நட்சத்திரா 36 – 1

36

“உங்கட மாமாவால தான் என்ர அம்மாக்கு இந்த நிலை வந்தது எண்டு தெரிஞ்சும் இவ்வளவு நாளா என்னட்ட மறைச்சு இருக்கிறீங்க, அப்பிடித்தானே?”
கூர்மையான குரலில் கேட்ட கல்யாணியின் பார்வையில் அவ்வளவு உக்கிரம். அவனையே குற்றவாளிபோல், அதையும் தாண்டித் துரோகிபோல் பார்த்தாளோ! அவன் அப்படித்தான் உணர்ந்தான்.

உன்மையில், கல்யாணியின் உள்ளம் கிடுகிடுவென்று அதிர்ந்துகொண்டிருந்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் நடுங்கின. இந்தப் பெரும் பூமியில் அவர்கள் இருவருக்கும் நிம்மதியாக வாழ ஒரு இடம் கிடையாதா என்று, சொந்த நாட்டை விட்டு இத்தூரமாக வந்து எங்குத் தங்கியிருக்கிறார்கள்?

அதோடு நின்றதா? இத்தனை வருடங்களின் பின்னர் யாரோடு அவள் வாழ்க்கையைப் பிணைத்துள்ளாள்! அதுவும் உயிரில் ஒன்றாகக் கலந்த நேசத்தோடு இணைந்துக்கொண்ட உறவு டேமியன். இக்கணம், அந்தக் கொடூரன் ஜோசப் வேறு டேமியன் வேறென்று பார்க்க முனைந்தாலும் அவளால் முடியவில்லையே!

சுவாசம் திணறியது. ஓவென்று பெருங்குரலில் குழற வேண்டும் போலிருந்தது. செய்யவில்லை. கல்யாணி இரும்பாக இறுகிக்கொண்டிருந்தாள்.

மனைவியின் பார்வை, குரல், நின்ற தோரணை எல்லாமே சுருக்கென்று டேமியன் நெஞ்சைத் தாக்கின. அவள் கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லவும் வரவில்லை. தன்னையுமறியாது சொல்லிவிட்டவன், வார்த்தைகளை உதிர்த்து இவ்விடயத்தைப் பற்றி மேலும் கதைக்கவே விரும்பவில்லை.

‘ஜோசப் இன்னார் எண்டுறது எண்டாவது ஒரு நாள் சுமதி, கல்யாணிக்குத் தெரிய வரலாம் டேமியன். தாயிட வாழ்க்கைய நாசம் பண்ணியவன்கள் மட்டும் கிடைக்கோணும், தான் கொலைகாரியாவது நிச்சயம் எண்டளவுக்குக் கல்யாணிக்கு ஆத்திரம் இருந்தது. இப்பவும் இருக்கும். அதனாலதான், என்ர தொழில் தர்மத்தையும் தாண்டி, இவ்வளவு வெளிப்படையா அவே பற்றிச் சொல்லுறன். இதெல்லாத்துக்கும் பிறகும், கல்யாணியைக் கலியாணம் செய்து பிரச்சினைகள் வந்தால் முகம் கொடுக்கவும் தயார் எண்டால்…என்ர அன்பும் வாழ்த்துகளும் ரெண்டு பேருக்கும் எப்பவும் இருக்கும்!” அன்று, இப்படித்தான் இவனிடம் கதைத்திருந்தார், தீபா.

டேமியன் மனத்துள் அந்த நினைவுதான் வந்தது. எவ்விதமான முன்னறிப்போ, ஏற்பாடோ இன்றி நடந்துவிட்ட நிகழ்வில் அவனே அதிர்ந்து ஆடி நிக்கிறான்.
‘இதுக்குள்ள இவள்’ மனத்துள் சொல்லிக்கொண்டவன், “கல்யாணி…” என்றுகொண்டு அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

“வேணாம், கிட்ட வர வேணாம். உங்கட ஆறுதலும் சமாதானமும் எனக்குத் தேவேல்ல சொல்லிட்டன்.”அந்நியமாகக் கதைத்தவளை, விழிகள் இடுங்கப் பார்த்தான்,அவன்.

“சொல்லுங்க? முதலே தெரியும் என்ன?” மீண்டும் கேட்டவளை நெருங்கினார், சுமதி. அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தார்.

ஜோசப்பைக் கண்டதும் அப்படியொரு அதிர்வு தாக்கியதுதான். அதுதான் மயங்கிப் போகவே வைத்தது. விழித்தவர், நிலைமையை உணர்ந்து சுதாகரித்துக்கொண்டார். மகள் அளவுக்கு அதிர்வையோ கோபத்தையோ காட்டவில்லை. விரும்பவில்லை. பயன்தான் ஏது? எல்லாம் கடந்து, இப்போது அவர் மகள் வாழ்வு மட்டுமே அவருக்கு முக்கியம்.

“அம்மாச்சி!”கனிவோடு அழைத்தவர் பார்வை, மகள் விழிகளை நிதானமாக ஊடுருவியது.

“என்னம்மா இப்பிடியெல்லாம் கதைக்கிற? இனி இதுகளக் கதைச்சு ஏதாவது பிரயோசனம் இருக்காம்மா ? இஞ்ச பார், சவக்குழியக் கிண்டினா நாத்தமும் புழு பூச்சிகளும் தான் இருக்கும். அது கூட வருசங்கள் போனா மண்ணோட மண்ணாகிரும் பிள்ள. என்ர கதை அப்படியில்ல . விட்டிரம்மா!”கண்களின் கலக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றபடி சொன்னவர் குரலில் தழுதழுப்போடு கண்டிப்பும் இருந்தது.

“எப்பிடியம்மா விடுறது ? முதல், இவ்வளவு அழுக்கையும் தங்களுக்க வச்சுக்கொண்டு, தம்பிக்காரன் பொம்பளைகளைச் சீரழிக்கிற,விபச்சாரம் செய்யிற படு கேடுகெட்டவனா இருக்கேக்கையே, இவா, உங்கள என்ன பார்வை பாத்துக்கொண்டு திரியிறா. உங்கள எப்பிடி நடத்திரா. அதுக்கெல்லாம் இவாக்கு என்ன தகுதி இருக்குச் சொல்லுங்க? முதல் என்ன துணிவு இருக்கோணும்.” ஆவேசமாகக் கேட்டபடி, கிறிஸ்டினாவை அவள் பார்த்த பார்வையில் சுமதி திடுக்கிட்டுப் போனார்.

மகள் கரத்தை இறுகப்பற்றினார். விட்டால் கிறிஸ்டினா முன்னால் சென்று நின்று கேள்வி கேட்பாள் போலிருந்தது. அதேவேளை, அவருள்ளும் அதே கோபம் கனன்றதுதான். இவ்வளவும் தெரிந்தபின்னும் தன் மீதே பழிபோட்டு வார்த்தைகளால் வதைத்த பெண்மணியை எந்த வகையில் சேர்ப்பது?

ஒற்றை வார்த்தை விடாது, சுமதி பார்த்த பார்வையில் முகத்தில் காறி உமிழ்ந்தது போலிருந்தது, கிறிஸ்டினாவுக்கு. எப்போதும் போல், கூர் ஈட்டிகளாக வார்த்தைகளைத் துப்பிட முடியாது உதடுகள் ஒட்டிக்கொண்டன. அவமானத்தில் குன்றிக் குறுகிச் சொந்த வீட்டில் பிச்சைக்காரி போல் உணர்ந்து நின்றார், அவர்.
இப்போது கிறிஸ்டினாவா பிரச்சினை? அலட்சியமான பார்வையை கிறிஸ்டினாவில் நிலைக்க விட்ட சுமதி, நிதானமாக மகளைப் பார்த்தார்.
மகள் வாழ்வு மட்டுமே அவர் மனத்தில் முன்நின்றது. விசயம் தெரிந்ததில் அவ்வளவு அனுசரணையாக நடந்த மருமகனின் அன்பு மட்டுமே அவர் கருத்தில் தெரிந்தது.

மகள், கிறிஸ்டினாவைக் கதைத்தது எதுவுமே காதில் விழாத பாவனையில் கதைத்தார், சுமதி.

“ப்ச்! நடந்த விசயங்களில தம்பி என்ன செய்தவர் எண்டு இப்பிடி அவரோட கோவப்படுற பிள்ள? இப்ப மட்டுக்கும் ஒரு ஒரு விசயத்திலும் எங்களுக்கு எண்டு துணையா, பக்க பலமா நிக்கிறவர் அவர் மட்டும் தான். அதெல்லாம் என்ன தேவைக்குச் சொல்லு? உன்னில உள்ள அன்பில தானேம்மா? எனக்கு…” வேகமாகச் சொல்லிக்கொண்டு வந்தவர் குரல் தடுமாறியது. கண்ணீர் வழிந்து தெறித்தட்டு.

“உன்ர தம்பி என்னோட பக்கத்திலயே துணையா இருக்கிறது போலவே இருக்காச்சி! இப்பவும் அவர் சொல்லாட்டி உனக்கு எப்பிடித் தெரிய வந்திருக்கும். நான் ஒருக்காலும் சொல்லி இருக்க மாட்டன் குஞ்சு. விட்டிரு, இந்தக் கதையே வேணாம். நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா, மகிழ்ச்சியா இருந்திட்டா அதுவே போதும் குஞ்சு. போ, முகத்த அலம்பிப்போட்டு வந்து தம்பிக்குச் சாப்பாட்டக் குடு!” என்றுவிட்டு, தொய்ந்து போய் நடந்து தன்னறைக்குள் புகுந்துகொண்டார், சுமதி.

“அதானே ? இப்ப வந்து கண்டதையும் எங்களிட்டக் கேட்டு? எல்லாத்தையும் விட, ஏதோ என்ர மகனும் நானும் குற்றம் செய்த கணக்கில நிக்க வச்சிக் கேள்வி கேக்கிற நீ ? எல்லாம் இவன் குடுத்த இடம் தானே? அவன்…ஜோசப் என்ர தம்பிதான், ஆனா அவன்ர நடத்தைக்கு எல்லாம் நானோ என்ர குடும்பமோ பொறுப்பேக்கேலாது!” சுதாகரித்திருந்த கிறிஸ்டினா சீறினார்.

“இருந்தாலும் எண்டைக்கு எண்டாலும் இந்த விசயம் தெரியவரேக்க, என்ர குடும்பத்துக்க வீண் பிரச்சினை வரும் எண்டு தெரிஞ்சுதான் இந்தக் கலியாணம் வேணாம் எண்டு நினைச்சனான். தாயும் மகளும் விட்டீங்களோ? நாண்டு கொண்டு நிண்டு செய்திட்டு இப்ப வந்து கேள்வி கேக்கிறா கேள்வி. மொத்தத்தில என்ர குடும்பத்திட அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி எல்லாத்தையும் ஆத்தையும் மகளுமா அழிச்சிட்டீங்க!”என்றவர், அழுகையும் கோபமுமாக மகனைப் பார்த்தார்.

“இவ்வளவுக்கும் பிறகு, இப்பிடிக் கதைக்கிற உங்களோட நிண்டு கதைச்சா எனக்குத்தான் பரிசிகேடு!” கோபப்பார்வையும் வெறுப்புமாகச் சொன்னாள், கல்யாணி.

கிறிஸ்டினாவிற்கு, மீண்டும் கன்னத்தில் இழுவை வாங்கிய உணர்வு. சுமதி, கல்யாணி முன்னால் இந்தளவுக்குத் தரமிறங்கிவிட்டாரே! இதுவரை, சகோதரன் செய்கையில் வெட்கி, கூனிக் குறுகிப் போனாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. கோபத்தையும் ஆத்திரத்தையும் அப்படியே தாய் மகளில் வெளிப்படுத்தித் தன் குன்றலை மறைக்க முயன்றிருந்தார்.

இப்போது, கோபம், ஆத்திரம் எல்லாம் அப்படியே மகனில் திரும்பியது.
கல்யாணி கதைக்க கதைக்கப் பார்த்துக்கொண்டு வேறு நிற்கிறானே!

“எனக்கு மட்டும் இல்ல, உனக்கும் இதான். தலைப்பாடா அடிச்சுக்கொண்டனான் எல்லா? நீ காதில வாங்கேல்ல. இனி உனக்கு இதான் வாழ்க்கை. உன்ர தலைவிதிய ஆராலேயும் மாத்தேலாது. பட்டு அனுபவி!” உறுமலாகத் தொடங்கியவருக்குத் தொண்டை அடைத்திட்டு. விறுவிறுவென்று மாடியேறியவர், விசுக்கென்று திரும்பி மகனைப் பார்த்தார்.

“என்னால முடிஞ்ச அளவு, அதையும் விடக் கீழ இறங்கி இந்த வீட்டில இருந்திருவம் எண்டு நினைச்சனான். உனக்கு நான் தேவையில்ல எண்டாலும் உனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தான் இருந்தனான். ஆனா, இனியும் என்னால இங்க இருக்கேலாது. அதும் அவ்வளவு தெளிவா இந்த வீட்டுக்கு உரிமையான மனிசர் எண்டு நீ அவேயளச் சொன்ன பிறகு நான் ஆர் இங்க? நான் என்ர மகளிட்டக் கனடாக்கே போயிறலாம் எண்டு இருக்கிறன்.” சொன்ன வேகத்தில் அழுதுகொண்டே விறுவிறுவென்று மாடியேறினார்.

கிறிஸ்டினா கதைத்தவை எதுவுமே கல்யாணியினுள் எந்தத் தாக்கமும் உருவாக்கவில்லை. “நல்ல நாடகம்.” என்றபடி, அசையாது நின்ற டேமியன் விழிகளைக் கூர்ந்து பார்த்தாள்.

“எனக்குப் பதில் சொல்ல மாட்டீங்க என்ன? அப்ப எல்லாமே தெரிஞ்சுதானே இருக்கு? உங்களிட்ட நான் எதையுமே மறைக்க நினைக்கேல்ல டேமியன். ஆனா நீங்க?” என்றவள், “இது முதலே தெரிஞ்சிருந்தா, கல்யாணத்த நிப்பாட்ட, தேவையே இல்லாத நாடகம் எல்லாம் போட வேண்டிய தேவை உங்கட அம்மாக்கு வந்திராது.” இகழ்ச்சிச் சிரிப்போடு சொல்லி, அவன் முகத்தைக் கன்ற வைத்தாள்.

“காறித் துப்பிப்போட்டுப் போயி…” சினத்தோடு வார்த்தைகளை உதிர்த்தவள், டேமியன் முகம் போன போக்கில் வசனத்தை முடிக்கவில்லை. கதவைத் திறந்து படீரென்று சாத்திவிட்டு வெளியேறி இருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!