உரிமையானவன். தாயும் அவளுமாக வாழ்ந்த சின்னஞ்சிறு கூட்டினுள் மெல்ல மெல்ல உள்நுழைந்து உரிமையோடு இடம் பிடித்தமர்ந்து விட்டான். கூடு தன்பாட்டில் அகன்றிட்டு! 

மறுபுறமாகத் திரும்பிப் பார்த்தாள். வரிசையாக நின்ற மூன்று பிள்ளைகளும் ஆவலோடு அவள் முகம் பார்த்து நின்றார்கள். ஒரு கணம் கூட சுமையாக உணர வைக்கவில்லை. நீ எங்களுக்குச் சுமை என்றும் உணரவிடவில்லை. சிநேகத்தை அளவு கணக்குப் பார்க்காது வழங்கும் இளம் குருத்துகள். அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க, இவள், சிறு கருவியாகவேனும் இருத்தல் வேண்டும் என்ற அவா இவளுள்.

பக்கத்தில், நெஞ்சு நிறைந்த ஆனந்தம் விழிகளால் கசிய நின்றார், சுமதி. அவர் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டு மீராவும் குடும்பமும்.  

அதன் பின்னால் செல்ல முனைந்த பார்வையை அனுமதிக்கவில்லை. கிறிஸ்டினாவும் ஜாக்குலினும் வெடுசுடுவென்று நிற்கிறார்கள் என்பதைப்  பார்த்துத்தான் அறிந்துகொள்ள வேண்டுமோ! 

அவர்கள் கோபத்தில் நியாயம் கூட இருக்கலாம். தம் மகன் கலியாணம் செய்பவள் தமக்குப் பிடித்தவளாக, இன்ன இன்ன தகுதிகளோடு, குடும்பப் பின்னணியோடு இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு கண்டுபிடிக்க அவள் யார்? 

இத்தனைக்கும், அவர்கள் கோபம் அவளைப்  பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்பவன் நிழலாய் இருக்கையில், இன்னுமே அது பற்றிய கவலை அவளுக்குத் தேவையில்லை. தன் மீதும் தன் அன்னை மீதும் டேமியன் காட்டும் அன்புக்கும் பரிவுக்கும் கிறிஸ்டினா, ஜாக்குலின் கோப வெம்மையைத் தாங்கலாம் என எண்ணினாள்,அவள். 

இதோ, அவர்கள் வாழ்வின் இன்றியமையாத தருணத்தில் அவர்களும் பங்கு கொண்டுள்ளார்களே, அதுவே, அவளுக்குப் போதுமாக இருந்தது. 

கையெழுத்திட்டுவிட்டு நிமிர்ந்தவளைக்  கணமும் தாமதியாது கட்டிப்பிடித்துத் தன்னுள் அடக்கிக்கொண்டான், டேமியன்.

 “grazie mille mia signora!”(thank you so much my lady) என்று அவன் சொன்னது, சுற்றி நின்றவர்கள் காதுகளை உரசி, முறுவலைக் கொண்டு வந்திருந்தது.

கண்ணீரோடு பார்த்தவள் விழிகளிரண்டிலும் நிதானமாகத்  தன்  உதட்டை ஒற்றியெடுத்து அவளைக் கூச்சத்தில் நெளிய வைத்தான், டேமியன். 

சட்டப்படி கணவன் மனைவியாக, சோடியாக, விழிகளில் நேசம் நிறைந்து வழிய ஒருவரை ஒருவர் பார்த்து நின்றவர்களைக் கண்ணீரோடு பார்த்து நின்றார், சுமதி.

 மாறாக, சுமதியைப்  பார்வையால் எரித்துக்கொண்டு நின்ற கிறிஸ்டினாவுக்கு, கல்யாணியில் கோபமும் வெறுப்பும் அதிகரிப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 

ஒரு மாதிரி, தாம் நினைத்ததை இந்த இரு பெண்களும் சாதித்துவிட்டார்களே! ஆளணி, பணம், சொத்துப்பத்து என்று எதுவுமில்லாமல், ஓட்டாண்டியாக, தங்கள் தயவில் இங்கு வந்து வாழ்வை ஆரம்பித்தவர்கள், தன்  வார்த்தைக்குக்  கொடுத்த மதிப்பு என்ன? விலகிப்போயிரு என்றால் தன் மகனை மயக்கிவிட்டார்களே! 

குமுறிய நெஞ்சத்தோடு நின்ற கிறிஸ்டினா, “இனி என்ன, இவேட கொஞ்சல நிண்டு பாக்கோணுமா? வா போகலாம்.” வெளிவாயில் நோக்கி மகளோடு நகர்ந்தார். 

“தயவு செய்து சீன் போடாமல் நில்லுங்க. நீங்க டேமியனிட அம்மா. வாங்க விஷ் பண்ணலாம்.” அடிக்குரலில் சொல்லி அழைத்துச்சென்றான், டேவிட்.

பதிவாளரும் சுற்றி நின்ற நெருங்கிய நட்புகள், உறவுகள் என்று,  கலகலப்பாக வாழ்த்த, டேவிட் பிள்ளைகளோடு சென்று கட்டிப்பிடித்து வாழ்த்தினான். 

கட்டக் கடைசியாக கிறிஸ்டினாவும் , ஜாக்குலினும் நெருங்கினார்கள். வேண்டா வெறுப்பாக அவனுக்கு மட்டுமே வாழ்த்தினார்கள். கல்யாணி முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. 

கண்டும் காணாதவாறு, “போகலாம்” என்று நகர்ந்தான், டேமியன். அவன் கரம்பற்றி நகர்ந்த கல்யாணியும் எதையும் கண்டுகொண்டதுபோல் காட்டிக்கொள்ளவில்லை. அதுகூட டேமியன் சகோதரிக்கும் தாய்க்கும்  முகத்தில் அடி வாங்கிய உணர்வைக் கொடுத்தது.

அடுத்த கால் மணித்தியாலத்தில், டேமியனின் சட்டரீதியான மனைவியாகப் பெரிய வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள், கல்யாணி. 

பிள்ளைகள் மூவருமாகச் சேர்ந்து மின்னித்தாள்களை பறக்க விட்டு ஆரவாரித்தார்கள். அவர்களோடு நின்று குதூகலமாகக்  கை தட்டினார்கள், ஜாக்குலின் மகள் மற்றும் மீராவின் செல்லமகள்.

பின்னால் வந்த சுமதியைப் பிடிக்கவென்றே பின்தங்கி நின்றார், கிறிஸ்டினா.

முதல் நாள், வந்த வேகத்தில் தத்தம் அறைகளில் முடங்கி விட்டதில் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போ, அவரைக் கடந்து வீட்டினுள் அடியெடுத்து வைக்க முதல் சுமதிக்குக் கால்கள் பின்னின.

“நினைச்சதச் சாதிச்சிட்ட என்ன? இனி என்ன,நோகாமல் மிச்ச வாழ்க்கையக் கழிச்சிரலாம்.”அருவருப்போடு தொடங்க, ஆடிப்போனார், சுமதி.

“இந்தப் பிழைப்புக்கு நீ முதல் செய்த வேலையே மேல்!”அடிக்குரலில் சொன்னவர், சுமதியை அங்கேயே வேரோட விட்டுவிட்டு, விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்து விட்டார்.

நெருப்புக் கோலங்களை வாரியிறைத்தது போல் துடிதுடித்துப் போனார், சுமதி. விருட்டென்று தனக்கென்று சொல்லப்பட்ட அறைக்குள் நுழைந்தவர் நெஞ்சைப் பொத்திக்கொண்டு கண்ணீர் விட்டது என்னவோ சில நிடங்களே! இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும் அவர் குறி மகள் நல்வாழ்வு மட்டுமே! தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஆத்திரம் கிறிஸ்டினாவை இயல்பு தொலைத்து நடக்க வைக்கிறது. போகட்டும். விழிகளைத் துடைத்துவிட்டு வந்தவர், எதுவுமே நடவாத பாவனையில் சமையலறைக்குள் நுழைந்தார்.

களைப்பாக உள்ளதாகச் சொல்லி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார், கிறிஸ்டினா. ஜாக்குலின் குழந்தையோடு தன்னறைக்குள் நுழைந்துவிட்டாள்.

மதிய உணவுமே, சிலோன் டேஸ்டில் இருந்து விசேச  விருந்தாக வந்திருந்தது. பெரிய பெரிய தட்டுகளில் மூடி, தாமாகப் பரிமாறிக்கொள்ளும் வகையில் வைக்கப்பட்டிருந்த உணவுகள், கீழே எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்திகளால் சுட சுட இருந்தன. 

அங்கு, தண்ணீரில்  தொடங்கி பேப்பர் கப், தட்டுகள், கரண்டி கத்தி என்று, ஒன்று ஒன்றையும் பார்த்து பார்த்து சுமதி எடுத்து வைக்க, மீராவும் இன்னொரு நண்பனின் மனைவியும் வந்துதவினார்கள்.

சிரிப்பொலியும் கதை பேச்சுகளும் உணவு வாசமும் கலந்து வீட்டையே மங்களகரமாக மாற்றிவிட்டிருந்தன. 

கிறிஸ்டினாவும் ஜாக்குலினும் பசியே இல்லை என்று சாதித்தவர்கள் டேமியன் சென்று அடிக்குரலில் முணுமுணுத்துவிட்டு வர, வந்து பெயருக்கு உண்டார்கள்.

எல்லோரும் உண்டபின் மாப்பிள்ளை பொம்பளையும் உணவுண்ண அமர்ந்தார்கள். 

“அண்ணா தீத்தி விடுங்கோ!” என்ற மீராவிடம், “என்ன இதெல்லாம்? வேணாம்மா.” என்று தவிர்த்துவிட்டான்  டேமியன். 

கல்யாணியோடு புதுப் பொம்பளை மாப்பிள்ளை என்றில்லாது மிகச் சாதாரணமாக நாட்களைக் கடக்க விரும்பினான். அதுவே, இத்தனை எளிமையாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்ததும். 

“இது நல்ல கதையா இருக்குதே! கல்யாணிக்கு ஆசையா இராதா? பிறகு உங்கட பிள்ளை குட்டிகளுக்குக் காட்ட மெமரிஸ் வேணாமா என்ன?” தன்பாட்டில் சொல்லிக்கொண்டு, அவள் புகைப்படங்களை எடுக்க, கலங்கிப்போன கண்களோடு கல்யாணியைப் பார்த்தான், டேமியன். வலக்கை உணவைச் சேர்த்துப் பிசைந்தெடுத்து அவள் வாய்க்குக் கொண்டு சென்றது.

“என்ன டேமியன்?”  மெல்லச் சொல்லி, உருண்டு தெறித்த அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டுக்கொண்டே, அவன் தந்த சோற்றை வாங்கிக்கொண்டவள் விழிகளுமே கலங்கிப் போயிருந்தன.

“மீரா, எங்க என்ன கதைக்கிற எண்டு யோசிச்சிட்டுக் கதை!”அவள் காதோரம் முணுமுணுத்த ஜோரிக் குரலில் இருந்த கண்டிப்பில் விழித்தாள், அவள். 

“இப்ப நான் என்ன கதைச்சன்?” என்றபோதுதான் அவளுக்கே புரிந்தது. ‘ஐயோ!’ மானசீகமாகத் தலையில் கரம் வைத்துக்கொண்டாள்.

டேமியனைப் பார்க்கவே பெரும் அந்தரமாக  இருந்தது.

“அண்ணா சொறி …உண்மையாவே சொறி அண்ணா!”அவனை நெருங்கிச் சொன்னவள், “நான் வித்தியாசமா ஒண்ணும் மீன்(Mean) பண்ணேல்ல அண்ணா! ஒரு ஃபிளோவில வந்திட்டு.”  என்றாள்,பெரும் சங்கடத்தோடு!

 ஈர விழிகளோடு மலர்ந்து சிரித்தான், டேமியன். 

“ச்சே ச்சே  இதுக்கெல்லாம் சொறியா? நீங்க ஃபோட்டோவ வடிவா எடுத்து விடுங்க மீரா. நீங்க சொன்ன மாதிரியே பயன்படட்டும்.”என்றவன், கல்யாணியின் நாடியைப் பிடித்து, அவள் விழிகளோடு தன் பார்வையை உறவாட விட்டபடியே அன்போடு சோற்றை ஊட்டினான்.  கண்களால் உருண்டு விழுந்த ஆனந்தக் கண்ணீரோடு அதை வாங்கிக்கொண்டாள், கல்யாணி. 

மீராவுமே, கலங்கிப் போன விழிகளோடு அக்காட்சியை நினைவுகளாக்கிவிட்டிருந்தாள்.

வெளியே மலரலங்காரம் மட்டுமே மிச்சமிருக்க, அதைச் செய்யவும் வந்திருந்தார்கள். மாலை விருந்திற்கு வரவேண்டுமே என்று,  அநேகர் சென்றுவிட, தன்னறைக்குள் நுழைந்துகொண்ட சுமதிக்கு,  இதுநாள்வரை இல்லாதவகையில் ஓய்வெடுக்கத் தோன்றியது. கல்யாணி வந்து எழுப்பும் வரை அப்படியொரு உறக்கம்!

 

*****

 

error: Alert: Content selection is disabled!!