38
நாட்கள் அதுபாட்டில் உருண்டன.
பாடசாலைகள் தொடங்க முதல் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமே. பிள்ளைகள் வாயால் கேட்கமாட்டார்கள். மனத்துள் எதிர்பார்ப்பார்கள் என்று டேமியனுக்குத் தெரியும் . அதுவே ஐந்து நாட்களுக்கு சுவிஸ்லாந்து செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள்.
டேமியனும் பெரிய மகளும் தான் அநேகம் விடுமுறைகளைத் திட்டமிடுவது. இம்முறை தன் சார்பில் கல்யாணியின் கையில் அவ்வேலையை விட்டுவிட்டான்.
பிள்ளைகள் மூவரும் கல்யாணியுமாக இரண்டு நாட்கள் மினக்கட்டு ஐந்து நாட்களையும் லூசர்ன் நகரில்(Lucerne) தங்கிச் செலவிடுவது என்று முடிவெடுத்தார்கள். அவர்களே தேடிப்பார்த்து மூன்று அறைகள் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் பதிவு செய்துவிட்டார்கள்.
டேமியனிடம் காட்டியபோது, காரோட்டுவது மட்டும் என் வேலை, மிகுதி எல்லாம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றுவிட்டான்.
எங்கெங்கு போவது, எங்குச் சாப்பாடு என்று எல்லாம் திட்டமிட்ட பிறகே சுமதியிடம் சொன்னார்கள்.
அடுத்தடுத்து நடந்த பிரச்சினைகளில் வீட்டில் அன்றாட அலுவல்கள் நடந்துகொண்டிருந்தாலும் ஏதோ ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருந்தது. அதைக் கடந்து கல்யாணியும் பிள்ளைகளும் மலர்வோடு தமது விடுமுறைத்திட்டங்களை விபரிக்க, மகிழ்வோடு கேட்டுக்கொண்டிருந்தார், சுமதி.
“அம்மா ,லீவு சொல்லிருங்க.” என்று சொன்ன மகளைப் பார்த்தவர், “நீங்க அஞ்சு பேருமா போயிட்டு வாங்கோம்மா.” என்றுவிட்டார்.
கிறிஸ்டினா கனடா சென்றுவிட்டது அவரை மிகவுமே தாக்கியிருந்தது. அதுவே, இவர்களோடு சேர்ந்து சிரித்துக் கதைத்து உணவுண்ணக் கூட அவரால் முடியாதிருந்தது.
எதையும் அனுபவிக்கவோ மகிழவோ கூடாதென்று சாபம் வாங்கி வந்த பிறப்பு நான் என்று, தன்னைத்தானே சாடிக்கொண்டுதான் அவர் நாட்கள் நகர்கின்றன.
கல்யாணியைவிடவும் பிள்ளைகள் மூவரும் சுமதியை விடவில்லை. ஒரு வழி பண்ணி, பின்னால் முன்னால் திரிந்து கெஞ்சிக் கூத்தாடி, “சரி சரி நானும் வாறன்.” என்று சொல்ல வைத்துவிட்டார்கள்.
ஒரு சனிக்கிழமை காலை ஆறு மணிக்கே புறப்பட்டுவிட்டார்கள். இடையில் நிறுத்தி இறங்கியேறி ஆறுதலாகப் போனாலும் நான்கு மணித்தியாலத்தில் ‘மவுண்ட் பிளாட்டஸ்’ ( Mount Pilatus ) சென்றுவிடலாம்.
லுசர்னில்(Lucerne) காரை நிறுத்திவிட்டு இறங்கிய வேகத்தில், “ ப்பா, முதல் அலுவல் சாப்பாடு.” பிள்ளைகள் ஒன்றாகச் சொல்லி வயிற்றைத் தடவினார்கள்.
எங்கு, என்ன சாப்பிடுவது என்றெல்லாம் திட்டமிட்டு இருக்கிறார்களே! அதன்படி, ‘Luzerner Chügelipastete’ உண்பததற்காக உணவகத்தினுள் நுழைந்தார்கள்.
“எனக்கு எண்டா ஒரு கோப்பி போதும் பிள்ளைகள்.” என்றுவிட்டார், சுமதி.
“நோ சுமதிம்மா நோ. இது puff-pastry தான்,நல்லா இருக்கும் சாப்பிட்டுப் பாருங்க. அதுக்க மாட்டிறைச்சி diced veal …எண்டா குட்டி மாடு…எப்பிடிச் சொல்லுறது பப்பா? ஆங் மாட்டுக் கன்று இறைச்சியும் காளானும் கிரீம் சோசில போட்டுச் செய்த puff-pastry. அதோட, சுவிஸ் ஆல்பைன் மக்கரோனி(Alpine Macaroni) ஆப்பிள் சோசோட. ரெண்டுமே சுவிஸ் விசேச உணவுகள். கட்டாயம் ருசி பாக்கோணும் நீங்க.” மூத்தவள் பபிதா சொன்ன விதம் வாயுற வைத்தது. அதிலும் இப்போதெல்லாம் தமிழ் வடிவாக் கதைக்கிறார்கள். கன்னம் வழித்து முறுவலித்தார், சுமதி.
“ நீங்க சாப்பிடுங்க, நான் ஃபிரைட் ரைஸ், கோழிப்பொரியலோட கொண்டு வந்திருக்கிறன்.” என்றார்.
“யம் யம்! அது எனக்கும் சுமதிம்மாவுக்கும். பங்குக்கு ஆரும் வரக்கூடாது.” கல்யாணிக்கு விருப்பம் என்று தெரிந்தே அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி சொன்னான், டேமியன்.
“எங்களுக்கு அதெல்லாம் வேணாம். எப்பவும் சாப்பிடுறது தானே!” அவள் பிள்ளைகளோடு சேர்ந்துவிட்டாள்.
பிள்ளைகளுக்கும் கல்யாணிக்கும் இடையிலான நட்புறவு தெரியும் என்றாலும் இந்தளவுக்கு, நண்பர்கள் போல் பழகுவதை, இப்போதுதான் ஆறுதலாக நின்று நிதானித்துக் கவனிக்கிறான், டேமியன்.
வளரும் குழந்தைகளுக்கு நட்புடனான பராமரிப்பு எவ்வளவு அவசியம் என்று, வாய் ஓயாது கிறிஸ்டினா சொல்வது நினைவில் வந்து சென்றது. பியங்காவின் இழப்பின்பின் மூவரும் ஒதுங்கி, தனித்தனியாகி இருந்தார்கள் என்பதும் அவரே சொன்னதுதான்.
இன்று அப்படியில்லை. அவர்கள் குரல்களால் வீடு நிறைந்திருக்கு. கூடவே, சுருதி கூட்டுவதாய் கல்யாணியின் குரலும். அதைப் புரிந்து கொள்கிறார் இல்லையே என்று, தாயில் வருத்தம் அதிகரிக்கவே செய்தது.
வயதில் முதிர்ந்தாலும் முதிர்வானவர்களாக நடந்து கொள்ள, எல்லோராலும் எல்லாச் சந்தர்ப்பதிலும் முடிவதில்லை என்பதுதான் உண்மை!
வேண்டாம் என்றவன், கல்யாணி வாங்கிய உணவில் பாதியை உண்டுவிட, பிள்ளைகள், சுமதிக்குக் கொடுத்தே உண்டார்கள்.
அடுத்த ஒரு மணித்தியாலத்தில் உணவை முடித்தவர்கள் லுசர்னில் இருந்து கிரீன்ஸ்க்கு( Kriens) பஸ் எடுத்தார்கள். அங்கிருந்து சில நிமிடங்கள் நடையில், ‘கொண்டோளா’ (Gondola) என்கிற ‘லிஃப்ட்’ எடுக்கும் இடம் வந்தார்கள்.‘Frakmuntegg’ வரை லிஃப்ட் பயணம். மின்தூக்கி மெல்ல மெல்ல மேலேறியது.
இவர்கள் அறுவரோடு இன்னும் சிலரும் இருந்தார்கள். அருகண்மையில் அமர்ந்திருந்த பெரிய பிள்ளைகள் இருவரையும் பிடித்துக்கொண்டார்,சுமதி. அவர் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக்கொண்டது.
கீழே விரிந்த இயற்கையில் தொலைந்து போவதாக உள்ளே கதைத்துக்கொண்டார்கள். மேகக் கூட்டமொன்று கொண்டோளாவைத் தழுவிச் செல்ல, ஆஆஆ! ஓஓஓ! வாவ் என்ற, ஆச்சரியக் குரல்கள் வேறு. சுமதிக்கோ, எதுவுமே கருத்தில் பதியவில்லை. கால்கள் வேறு நடுங்க, அங்கும் இங்குமாகப் பார்த்து விழித்துக்கொண்டு இருந்தார்.
“ம்மா! என்ன பயமா இருக்கோ?” விழிகளால் சிரித்தபடி கேட்டாள், கல்யாணி. டேமியன் பார்வையும் சுமதியில்.
“ஒண்ணும் பயமில்ல சுமதிம்மா, நான் அங்க வரவோ? ” என்று கேட்டனா. அவருக்கு ஒரு சாதியாகிற்று. அது போதாது என்று, “அய்… பயப்பிட வேணாம் சுமதிம்மா. நானும் உங்களப் பிடிச்சுக்கொண்டு இருக்கிறன் சரியா?” என்ற சிசிலியா, சட்டென்று எழுந்து அவரின் இடுப்போடு அணைந்துகொண்டாள்.
“அச்சோ என்ர ராசாத்தி! பயம் எல்லாம் இல்ல. அது உடனே ஒரு சாதியா இருந்தது. இப்ப சரி.” சமாளித்துவிட்டார். அவளைத் தன் மடியில் இருத்திப் பிடித்துக்கொண்டார். சிறுவர்களோடு சேர்ந்து வெளியில் பார்க்கத் தொடங்கியவர், மெல்ல மெல்ல பயம் நீங்கி ரசிக்கத் தொடங்கிவிட்டார்.
‘Fräkmüntegg’ இலிருந்து கேபிள் காரில் இவர்கள் அறுவர் மட்டுமாகச் செல்கையில், மகிழ்ச்சிப் பரபரப்பில் வாயடைத்துப் போனார்கள்.
அந்தச் சுற்றம் தானோ ‘சொர்க்கம்’ என்று எண்ண வைத்தது. அதுவும் சுவிஸ் மத்தி வேறா! கேட்கவும் வேண்டுமா? பிளாட்டஸ் மலை உச்சிக்குப் போட்டியாகத் தொடர்ந்து பரந்து கிடந்த மலை முகடுகளில் இன்னமும் உறைந்து கிடக்கும் வெண்பனி, நளினமாக அழகை அள்ளித் தெளித்து, இவர்கள் பார்வையைப் பிடித்து வைத்திருக்க முயன்றது. அதோடு போட்டியாக, தூரத் தெரிந்தாலும் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்த நகர அமைப்புகளும் இயற்கை வனப்பும் தம்மையும் பாருங்களேன் என்று அழைத்தன.
“இதுவரைக்கும் கூகிளிலயும் படங்களிலையும் தான் இப்பிடிப் பாத்திருக்கிறன்.” என்றபடி, கைப்பேசியை இயக்கி வீடியோ எடுக்க நினைத்த கல்யாணி, அதையும் விட்டுவிட்டு விழிகளுக்கு வேலை கொடுத்து, மனத்துள் ஒன்று ஒன்றையும் சேமிக்கத் தொடங்கினாள்.
கேபிள் கார் உயரே செல்ல செல்ல, அவள் மனத்துள்ளும் கிலிதான். ஆரவாரித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் முன்னால் காட்டிக்கொள்வதா? சுமதி கூட இயல்பாகிவிட்டார். மெல்ல, ஒற்றைக் கையால் டேமியனின் மேல் கையைச் சுற்றி வளைத்துக்கொண்டாள்.
“ பயந்தாங்கொள்ளி! இதுக்க சுமதிம்மாவக் கேக்குறீங்க!” அவள் காதோரமாக முணுமுணுத்தவனின் ஒரு கரம் அவளை முதுகோடு வளைத்திருந்தது. அவன், இந்த இயற்கை அழகையெல்லாம் பார்க்கவில்லை. கூட வந்தவர்கள் மகிழ்வை இரசிப்பதே அவனுக்குப் பெறுமதிமிக்க தருணமாக இருந்தது.
டேமியன் மெல்லச் சொன்னாலும் மற்றவர்களுக்கும் விளங்கிவிட்டதே. பிள்ளைகள் பக்கென்று சிரித்துவிட சுமதிகூடச் சிரித்தார். எத்தனை எத்தனையோ ஆண்டுகள் கடந்து, தாயின் மலர்ந்த சிரிப்பைக் காண்கிறாள் கல்யாணி. விழிகள் கலங்கிப்போக, டேமியனின் தோளில் மறைத்துக்கொண்டாள்.

