நட்சத்திரா 33 – 2

ஒவ்வொரு நட்சத்திரப்புள்ளிகளும் கண்சிமிட்டி இவளுக்கு ஆசி வழங்குவது போலிருந்தது. அவற்றில் ஒளிந்து கொண்டிருந்து அவள் தந்தையும் குட்டித் தம்பியும் மகிழ்வோடு பார்ப்பது போலிருந்தது. மனம் மெல்ல மெல்ல அமைதியாகிற்று.

“கல்யாணி, தோட்ட வீட்டில, அதான் நீங்க தங்கிருந்த வீட்டில போய்த் தூங்குவமா?” இரகசியமாகக் கேட்டான், டேமியன்.

 நிமிர்ந்து பார்த்தவள், “ என்ன கேட்டீங்க?” என்றாள்.  அவர்களின் தோட்ட வீட்டைக்காட்டி “அங்க போவமா?” என்றவன் முகத்தில் அவ்வளவு விசமம். அவளுக்கும் வெட்கம் வரும் என்று, அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் அப்போதுதான்  தெரிந்தது.

“இருங்க, வீட்டப் பூட்டிட்டு வாறன். இங்க ஏதாவது எடுக்கோணுமா?” என்றபடி எழுந்தான்.

“இல்ல இல்ல…எங்கட சாமான்கள் நிறைய இன்னும் அங்கதான்.”  என்றவளிடம் இருந்து, கோப்பிக் கோப்பையை வாங்கிக்கொண்டு சென்றவன், அடுத்த பத்தாவது நிமிடம் பல் தேய்த்துவிட்டு இரவுடைக்கு மாறி வந்தான்.

அவன் கைபிடித்துக்கொண்டு அச்சிறு வீட்டினுள்  நுழைகையில் தன் தாய்  வீட்டில் நுழையும் மகிழ்வு அவளுக்கு. அதை அதிகரிக்கும் வகையில் அடுத்துக் கடந்த நிமிடத்துளிகள் ஒன்று ஒன்றும் அழியாத அழகிய நினைவுகளாகிப்போயின.

முதல் நாள் பற்றி, அவன் முகத்தையே பார்த்தபடி முறுவலோடு நினைத்துக்கொண்டவள், அவன் தோள்  வளைக்குள் தலையைப் புகுத்திக்கொள்ள ஒற்றைக் கையால் அணைத்துக்கொண்டவன் , “டேய், ஜோக்கிங் போவமா? இல்லாட்டி என்னை இன்னும் ரசிக்கப் போறீங்களா?” சீண்டலாகக் கேட்டான்.

உறக்கம் முற்றாகக் கலைந்திருக்க, எழ நினைத்தாலும் மனம் ஒத்துழைக்காததில் ஒருவர் ஒருவரைச் சீண்டியே தமக்குள்ளான பிணைப்பை, உறவை ஒருவர் மற்றவருக்கு உணர்த்திக்கொண்டார்கள்.

இறுதியில், “ஜோக்கிங் போவம் வாங்க.” என்று, அவளே அவனை இழுத்துக்கொண்டு வெளிக்கிடும் படி இருந்தது, அக்காலையின் புலர்வு.

காலை ஆறுமணி கடந்திருந்தும், பெரிய வீடு விழிதிருக்கவில்லை. சோடியாக ஓடிவிட்டு வந்தவர்கள்  குளித்துவிட்டு வந்தார்கள். கல்யாணி வர முதலே வந்துவிட்ட டேமியன், இருவருக்குமாக குரோசன்ட் சூடாக்கி, கோப்பியும் தயாரித்துவிட்டான்.

அவன் கவனிப்பும் கரிசனையும் இவளுக்குப் புதிதில்லைதான். இருந்தாலும் மிகவும் இதமாக இருந்தது. வீடு நிறைய ஆட்கள் இருந்தாலும் இருவருமாக தனித்திருந்து உண்டுவிட்டு, சுட சுட உறிஞ்சிய அந்தக் கோப்பி, அன்றைய காலைக் கணத்தை மேலும் மேலும் வடிவாக்கிவிட்டிருந்தது.

“உம்மப் போல ரெண்டு கிழமை முழுசா லீவு எடுக்க முடிஞ்சா!” டேமியன் மூக்கால் அழுதவன், “ நான் இல்லாம இங்க நிண்டு என்ன செய்யப்போறீங்க, பேசாம சிலோன் டேஸ்ட் வாங்க கல்யாணி.” என்றுகொண்டு இருக்கையில் இருவரையும் பார்த்து மலர்ந்தபடி,  காலை வணக்கம் சொல்லிக்கொண்டே உள்ளிட்டார், சுமதி. 

பார்த்த முதல் பார்வையிலேயே  இருவரினதும் அன்னியோன்யம் பளிச்சென்று தெரிந்ததில் விழிகள் கலங்கிப்போக, அதை மறைத்தபடி, “ கோப்பி போட்டுக்கொண்டு வாறன்.” என்று சமையலறைக்குள் நுழைந்துவிட்டார்.

சற்று நேரத்தில் கிறிஸ்டினா வந்தார். மலர்வோடு காலை வணக்கம் சொன்னாள், கல்யாணி. “கோப்பி போடவா அன்ரி?” என்றுமிருந்தாள்

 அப்படியொருத்தி அங்கு இருக்கிறாள் என்கிற பாவனையேயின்றி, மகனுக்குச்  சிறு தலையசைப்போடு காலை வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தார், அவர். எப்போதும் அவர் அமரும் சாப்பாட்டு மேசைக் கதிரையில், அதுபற்றி எதுவும் தெரியாதேதான் கல்யாணி அமர்ந்திருந்தாள். வேண்டுமென்றே அமர்ந்திருக்கிறாள் என்று எண்ணினார், கிறிஸ்டினா. 

‘என்ர மகனிலும் இந்த வீட்டிலும் அவளுக்கு இருக்கிற உரிமையைக் காட்டுறாளா? பரதேசிக்கூட்டம். அவள்ட கையால கோப்பி வாங்கிக் குடிச்சித்தான் எனக்கு விடியோணும் போல!’ என்று,  மனத்துள் சினந்தபடி வந்தால், சமையலறையில் சுமதி. கிறிஸ்டினாவின் பார்வையில் அப்பட்டமாகக் கோபமும் அருவருப்பும்.

‘ஏய், வெளியே போ!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.  சுமதியும் வலு உரிமையாக நிற்பது போலிருந்தது. 

“கோப்பி எங்க?” என்று முணுமுணுத்தபடி, ஒவ்வொரு அலுமாரியையும் திறந்து மூடியவரை,  கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் ஆவேசத்தோடு நெருங்கினார், கிறிஸ்டி.

கோப்பிக் கோப்பையை எடுக்கத் திரும்பிய சுமதி, கிறிஸ்டினாவின் ஆக்கோரசமான பார்வையிலும் உடல் மொழியிலும் உண்மையில் ஆடிப்போய்விட்டார்.

இப்போது, இங்கு,  சின்னதாகப் பிரச்சினை உருவானாலும் மகள் வாழ்வல்லவா பாதிப்படையும் . தான் வாயே திறக்காது நின்றாலும் கிறிஸ்டினா கோபமாக ஏதாவது சொல்லப்போக பக்கத்தில் அமர்ந்திருக்கும் டேமியன் , மகள் காதில் விழாதிருக்குமா என்ன ?

விருட்டென்று பின் கதவால் வெளியேறியிருந்தார், சுமதி.

ஓடினால் சரியா என்ன? பின்னால் சென்று, “ ஏய்!” என்று நிறுத்தினார், கிறிஸ்டி.

கலங்கிய விழிகளைக்  காட்ட விரும்பாவிட்டாலும் சுமதியால் எதுவும் செய்ய முடியவில்லை. நின்றவர் என்னவென்பதாகப் பார்த்தார்.

“ என்ன திமிராப் பாக்கிற? கிழட்டு மகளுக்கு வாழ்க்க கிடைச்சிட்டு எண்டதில நிமிர்வா நிக்கிற போல! அதும் என்ர வீட்டுக்குள்ள வந்து.”அடிக்குரலில் சினந்தார்.

“வந்திரு எண்டோன்ன இதான் சாட்டு எண்டு வந்தும் இருந்திட்ட. எங்களுக்குச் சமதையா வந்திருந்து புழங்க என்ன அருகதை இருக்கு எண்டு ஒருக்காச்சரி யோசிச்சு இருப்பியா! ச்சேய்க் ! அவ்வளவு சொன்ன பிறகும் நிமிந்து நிண்டு மகளுக்குக் கலியாணம் செய்து வைக்கிறாவாமே! உன்ர வண்டவாளம் தெரியாத மனுசருக்கு மட்டும் தான் நீ தியாகச் செம்மல்.” இளக்காரமாகச் சொன்னவர் ஒரு அகங்காரச் சிரிப்புச் சிரித்தார்.

அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி, கண்ணீர் வடிய அப்படியே நின்றார், சுமதி. 

“நீலிக்கண்ணீர் வடிச்சு நல்லா நடி என்ன? நான் என்ர ஏமாளி மகன் இல்ல, விளங்கிச்சோ! ஒண்டு நினைவில் வச்சிரு , கெதியா என்ர வீட்டில இருந்து நீ வெளியில போகோணும். எங்கயாவது போய்த் துலை !  இல்லையோ, உன்ர மகளையும் சேர்த்துக் கூட்டிக்கொண்டு போ சொல்லிட்டன். அதோட, என்ர குசினிக்க உன்ர நிழல் கூட விழுறது இல்ல.”உறுமிய வேகத்தில் சமயலறைக்குள் புகுந்து விட்டார். 

எந்த எந்த வழியில் யோசித்தாலும் அவரால் சுமதியைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் இருப்பை …அப்படியெல்லாம் சொல்ல அவர் யார்? அவரது தங்களுடனான உறவு, பழக்கம் அதையும் கடந்து வேலை ரீதியிலான தொடர்பு என்ற அளவுக்குக்  கூடச்  சகிக்க முடியவில்லை. 

அதுவும் அவர் தம்பியின் கதையும் கேட்ட பின்னர் என்னேரமும் நெருப்பின் தகிப்பில் இருப்பது போல்  அல்லவா வதைபடுகிறார். அன்பும் பரிவும் காட்டும் மகனுக்கு எதிரியாகியும் விட்டார். இது எல்லாம் அவருக்கு இந்த வயதில் தேவையா என்ன? யோசித்துப் பார்த்தால்தான் மிகவுமே கீழிறங்கிப் போன உணர்வு கூட அவருள். 

இது …இப்படித் தெரிந்தே ஒருவரிடம் கடுமைகாட்டி துன்பப்படுத்த முனைவது எல்லாம் அவரல்ல. ஆனால், சுமதி விடயத்தில் அவர் இப்படித்தான் நடக்க முடியும். 

இதுவரை, இந்தச் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்தவரால், வழிதவறி, கண்டபடி அலைந்து வாழ்கிறான் என்று பெற்ற  மகனையே தள்ளி வைத்தவரால், சுமதியால் இழி நிலைக்குச் செல்ல முடியாது. சுமதியின் பவித்திரத்தை நிரூபிப்பதோ, பரிதாபம் பார்ப்பதோ, அவர் விபச்சாரியாக யார் காரணம் என்று பார்ப்பதோ அவர் வேலையும் அல்ல. 

போனால் போகட்டும் என்று, கல்யாணியை விட்டு விடலாம். மகன் கலியாணம் செய்த பின்னர் வேறு என்ன செய்யவியலும். இருந்து வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அரைகுறை மனத்தோடு இப்படி எண்ணியவர், எப்பாடுபட்டாகிலும் சுமதியை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்ற உறுதியோடு நகர்ந்தார். 

சுமதியோ, எப்படி அசைந்தார் என்றே தெரியாது தோட்ட வீடு  வந்திருந்தார்.

error: Alert: Content selection is disabled!!