நட்சத்திரா 34 – 1

34
நாள்களுக்கு என்ன, அதுபாட்டில் உருண்டன!

சில நாட்களின் பின்தான், அதுவும் மிகத் தற்செயலாகத்தான், டேமியனும் கல்யாணியும் இரவில் தோட்ட வீட்டில் தங்குவதே கிறிஸ்டினாவுக்குத் தெரிந்தது. ஒன்றாக ஜொக்கிங் போகிறார்கள். உண்பதும் அப்படித்தான். பிள்ளைகள் மூவரோடும் பொழுதைக் கழிக்கவும் தவறுவதில்லை. வீட்டில் உருவான மாற்றம் பிள்ளைகளில் அப்படியே தெரிந்தது. அத்தனை மகிழ்வோடு துள்ளலாகத்தான் நடமாடினார்கள்.

மகன் மனைவியோடு அன்னியோன்யமாக வாழ்கிறான் என்று உணர, கண் முன்னால் பலதுகள் நடந்தபடி உள்ளனவே! ஆனாலும் கிறிஸ்டினாவால் மகிழ முடியவில்லை. மனம் முழுதும் நெருஞ்சி முற்பற்றை படர்ந்துவிட்டதே! அது குத்திக் கிழித்து அவரை நிம்மதியில்லாது துடிக்க வைத்துக்கொண்டிருக்கையில், மகிழ்வு எங்கிருந்து வரும்.

பியங்காவின் இழப்பின் பின், டேமியனை இப்படி மலர்வாக, நிறைவாகப் பார்க்க வேண்டும் என்று, அவர் ஏங்கிடாத நாட்களே இல்லை எனலாம். ஆனால் இன்றோ, அவர்கள் கதைத்துச் சிரித்துப் பேசி ஒன்றாக இருக்கையில், கைகோர்த்துச் செல்கையில் எல்லாம் முகச் சுளிப்போடு பார்த்துவிட்டுக் கடக்கும் படியாக இருக்கிறதே!

விடுமுறை முழுவதும் உங்களோடுதான் என்று குதூகலமாக வந்த ஜாக்குலினிடம், “இங்க நிண்ட மட்டுக்கும் காணும்.” என்றிருந்தான், அவள் கணவன் டேவிட்.

“டிக்கெட் எல்லாம் ஒழுங்கு செய்தாச்சு. நாளைக்கு என்னோட நீங்களும் வெளிக்கிடுங்க.” என்று, வந்து நான்காம் நாளே சொன்னவனிடம் கிறிஸ்டினா மட்டுமில்லை டேமியன் கூட, ஏற்கனவே திட்டமிட்டபடி நின்றுவிட்டு வரட்டும் என்று சொல்லியும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

“இஞ்ச மாமி சமாதானம் ஆகட்டும் டேமியன். பிறகு வந்து நிக்கட்டுமன். இப்ப என்னடா எண்டால் ஏத்தி ஏத்தி விட்டுக்கொண்டு நிக்கிறா உங்கட அக்கா. கல்யாணியும் சுமதிம்மாவும் திருப்பி ஒரு வார்த்த கதைக்கிறதும் இல்ல. ஆரிட்டையும் சொல்லுறதும் இல்ல எல்லா? இவேக்கு அது வாச்சுப் போச்சு! ஜாக்குலின் இல்லாட்டி, ஏதோ ஒரு கட்டத்தில, மாமி அவேய விளங்கிக்கொள்ள முயற்சி செய்வா எண்டு நினைக்கிறன்.” என்றுவிட்டு, ஒரே பிடியில் நின்று குடும்பத்தோடுதான் கனடா திரும்பியிருந்தான்.

அதன்பின், கிறிஸ்டினாவின் பொழுது நகருவேனா என்று அழிச்சாட்டியம் காட்டியது. அந்த வீட்டில் வாய்விட்டுக் கதைக்க அவருக்கென்று ஒருவருமே இல்லையா? வீட்டில் நின்றால், அநேகமான வேளைகளில் அவரோடு தம் பொழுதைக் கழிக்கும் பிள்ளைகள் மூவரும் இப்போது, கல்யாணியோடு சேர்ந்து கலகலத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்க்கையில் மகிழ்வுக்குப் பதிலாக எரிச்சல் கொண்டார், கிறிஸ்டினா.

‘விலகிச் சென்று விடு’ என்று எத்தனை தடவைகள் எச்சரித்த பின்னும் சுமதியோ, கிறிஸ்டினா கண்ணில் பட்டுவிடவே கூடாது என்று பார்த்து பார்த்து செல்வது வருவது, அறைக்குள் அடைவது, மீண்டும் வேலைக்குச் செல்வது, இரவுக்கு வந்து அடைவது என்று, கிறிஸ்டினாவின் இரத்த அழுத்தத்தோடு கண்ணாமூச்சு விளையாடினார்.

இப்படியிருக்க, கடைசிவரை பிரச்சனைகளோடு இருத்ததால், டேமியன் கல்யாண விடயம், ஊரிலும் ஏனைய வெளிநாடுகளிலும் வசிக்கிற நெருங்கிய உறவுகள் எவரிடமும் சொல்லப்படவில்லை. இதில், கிறிஸ்டியின் சகோதரன் ஜோசப்பும் அடக்கம்.

“மாமாவுக்கு மட்டும் சரி சொல்லலாம் அம்மா. இஞ்ச வீட்டில சின்னதா ஏதாவது நடந்தாலும் சொல்லுறனாங்க எல்லா? பிறகு சரியாக் கோவிப்பார்.”என்ற ஜாக்குலினிடம் அதையிதைச் சொல்லி அப்போதைக்கு அடக்கிவிட்டார், கிறிஸ்டினா.

அதுவே, அவள், கனடா போய் இறங்கியதும் ஜோசப்புக்கு அழைத்துவிட்டாள். மாமா என்றாலும் ஒரு கண்டிப்பான தகப்பன் போல் தங்கள் வீட்டின் அனைத்துக் காரியங்களிலும் முன்னிற்பவர் ஆச்சே!

“உங்களிட்டச் சொல்லச் சொல்லி நான் எவ்வளவோ சொல்லியும் இந்த அம்மாவும் கேக்கேல்ல மாமா. சொறி!” இதையும் கொசுறாகச் சொல்லிவிட்டாள்.

ஜோசப், கோபத்தில் கொந்தளித்துப் போனார். “தாய்க்கும் மகனுக்கும் அந்தளவுக்கு நான் வேண்டாதவனோ! உங்களுக்கு ஒண்டு எண்டோன்ன, என்ன கை வேலையா இருந்தாலும் போட்டுட்டு ஓடி வாறனான். நான் என்ன சாப்பாட்டுக்கடையா வச்சு நடத்திறன்? அப்பிடியிருக்க, எனக்கு மறைச்சுக் கமுக்கமாக் கலியாணமே செய்திருக்கிறீங்க!” குரலுயர்த்திச் சீறினார்.
என்ன ஏதென்று வினவிய அவர் மனைவி வேறு தன் பங்கிற்குக் கோபப்பட்டார்.

“உண்மையைச் சொல்லோணும் எண்டா அம்மாவும் கொஞ்சம் கூட மகிழ்சியா இல்ல மாமா. கலியாணம் நடக்கேக்க நிண்டனாங்கள்தான். எல்லாம் பேருக்கு. மற்றும்படி, எங்கட விருப்பு வெறுப்புப் பற்றி அங்க ஆரும் கவலைப்படேல்ல.” என்ற ஜாக்குலின், “ அந்தப் பொம்பளேட தாய் இப்ப எங்கட வீட்டுலதான். அந்த ரெண்டு பொம்பளைகளிட குணத்துக்கு உங்கட அக்காவும் பேரப்பிள்ளைகளும் வலு கெதியா நடுரோட்டுக்கு வரப்போகினம், இருந்து பாருங்க. கேக்க ஆள் இல்ல எண்ட கணக்கில டேமியன் ஆடுற ஆட்டம் சொல்லி மாளாது மாமா. ஆளே மாறிட்டான்.”என்று தொடங்கி, தனக்கு அடித்ததையும் அழுதுகொண்டே சொல்லிவிட்டாள்.

“நீ வை ஜாக்குலின்!”உறுமிவிட்டு, அதே கையோடு தமக்கைக்கு அழைத்தார், ஜோசப்.

சகோதரன் அழைப்பது தெரிந்தும் ஏற்காது இருந்தார், கிறிஸ்டினா. ஜோசப், விடாது அழைத்துக்கொண்டிருக்கவும் பட்டென்று எடுத்திருந்தார்.

“இப்ப உனக்கு என்ன வேணும்? எடுக்கேல்ல எண்டா கதைக்க விருப்பம் இல்ல எண்டு அர்த்தம். அதுகூட விளங்காதா?”உதாசீனமாக எரிந்து விழுந்த தமக்கை அவருக்குப் புதிது. கோபம் வரவில்லை. டேமியனைத்தான் அறைந்து தள்ளும் ஆவேசம் வந்தது.

தமக்கை என்ன துன்பப்பட்டிருக்கத் தன்னில் இப்படிப் பாய்வார்!

“அங்க இவ்வளவு நடந்தும் ஏன் அக்கா என்னட்டச் சொல்லேல்ல? கலியாணத்த நடக்க விட்டுட்டு வந்து என்னோட கோவிச்சு என்ன பிரயோசனம்? ஆளணி இல்லாத பரதேசிகளுக்காக உங்களையே எதிர்க்கிறானா அவன். பொறுங்க அவனோட கதைக்கிறன்.” என்றவரிடம் என்றுமில்லாத கடுமை காட்டினார், கிறிஸ்டினா.

“இஞ்ச பார், இது என்ர குடும்ப விசயம். நீ தலையிடத் தேவையில்ல. எனக்கு எத்தின வயது, எனக்குக் கதை சொல்லுறத முதல் நிப்பாட்டு. நீ முதல் ஒழுங்கா இரு! உன்ர சோலிகள நேர்சீராப் பார்த்து மனுசனா வாழப்பார்!” சொன்ன வேகத்தில் அழைப்பைத் துண்டிக்கப் போனார்.

“நான் என்ன ஆசையில வந்து கதைக்கிறனா என்ன? கூடப்பிறந்த அக்கா நல்லா இருக்கோணும் எண்ட அக்கறையிலதான் கதைக்கிறன். அதோட, இப்பிடித் தொடர்ந்து உன்ர பிள்ளைகள் பரிசிகெடுத்துக்கொண்டு திரிஞ்சா, எனக்கும் தான் தலையிறக்கம் . உங்களோட பழகிறதப் பற்றியே யோசிக்க வேண்டி வரும் சரியா!” ஜோசப் பொறுமையிழந்து கத்தினார். தமக்கையின் குரலும் பேச்சும் அந்தளவுக்கு அவரைத் தூண்டிற்று.

“ஓ அப்பிடியோ! என்ர குடும்பத்தால உனக்குத் தலையிறக்கம், ம்ம்ம் !” என்று கேட்ட கிறிஸ்டினா வாய்விட்டே சிரித்துவிட்டார். அந்தச் சிரிப்பில் கோபமும் ஏளனமும் சரிவிகிதமாகக் கலந்து கிடந்தன.

“பின்ன இல்லையா? உன்ர மூத்தவன் இந்த வயதிலும் இன்னும்…”என்றவர் மிகுதியைச் சொல்லவில்லை. “இப்ப இவன் தொடங்கி இருக்கிறான்.” என்றார்.

“தயவு செய்து எங்களோட பழகாத ஜோசப். இனி ஒரு தொடர்பும் வேணாம். என்ர மகன்கள் பற்றியெல்லாம் நீ கதைக்கத் தேவேல்ல. ”பட்டென்று அழைப்பைத் துண்டிருந்தார், கிறிஸ்டி.

நீண்ட நேரமாகக் கையில் உள்ள பேசியையே பார்த்துக்கொண்டு நின்றார், ஜோசப்.

‘நாய் நாய்! நீ ஊர் மேஞ்சுகொண்டு என்ர குடும்பம் பற்றிக் கதைக்கிறியே! தலையிறக்கமாம் தலையிறக்கம்.’ அன்று முழுதும் அவ்வளவு கோபம் கிறிஸ்டிக்கு.

*****

சுமதி, வெளிப்பார்வைக்குத்தான் அமைதியாக இருந்தார். உள்ளே ஒவ்வொருநாளும் நொருங்கிக்கொண்டிருந்தார். கற்பனையில் கூட நினைத்திராத, கேள்விப்படாத அளவில் துன்பங்களை, இழப்புகளை, வலிவேதனைகளைக் கண்ட மனுசியாச்சே! மகள் முகத்தில் நிலைத்திருக்கும் மலர்ச்சிக்காக இன்னமும் எவ்வளவும் படத்தயார் அவர். மீண்டும் மீண்டும் வெறுப்பையும் நெருப்பையும் வார்த்தைகளாலும் உதாசீனத்தாலும் காட்டி, ‘விலகிச் செல்’ என்று வலியுறுத்தியபடி இருக்கிறார், கிறிஸ்டினா. இவரால்தான் அந்த வழியில் யோசிக்கவே முடியவில்லை.

டேமியனில் மலையளவு நம்பிக்கை இருந்தாலும் தான் சென்றுவிட்டால், மகள் என்ன பாடுபடுவாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த ஒன்றே அவரை கிறிஸ்டினாவின் துச்சமான பார்வையையும் சொல் அம்புகளையும் ஏற்று, மான ரோசம் என்றெல்லாம் பாராது அந்த வீட்டில் தங்க வைத்திருக்கிறது.
எப்போதும் போலவே தோட்ட வீட்டில் இருந்துகொள்கிறேன் என்று, டேமியனிடம் கேட்டுப் பார்த்துக் களைத்துப் போனார்.

“இவ்வளவு பெரிய வீடும் மகனும் மகளும் நாங்க இருக்க, நீங்க தனியா அங்க இருந்து என்ன செய்யப்போறீங்க? இஞ்ச உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா என்ன?”என்று கேட்டு அவர் வாயை அடைத்தே விட்டான்.

“ என்ன எண்டாலும் என்னட்டச் சொல்ல யோசிக்கக்கூடாது சுமதிம்மா!” என்றவனிடம் தலையாட்ட மட்டுமே முடிந்தது.

“அங்க தோட்ட வீட்டில கொஞ்சம் திருத்தம் செய்யப்போறன் சுமதிம்மா. அப்பத்தான் வசதியா இருக்கும்.” என்றவன், கடைக்கண்ணால் கல்யாணியைப் பார்த்துக் கண்சிமிட்டி அவளைத் தடுமாறிப் போக வைத்துவிட்டுச் சென்றான்.
சுமதி இதைக் கவனிக்கவில்லை. சற்றே தள்ளி அமர்ந்திருந்து காதையும் பார்வையையும் இங்கு வைத்திருந்த கிறிஸ்டி கண்டுவிட்டார். முகத்தைச் சுளித்துக்கொண்டு எழுந்து அப்பால் சென்றவருக்கு, சுமதியை எப்படி இங்கிருந்து அனுப்புவது என்றே தெரியவில்லை. சுமதியும் இந்தளவுக்கு ராங்கியாக, தான் என்ன சொன்னாலும் அசையாது இருப்பாரென்று அவர் நினைக்கவேயில்லை. இதைவிட எப்படி அவரைக் காயப்படுத்துவது என்றும் புரியாது விழித்தார், அவர்.
விடிந்தால் பொழுதுபட்டால் சொந்த வீட்டில் நிம்மதியாக நடமாட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் கல்யாணி தெரிந்தாள். பிள்ளைகள் குரலோடு சேர்ந்து அவள் குரல் கேட்டது.

பியங்கா இல்லை என்ற பிறகு, அவதி அவதியாகவே பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவந்து விட்டுவிட்டுச் செல்வான், டேமியன். அந்நேரம், “இன்னுமா சாப்பிடேல்ல, சாப்பிட்டுப்போட்டுப் போங்க தம்பி.” என்பார், கிறிஸ்டினா.

ஒருநாளும் வந்திருந்து உண்ண மாட்டான். காலில் கொதிநீர் கொட்டிய கணக்கில் வேலை வேலை என்று ஓடுவான். இப்போ, டாணென்று ஒரு மணிக்கு, என்ன சமையல் என்றுகொண்டு வந்து நிற்கிறான்.

“சுமதிம்மா எங்க? சாப்பிட வாங்க சுமதிம்மா!” என்று அழைப்பவன், அம்மா சாப்பிட்டவாவா என்று கேட்டுவிட்டு அழைப்பான்தான்.

கிறிஸ்டினா முறைப்பார். “இதென்ன புதுப்பழக்கம்? எப்ப இருந்து நான் மத்தியானம் சாப்பிட்டனா எண்டு எல்லாம் கவனிச்சுக் கூப்பிடத் தொடங்கினீங்க?” என்று வெடுக்கென்று கேட்டுவிடுவார்.

“என்னைக் கவனிக்க எனக்குத் தெரியும் தம்பி. நீங்க உங்கட அலுவல்களப் பாருங்க. உங்களுக்குக் கவனிக்க ஆக்கள் வேற நிறைய இருக்கினமே!” இப்படி, ஏதோ ஒருவகையில் மல்லுக்கு நிற்பார்.

ஓரிரு நாட்களில் அவர் சமாதானம் ஆகார் என்று தெரியும்தான். இருந்தாலும் தாயின் கோபமும் கொந்தளிப்பும் சிறிது கூட நியாயமே அற்றதாச்சே! அதுவே டேமியன் பொறுமையை உச்சபட்சமாகச் சோதித்தது.

error: Alert: Content selection is disabled!!