நட்சத்திரா – 35

35
“கிறிஸ்டி அக்கா …கிறிஸ்டி அக்கா இங்க ஒருக்கா வாங்கோ!” என்றது புதுக்குரலொன்று. அதோடு, அக்குரலில் இருந்த பதற்றம், கை வேலையை அப்படியே விட்டுவிட்டுக் கல்யாணியை முன்னறைக்கு விரைந்து செல்ல வைத்தது.

அதுபார்த்தால், நீட்டி நிமிர்ந்து நிலத்தில் கிடந்த தாயைப் பார்த்தவளுக்குச் சட்டென்று அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போயிற்று. அப்படி அதிர்வோடு நின்றதும் சில கணங்கள்தான்.

“என்ன பிள்ள பாத்துக்கொண்டு நிக்கிறீங்கள்? தண்ணி எடுத்துக்கொண்டு ஓடி வாங்கோ!” சுமதியருகில் அமர்ந்திருந்த பெண்மணி பதற்றமாகச் சொன்னார்.
விரைந்து சென்று தண்ணீரோடு வந்தவள் தாயருகில் அமர்ந்தாள். அப்போதுதான், தான் ஒரு தாதி என்பதே அவள் நினைவில் வந்தது.
தண்ணீரை மெல்லத் தெளித்துவிட்டு, அவரின் பல்ஸ் பார்த்தவள், “அம்மா , இஞ்ச பாருங்க, எழும்புங்கம்மா!” கன்னத்தில் தட்டினாள்.

“இஞ்ச தாரும்…” என்று, தண்ணீரை வாங்கிச் சற்றே அதிகமாகத் தெளித்தார், அந்தப் பெண்மணி.

“நல்ல காலம், தல நிலத்தில அடிபட முதல் பிடிச்சிட்டன்.”என்றவர், மீண்டும் ஒரு தடவை தண்ணீரைத் தெளிக்க, சுமதியின் விழித்திரைக்குள் கண்மணிகள் அங்கும் இங்குமாக உருண்டன.

“அம்மா… அம்மா” என்று எழுப்பியவள், பொங்கிவந்த விம்மலை அடக்குவதற்கு வெகுவாகவே சிரமப்பட்டுப் போனாள்.

தன் கல்யாணத்தோடு, தாயைக் கவனிக்காது விட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவளை மென்று தின்றது.

இந்த வீட்டுக்கு என்று வந்த பின்னர், தாயோடு சேர்ந்து உணவுண்ட தருணங்கள் இல்லை என்று சொல்லலாம். மதியப்பொழுதும் இராப்பொழுதும் வேலை முடித்து வரும் போது வெளியில் சாப்பிட்டுவிட்டு வந்ததாகச் சொல்லிவிடுவார். இல்லையோ, “கொஞ்சமா…சரியான கொஞ்சமா அறைக்க வச்சி விடுவியாம்மா? குளிச்சிட்டுச் சாப்பிடுறன்.” என்பார்.

இத்தனைக்கும் அவளுக்கு வேலையிலும் விடுமுறை. வீட்டில் நின்றுகொண்டே என்ன செய்திருக்கிறாள். தன்னைத்தானே சாடிக்கொண்டே,

“அம்மா!”அழுகையோடு அழைத்தபடி தாயின் தோளைப் பற்றி அசைத்தாள், கல்யாணி.

மகள் குரலில் இருந்த பதற்றமும் அழுகையும் சட்டென்று சுமதியை உலுப்பி விழிக்க வைத்துவிட்டிருந்தது. மெல்ல மெல்ல விழிகளைத் திறந்தார். போட்டியாக வடிந்தது கண்ணீர். கண்களைச் சுருக்கியபடி அவதியாகச் சுழன்றது பார்வை. அதற்கிடையில், தான் நிலத்தில் கிடப்பது உணர்ந்து சட்டென்று நிமிர்ந்தமர்ந்தார்.

“இப்ப நீ ஏன் அழுகிற? எனக்கு ஒண்ணும் இல்ல, கண்ணத் துடை பிள்ள.” மகளிடம் சொன்னவர் குரல், வழமையை விடவும் நிமிர்வாகவும், சற்றுமுன் மயங்கியவர் இவரா என எண்ண வைக்கும் அளவிற்கும் கணீரென்றும் வெளிவந்தது. அது மட்டும் அல்ல, விழிகளை நிதானமாகச் சுழற்றியவர் பார்வை ஓரிடத்தில் குத்திட்டு நின்று நெருப்பைக் கக்கியது!

தாயின் பார்வையோடு கல்யாணி பார்வையும் நகர்ந்தது.

சட்டென்று எழுந்தவள் தாயையும் எழுப்பிப் பிடித்து நிறுத்திக்கொண்டே, “வாங்கோ…ஜோசப் அங்கிள்! அம்மா மயங்கிக் கிடந்ததில கவனிக்கேல்ல, உள்ள வாங்கோ!” என்றவளுக்கு, அப்போதுதான் தாயைத் தாங்கிப் பிடித்த பெண்மணி, ஜோசப்பின் மனைவியென்று புரிந்தது.

“வாங்கோ அன்ரி!” என்று, அவரையும் வரவேற்ற நேரம், மாடியிலிருந்து இறங்கி வந்தார், கிறிஸ்டினா.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்தவர்,கீழே கேட்ட பேச்சுக்குரலில் நெற்றி சுருங்க இறங்கி வந்தால்…
அங்கு நின்றவர்களைப் பார்த்ததும் மின்னல் தாக்கிய அதிர்வில் ஆடாது அசையாது நின்றுவிட்டார்.

எப்போதும் சகோதரன் வந்தால் எவ்வளவு மகிழ்வாக வரவேற்பார். அடுத்தடுத்த நாட்கள் கலகலப்பை மட்டுமே தாங்கிக் கடக்கும். இன்றோ!

‘இருக்கிற பிரச்சின போதாதா? இப்பிடி ஒரு சந்தர்ப்பம் வர முதல், இந்தச் சனி மனிசிய அப்புறப்படுத்துவம் எண்டா அது அசையேல்ல’ மனத்துள் சினந்தபடி சுமதியைப் பார்த்தார், கிறிஸ்டினா.

சுமதியோ, உச்சபட்ச உக்கிரப் பார்வையால் ஜோசப்பைப் பொசுக்கிக்கொண்டு நின்றார்.

ஜோசப்புக்கு அப்படி எதுவும் இல்லைப் போலும். கல்யாணியையும் சுமதியையும் அவர் பார்த்த பார்வையில், இளக்காரமும் அரியண்டமும் கலந்து கிடந்தது. அவ்வளவே.

கிறிஸ்டினாவைக் கண்டதும், தாயோடு அவரின் அறைப்பக்கமாக நகர்ந்தாள், கல்யாணி.

“அம்மா விழுந்து அடிபட முதல் பிடிச்சதுக்கு நன்றி அன்ரி!” என்றுகொண்டுதான் நகர்ந்தாள்.

அதற்குள், “ஏய், இஞ்ச கொஞ்சம் நில்லு!”உறுமலாக வந்திருந்தது, ஜோசப் குரல்.

“என்ன அக்கா, வந்தவன வா எண்டு சொல்லாமல் திகைச்சுப்போய் அப்பிடியே நிக்கிறீங்க?” கோபமாகக் கேட்டபடி உள்ளிட்டார், அவர்.

“உங்கட செல்ல மகனுக்கு, சொல்லாமல் கொள்ளாமல் கலியாணம் செய்து வச்சிட்டீங்க என்ன? டேமியன் அப்பிடியே இருக்கோணும் எண்டு நான் சொல்லேல்ல அக்கா. அதுக்கெண்டு ஆர் எவர் எண்டு பாக்காமல் கட்டி வைப்பீங்களோ!”உறுமினார்.

அந்தக் குரல் கல்யாணியின் நெஞ்சைச் சில்லிட வைத்தது. ஏற்கனவே கிறிஸ்டிக்கு இந்தக் கலியாணத்தில் துளியும் விருப்பம் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாயிற்றே! இருந்தும் அவளையும் அறியாதே கிறிஸ்டினாவைப் பார்த்தாள். அவரோ, சகோதரனை வெறித்தபடி நின்றிருந்தார்.

நெஞ்சம் எரிமலையாகக் கொதிக்க கொதிக்க மகள் பிடியில் நகர்ந்துகொண்டிருந்த சுமதி, ஜோசப்பின் ‘ஏய்’ என்ற விழிப்பில் உடல் அதிர நின்றுவிட்டார். அக்கணம், மகள் வாழ்வு ஆயுளின்றி ஊசலாடுவதாக உணர்ந்தது அவருள்ளம்.

எவனை, எஞ்சிய வாழ்நாளில் சந்தித்திரவே கூடாதென்று விரும்பினாரோ, அவன் கண் முன்னால். அதுவும் பாசத்துக்குரிய மருமகனின் மாமனாக!
உலகம் மிக மிகச் சிறியது என்று உணர்ந்த தருணம் அது. இதுவரை அனுபவித்த கொடும் துன்பமெல்லாம் ஒன்றுமேயில்லை என்றளவில் கடும் வலி தந்தது.

“எங்களுக்குச் சொல்லாட்டிக் கேள்விப்படவே மாட்டமோ அக்கா ? எந்தச் சாதி , படிப்பு, வசதி வாய்ப்பு எண்டு பாக்காட்டிக் கூடப் பரவாயில்ல. அப்பிடித்தானே முதல் இத்தாலிக்காரியக் கட்டினவன். இது, போயும் போயும் குணங்கெட்ட, சீரழிஞ்ச குடும்பத்த வீட்டுக்கக் கொண்டுவந்து வச்சுச் சீராட்டிக்கொண்டு இருக்கிறீங்களே! பாத்துக்கொண்டு இருப்பன் எண்டு நினைக்கிறீங்களா அக்கா? அத்தார் மட்டும் உயிரோட இருந்திருக்க இதெல்லாம் நடக்குமா என்ன?” என்று இரைந்தவரை நோக்கி விரைந்து நகர்ந்தார், அவர் மனைவி.

“கல்யாணமே நடந்திட்டு ஜோசப் , இனி என்ன செய்யிறது? தயவு செய்து அமைதியாக் கதையுங்க!” அதட்டலாகச் சொன்னார்.

“கலியாணம் முடிஞ்சிட்டா? முதல், உரிமையான சொந்தபந்தங்களுக்கு ஒளிச்சுச் செய்யிறது எல்லாம் கலியாணமா என்ன?” என்றவர் குரலிலும் பாவனையில் அவ்வளவு இகழ்ச்சி.

“ஏய் கிழவி, வந்ததில இருந்து பாக்கிறன் என்னடி முறைக்கிற?” மட்டு மரியாதையின்றி கணவன் கதைக்கும் விதத்தில், அவர் மனைவி திகைத்துப் போனார்.

“இஞ்சேப்பா!”பதற்றமாக அழைத்தவர் குரல், ஜோசப்பின் குரலில் அமிழ்ந்து போயிருந்தது.

“நீ எத்தின வருசம் என்ன தொழில் செய்தனி எண்டு என்ர அக்காக்கும் டேமியனுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனா எனக்கு? தோட்ட வீட்டுக்கக் கிடந்த பரதேசிகளுக்கு என்ர மருமகன் கேட்குதோ!” கூர் வாள் வெட்டாக ஒரு ஒரு வார்த்தையும் இருக்க, சுமதியின் முன்னால் சென்று நின்றார், ஜோசப்.

“நீ ஒரு விபச்சாரி, அப்ப உன்ர மகள் எப்படிப்பட்டவளா இருப்பாள்? வெளிய போ கேடுகெட்ட எளிய நாயே!”என்றவர் இடக்கரம் கல்யாணியின் பிடரி மயிரைக் கொத்தாகப் பற்றிவிட்டிருந்தது.

கண்ணிமைப்பொழுதுதான், நெருப்பென வந்து விழுந்த வார்த்தைகளில் பொசுங்கிப் போய், கூனிக் குறுகிவிட்ட கல்யாணிக்குச் சுதாரிக்க எல்லாம் இடம் கொடுக்கவேயில்லை. தரதரவென்று இழுத்து வந்து வெளியில் தள்ள முயன்றார்.

“ ஓ ஜீசஸ்! ஜோசப் என்ன இது கொஞ்சமும் மரியாத இல்லாமல், முதல் கைய எடுங்கோ சொல்லுறன்!” என்று குறுக்கே வந்த மனைவியைப் பொருட்டாகவே பார்க்கவில்லை.

“போடி வெளிய, உன்ர ஆத்தைக்கு வயசு போயிற்று, நீ போய் அந்தத் தொழிலச் செய்!”என்றவர் பார்வை இச்சையோடு கல்யாணியில் மேய்ந்ததைக் கூட அவள் உணரவில்லை. அந்த மனித மிருகம் நோக்கிப் புயலாக நகர்ந்த சுமதி கண்டுவிட்டார். சுவாலையாக நெஞ்சு எரிய, நெருங்கிய வேகத்தில் பளாரென்று இழுக்கக் கையை வீசியிருந்தார், சுமதி.

அதற்குள், ஜோசப் கன்னத்தில் இடியாக விழுந்த அறையில் நிற்கவே முடியாது தள்ளாடியவர், சுதாரிக்க முதல் பளார் பளாரென்று விளாசித் தள்ளியிருந்தான், டேமியன்.

“ஐயோ தம்பி!” அதிர்வோடு கூவிக்கொண்டு வந்த ஜோசப்பின் மனைவி, டேமியனைத் தடுக்க முனைந்தார். நொடியில் ஒரு கரத்தால் விலக்கி விட்டிருந்தான்.

“ டேமியன்!”என்ற கிறிஸ்டினாவின் உரத்தொலித்த அதிர்வுக் குரலைக் காதிலேயே வாங்கவில்லை.

“இப்ப சொல்லடா அந்த வார்த்தய, சொல்லன் பாப்பம்? என்ர வைஃப் என்ன தொழில் செய்யோணும் . சொல்லன்…சொல்லு!” பாறை போல் இறுகியிருந்த முகத்தில் செவ்வரியோடிய விழிகள் உறுத்து விழித்திருக்க, அடிக்குரலில் உறுமியபடி நெருங்கியவனை உச்சபட்சப் பீதியோடு பார்த்த ஜோசப்புக்குக் குரலே வரவில்லை.

அந்த மனிதனின் நெஞ்சு குளிர்ந்து நடுங்கியது. சட்டென்று வயிறு வேறு கடமுடவென்று கலங்கியது. சற்றுமுன் இச்சையோடு அடுத்தவன் மனைவியை ரசித்த மனமோ, வயோதிபத்தில் தளர்ந்து தள்ளாடியது.

அப்போதும் கூட, மாமா என்றதிற்கு மறுசொல் சொல்லாதவன், இன்று, இந்தளவுக்குக் கேவலமாக நடத்துவானோ! ‘அதுவும் இந்தக் கேடுகெட்டவள்களுக்காக!’ என்று, அவர் மனம் அலறியது.

“கல்யாணி என்ர வைஃப்! இது அவவின்ர வீடு. சுமதிம்மா எனக்கும் அம்மா. அப்பிடியிருக்க, இங்க வந்து நிண்டு என்ன எல்லாம் சொல்லுற நீ?”
அவன் உறுமலில் அவ்வீட்டில் நிறைந்திருந்த காற்றே நடுங்கியதோ! மூச்செடுக்கத் தடுமாறினார்கள் ஜோசப், அவன் மனைவி மற்றும் கிறிஸ்டினா.

“பெத்த தகப்பன் போல… உங்களுக்காக …எல்லாம் செய்யிற என்னையே… இந்தக் கேடுகெட்டவள்களுக்காக அடிச்சி அவமானப்படுத்திட்ட என்ன?” குரல் நடுங்கச் சொன்னவர் கன்னத்தில் விழுந்த அறையில் சொண்டு வெடித்தது. சமூகத்தில், மரியாதையும் மதிப்புமிக்க அந்தப் பெரிய மனிதன் அணிந்திருந்த வெள்ளைப் பருத்திச் சட்டை, சிவப்புக் கறைகளைப் பளிச்சென்று காட்டியது.

“ஐயோ டேமியன்! உங்களுக்கு என்ன விசரா பிடிச்சிட்டு?” தாயை உதறிவிட்டுச் செல்ல முயன்ற கல்யாணியை, சுமதி இறுக்கப் பற்றித் தடுத்திருந்தார்.
அதிர்ந்தாள், கல்யாணி. “அம்மா விடுங்க!”அதட்டலாகச் சொல்லி, தாயின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக விடுபட்டவள், அடுத்த நொடி டேமியன் முன்னால் சென்று நின்றிருந்தாள்.

“ என்ன நீங்க?” அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள், அவன் விழிகளைச் சந்தித்த கணம் சுக்குநூறாகிப் போனாள்.

“ ப்ளீஸ் விடுங்க டேமியன்! வெளில சத்தம் கேட்டுப் பொலிஸ் வந்து …இதெல்லாம் தேவையா டேமியன். ப்ளீஸ்!”
விம்மி வெடித்து அழுதபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளை, இடக்கரத்தால் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவனின் கோவைப் பழம் போல் சிவந்த விழிகள், ஜோசப்பைச் சாம்பல் ஆக்கிவிட முடிந்தால் என்று வழிதேடிப் பார்த்தன.

“பாத்தியா? இது மனிசத்தனம். நீதான் பிணந்திண்ணிக் கழுகு ஆச்சே!”என்றவன், “ என்ர வைஃப் கல்யாணியோ சுமதிம்மாவோ எதையும் இஞ்ச… எங்களிட்ட மறைக்கேல்ல ஜோசப். ஆனா, இப்பவரை நல்லவன் வேசம் போட்டுகொண்டு மதிப்பும் மரியாதையுமா நடமாடுற நீ…உன்னால நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உண்மையச் சொல்லேலுமாடா? எளிய நாயே!”உறுமிக்கொண்டே, கல்யாணியைத் தள்ளிவிட்டு ஜோசப்பை நெருங்க முயன்றவனை, “டேமியன் பிளீஸ்! டேமியன்.”விடாது பிடித்துகொண்டாள், அவள்.

“இஞ்ச பார் கல்யாணி!”மனைவியை விலத்தி நிறுத்தினான், அவன்.
“உன்ர வீட்டுக்கு வந்து நிண்டு, அவ்வளவு கேவலமாக் கதைச்சு, பிடரியில பிடிச்சு வெளில தள்ளப் பாத்தவன் எல்லா? ஏன் பேசாமல் நிண்டனி? துணிவில்லாதவளா நீ? ஆங்… உன்ர அம்மாவ அவன் கேவலமாச் சொல்லுறான், பாத்துக்கொண்டு நிக்கிற. உண்மையா நடந்தது தெரிஞ்சா என்ன செய்வ?” என்றவன், தாயையும் ஜோசப்பையும் ஒரு பார்வை பார்த்தான்.அப்படியே சுமதியில் தீர்க்கமாகப் பார்வையை நிலைக்கவிட்டான் .

“வேணாம் தம்பி!”கைகூப்பினார் அவர். தன் சீரழிவுக்குக் காரணமே ஜோசப்தான் என்று தெரிந்தால் கல்யாணி எப்படி வினையாற்றுவாள்?

“பார் சுமதிம்மாவ , இப்பவும் சொல்ல வேணாம் எண்டு சொல்லுறா. எப்பவும் சொல்லமாட்டார் . உன்ர அம்மா அவ்வளவு துன்பமும் பட ஒரு எம் பி காரணம் எண்டு உனக்குத் தெரியும் ரைட். ஆர் எண்டு நினைவில்ல எண்டடவர் ரைட். சொல்ல விரும்பேல்ல எண்டு உனக்கும் தெரியும் ரைட் .அவன் வேற ஆரும் இல்ல, இந்தப் பெரிய மனிசன்தான்.” ஒரே மூச்சில் உறுமலாகச் சொல்லிவிட்டான்,டேமியன்.

அதை, ஜோசப்பின் மனைவியாலும் கல்யாணியாலும் துளியும் நம்ப முடியவில்லை. விழிகள் விரிய உச்சபட்ச அதிர்வோடு தாயைப் பார்த்தாள், கல்யாணி.

“பிறகு, உனக்குக் கதை சொல்லுறான். ஆரும் இல்ல எண்ட துணிவுதானே? நான் இருக்கிறன்.” மனைவியை விலத்திவிட்டுச் சென்று, தரதரவென்று இழுத்து முற்றத்தில் தள்ளிவிட்டான்.

வாழ்வில் இப்படியொரு அவமதிப்பைப் பெற்றிராத ஜோசப், உச்சபட்சமாக அசிங்கப்பட்டுத் தொய்ந்து நின்றார்.

“போயிரு! இனி இப்பிடி ஒரு உறவே எனக்கு இல்ல.”என்றுவிட்டுச் சரேலென்று திரும்பியவன், கண்ணீரோடு நின்ற அவன் மனைவியைச் சென்றுவிடச் சொல்லி வெளிவாயிலைக் காட்டினான்.

கணவன் என்ற உறவின், துரோகத்தின் ருசி உயிர் குடித்திருக்க, சவண்டு தொய்ந்த உடலையும் பயணப்பைகளையும் இழுத்துக்கொண்டு வெளியேறினார், அந்தப் பெண்மணி..

முன்வாயில் கதவைப் படீரென்று அறைந்து சாத்தினான், டேமியன்.

error: Alert: Content selection is disabled!!