நட்சத்திரா 38 – 2

“ அச்சோ கனி அன்ரி, இஞ்ச பாருங்க, எவ்வளவு வடிவா இருக்கு!” சிசிலியா ஆரவாரித்து அவளைக் காப்பாற்றிவிட்டாள்.

“ப்ச் இப்ப என்ன? மகிழ்ச்சியா இருக்கோணும் எண்டு வந்திருக்கிறம், இதுக்கக் கண்ணைக் கசக்கிறதா சொல்லுங்க!” காதில் முணுமுணுத்தான், டேமியன்.

“இல்ல இல்ல” கசிந்த விழிகளோடு சிரித்தவள், “தாங்க்ஸ் டேமியன், எல்லாத்துக்கும் தாங்க்ஸ்! வேற என்ன சொல்லுறது எண்டு தெரியேல்ல.” என்றாள், ரகசியக் குரலில்.

ஆத்மார்த்தமாக அவன் செவிகளில் அவள் குரல் மோதியது. “என்னட்டப் போய் என்ன இதெல்லாம். அப்பிடிப் பாத்தா நான்தான் நிறையச் சொல்லோணும்.” என்றவன் பார்வையால் நேசத்தை உணர்த்தினான். தோளைச் சுற்றி நின்ற கரத்தின் விரல்கள், தோள்பட்டையில் அழுத்தம் கொடுத்தன.

“ கண்ணைத் துடைச்சிட்டு அங்க பாருங்க, அருமையா இருக்கல்லோ, வீடியோ எடுங்க. ” பேச்சை மாற்றிவிட்டான்.

கேபிள் கார், மலை உச்சியில் அவர்களைத் துப்பிவிட்டுச் செல்ல, “ அய்ய்ய்ய்ய் நிலத்தில இருந்து 7000 அடி உயரத்தில் நிக்கிறம்!” இரு கரங்களையும் விரித்து ஆரவாரம் செய்தாள், பபிதா.

நல்ல காலமாக வானம் தெளிந்து கிடந்ததில் சுற்றத்தின் யௌவனம் முழுமையாகக் காட்சி கொடுத்தது. கோடையில் பல நேரங்கள் மழையும் மேகங்களும் சூழ்ந்து கிடப்பதில் மலையுச்சிக்கு வந்து மழை மேகங்களுள் தொலைந்துவிட்டு இறங்க வேண்டி வருவதுண்டு.

இதையெல்லாம் கதைத்துக்கொண்டே சுற்றி, கற்படிகளால் ஏறி நடந்தவர்கள், 360 பாகையில் சுவிஸ் நகரை, ஆல்ப் மலைத்தொடர்களை, அழகிய நீர் நிலைகளை, தூரத்தெரியும் நீர்வீழ்ச்சிகள் என்று கண்டு கழித்தபடி வந்து, அங்கிருந்து குகைக்குள்ளாலும் புகுந்து நடந்தார்கள். இருட்டாக, சற்றே மிரட்டுவதாக இருந்தாலும் இடையிடை இருந்த வியூ பொய்ண்ட்டுகள் வெளிச்சத்தையும் கொட்டிக்கிடக்கும் இயற்கையையும் காட்சிப்படுத்தின.

நிறைய நிறையப் புகைப்படங்கள் எடுத்தார்கள். டேமியன் கல்யாணியோடு எடுத்தான். சுமதியும் கல்யாணியும் சேர்ந்தெடுத்தார்கள்.

“நான் சுமதிம்மாவோட” என்ற டேமியன், தனியாகவும் எடுத்துக்கொண்டான் .
அப்படியே படிகளால் ஏறுகையில், “அச்சோ அங்க பாருங்க!” என்று கூவினாள். சிசிலியா.

அவள் கரம் சுட்டிய இடத்தில் மலையாடு ஒன்று நின்றிருந்தது. படுத்திருந்து சிசிலியாவின் கூச்சலில் எழுந்து நின்று உடலை ஒரு உதறு உதறியது. இவர்களை ஒரு பார்வையும் பார்த்தது. இவர்களுக்குத்தான் பக்கென்று இருந்தது. காரணம், அது ஒரு அடி பக்கவாட்டில் வைத்தாலே சறுக்கி விழும் அபாயம்.

“அச்சோ விழப்போகுது.” அழும் நிலைக்கு வந்திருந்தாள், சிசிலியா.

அதுவோ, நிமிர்ந்து விரைப்பாக நின்று, என் இடத்தில் வந்து இடைஞ்சல் தருவதே இந்த மனிதர்களுக்கு வாடிக்கையாகிற்று என்ற அலுப்பும் கோபமுமாகப் பார்த்தது போலிருந்தது.

“அது விழாது. வா, ஃபோட்டோ எடுப்பம்.” ஜெரிக்சன் சகோதரிக்குச் சமாதானம் சொன்னான்.

அந்த மலையாடு பெரும் வாழ்க்கைப் பாடம் சொல்வதாக உணர்ந்தாள், கல்யாணி. எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்த துணிவும் நிதானமும் நம்பிக்கையும் இருப்பின், வெற்றிப் பாதையில் செல்லலாம். அதளபாதாளத்தில் சறுக்கலே வந்தாலும் கல்லோ முள்ளோ கம்போ எதுவோ ஒன்றைப் பற்றிப் பிடித்துத் தப்பிக்க முயலலாம். இப்படி, அத்தனையும் தோல்வி கண்டு, இருப்பைத் தொலைக்கும் நிலை வந்தாலும் அதில் உழன்று வேதனைப்படாது,பதறாது முயற்சியிலேயே முடிந்து போவது கூட சுகம்தான். பலத்த சிந்தனையோடு ஆட்டையே பார்த்து நின்றவளை நெருங்கினான், டேமியன்.

“கனக்க யோசிக்கிற மாதிரிக் கிடக்கே! ஆட்டோட ஒரு செல்ஃபி எடுப்பமே!” தன் கை வளைக்குள் அவளை அடக்கி கிளிக்கிக்கொண்டான்.

அப்படியே வந்து, அங்கிருந்த உணவகத்தில் பிள்ளைகள் ஐஸ் குடிக்க, இவர்கள் மூவரும் கோப்பி குடித்துவிட்டு, Cogweel ரயிலில் ஏறினார்கள். மலையுச்சியில் இருந்து கீழே இறங்கும் ரயில் பயணம் தந்த அனுபவம் என்றால் தனிதான். அதுவும் திடீரென்று மேகமூட்டம் வேறு. அதுகூட ஒருவகையில் அழகு சேர்ப்பதாகவே இருந்தது.

“அங்க பாருங்க ஃபோல்ஸ்!” என்று, இம்முறை பிள்ளைகளோடு சேர்ந்து டேமியன்,கல்யாணியும் கலகலத்தார்கள்.

சுமதிக்கோ, வெளியே பார்க்கவா விடவா என்ற நிலை. குத்திக்கொண்டு கீழிறங்கும் ரயில் பயணத்தை மறக்கும் முயற்சியாக மகளின் மகிழ்வை, விழிக்கசிவோடு பார்த்துக்கொண்டு வந்தார்.

‘அல்னா ஸ்டட்’ (Alpnachstad) வந்திறங்கி, இன்னொரு ரயிலேறி ‘லூசர்ன்’ வருகையில் மாலையாகியிருந்தது.

டேமியனால் தாயை நினையாதிருக்க முடியவில்லை. இப்படியான பயணங்கள் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். முதல் ஆளாக வெளிக்கிட்டுவிடுவார். கண்கள் கலங்க, மறுபுறம் திரும்பிச் சமாளித்தான்.

அடுத்ததடுத்த நாட்களும் இயற்கையோடு இயற்கையாகக் கலந்து, களைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஒருநாள் முழுவதும் ‘லூசர்ன்’ நகரைச் சுற்றி வந்தார்கள். மறுநாள், ‘Lauterbrunnen’ என்ற பசிய கிராமத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, ‘Trummelbach Falls’ சென்றார்கள். வெளிப்பார்வைக்கு நீர்வீழ்ச்சி தெரியவில்லை. நீர் கொட்டும் பெரும் இரைச்சல் மட்டுமே கேட்டது.
சுற்றிப் பார்த்தால் உயர்ந்து பரந்திருந்த மலையுச்சிகளில் இருந்து நூல் போல் வெள்ளையாக, மிகவும் அமைதியாக, பல இடங்களில் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. “பத்து, பதினொன்று, பன்னிரென்று…” என்று, பிள்ளைகள் எண்ணவே வெளிக்கிட்டிருந்தார்கள்.

பார்த்து ரசித்தபடியே நுழைவுச் சீட்டு எடுத்து, மலையைக் குடைந்து போடப்பட்டிருந்த மின்தூக்கியில் (Tunnel lift ) சர்ரென்று மேல் நோக்கிப் பயணப்பட்டு வெளியே வந்தால், அந்த மலையினுள் பத்து இடங்களில் பெரும் நீர்வீழ்ச்சிகள்!

வெளிச்சம் குறைந்த குகைகளுள்ளால், ஈரமான பாறைத் தரையில் , கற்படிகளில் என்று நடந்து செல்வதும் சோவென்று நீர் விழும் இரைச்சலும் சட்டென்று பய உணர்வைத் தந்தாலும் சில நிமிடங்களில் அந்த அழகு தன்னுள் இழுத்துவிட்டது. இருளில் நின்று இவர்கள் இரசிக்க, இயற்கையே, குகை வாய் வழியாக நீர்வீழ்ச்சிக்கு மட்டுமாகச் சிக்கனமாக வெளிச்சம் தரும் மாயம் இருக்கே! அன்றைய நாளை, அந்த நீர்வீழ்ச்சிகள் தமதாக்கி இருந்தன.
மறுநாள், ‘Interlaken’ என்ற அழகிய கிராமம் போய்விட்டு லூசர்ன் வருகையில் , கொண்டை ஊசி வளைவுகளால் மலை மீதேறியது, கார். சுமதியின் நெஞ்சுக்குள் குளிர்பரவியது. விழிகள் பெரும்பாலும் மூடியே இருந்தன.
முன்னிருக்கையில் இருந்த கல்யாணியின் இதயமே தொண்டைக்குள் வந்துவிட்ட உணர்வு! தன் சிறு பதற்றமும் டேமியன் கவனத்தைக் கலைத்துவிடக் கூடாதென்ற குறியில் ஆடாது அசையாது இருந்தாள்.

சிறுவர்களுக்குப் பயமென்றதே இல்லை போலும், ஒரே கலகலப்பு.
“ம்ம்ம் விளங்குது விளங்குது .” மனைவியைப் பார்த்துச் சிரித்தான், டேமியன். ஒரு தட்டும் தட்டினான்.

“ஐயோ டேமியன், ரெண்டு கையாலயும் பிடிச்சுப் பார்த்து ஒடுங்க, ப்ளீஸ்!” நடுக்கத்தோடு சொன்னாள், கல்யாணி.

“ஓ ஜீசஸ்! இந்தளவுக்குப் பயப்படவே வேணாம் கல்யாணி. நான் நிறையத் தடவைகள் இதால வந்து போயிருக்கிறன். அதாவது கார் ஓட்டியிருக்கிறன்.” சிரிப்போடு சொல்லி, அவள் தலையைப் பிடித்து ஆட்டி அவளை நடுங்க வைத்தான்.

“சுமதிம்மா சும்மா கண்ணைத் திறந்து பாருங்கோ!” என்றும் சொன்னான்.

“ஆளை விடுங்க தம்பி.” என்றவர் அசையவேயில்லை. அதிலும் நெளிந்து வளைந்து கார் இறங்கும் போதெல்லாம் உயிரைக் கையில் பிடித்திருக்கும் உணர்வு சுமதிக்கும் கல்யாணிக்கும். உண்மையிலும் டேமியன் மிகவும் இலாவகமாகக் காரோட்டினான். அதை ரசிப்பதா? வெளியில் கொட்டிக் குவிந்துகிடக்கும் மலையழகிகளையும் கிராமங்களையும் இரசிப்பதா? கல்யாணிதான் தடுமாறிப்போனாள்.

ஐந்தாவது நாள், மீண்டும் லூசர்னில் சுற்றிவிட்டு, சொக்லேட் தயாரிக்கும் இடம் சென்றுவிட்டு வீடு வருகையில், புத்தம் புது உற்சாகம் அவர்களுள் நிறைந்திருந்தது.

அதுவே, அடுத்திருந்த மாதங்களுக்கு அமைதியையும் சுறுசுறுப்பையும் கொடுத்தது.

error: Alert: Content selection is disabled!!