நட்சத்திரா 32 – 2

டேமியன் வீட்டின் பின்புறத்தோட்டத்தில் மரக்குடில் ஒன்று உண்டு. கோடை காலங்களில் பிள்ளைகளின் விளையாட்டு இடம் அது.  நான்கு உயரமான மரத்தூண்களின் மீது, கூம்பு வடிவக் கூரையோடு இருந்த அக்குடிலில் தான், மணமக்கள் அமர மூங்கில் கதிரைகள் இரண்டு போட்டிருந்தார்கள். முன்னால், நீள் சதுரத்தில் ஒடுக்கமான  மேசையொண்டு. அதன் இரு ஓரங்களிலும் அன்னங்கள் இரண்டு வாயில் பூச்செண்டைக் கவ்வியபடி இறகுகளை விரித்து நின்றுகொண்டிருக்க, நடுவில் கேக் வைப்பதற்கு என்று ஒதுக்கி இருந்தார்கள். 

கூரையிலிருந்து சிறிதும் பெரிதுமாக லன்ட்ன்கள் தொங்கிக்கொண்டிருந்தன. முன்புறம் இரு பக்கங்களாலும் வளைத்து மலரலங்காரம் செய்திருந்தார்கள். வெள்ளை, கடும் சிவப்பு ரோசாப் பூக்களோடு பச்சை இலைகளும் சேர, பார்ப்போர் மனத்தைக் கவர்வதாக இருந்தது.

மாலை மங்கிக்கொண்டிருக்கும் வேளை! நெருங்கிய நட்புகளாலும் உறவுகளாலும் அவ்வீட்டின் தோட்டம் நிறைந்து வழிந்தது. உணவுகளின் மணம் ஒருபுறம், சிறுவர்களின் கிள்ளை மொழிகள், பெரியவர்களின் பேச்சுச்  சிரிப்போடு அவ்விடம் நேர்மறைச் சக்தியால் நிறைந்து வழிந்து  கொண்டிருந்தது.

 கடமைக்காக, மனத்தில் கோபமும் ஆத்திரமும் வழிய வழிய அமர்ந்திருந்த ஜாக்குலின் கிறிஸ்டியால் எதுவுமே செய்ய முடியவில்லை. 

குடிலின் அருகில் நின்று கதைத்துக்கொண்டிருந்த டேமியன் தோளில் பலமாகவே இடித்தான், ஜோரிக் . என்னவென்று பார்க்க, கண் காட்டினான்.  அவன் காட்டிய திசையில் திரும்பிய டேமியன் மூச்செடுக்க மறந்து நின்றிருந்தான்.

அதில் வருவது யார் கல்யாணியா? நம்பவே முடியவில்லை. கூரைப்பட்டு உடுத்தியிருந்தாள். முகத்தில் அலங்காரம் என்று தனியாகச் செய்து, இவன், அவளைக் கண்டதேயில்லை. திருத்திய புருவங்களோடு, உதடுகளுக்கு மெல்லிய சாயம் போட்டு வெளிக்கிடுவதை அண்மைய நாட்களாகக் கவனித்து இருக்கிறான். இன்று, மீராவின் கைவண்ணம்,  மிதமாக அலங்காரம் செய்து விட்டிருந்தாள். கழுத்தில் சிவப்புக்கல்லு வைத்த தங்க மாலை, அதற்குரிய தோடுகள். அதேபோன்று ஒரு சோடிக்காப்பு. அவ்வளவே!

“அம்மா! வடிவான பொம்பளதான் என்ன? அதான் இவன் தலைகுப்புற விழுந்திட்டான் போல! சும்மா இங்கனேக்கத்  திரியேக்க பெரிசாத் தெரியேல்ல. காலம கூட ஒரு சட்டையில விசேசமா ஒண்டும் இருக்கேல்ல. இப்பப்  பாருங்க வயசும் தெரியேல்ல எல்லா?” ஜாக்குலின், தாய் காதில் குசுகுசுத்தாள்.

“காலமேயும் மினுக்கிக் கொண்டுதான் நிண்டா. என்ன இருந்து என்ன…” வெடுக்கென்று சொல்ல வந்ததை விழுங்கிக்கொண்டார், கிறிஸ்டினா.  

‘விபச்சாரியின் மகளாச்சே. அவளுக்கு வந்த வாழ்வைப் பாரன். எளியதுகளால நான் இன்னும் என்ன என்ன பாடுபடோணுமோ, எப்பயாவது ஜோஸப் இவர்களைச்  சந்திக்க வேண்டி வந்தா? கிழவிய அடையாளம் கண்டிட்டா ?’ என்ற, அவர் மனவேதனையை, பயத்தை யாரிடம் சொல்வார்.

 தன் வீட்டில்  நடக்கும் சிறு சிறு விடயங்களையும் சகோதரனோடு பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உள்ளவர், கிறிஸ்டினா. சுமதியும் கல்யாணியும் தோட்ட வீட்டில் தங்கியுள்ளது கூட ஜோசப்புக்குத்  தெரியும். 

இந்த மூன்று ஆண்டுகளில், மூன்று தடவைகள் ஜோசப் இங்கு வந்து போயிருந்தும் சுமதியைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. 

சகோதரன் பற்றிய தன் அபிமான பிம்பம் சுக்குநூறாகிப் போயிருந்தாலும் ஜோசப் அவர் தம்பி. அதை மாற்றவா முடியும்.

கிறிஸ்டினா தன்னுள் இப்படித் தவித்துக் கொண்டிருக்கையில், ஜாக்குலினோ தொணதொணத்துக்கொண்டிருந்தாள்.

“என்னதான் சொல்லுங்கம்மா இதுக்கும் துணிவு வேணும் தானே? அவ்வளவு சொல்லியும் பாருங்க, பிள்ளைகளிட உடுப்ப. சருகப் பாவாடை சட்டை,வேட்டி சேர்ட் எண்டு . கோயிலில  வச்சுத் தாலி கட்டேல்ல, அவ்வளவும் தான். சைவத் தாலி, உடுபுடவையும் அப்பிடித்தான். அப்ப எங்களுக்கு என்ன மதிப்பு? இந்த டேமியன் புத்தியக் கடன் குடுத்திட்டு  அதுகள் சொல்லுறபடி எல்லாம் ஆடுறான்.” கடமுடத்தபடியே இருந்தாள்.

“இண்டைக்கு மத்தியானம் என்ர பிள்ளைகளுக்கும் இதே மாதிரி உடுப்புக்கொண்டு வந்து தந்தவா. அதும் நான் ஏதாவது சொல்லிருவன் எண்டு பயந்து டேமியனோடதான் வந்திருந்தா. வச்சிட்டுப் போகச் சொன்ன  நான் தொட்டும் பாக்கேல்ல. குப்பக் கூடைக்க போட்டுட்டன்.” அவள் தொடர, கிறிஸ்டினா பார்வை மகனிலும் கல்யாணியிலும் .

கல்யாணியின்  கரம்பற்றி அழைத்துச்சென்று இருக்கையில் இருத்திவிட்டு அமர்ந்துக்கொண்டான் , டேமியன்.

எல்லோரும் கரகோசம் செய்து ஆரவாரித்தார்கள்.

“தாலி கட்டுறது பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்ல ஜோரிக் . அது சுமதிம்மாட  விருப்பம் . அவேட முறைப்படி எல்லாம் வாங்கிட்டினம்.” என்று, காலையில் மகன் நண்பனோடு கதைத்ததைக் கேட்டவர் மனம், உலைக்களமாகக் கொதித்திட்டு. இக்கணம் வரை கனன்று கொண்டுத்தான் இருக்கு.  

தனக்கே தனக்கான அத்தனை அடையாளங்களையும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் அளவுக்கு என்ன புதினமான அன்பாம்! அவரால் ஏற்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை. ‘சாத்தான் உச்சிக்கு ஏறி நிண்டு ஆட வைக்கிறான். இவன் அழியப்போறான்.’ தன்னையும் மீறியே  நினைத்துவிட்டார்.  செல்ல மகனாக இருந்தவன் இப்படியெல்லாம் தூற்றும் அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறானே!

‘ஏன்டா இந்தக் கலியாணத்தை செய்தம் எண்டு ரெண்டு நாயலையும் கதற விடோணும்.’ மனத்துள் வன்மத்தோடு அவர் எண்ணிக்கொண்டிருக்க, “சுமதிம்மா, உங்கட கையால  தாலிய  எடுத்துத் தாங்க!” என்று அழைத்தான், டேமியன். 

“நான் எப்பிடி? இல்ல இல்ல வேணாம் தம்பி.” என்று அவர் மறுக்க மறுக்க, மீரா, பிடித்த பிடியில் கூட்டிச்சென்றாள். 

“தம்பி, உங்கட அம்மாவையும் கூப்பிடுங்கோவன்.” சின்ன குரலில் சொல்லியிருந்தார், சுமதி. 

“இந்தாக் கூட்டிக்கொண்டு வாறன்.”ஓடினாள், மீரா. கிறிஸ்டினாவின் மறுப்பு எல்லாம் அவளிடம்  எடுபடுமா என்ன? சுமதிக்கு அருகில் வந்து நின்றவர்  மனத்தில்  நெருப்பின் சுவாலை.  என்ன முயன்றும் முகத்தைத் திருத்த முடியவில்லை.  

இவளோடு சமதையாக நானோ என்று, மனம் கொதிக்க கொதிக்க எதுவும் செய்ய முடியாது பட்டும் படாமல் தாலியைத் தொட்டுக்கொடுக்க, கரகோசமும் மலர் தூவலுமாக இருக்க, கல்யாணியின் நேசப் பார்வையைத் தாங்கியபடியே, பொன் தாலியை அணிவித்து அதன் சுரையைப் பூட்டினான்,  டேமியன்.

error: Alert: Content selection is disabled!!