40
கை வேலையாக இருந்த சுமதிக்கு, மகள் பிள்ளைகளோடு வந்திருக்கிறாள் என்பது முன்புறம் கேட்ட பேச்சொலியில் இருந்தே தெரிந்துவிட்டது. மாறி மாறித் திருமண வாழ்த்துகள் சொல்லப்பட்டன. ஒவ்வொரு வாழ்த்தும் அவர் செவிகளில் இனிமையாகப் பாய்ந்து மனத்தை நிறைத்தது. அப்பங்களைச் சுட்டு சுட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தவர், “அம்மா” என்றபடி மகள் நுழைய, அருகில் நின்றவளிடம் அப்பத்தைப் பார்க்கும் படி சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மகளை இறுக அணைத்துக்கொண்டவருக்கு, வாழ்த்த வார்த்தைகள் ஒன்றுகூட வரவில்லை. விழிகள்தான் கசிந்தன.
“ம்மா என்ன நீங்க? விஷ் பண்ண மாட்டீங்களா…ம்ம் ? டேமியனுக்கு வாழ்த்துச் சொல்லிட்டிங்களா?” தன் விழிகளைக் கசியவிடாது கட்டுப்படுத்தியபடி மலர்ந்து சிரித்த மகள், மேலும் மேலும் மெருகேறி அவர் விழிகளை நிறைத்தாள். அவள் வாழ்வு, தினமும் மனத்தை நிறைக்கிறதே! அதையிட்டு ஒவ்வொரு கணமும் அவர் நிறைவாகவே மகிழ்கிறார்.
பட்டவை எல்லாமே போதுமே. இப்போதெல்லாம் சற்றும் பின்னால் திரும்பிப் பார்க்க அவர் விரும்புவதில்லை. அவை எதுவுமே மறக்க முடியாதவை என்பது உண்மை. ஆனால், தினமும் நினைத்துப்பார்க்கவும் தேவையற்றவை. இன்றையான் மகிழ்வு, அவற்றை நாசுக்காக ஒதுக்கும் அளவுக்கு அவருக்குத் தைரியம் கொடுத்திருந்தது.
“நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியுமா… எப்பவும் இப்ப போலவே… ரெண்டு பேரும் நிறைவா இருக்கோணும் குஞ்சு!” தழுதழுத்தபடி வாழ்த்தினார்.
“தம்பி இன்னும் இஞ்ச வரேல்ல.” மகள் கேள்விக்கும் பதில் சொன்னார்.
“ஓம் ஓம், பேங்குக்கு போய்ட்டுத்தான் வருவார், இப்ப வந்திருவார்.” கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி சொன்னவள், தாயின் விழிகளைத் துடைத்துவிட்டுக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள்.
“மறக்காம கேக் சாப்பிடுங்கம்மா. பின்னேரம் நாங்க வரக் கொஞ்சம் பிந்தும் எண்டு நினைக்கிறன். நீங்க பின்னேர வேலைக்கு லீவு சொல்லுங்க என்ன. இல்லையோ, கொஞ்ச நேரத்துக்கே வீட்ட வாங்கவன். ஆறுக்கும் ஏழுக்கும் இடையில வெளில சாப்பிடப் போறது எண்டவர், இவர். இப்ப நேரம் போயிட்டு, போயிட்டு வாறம்.” என்றுகொண்டே திரும்பியவள்தான், முகத்தில் படீரென்று அறைந்த அதிர்வில் சிலையாகிப் போனாள்.
அவள் விழிகள் இமைக்கவில்லை . இமையைத் தட்டிவிட்டுக் காண்பது உண்மையா என்று உறுதி செய்ய விரும்பினாள். முடியவில்லை.
எல்லாவற்றுக்கும் முதல் , மூச்செடுத்துவிடவே இயலவில்லை. அவ்விடமே, சர்ரென்று சுற்றிச் சூழன்றது. அப்படியே மயங்கிச் சரிந்தாள், கல்யாணி.
மகளோடு சேர்ந்து திரும்பியிருந்தார், சுமதி. வாயிலில் நிற்பவன், அவர்கள் B&B யில் நேற்று மாலையிலிருந்து தங்கியிருப்பவர்களில் ஒருவன். சற்று முன்னர்தான் காலையுணவுக்கென வந்தமர்ந்தார்கள். அதுவும் மகள், மகன், மனைவியோடு ஒரு மாதத்துக்கு, சுவிஸ் வந்திருப்பதாகவும் கதைத்திருந்தான். மனைவியின் சகோதரிகள் இருவர், அவர்கள் குடும்பங்கள், அங்குள்ள வயதானவர்கள் என்று வந்துள்ளார்கள். என்ன என்ன வேண்டுமென்று கேட்டுப் பரிமாறிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
அதற்குள் இப்படி உள்ளே வந்திருக்கிறானே. ‘இந்தத் திலினி என்ன செய்கிறாள்?’என்றெண்ணிக்கொண்டே, “ தம்பி என்ன வேணும்? மிச்ச அப்பம் இந்தா ஐஞ்சே நிமிசம்.” என்றவர், அவனைத் தள்ளி விலத்திக்கொண்டு,
“சுமதிம்மா கல்யாணியப் பிடிங்க!” என்று பாய்ந்துவந்த டேமியனைக் கண்டு விழித்தார். கணம்தான். அருகில் மகள் துவண்டு விழ, தன்னுடலில் தாங்கித் தானும் சேர்ந்து சவண்டு விழப்பார்த்தார்.
டேமியன் அப்போதுதான் உள்ளிட்டிருந்தான். யார் இது இப்படி உள்ளே வரை சென்று நிற்பது? புருவங்கள் முடிச்சிட, “பார்டன்” விறைப்பாகச் சொல்லியும் அசையாதவனை மெல்லத் தட்டியவன் பார்வை, உள்ளே பாய்ந்திருந்தது. மனைவி, விழிகள் சொருக மயங்கி விழுகிறாள் என்றுணர்ந்தவன் வாயிலில் நின்றவனைத் தள்ளிவிட்டுத்தான் உள்ளே ஓடியிருந்தான்.
“ சுமதிம்மா பாத்து.” அவரை ஒரு கரத்தால் பிடித்துக்கொண்டு மறு கரத்தால் மனைவியைத் தன்னோடு அணைத்துப் பிடித்தவன், “ நீங்க விடுங்கோ மா. தண்ணி… தண்ணி எடுத்திட்டு வாங்கோ!” என்றவனுக்குள், ஏன் திடீரென்று மயக்கம் என்ற பதற்றம்.
“கல்யாணி…இஞ்ச பாருங்க.” கன்னத்தில் தட்டிப்பார்த்தான். அவள் அருளவில்லை. அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டு பிரதான உணவகத்தின் பின்னால் ஒரு ஓரமாக இருந்த அவனது அலுவலக அறைக்கு விரைந்தான்.
சுமதி தண்ணியோடு ஓட, திலினி என்ன செய்வதென்று தெரியாது முழித்தாள். காலையுணவுக்கு என்று நிறையப்பேர் வந்திருக்க, சுமதியும் இல்லை. அவளால் அசைய முடியவில்லை. அதோடு, பிள்ளைகள் மூவரும் வெளியில் நிற்கிறார்கேளே! கல்யாணியை டேமியன் பார்ப்பான் என்ற தைரியத்தில் திரும்பினால் , அங்கு நின்றவனோடு இன்னமும் மூன்று இளம் பெண்கள் சேர்ந்து விறுவிறுவென்று உள்ளே நுழைந்து சுமதியைத் தொடர, வழிமறித்தாள்.
“அவா …அவா கல்யாணிதானே?” தமிழில் கேட்டுவிட்டுச் சட்டென்று ஆங்கிலத்தில் கேட்டாள், அங்கு நின்றவர்களில் சிறியவள். ஆமென்றாள், திலினி.
“எங்களுக்கு நல்லாத் தெரிஞ்சவா. அதான் பாக்கப் போறம்.” விறைப்பாகவே சொன்னவள், திலினியின் கதை கேட்க நிற்கவில்லை.
அறைக்குள்ளோ, நீள மென்னிருக்கையில் மனைவியைப் படுக்க வைத்துவிட்டு, அவள் முகத்தை நீரால் துடைத்துத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தான், டேமியன்.
“என்ர மகளுக்கு என்ர கண்ணே பட்டிட்டுத் தம்பி. முழிக்கிறாள் இல்ல என்ன? பிள்ளைக்கு என்ன நடந்திட்டு? ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போவம் தம்பி. 112 க்கு அடிக்கவோ?” பதறியழுதுகொண்டே கேட்டார், சுமதி.
“ப்ச்! ஒண்ணும் இல்ல சுமதிம்மா. பயப்படாதீங்க. பொறுங்க பாப்பம்.” என்றவன், அவள் விழிமணிகளின் அசைவில், “இந்தா எழும்பிட்டா. கல்யாணி …இஞ்ச பாருங்க. டேய் கல்யாணி!” நெற்றியில் கலைந்து விழுந்து கிடந்த மயிர்களை ஒதுக்கிவிட்டு, கன்னத்தில் மெல்லத் தட்டினான். மெதுவாக விழிகளைத் திறந்தாள், அவள். கண்ணீர் முந்திக்கொண்டு வழிந்தது. விம்மல் வெடித்தெழ அடக்கப் பார்த்தாள். முடியவேயில்லை. வாய்கோண விக்கி விக்கி அழுதாள்.
“ஐயோ பிள்ள என்ன செய்து?” சுமதி துடித்துப் போனார்.
“கல்யாணி என்னம்மா? உடம்புக்க ஏதாவது செய்யுதா? ஹொஸ்பிட்டலுக்குப் போவமா? இந்தத் தண்ணிய குடிச்சிட்டு வாங்க போயிட்டு வருவம் .” என்றபடி, அவள் அருகில் அமர்ந்த டேமியன் நெஞ்சு, என்னவோ ஏதோவென்று நடுங்கிப் போயிற்று.
அவளோ, கண்ணீரோடு கணவனைப் பார்த்தவள், “டே…மி…யன்” உதடுகள் நடுங்க, கதைக்க முடியாது அவன் நெஞ்சிலே முகத்தை அழுந்தப் புதைத்துக்கொண்டாள். அவன் முதுகை இறுக வளைத்துக் கொண்ட கரமும் உடலும் நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. விம்மி வெடித்து அழுகிறாள். ஏன்?
“என்ன நடந்தது சுமதிம்மா? விடிய நல்ல மகிழ்ச்சியாத்தான் நிண்டவா.” என்றவன், அப்போதுதான் பின்புறத்தில் ஆட்கள் நிற்கும் அரவத்தில் திரும்பிப்பார்த்தான்.
அந்த நால்வரும் கதவோடு நின்றிருந்தார்கள். நால்வரின் உடல்மொழியும் நல்லதாகப்படவில்லையே! ஒரு பெண் மட்டுமே அதிர்வும் கண்ணீருமாக நின்றாள். மற்றவர்கள் விழிகளில் கோபாக்கினி தெறித்ததை அப்பட்டமாக உணர முடிந்தது. டேமியன் நெற்றி சுருங்கியது. சுமதியும் அப்போதுதான் அவர்களைப் பார்த்தார்.
“இதென்ன கோதாரியாக் கிடக்கு? பின்னால வந்திருக்குதுகள்.” என்றபடி, அவர்களை நோக்கி அவர் செல்ல, விசுக்கென்று நிமிர்ந்து திரும்பிப்பார்த்தாள், கல்யாணி.
அதே வேகத்தில் எழுந்து நின்றுவிட்டாள். கால்கள் கிடுகிடுவென்று நடுங்கின. ஆனாலும் அழுந்த ஊன்றி நிற்க முயன்றாள்.உள்ளங்கைகளை இறுகப்பொத்தித் தன்னை நிலைப்படுத்தப் போராடினாள்.
வெடித்துச் சிதறத் தயாராகும் எரிமலைக்குன்று கணக்கில் நின்றான், அவன். அவன் உள்ளக் குமுறல் விழிகளால் சீறிப்பாய்ந்திட்டு. சுதாகரித்து நிமிர்வாக அவனை எதிர்கொள்ளவேண்டும் என்றது உள்ளம். அதே உள்ளம் தான் உலர்ந்து சருகாகிப் படபடவென்று அடித்துக் கொள்வதும்.
டேமியனும் எழுந்துவிட்டான். கல்யாணியின் கரம் அப்படி இப்படி அலைந்து, கணவன் கரத்தைப் பற்றிக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.
மனைவியின் முகத்தை ஆழ்ந்து சிலகணங்கள் பார்த்தவன், முன்னால் விறைப்பாக நின்றவர்களை அளந்தான். மனைவியின் இந்தப் பதற்றம், அழுகை எதுவுமே அவள் உடலிலுள்ள உபாதையால் இல்லை. முன்னே நிற்பவர்களால் என்று விளங்கிக்கொள்ள நேரம் எடுக்கவில்லை. விழிகளும் நெற்றியும் சேர்ந்து சுருங்கிற்று.
“தெரிஞ்சவேயா சுமதிம்மா?” அவன் கேட்டு முடிக்க முதல், “இல்லத்தம்பி, இண்டு காலம சாப்பிட வந்த நேரம் தான் கதைச்சன். நேற்றுப் பின்னேரம் வந்து, எங்கட B&B ல தான் தங்கி இருக்கினம். ஆனா…அந்தத் தம்பி ஊர்ல இருந்து வந்து நிக்கிறார் எண்டவர்.” என்றார் அவர் பதற்றத்தோடு.
“ஆர் கல்யாணி , உங்களுக்குத் தெரிஞ்சவேயா? நான் நிக்கிறன் எல்லா, என்ன பயம்? கண்ணத் துடைங்க முதல்.” இத்தாலியில் தான் கதைத்தான். சுமதி மகளைப் பார்த்தார்.
“சொல்லன் பிள்ள , உனக்குத் தெரிஞ்ச ஆக்களா? நிக்கிற நிலை, பார்வை ஒண்ணும் சரியில்ல. எதிரி போல வந்து நிக்கினம். ஆரம்மா குஞ்சு?” சுமதி மெதுவாகக் கேட்டாலும் கதவடியில் நின்றவர்களுக்கும் அது கேட்கவே செய்தது.
“எதிரி போல நிக்கிறமாமே!” இகழ்ச்சியாகச் சொன்னான், அவன்.
“நான் அவளுக்கு எதிரியாம்!” அருகில் நின்ற பெண்களிடம் சொல்கையில் அவன் குரல் கரகரத்தது. விசுக்கென்று திரும்பிக் கல்யாணியைப் பார்த்தவன்,
“சொல்லன், நான் ஆர் எண்டு சொல்லன். இந்த அழுகை, மயங்கி விழுறது, கண்ணீர் வடிக்கிறது எண்டு நடிக்காத! நீ எந்தளவுக்கும் போகக்கூடியவள் எல்லா? உண்மையச் சொல்லனடி! இல்லையோ உன்ன…” உறுமிக்கொண்டு முன்னேற முயன்றவனை, கெட்டியாகப் பிடித்துகொண்டாள், அங்கு நின்றவர்களில், பெரியவள்.
“ஐயோப்பா ப்ளீஸ்!” என்று அவன் கரத்தைப் பற்றியவள் விம்மினாள்.
கல்யாணியைத் தன்னோடு அணைத்துக்கொண்டான் டேமியன். அவன் நெஞ்சுக்குள் அக்கினி. இருந்தும் அமர்த்தலாகவே வார்த்தைகளை விட்டான்.

