நட்சத்திரா – 39

39

புதிய கல்வியாண்டில் பாடசாலைகள் ஆரம்பித்திருந்தன. பிள்ளைகளின் நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன. பெரியவர்கள் பொழுதும் தான். அதிலும் டேமியன் வேலைகளோடு நேரமின்றி அலைந்தான்.

தினம் பிள்ளைகளுக்கு என்று நேரம் ஒதுக்குவாள், கல்யாணி. அதில் டேமியன் நிம்மதியாக இருந்தான். இருந்தாலும் வார இறுதி நாட்களில் பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பான். கல்யாணிக்கு இரவு வேலை இல்லையோ, மனைவியோடு அதிகாலையில் ஓடுவான். அது அவர்களுக்கே அவர்களுக்கான பொழுதாக இருந்தது.

சுமதிக்கோ, கிறிஸ்டினா இன்னமும் பாராமுகம் காட்டுகிறார் என்ற ஒன்று பிராண்டிக்கொண்டிருந்தாலும் வேலையோடு ஐக்கியமாகி இருந்தார். கிடைக்கும் மிகுதி நேரங்களில் சின்னவள் அவரோடு ஒட்டிக்கொண்டிருந்தது, அவருக்குப் பெரும் நிம்மதியானது.

இப்படியே, எண்ணையிட்ட சக்கரம் போல் ஒரு வருடம் எப்படிப் போனதென்று தெரியாது கடந்திருந்தது.

அன்று, டேமியன் கல்யாணியின் முதலாவது திருமண நாள்.

அதிகாலையில் விழிப்புத்தட்டிய கல்யாணியின் பார்வை பக்கவாட்டுக்குத் திரும்பியது. திரைச்சீலைகள் இழுத்து மூடப்பட்டிருந்தாலும் நான்கு மணிக்கே பொழுது புலர்ந்திருந்தது. மெல்லிய வெளிச்சம் அறைக்குள் கசிந்தது. அதுவே, அயர்ந்துறங்குபவனைத் தெளிவாகவே காட்டியது.

ஒரு வருடம் இவனோடும் பிள்ளைகள் மூவருடன் கழித்துள்ளாளா! முகம் கனிய, மனம் வியந்தது. தாயும் அவளுமாக மட்டுமே வாழ்ந்த கூட்டை, அப்படியே இவர்களோடு பொருத்துவது, அதுவும் குறுகிய காலத்தினுள், ஆரம்பத்தில் மிகவுமே மலைப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் எப்படியென்றில்லாது, இலகுவாகவே பொருந்திவிட்டிருந்தது. இப்போவரை, கிறிஸ்டினாவின் ஒதுக்கம் மட்டுமே நெருடிக்கொண்டிருக்கிறது. அது, அப்பப்போ நெருஞ்சி முள்ளாகவும் குத்திப் பதம் பார்த்துவிடுகிறது.

கிறிஸ்டினாவும் ஜாக்குலினும் பிள்ளைகளோடு இயல்பாகக் கதைத்துக்கொள்வதை வழக்கப்படுத்தி இருந்தார்கள்.

ஒவ்வொருமுறையும், “அங்க என்ன பிரச்சினை எண்டாலும் உடனே எங்களுக்குச் சொல்லீர வேணும் பிள்ளைகள்.” என்று, இருவரும் வலியுறுத்த மறப்பதும் இல்லை. சில நாட்களின் பின், பிள்ளைகளுக்கே அவர்கள் அப்படிச் சொல்வது அலுத்துவிட்டிருக்க வேண்டும். அல்லது, தம்மை நினைத்து அவர்கள் கவலை கொள்கிறார்களே என்று நினைத்தார்களோ என்னவோ!

“என்ன விசயம் எண்டாலும் பாக்க இஞ்ச பப்பா இருக்கிறார். கனி அன்ரி இருக்கிறா. சுமதிம்மா கூட இருக்கிறா அப்பம்மா. நீங்க ஒண்ணும் யோசியாதீங்க. எப்பவும் போல நீங்களும் எங்களோட இருந்தா இன்னும் நல்லா இருக்கும் . மற்றும்படி, நாங்க நல்லா இருக்கிறம் அப்பம்மா.” என்றுவிட்டாள், பெரியவள். இளையவர்களோ, சகோதரி சொல்வதை ஆமோதித்துக் கதைத்தார்கள்.

சுமதி, கல்யாணி என்ற கதைதான் அவர்கள் வாயில் அதிகம். அதுவே, கிறிஸ்டினாவையும் ஜாக்குலினையும் விழிக்க வைத்தது.

மூவருமே சிறியவர்கள் தானே! அவர்களுடனான ‘இருப்பு’ இல்லையோ மறந்து போவார்கள். பிறகு, தம் வார்த்தையைப் பெரிதாக எடுக்கமாட்டார்கள். என்றெல்லாம் எண்ணினாலும் மகன் வீட்டுக்குச் செல்வது பற்றி, நினைக்கவே வரவில்லை, கிறிஸ்டினாவிற்கு.

ஆனாலும் டேமியனோடு கதைக்க முனைந்தார். எதுவுமே நடவாத பாவனையில்தான் கதைத்தார். நலவிசாரிப்பு என்றளவில் கவனமாக நிறுத்தியும் விடுவார். ஜாக்குலின் மறந்தும் கதைப்பதில்லை. அவளுக்கும் சேர்த்து வைத்து, டேவிட் எப்போதும் போல் டேமியனோடு தொடர்பில் இருந்தான்.

சுமதியும் இவளும் அமைதியாக இருக்கவில்லை. கிறிஸ்டினாவோடு கதைக்க எத்தனையோ தடவைகள் முயன்று பார்த்தார்கள். நெருங்கவே முடியவில்லை. இவளும் முயல்வதை விடவில்லை.

அப்படித்தான், இரு மாதங்களுக்கு முதல் கிறிஸ்டினாவுக்குப் பிறந்தநாள் வர, கல்யாணி, துணிவைத் திரட்டிக்கொண்டு அழைத்துவிட்டாள். வீட்டு அலைபேசியில் இருந்து அழைப்பு வர, பிள்ளைகள் என்றுதான் ஓடிவந்து எடுத்திருந்தார்,கிறிஸ்டினா. அதிலோ, இவள் குரல் கேட்கிறதே!
கணம் கூட தாமதிக்கவில்லை. அந்தளவுக்கு மனத்துள் கொதிப்போடு நடமாடிக்கொண்டிருந்தவர், கத்து கத்தென்று கத்திவிட்டிருந்தார்.
முதல் நாள்தான், ஜோசப்பின் மனைவி, தன் மகள்களோடு மனம் விட்டுக் கதைத்திருந்தார். தான், திடீரென்று ஜோசப்பை விட்டுப் பிரிந்ததன் உண்மைக் காரணத்தை மகள்களுக்குச் சொல்லியிருக்கிறார். அது, பெரும் பிரச்சனையாக வெடித்திருந்தது.

பொதுவாகவே தகப்பன் என்றால் மகள்களுக்கு நாயக பிம்பம் இருக்கும். அப்படித்தான் ஜோசப் அவர் மகள்களுக்கு. ஆளுமை, ஆதிக்கம், பதவி மட்டுமா? பிறருக்கு உதவும் மனம் என்று அவரை உதாரணமாகக்கொண்டு வளர்ந்தவர்கள். அப்பா என்றது கடந்த பெரும் மரியாதையோடு பார்ப்பவர்கள். அவர்களுக்குத் தாய் சொன்ன கதைகள் , கண்முன்னால் சாட்சியாக சுமதி வாழ்வு என்றெல்லாம் சொல்ல நம்பவே முடியவில்லை. தீபாவோடு கூடக் கதைத்தார்கள். அதன் பின்னால்….

தகப்பன் முன்னால் சென்று நின்றார்கள். மனைவியின் பிரிவு சமூக ரீதியில் மட்டுமே அவருக்குச் சிரமம் கொடுத்திருந்தது. கேள்விகளுக்குப் பதில் சொல்லி சொல்லி அலுப்பில் இருந்தவர், மனைவியை வேறு ஒருவரோடு சம்பந்தப்படுத்திக் கூடக் கதைத்திருந்தார். மற்றும் படி, எந்த வயதானாலும் என்ன, உல்லாசமான வாழ்வுக்கு இதுதான் வசதி என்று இறுமாந்திருந்தவர் ஆச்சே!

அப்படியிருக்கையில், உன்னை எங்கள் அப்பா என்று சொல்லவே வெட்கப்படுகிறோம் என்று காறித்துப்பிவிட்டார்கள்,மகள்கள். மின்னாமல் முழங்காமல் விழுந்த அடி அது! ஜோசப் வினையாற்றத் தடுமாறி நின்றார்.
மருமகன்கள் ஒருபடி மேலே சென்று, எங்கள் மகள்களை உன் பார்வையிலும் பட விடமாட்டோம் என்றவர்கள், ஜோசப் கண் முன்னால் வைத்தே, இந்த மனிதன் எப்போதாவது உங்களிடம் அத்துமீறியதாக, முகம் சுளிப்பதாக தொட்டுக்கிட்டு நடந்து கொண்டானா என்று விசாரித்திருந்தார்கள். அவர் மகள்களைவிடவும் பாசம் காட்டும் பேரப்பிள்ளைகள் பயப்பார்வை பார்த்தார்கள். அந்நேரம் அந்தக் கயவன் நெஞ்சு சுரீலென்று வலியெடுத்தது.

நீ எங்கள் உறவு என்று, எங்களுக்கு என்ன தலைகுனிவு வந்தாலும் பரவாயில்லை. உன் உண்மை முகத்தை வெளியுலகுக்குக் காட்டியே தீருவோம் என்று சவால் விட்டு, மனிதனைக் கதிகலங்க வைத்துவிட்டே சென்றிருந்தார்கள்.
இப்படியொருநிலை தனக்கு வரும் என்று,ஜோசப் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

மானம், மரியாதை, கௌரவம் என்று பீற்றிக்கொண்டு திரியும் மனிதனாச்சே! வீட்டவரின் தாக்குதலையே தாங்க முடியவில்லை, விசயம் வெளியில் போனால்…சிந்திக்க முடியவில்லை.

“டேமியன்” பற்களை நறும்பினார். சுமதியை நெரித்துத் துடிக்க துடிக்க வதைத்துவிடும் ஆவேசத்தில் ஆடிப்போனார். இத்தாலியில் இருந்தால் விட்டுவிடுவாரா? அடையாளமே இல்லாமல் அடியோடு அழித்துக்காட்டுகிறேன் என்று உறுமியவர் நெஞ்சைப் பிடித்தபடி மயங்கிச் சரிந்திருந்தார். வீட்டு வேலைக்கு இருந்தவர்கள்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் சொன்னதும்.
ஹார்ட் அட்டாக் என்று மருத்துவம் பார்க்க வெளிக்கிட்டால்,பக்கவாதமும் சேர்ந்து கொண்டது. அதைக்கூட, அவன் மகள்கள் நடிப்பு நாடகம் என்று சொல்லிவிட்டார்கள். உன்மட்டில் பரிதாபம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று செயல்பட்டார்கள்.

நன்றாக நடமாடிய மனிதன், கை கால்கள் இயக்கமின்றிக் கோணிக்கிடந்தார். சேர்த்தால்போல் கதைக்க இயலாது வாய் கோணி, நாக்கும் சவண்டு போயிருந்தது. வைத்தியம் போய்க்கொண்டிருந்தாலும் நம்பிக்கையாக எதுவுமே சொல்லப்படவில்லை. காசு, வசதி வாய்ப்புகளுக்குக் குறைவில்லா நிலை. அது மட்டும் தான் என்ற வகையில், வைத்தியசாலையில் கிடக்கிறாராம்.

இதையெல்லாம் சீறலாகச் சொன்ன கிறிஸ்டினா, “ என்ர தம்பியக் குற்றவாளியாக்கினது உன்ர அம்மா. அதுக்கெல்லாம் என்ன அத்தாட்சி இருக்கு? அவள் தீபாட்டையும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறது போல கேட்டனான். வாய்க்க முட்டை இருந்ததுபோல மூச்சும் விடுறாள் இல்ல. இவ்வளவையும் என்ர குடும்பத்துக்குச் செய்துபோட்டு, நீயும் உன்ர ஆத்தையும் என்ர மகனிண்ட தலையில மிளகாய் அரைச்சி மினுக்கிக்கொண்டு திரியுங்க என்னடி? கேடுகெட்ட உங்களுக்கு மரியாதையான வாழ்க்கை வேற!” உச்சக் குரலில் கத்தியவர், தனக்குத் தெரிந்த வகையில் எல்லாம், தாய் மகள் இருவரையும் சபித்துத் தள்ளிவிட்டே அலைபேசியைக் கீழே வைத்திருந்தார்.

இதை, அவள் டேமியனிடம் சொல்லவில்லை. ஆனால், கிறிஸ்டினா என்பவர் மட்டில் மனம் சுத்தமாக விட்டுப்போயிருந்தது.

அன்று டேமியன் வீடு வர, கல்யாணி கதைத்ததையும் எதுவோ பிரச்சனை என்றும் தமக்குப் புரிந்ததைச் சொல்லிவிட்டார்கள், பிள்ளைகள்.
டேமியன் தூண்டித்துருவி விசயம் அறிந்துவிட்டு, “இனி நீங்களா அம்மாக்கு எடுக்க வேணாம் கல்யாணி. கொஞ்ச நாள்கள் பேசாமல் விடுங்க பாப்பம்.” என்றவன், “அவன் ஜோசப் இன்னும் அழுந்துவான். அதுக்கு இப்பிடிப் பட்டெண்டு எல்லாம் அவன் சாகக்கூடாது.” என்று, பற்களை நறும்பிக்கொண்டு சொல்லியிருந்தான். அடுத்தடுத்த கிழமைகளில் அதுதான் நடக்கத் தொடங்கியிருந்தது.

நாட்டின் ஆட்சி மாற்றம், ஊழலுக்கும் கொடுமைக்கும் வன்மைக்கும் எதிரான தலைமை, கயவர்களைத் துகிலுரிக்கத் தொடங்கியிருந்தது.
மகள்கள், மருமகன்களாலேயே , ஜோசப்பின் இருண்ட பக்கங்கள் ஒன்று ஒன்றாக வெளியில் வரத் தொடங்கி இருக்கின்றன. இன்றளவும், கிட்டதட்ட ஆறு வாரங்கள் கடந்தும் அமைச்சர் ஜோசப், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் கேவலத்துக்குரியவராக பேசப்பட்டு வருகிறார். கட்டாயம் கடும் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறார்.

பாலியல் ரீதியான தொல்லை நடவடிக்கைகள், கட்டாயத்தில் பெண்களை நிறுத்தித் தவிர்க்கவியலாத சூழலை உருவாக்கிச் சுகம் கண்ட கேவலங்கள், லஞ்ச ஊழல் , சட்டத்துக்குப் புறம்பான வழியில் சொத்துச் சேர்ப்பு, அடிதடி கடத்தல் என்று, ஜோசப்பின் விளையாட்டுகள் கிண்ட கிண்ட வந்துகொண்டே இருக்கிறன. அதோடு சேர்ந்து பல பெரிய தலைகளின் முகத்திரையும் கிழிந்து கொண்டிருக்கின்றன.

“உப்பத் திண்டா, தண்ணி குடிச்சே ஆகோணும்.” இதை மட்டுமே சுமதி சொன்னார்.

மனத்தில் அழுதிக்கொண்டிருந்த பெரிய பாரம் விலகிய உணர்வுதான் கல்யாணிக்கும். அதுவும் பெற்ற மகள்களால், உற்றவர்களால் தண்டிக்கப்படுவது? கயவனின் பிள்ளைகள் என்றாலுமே அவர்களுக்கு மானசீகமாகத் தலைவணங்கினாள்.

கணவனையே பார்த்துக்கொண்டு, இவற்றையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க, பட்டென்று கண்களைத் திறந்து பார்த்தான், டேமியன்.

“டோய்! என்ன புருசன ரசிக்கிறதில நாள் தொடங்கியிருக்கு.” கேட்டுக்கொண்டே, கட்டிப்பிடித்துத் தனக்குத் தெரிந்தவகையில் அவளை வாழ்த்தி, அவனால் மட்டுமே கொடுக்க முடிந்த ரசிப்பான பரிசுகளையும் அள்ளி அள்ளி வழங்கினான்.

“நான் தான் முதல் வாழ்த்தோணும் எண்டு இருந்தனான். உங்கள…” அவன் நெஞ்சில் இடித்தாலும் அந்த நெஞ்சிலேயே முகம் புதைத்தாள்,அவள். மெல்ல, ஒவ்வொரு வார்த்தைகளாக உச்சரித்து வாழ்த்தினாள்.

அன்று, வழமைக்கு மாறாகக் கணவன் மனைவி தயாராகி வெளியில் வர நேரமெடுத்தது. பிள்ளைகள் மூவரும் கேக் எடுத்து வைத்துவிட்டுக் காத்திருந்தார்கள்.

வெளியில் வந்தவர்களை, ஆரவாரமாக வரவேற்றுச் சத்தமாக வாழ்த்தினார்கள். கேக் வெட்டி திருமண நாளுக்கு இனிமை சேர்த்தார்கள். தாமே வரைந்த வாழ்த்து அட்டைகளோடு, சிறு பரிசுகள் சேர்த்துக் கொடுத்து இருவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள்.

“இதெல்லாம் எப்ப வாங்கினனீங்க?” கல்யாணிக்கு உண்மையில் ஆச்சரியம்.

“நீங்க வேலைக்குப் போயிருந்த நேரம் சுமதிம்மாவோட போய் வாங்கினமே. பிடிச்சிருக்கா? ” ஆவலோடு கேட்டாள்,பபிதா.

இருவருக்கும் ஒரே மாதிரி தொப்பிகள், கல்யாணிக்குச் சிறு பேர்ஸ், நகச் சாயம். டேமியனுக்கு பெல்ட் , பேர்ஸ் என்றிருந்த பரிசுப்பொருட்களை பார்த்துவிட்டு, இருவருமே பிள்ளைகளைக் கட்டியணைத்துக்கொண்டார்கள்.

“காசு எங்கால? எங்களிட்டக் கேட்கேல்லையே.” டேமியன்தான் கேட்டான்.

“சுமதியம்மா தந்தவா.” என்றுவிட்டு எழுந்தோடினாள், பபிதா. பொருட்கள் வாங்கிய பற்றுச் சீட்டுகளோடு வந்தவள் கல்யாணியிடம் கொடுத்தாள்.

“கனி அன்ரி, மறக்காமல் சுமதி அம்மாக்கு இந்தக் காசக் குடுத்திருங்க என்ன?” என்று அவள் சொல்ல, “வேணாம் வேணாம் எண்டு சொன்னாலும் குடுக்கோணும் கனி அன்ரி” என்றான், ஜெரிக்சன். மீண்டும் மூவரையும் கட்டியணைத்துக்கொண்டார்கள்.

இப்படியே, சிறுபொழுது ஐவருமாகக் கலகலத்தபடி காலையுணவை முடித்துவிட்டு டேமியன் புறப்பட்டுச் சென்றிருந்தான்.

அன்று, விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு பிள்ளைகள் போக இருந்தார்கள். ஒன்பது மணிபோல் கல்யாணிதான் அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டவள், போகும் வழியில், தாய்க்கும் திலினி ஆட்களுக்கும் கொடுக்கவென்று கேக்கும் எடுத்துக்கொண்டாள்.

அவர்கள் நால்வரும் சிலோன் டேஸ்ட்டினுள் நுழைகையில் மேசைகள் ஓரளவுக்கு நிறைந்திருந்தன.

திலினி தான் முதலில் கண்டுவிட்டு கட்டியணைத்துத் திருமணநாள் வாழ்த்துச் சொன்னாள். அடுத்தடுத்து அங்கு நின்றவர்களும் ஆரவாரமாக வாழ்த்திவிட்டே வேலையைப் பார்த்தார்கள்.

“அம்மா எங்க? எல்லாருக்கும் கேக் இருக்குச் சாப்பிடுங்க.” என்றபடி உள்ளே சென்றவளை, வால்பிடித்துக்கொண்டு பிள்ளைகள் மூவரும் சென்றார்கள்.

அங்கு ஒரு பக்கமாகப் போட்டிருந்த மூன்று மேசைகளை, மிலானில் மூன்றுநாட்கள் தங்கவென்று சுவிசிலிருந்து வந்தவர்கள் நிறைத்திருந்தார்கள் . பன்னிரண்டு பேர். இவர்களுடைய B&B இல் தான் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தார், சுமதி.

அதிலிருந்த நால்வரின் பார்வைகள், குதூகலமாகச் செல்லும் கல்யாணியில் உச்சபட்ச அதிர்வோடு குத்திட்டு நின்றதை எவரும் கவனிக்கவில்லை.

அவர்களோடு இருந்தவர்கள் கூட. அதில் ஒருவன் உடல் கிடுகிடுவென்று நடுங்க,விசுக்கென்று எழுந்து நின்றுதான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நெஞ்சுக்குள், எரிமலை வெடித்துச் சிதறியிருந்தது.

error: Alert: Content selection is disabled!!