எல்லா நேரமும் அமைதியாகச் செல்ல முடியாதும் செய்தது. ஆழ்ந்து பார்த்து, “நீங்க கதைச்ச கதைகளுக்கு நான் இத விடவும் கூடக் கோவப்படோணும் அம்மா.” என்று கடினமாகச் சொல்லியும் விடுவான்.
“ஏதோ மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடப்பீங்க எண்டு நினைக்கிறன்.” மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தான்.
அவர் நெற்றி சுருக்கிப் பார்க்கவும், “சுமதிம்மாவோட திரும்பவும் ஏதாவது கதைச்சீங்களோ?” என்று அவன் கேட்ட விதத்தில், கிறிஸ்டினா உண்மையில் கலங்கித்தான் போய்விட்டார்.
ஒற்றை வார்த்தை கதைக்காது மகனைப் பார்த்தவர் விழிகள் சுரந்தன.
“பெத்த தாயை விட, அந்த மனிசி பெருசாப் போய்ட்டா என்ன? மனம் நிறைவா இருக்கு டேமியன். உங்கள எல்லாம் பெத்து வளத்து, இண்டு அளவுக்கும் உங்களுக்காக யோசிச்சு யோசிச்சு வாழுற சீவனுக்கு, நல்ல கைம்மாறு கிடைச்சிட்டு!”என்று வெடித்து அழுதபடி சென்று அவனைக் குன்ற வைத்துவிட்டார்.
அவனுக்கு, அன்னையோடு அப்படிக் கதைக்க விருப்பம் இல்லை. ஆனால், வேலை நேரத்தை அதிகமாக்கி வீட்டில் இருப்பதைச் சுமதி தவிர்க்கிறாரோ என்ற சந்தேகம் முளைத்துவிட்டதே. அதுவும் அறையை விட்டு வெளியில் வருகிறார் இல்லை. சென்று சாப்பிட அழைத்தாலும் ஏதோ சாட்டுச்சொல்லி நாசுக்காகத் தவிர்த்து விடுகிறார்.
இப்படி, குழப்பமும் யோசனைகளுமாக இருந்தாலும் கல்யாணியும் பிள்ளைகளும் கலகலத்து, எல்லாவற்றையும் மறந்து அவர்களோடு கலந்துவிடச் செய்துவிடுவார்கள்.
அந்தக் கலகலப்பை கோபத்தோடு கேட்டுக்கொண்டிருப்பார், கிறிஸ்டினா.
“எல்லாம் எத்தனை நாளைக்கு? இவள் லீவு முடிஞ்சு வேலைக்கு போகவிட்டு இருக்கு எல்லாருக்கும்.” என்று கறுவிக்கொள்வார்.
பேரப்பிள்ளைகளிலும் அவ்வளவு கோபம்.
அதுவும் இன்று காலையில் பெரியவள் வந்து, “உங்களுக்கு ஏன் கனி அன்ரியப் பிடிக்குது இல்ல? அவா நைஸ், பியங்கா மம்மா போல. ம்ம் அதைவிடவும் ஃப்ரெண்ட்லி!” என்றுவிட்டுப் போனதில் கொதிப்பில் இருக்கிறார். இதில் டேமியனின் வக்காலத்து வேறு! யாரிடம் கொட்டித் தீர்ப்பது?
கனடாவில் எப்போ விடியும் என்று பார்த்துக் காத்திருந்து மகளுக்கு அழைத்து, “ இஞ்ச நடக்கிற கூத்த ஏன் கேப்பான்?”என்று ஆரம்பித்தார்.
*****
கல்யாணிக்கோ, கிறிஸ்டினாவின் முறைப்பையும் சிடுசிடுப்பையும் அமைதியாகக் கடக்கும் சக்தியை டேமியன் கொடுத்திருக்க, அது ஒன்றும் அவளுக்குச் சிரமமாக இருக்கவில்லை.
திருமணமாகி ஆறு நாட்கள் கடந்திருந்தன. அன்றுதான் , தன்னுடைய பொருட்களையெல்லாம் டேமியனின் அறையில் அடுக்கி வைத்துவிட்டு, பிள்ளைகள் மூவரோடும் வெளியில் வர எதிரே வந்தார் கிறிஸ்டினா.
“உங்கள் மூண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?” இத்தாலியில் பிள்ளைகளை அதட்டினார்.
“எப்பப் பாத்தாலும் வால் பிடிச்சுக்கொண்டு திரியிறீங்க! அங்க உங்கட அறைக்க ட்ரையரால எடுத்த உடுப்புகள் அப்பிடியே கிடக்கு. எடுத்து மடிச்சு வையுங்க. தோய்க்கிற பாஸ்கெட் நிறஞ்சு வழியுது. கொண்டுபோய் தோய்க்கப் போடுங்க. அதவிட்டுப்போட்டு ஒரே சிரிப்பும் கும்மாளமும். இதெல்லாம் எத்தினை நாளுக்கு? ம்ம்” என்று, பிள்ளைகளை அதட்டியவர், “சுயரூபம் கெதியா வெளில வரும். அப்பதான் தெரியும்.” கல்யாணியை வெட்டும் பார்வையில் அளந்தபடி சொன்னார்.
பெரியவள் முறைப்போடு பார்த்தாள். “பத்து நிமிசத்தில அலேசியாட மம்மா வருவா. மூண்டு பேரும் அவேயோட பார்க் போயிட்டு, ஆறுமணிக்குத்தான் திரும்பி வருவம். வந்து எல்லாம் செய்வம்.” சிடுசிடுத்துவிட்டு, விசுக்கென்று நகர்ந்து சென்றாள்.
அவளையே பார்த்திருந்துவிட்டுத் திரும்பினார், கிறிஸ்டினா.
சின்னவர்கள் அசையவில்லை. அதிலும் சின்னவள் கரம் கல்யாணியின் கரத்தைப் பற்றிக்கொண்டது. அப்படியே அவள் காலோடு அணைந்தபடி கிறிஸ்டினாவை முறைத்தாள்.
“உங்களப் போகச் சொல்லுறன் எல்லா?” என்று அதட்டியும் சின்னவர்கள் இருவரும் அசையவில்லை.
“நானும் சேர்ந்து மடிக்கிறன் அன்ரி. நான் பாக்கிறன். பார்க் போயிட்டு வரட்டும்.”என்ற கல்யாணியை, நெருப்புப் பார்வை பார்த்தார், டேமியனின் அன்னை.
“இஞ்ச பாரும், ஒண்டத் தெளிவாச் சொல்லுறன் நல்லாக் கேட்டு நினைவில் வச்சிரும். அது உமக்கு நல்லதோ கெட்டதோ இந்தப் பிள்ளைகளுக்கு நல்லது. இவே மூண்டு பேரையும் குழந்தைகளில இருந்து இப்ப வர, நேர்சீரா நல்ல பழக்க வழக்கங்களோட வளத்து விட்டிருக்கிறம். அதுக்கு என்ர மருமகள் பியங்கா சரியாச் சிரமப்பட்டிருக்கிறா. அதையெல்லாம் தலைகீழாக்கி, இதுகளிட வாழ்க்கைய அழிக்க, நான் பாத்துக்கொண்டு இருக்க மாட்டன்.” வெறுப்போடு சீறியவர், கல்யாணியின் முகத்தை அவமானத்தில் சுருங்கிக் கலங்கடித்தார். அதுவும் பிள்ளைகள் முன்னால் வைத்தே அவர் வெறுப்பை உமிழ்ந்ததில், அவளுக்கு விம்மல் வெடித்துக்கொண்டு வந்தது.
ஆனாலும் வாய் திறக்கவில்லை. நகர முயன்றாள்.
“கொஞ்சம் நில்லும். என்னப் பாத்தா எப்பிடித் தெரியுது? விசரி போல இருக்கோ! கதைச்சுக்கொண்டு இருக்கேக்க உதாசீனம் செய்திட்டுப் போறீர்? இதத்தான் பிள்ளைகளும் பழகினம். பபிதா ஒருக்காலும் என்னோட இப்பிடி நடந்து கொள்ளுறேல்ல. இப்ப, மதிக்காமல் கதைச்சிட்டுப் போறா. முதல், ஆரிட்டக் கேட்டுட்டு பார்க்குக்கு எல்லாம் அனுப்புறீர்?” அதட்டி அவளை நிறுத்தினார்.
“ டேமியன்தான் போகச் சொன்னவர் அன்ரி.” என்றவள், அதற்குமேல் ஒரு சொல் கதைக்கவில்லை.
“ஒரு மாதிரி அவனுக்குக் குழையடிச்சுக் கலியாணம் செய்திட்டீர். இனி என்ன, பழசுகள மறந்திட்டு கெப்பர் காட்டிக்கொண்டு திரியலாம் என்ன?”நக்கலாகக் கேட்டவரை, வாயே திறவாதவள் மிகவுமே எரிச்சல் கொள்ள வைத்தாள்.
“என்ன உம்மட உடமைகள எல்லாம் கொண்டுவந்து அடுக்கியாச்சுப் போல!”அவர்களின் அறையைக் காட்டிக் கேட்டவர், கல்யாணியின் முகம் கன்றி, கண்கள் கசிவதை எள்ளல் சிரிப்போடு பார்த்தார்.
“கார் வரப்போகுது. போங்கோ நான் வாறன்.” என்றாள் பிள்ளைகளிடம். அவர்களுக்கு அங்கிருந்து அசைவதிலேயே உடன்பாடில்லை.
“அப்பம்மா ஏன் உங்கள ஏசுறா?” கண்கள் கலங்க முணுமுணுத்தாள்,சிறுமி .
“அங்க என்ன முணுமுணுப்பு? அதான் சொல்லியாச்சு எல்லா? ஒடுங்க!”அதட்டல் போட, பிள்ளைகள் ஓடிவிட்டார்கள்.
“அந்த அலுமாரிக்க பியங்காட உடுப்புகள் எல்லாம் இருந்ததே, அதெல்லாம் எங்க? என்ன செய்தனீர்?”என்றவர், “என்ன அருமையான பிள்ள பியங்கா. ஒருநாள் எங்கட முகம் கோண நடந்தில்ல. அந்த ராசாத்தி வாழ்ந்த இடத்தில கண்ட கண்டதுகள் வந்து இருக்கிறது போல ஆகிற்றே! என்ன பாவம் செய்தமோ யேசுவே!” கண்களைத் துடைத்துக்கொண்டார்.
“என்ர மருமகளிட உடுப்புகள எல்லாம் என்ன செய்தீர் எண்டு கேட்டனே, விளங்கேல்லையா?” அழுகையோடு அதட்டினார்.
“அலுமாரிக்க ஒரு உடுப்பும் இருக்கேல்ல அன்ரி. இவர் வரவிட்டுக் கேட்டுப் பாத்திட்டுச் சொல்லுறன்.”என்றுவிட்டு, விடுவிடுவென்று செல்பவளை என்ன செய்வது?
என்ன என்றாலும் அவளே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ‘நீ இரண்டாம் தாரமடி, அதுவும் எங்களுக்குப் பிடிக்காதவள்’ என்று சொல்லி அவளை வருத்திவிட்டார். அவளை மட்டுமா? அப்போதுதான் காலை வேலை முடிந்து வந்த சுமதி, இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றது என்று எல்லாம் கிறிஸ்டினாவுக்கு மனத்துக்குப் பெரும் ஆறுதல் கொடுத்தது.
விடுவிடுவென்று கீழே சென்றவர் அசையாது நின்ற சுமதியின் முன்னால் சென்று நின்றார். களைப்பில் சுருங்கி மெலிந்து, பார்த்திருக்கக் கிழவியாகிய தோற்றத்தில் நின்றவர் அவருக்குப் பரிதாபம் உருவாக்கவில்லை.
“திரும்ப திரும்ப எவ்வளவு சொல்லியும் அசையிறது இல்ல எண்டு இருக்கிறாய் போல! உன்ர மகள் நிம்மதியா இங்க இருக்கேலாமல் போனால் அதுக்கும் நீதான் காரணம், நினைவில் வச்சிரு! நீ இங்க இருந்து கண் காணாமல் போகோணும். மகளப் பிரிய விருப்பம் இல்லையோ அவளையும் கூட்டிக்கொண்டு போயிரு!”என்றுவிட்டு மாடியேறியவர் தன்னறைக்குள் புகுந்துகொண்டார்.
ஏதோ, மனத்துள் கனன்ற கோபத்தில் அதையிதை என்று கதைத்துவிட்டார்தான். இப்போது, டேமியனிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று கல்யாணி சொன்னது நினைவில் வந்து சற்றே உதறல் கொடுத்தது.
“உடனே நியாயம் கேட்டுக்கொண்டு வந்திருவானே” முணுமுணுத்தவர், மகனோடு மல்லுக்கட்ட, தன்னை நியாயப்படுத்த, எப்படி எப்படியெல்லாம் கதைக்கலாம் என்று நினைத்துக்கொண்டே தோய்வதற்காக தலையில் எண்ணையை எடுத்து வைத்தார்.
பிள்ளைகள் மூவரும் புறப்பட்டுச் செல்வது கேட்டும் வெளியே வரவில்லை.
மகள்,சமையலறையில் சாதாரணமாக நின்று சமைப்பதைக் கண்ணீரோடு எட்டிப் பார்த்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டார், சுமதி.
கசிந்த கண்களைத் துடைத்துக்கொண்டுதான் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள், கல்யாணி. கிறிஸ்டினா கதைப்பவற்றைக் கருத்தில் எடுப்பதே இல்லை என்று முடிவோடு இருந்தாலும் சுருக்கென்று மனம் வலித்தது. ஆனால் ஒன்று, அவள் டேமியனுக்கு இரண்டாம் தாரம் என்றது வெளியில் கிடக்கும் கதை. அதைச் சுட்டி, தன்னை நோகச் செய்யலாம் என்று நினைக்கையில் பக்கென்று சிரிப்புத்தான் வந்தது. அதைக் கட்டுப்படுத்தி உதடுகளில் நெளியாக முறுவலைப் படரவிட்டுக்கொண்டே நேரத்தைப் பார்த்துவிட்டுச் சமையலை துரிதப்படுத்தினாள்.
அரைமணித்தியாலம் சென்றிருக்கும். “கல்யாணி இந்த பிளாஸ்கில் கொஞ்சம் சுடு தண்ணி தாறியாம்மா?” என்ற தாயின் குரலுக்கு வந்தவள், “அம்மா நீங்க ஏன் குசுனிக்க வாறீங்க இல்ல? கிரிஸ்டி அன்ரி ஏதாவது சொன்னவாவோ?” விசாரிக்கும் பாவனையில் கேட்டிருந்தாள்.
“விசரா குஞ்சு உனக்கு? களைப்பா இருக்கம்மா. அதான் கொண்டு வந்து வச்சு விடு எண்டன். இல்லாட்டி பிளாஸ்க அப்பிடி வச்சிட்டுப் போ, நானே வந்து வச்சு எடுக்கிறன்.”என்றார் சுமதி.
“அப்பிடி அவா ஏதாவது கதைச்சாலும் ஒரு காதால கேட்டு மற்றதால விட்டிருங்க அம்மா.” என்றுவிட்டுச் சென்றாள் கல்யாணி.
அந்நேரம் அழைப்பு மணி ஒலித்தது.
“ ஒருக்கா ஆர் எண்டு பாருங்க அம்மா .” என்ற மகள் குரலுக்கு, மிகவும் தயக்கத்தோடு மாடியைப் பார்த்துக்கொண்டுதான் வாயிலை நோக்கிச் சென்றார்,சுமதி.
கதவைத் திறந்தவர் தலையில் அந்த வீடே பொலபொலவென்று இடிந்து விழும் உணர்வு! கதவை இறுகப் பற்றியதுதான் தெரியும்.
கதவோடு சேர்ந்து அப்படியே அரைந்துகொண்டு சவண்டு விழுந்தவரை, “ ஐயோ என்ன இது?” என்றுகொண்டு வந்து பிடித்துத் தரையில் கிடத்தினார், அந்தப் பெண்மணி.

