நட்சத்திரா – 37

37

“அம்மா… ஏனம்மா?” என்றபடி, கிறிஸ்டினாவின் அறைக்குள் உள்ளிட்டான், டேமியன். அவன் உச்சரித்த அந்த இரு சொற்களில் அத்தனை வலி. அதை, அவன் தாயும் உணர்ந்துகொண்டார். இருந்தாலும் அவர் மனத்தில் சிறிதேனும் இளக்கம் வரவில்லை.

“இப்பிடி ஒண்டு மாறி ஒண்டு பிரச்சினையா வந்தா எதையெண்டு பாப்பன் சொல்லுங்க? நிம்மதியா மூச்சு விடக் கிடைக்குது இல்ல. நான் தொழிலப் பாக்கிறது இல்லையா? இது உங்கட வீடு இல்ல எண்டு நான் எப்பயாவது சொன்னனானா? மனத்தத் தொட்டுச் சொல்லுங்கோ பாப்பம்.” தன்மையாக ஆரம்பித்தவன் படபடத்தான். முடிக்கையில் குரலில் கோபமும் கலந்துகிடந்தது.
கிறிஸ்டினா எதையுமே பொருட்படுத்தவில்லை. மகன் முகம் கூடப் பார்க்கவில்லை.

கீழே நின்று கதைவழிபட்ட போது என்ன சொல்லிவிட்டு மாடியேறினார்? இங்கிருந்து வெளிக்கிடுகிறேன் என்றார் தானே? கேட்டுக்கொண்டுதானே நின்றான்? ஒற்றை வார்த்தை கதைக்கவில்லையே! அது, பெற்ற தாய் மனத்தில் சுருக்கென்று தைத்துவிட்டது தெரியாதா இவனுக்கு. சரி, தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம். மகளிடம் புலம்பித்தள்ளியிருந்தார். உடனே சகோதரனுக்கு அழைத்தாளே ஜாக்குலின். அப்போதும் விட்டேற்றியாகத்தானே கதைத்தவன்.
‘ஆனா, அந்தக் கல்யாணி முகத்த நீட்டிட்டாள் எண்டோன்ன என்ன செய்தவன்?’ அவர் மனத்தில் புகைச்சல் அதிகரித்தது.

கணம் தாமதிக்காது வால் பிடித்துக்கொண்டு போகவில்லையா? ஊருலகத்தில் இல்லாத புதினமான பொம்பளை, மனம் நொந்து போனாளாமே! சமாதானம் செய்து கெஞ்சிக் கொஞ்சிக் குலாவிவிட்டு வந்து, அவளோட சேர்ந்து வயிறு நிறைய உண்டு குடித்துவிட்டு, அந்தக் கிழவி சாப்பிட்டாளா என்று பார்த்துவிட்டு, ‘இவ்வளவு நேரத்துக்குப் பிறகுதான் நான் ஒருத்தி இஞ்ச இருக்கிறதே நினைவில வந்திருக்கு.’ பொரிந்த கிறிஸ்டினாவின் மனத்துள், புகைச்சலை விழுங்கிக்கொண்டு கோபத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது.
‘ கல்யாணி என்ர வைஃப். இது அவள்ட வீடு!’ என்றானே. அதுவே, அவர் காதுகளில் விடாது ஒலித்துக்கொண்டிருந்தது.

“இனி ஒரு தடவை எந்தக்காரணத்துக்கும் நல்லதோ கெட்டதோ இந்த வீட்டுக்குள்ள நான் வாற மாதிரி இருக்கக் கூடாது!” வெறுப்போடு வார்த்தைகளை உதிர்த்தவரை, அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த பொறுமை பறக்க, மிகவும் கோபத்தோடு பார்த்தான், டேமியன்.

“தயவு செய்து வார்த்தைய விட்டிருராதீங்கம்மா!” இடுங்கிய பார்வையோடு வார்த்தைகளைத் துப்பியிருந்தான்.
“ஏற்கனவே உங்கட வாயால என்னைப் பார்த்து மலடன் எண்ட ஒரு வார்த்த சொல்லி இருக்கிறீங்க. அது இன்னும் மனசுக்கக் கிடந்து அறுத்துக்கொண்டிருக்கு!” என்று, அவன் சொல்லி முடிக்க முதல் நிமிர்ந்து, எரி பார்வை பார்த்தார், கிறிஸ்டினா.

“நான் சொன்ன ஒரு வார்த்த உங்கட மனச அறுக்குதோ! நல்ல பகிடிதான் போங்க! அதைவிடவும் ஆயிரம் மடங்கு என்ர மனத்த நீங்க வேதனைப்படுத்துறது உங்களுக்கு விளங்கவே இல்லையா டேமியன்? சீவிக்கிறது வரை மானம் மரியாதையோடு வாழ்ந்திட்டுப் போகோணும் எண்டு இருந்தா, இண்டைக்கு…செய்க் …வெளில தெரியவந்தா எவ்வளவு பரிசிகேடு சொல்லுங்கோ!” பொரிந்தவருக்கு அழுகைதான் வந்து தொலைத்தது.

“ நான் சொன்ன அந்த வார்த்தை…”என்று இழுத்தபடி ஒரு சாதியாகச் சிரித்தார்.
“பொய்யோ திரிச்சோ சொல்லேல்லையே! பிறகென்ன?” வெடுக்கென்று சொல்லிவிட்டு மகனைப் பார்த்தார்.

அக்கணம், தான் பெற்றவன் என்றதைக் கடந்து கல்யாணியின் கணவனாகவும் சுமதியின் மருமகனாகவுமே தெரிந்தான், டேமியன்.
அவரையே பார்த்துக்கொண்டு நின்ற டேமியனுக்கு, தன்னை மீண்டும் ‘மலடன்’ என்கிறார் என்ற வருத்தம் கடந்து களைப்பாக இருந்தது.
இருந்தும் தாயின் மனத்தை விளங்கிக்கொள்ள முயன்றான். அவரில் மிகுந்த அன்பு கொண்டவனுக்கு அது இயலாத வேலையும் இல்லை. இதுவரை, எதற்குமே அவரோடு இப்படி மல்லுக்கு நிற்கும் தேவை அவனுக்கு வந்ததில்லை. கல்யாணி விடயம்தான் முதல். அதில் இந்தளவுக்குப் பிடிவாதமாக அவர் நிற்பதைக் கூட விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அவளைத் தன் வாழ்வில் இருந்து பிரித்துப் பார்க்க அவனால் முடியவே முடியாது. சுமதியை விலக்கி வைக்கவும் அவன் தயாராக இல்லை.

அப்போ இதற்கு என்னதான் முடிவு?

ஒன்றில் கிறிஸ்டினா அவர்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சமாதானம் செய்துகொண்டு மகனுக்காக, தான் பார்த்து வளர்த்த பேத்திகள் பேரனுக்காகவென்று இங்கே இருக்க வேண்டும்.
இல்லையோ, இதோ வெளிக்கிடுகிறேன் என்கிறாரே, அப்படியே ஜாக்குலினோடு சென்று தங்கிக்கொள்ள வேண்டும். முதலாவதைச் செய்விக்கவே டேமியன் பெரிதும் விரும்பினான். அன்னையையும் சேர்த்ததே அவன் குடும்பம். இத்தனை நாட்களில், அவரில்லாது தன் குடும்பம் பற்றி அவன் எண்ணியதில்லை. இனி எண்ணுவானா?அது, அவருக்கு ஏன் விளங்குது இல்லை.

‘ப்ளீஸ் அம்மா, பிள்ளைகள் கவலைப்படுவினம் எண்டு உங்களுக்கே தெரியும். நான் என்ன நினைக்கிறன் எண்டு வீம்பு பிடிக்காமல் யோசிச்சா நல்லாவே விளங்கும். சுமதிம்மாவ வருத்திறது,சீவன் இல்லாத உடம்பைப்போட்டு வதைக்கிறதுக்குச் சமம் மா. உடனே எல்லாம் சரிவராதுதான். ஆனா, இருக்கிற இடமே தெரியாமல் இங்க அவர் இருக்கிறார். இருந்திட்டுப் போகட்டுமன். இப்ப வாங்க சாப்பிடுவம்.”
மிகவும் தன்மையாகச் சொல்லி அவர் கையைப் பற்றியவனை நெருப்புப் பார்வையோடு பார்த்தார், கிறிஸ்டினா. கையையும் உதறி விடுவித்துக்கொண்டார்.

“அந்தச் சனம் இருக்கிற இடத்தில என்னால கடைசிவரை இருக்கேலாது. இப்ப, தாங்க திறமான மனுசர் எண்ட நினைப்பில என்னையே கேள்வி கேட்டாளே உன்ர மனிசி,அவா பற்றி நான் கதைக்கேல்ல. விளங்குதோ? அவவிட தாய்க்காரி இஞ்சதான் இருப்பா எண்டுறதில உன்ர முடிவு மாறாது தானே?” என்றபடி, மகனை நேராகப் பார்த்தார்.

“சொல்லு, மாறாது என்ன?”
மகனின் அமைதி அவருக்கான பதிலைச் சொல்லிற்று. கிறிஸ்டினாவின் முகம் கறுத்திட்டு. பெருத்த அவமானமாகவும் இருந்தது. ஒரு சிரிப்புச் சிரித்தார்.

“பெத்த தாயை விடவும் அந்தக் கிழவி உங்களுக்குப் பெரிசு! ம்ம்” நக்கலாகக் கேட்டார்.

வீம்புக்கு நிற்கிறார். என்ன கதைப்பது? இத்தனை ஆண்டுகளாகத் தாய் விருப்பறிந்து பார்த்து பார்த்து நடந்திருக்கிறான். அவர் மன மகிழ்வும் அமைதியும் அவனுக்கு முக்கியமாகவும் இருந்திருக்கிறது. தமையன் பெற்ற பிள்ளைகள் மூவரும் அவன் பிள்ளைகளானது கூட அப்படித்தான். ஆனால் இன்று, அவன் வாழ்க்கை என்று வருகையில், அவன் மனம், அதன் விருப்பு வெறுப்புப் பற்றிச் சிறிதும் யோசிக்க அவர் தயாராக இல்லை.
அதை, அவரிடம் பளிச்சென்று சொல்ல விரும்பினான். முடியவில்லை.
வார்த்தைகளைக் கசப்போடு விழுங்கிக்கொண்டான். அதற்குமேல் அவன் அங்கு நிற்கவில்லை.

அடுத்த நான்காம் நாள், கிறிஸ்டினா கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார். அதுவரை டேமியன் அவர் எதிரில் வரவில்லை. கிறிஸ்டினாவுமே அவனைக் காண விளையவில்லை. அவ்வளவுக்கு மனம் விட்டுப்போன உணர்வு! பிள்ளைகளைப் பிரிவது இலகுவாக இருக்கவில்லை. அதுவே, “இஞ்ச ஒண்டுக்கும் நான் தேவேல்ல என்ன? எல்லாத்துக்கும் அந்த ரெண்டு பேர் இருக்கினம்!”என்று சொல்லி, அவர்களோடும் கோப முகமாகவே இருந்துவிட்டுப் புறப்பட்டிருந்தார்.

சுமதி,யாருக்கு வந்த விருந்தோ என்றிருக்கவில்லை. கிறிஸ்டினாவோடு கதைக்க அணுகியிருந்தார். அருவருத்த பார்வையால் எட்டி நிற்க வைத்திருந்தார்.
“தாயும் மகளுமாச் சேர்ந்து, சகுனி வேல பாத்து, என்னட்ட இருந்து என்ர மகனப் பிரிச்சுப்போட்டு இங்க என்ன வேல?” உள்ளக்குமுறலை மறைக்காத சீறலோடு எதிர்கொண்டார், கிறிஸ்டினா.

“பிள்ளையில்லாத வீட்டில துள்ளி விளையாட வந்த கணக்கில, நீங்க போடுற ஆட்டங்களுக்கு இடைஞ்சலா இருக்கிற நானும் போனாப் பிறகு, அவனப் போட்டு ஆட்டிப்படையுங்க. அறிவாளி அவனுக்கு எப்ப புத்தி வருகுது பாப்பம்.” என்று, கத்தி ஏசியிருந்தார்.

பிள்ளைகள் மூவரும் என்னவோ ஏதோவென்று ஓடி வந்துவிட்டார்கள். ஒருபோதும் இல்லாதவகையில் பிள்ளைகளிடம் தன் மன ஆதங்கத்தைக் கொட்டத் தொடங்கினார், கிறிஸ்டி.
கல்யாணி பற்றியும் சுமதி பற்றியும் அவர் கதைத்த விதத்திற்கு பிள்ளைகள் முகம் கோண நின்றார்கள். அதுவரை, “அப்பம்மா போகாதீங்க” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தவர்கள் அதன்பின் அமைதியாகிவிட்டார்கள். அதிர்ந்து கூடக் கதைக்காத சுமதியில், அவர்களையும் அறியாதே அன்பு வந்திருக்க, கல்யாணியைத் தம் சிநேகிதியாகவே பார்க்க ஆரம்பித்திருந்தார்கள், பிள்ளைகள்.
அதுவே, கிறிஸ்டினா சென்ற பிறகு அவ்வளவாக அவரைத் தேடவில்லை. ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளாது அன்றாட வேலைகள், வீடு, பிள்ளைகள், கல்யாணி என்று இருந்தாலும் டேமியன்தான் மனத்துள் மறுகிக்கொண்டு நடமாடினான்.

சுமதி செய்வதறியாது நடனமாடினார். அன்று, கிறிஸ்டினா கத்திய பிறகு, தான் புது ரெஸ்ட்டோரண்டில் வேலை செய்வதாகக் கேட்டிருந்தார். டேமியன் ஆழ்ந்து பார்த்து இலேசாகச் சிரித்தவன் , “இப்ப அங்க ஆள் சரியா இருக்குச் சுமதிம்மா. பிறகு தேவையெண்டாப் பாப்பம்.” என்றுவிட்டான்.

சரி, “முதல் மாதிரியே அந்த வீட்டிலயே இருக்கிறனே தம்பி” கிட்டத்தட்டக் கெஞ்சிக்கேட்டிருந்தார். அவரையே பார்த்தவன் மெல்லச் சிரித்தான். சற்றே தள்ளி, பிள்ளைகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்த கல்யாணியில் பார்வையைப் பதித்தவன், “உங்கட மகளிட்டக் கேட்டுப் பாருங்க சுமதிம்மா. என்ன எண்டாலும் தாயாச்சு மகளாச்சு.” என்றிருந்தான்.

“என்னட்ட என்ன கேக்கோணும் எண்டு நினைக்கிறீங்களோ அத உங்கட மகளிட்ட எப்பவும் கேட்கலாம் மா.” என்றுவிட்டுத்தான் நகர்ந்திருந்தான்.

ஒன்று, தாயைத் தன்னோடு வைத்திருக்க மட்டுமே அவள் விரும்புவாள் என்று சொல்லலாம். அடுத்து, திருமணமான அன்றிலிருந்து கணவன் மனைவியின் இரவுகள் அந்தத் தோட்ட வீட்டில் தான். அது சுமதிக்குமே தெரியும். அடுத்து நானும் அவளும் ஒன்று என்கிறான்.

நைந்து கிடந்த அவர் மனத்தில் எழுந்த மகிழ்வு விழிகளைக் கலங்கடித்தது. நீண்ட நாட்களின் பின் வாய்விட்டு அழ வேண்டும் போலிருந்தது. விம்மலை அடக்கிக்கொண்டே பின்புறத் தோட்டத்துள் புகுந்து கொண்டவர், அதன்பின் அங்கிருந்து செல்வது பற்றிக் கதைக்கவில்லை.

error: Alert: Content selection is disabled!!