நட்சத்திரா 40 – 2

“ஓ! என்ர வைஃபை உங்களுக்குத் தெரியுமா? வாங்கோ, இப்பிடி வந்து இருங்கோ! ஆனா ஒண்டு, இத, இந்த இடம் என்ர எண்டதால மட்டும் சொல்லேல, எங்க எண்டாலும் என்ர வைஃப, கண்டவேயும் மரியாதை இல்லாமல் கதைக்கிறத, நடத்திறத நான் பாத்துக்கொண்டு இருக்கேலாது? அத நல்லா நினைவில் வச்சுக்கொண்டு, என்ன எண்டாலும் அமைதியா இருந்து கதையுங்கோ! அதோட, இது பிசினஸ் நடக்கிற இடம். சின்னதா ஒண்டு எண்டாலே, போற வாற சனமே பொலிசுக்கு அடிச்சிருவினம். அவே வந்தா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.” ஒரு சிரிப்போடு எள்ளலாகவே சொன்னவனுக்கு, அந்த ஆணின் முகத்தை இடித்துப் பெயர்த்துவிடும் அளவுக்குக் கோபம் வந்திருந்தது.

“ ஓஹ் வைஃப்! இடமும் உங்கடையோ! புளியங்கொம்புதான் போல! அதான் இவ்வளவு நாடகத்துக்கும் காரணமோ!” அவன் மீண்டும் உறுமலாகத் தொடங்க, “இருந்து கதைக்கவாமே! அந்த அளவுக்கு எல்லாம் நாங்க மானங்கெட்ட சனம் இல்ல.” அப்பெண்களில் சிறியவள் வெறுப்போடு சொன்னாள்.

டேமியன் பொறுமை பறந்துவிட்டிருந்தது. “ஓ ரியலி! மானம் மரியாத உள்ள, தெரிஞ்ச ஆக்கள் நீங்கள்! இனி ஒரு நிமிசம் இஞ்ச நிக்கேலாது, வெளில நடவுங்க!” உறுமிக்கொண்டு முன்னே செல்ல முயன்றான்.

கல்யாணி விடவில்லை. “ப்ளீஸ் டேமியன். அவர்…அவர் …அம்மா அவர் …” என்று முடிக்கவில்லை, அந்தப் பெண்ணே மீண்டும் கிறீச்சிட்டாள்.

“என்ன… அம்மாவா? உண்மையான அம்மாவோ? இது உங்கட மகளா? இதென்ன பகிடி? உங்களுக்கு அம்மா வேற இருக்கிறாவோ? அப்ப, தாய் தகப்பன் தம்பி எல்லாரும் செத்துப்போனது எண்டதும் நாடகமோ? மாமா பாத்தீங்களா எந்தளவுக்கு ஏமாந்திருக்கிறம்.” என்றவளை, “நீ சும்மா இரனடி.” அவனைப் பிடித்து நிறுத்தி இருந்தவள் முறைப்போடு அதட்டினாள்.

அதே வேகத்தில் கணவனிடம் திரும்பியவள், “ப்ளீஸ் சூர்யா, அவவப் பாக்கப் பாவமா இருக்கு. கொஞ்சம் பொறுமையாக் கதைக்கிறது எண்டால் கதையுங்கோ சரியா? இவா இந்த உலகத்தில இல்ல எண்டு இப்ப வர உங்களுக்கு வருத்தம் இருக்குத் தானே?” உருண்டு தெறித்த கண்ணீரோடு கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை. சட்டென்று அவன் கண்களில் கண்ணீர் சுரந்திருந்தது. அது சுரீலென்று கல்யாணியின் இதயத்தைக் குத்திட்டு. கண்ணீரோடு மனைவியைப் பார்த்தவன் உடல் மொழியில் தளர்ச்சி! ஆனாலும் அவன் உயிராக, உலகமாக, எல்லாவுமாக எண்ணியவள் அவ்வளவு இலகுவாக அவனை ஏமாற்றினாளா? அந்த வலி, அவன் மனத்தைக் கொடூரமாக அறுத்துத் தள்ளியது. அவள் இழப்பை எதிர்கொண்டானே, அதைவிடவும் இது கொடுமையாக இருந்தது.

“அதே வருத்தம் எங்கள் எல்லாருக்குமே இவவைக் காணுற வரைக்கும் இருந்தது சூர்யா. உங்களுக்கும் அது தெரியும். இப்ப பாருங்க, கண்ணுக்கு முன்னால நிக்கிறா. மூண்டு பிள்ளைகள். தாய், மனுசன் எண்டு சந்தோசமா இருக்கிறா. நம்மளப் போல சூர்யா!” அழுத்திச் சொன்னாள்.

“நாமள் ஒண்ணும் சின்னாக்கள் இல்ல என்ன. வார்த்தைகள விட்டிராதீங்க. எனக்கு உங்களத் தெரியாதா? பிறகு அதுக்கும் இருந்து கவலைப்படுவீங்க. ப்ளீஸ்! அந்த அண்ணா சொல்லுறது போல இருந்து கதையுங்கோ.” என்ற உதயாவால் அடக்க முடியவில்லை. கல்யாணியின் இழப்பு, இவனில் எப்படி எப்படியெல்லாம் மாற்றம் உண்டு பண்ணியது! அது, அவள் வாழ்வில் எந்தவகையில் எல்லாம் விளையாடியது! எப்படி அவள் வாழ்வைத் தொடங்கினாள்! நினைவுகள் ஒன்று ஒன்றாகப் புரண்டெழுந்தன. விம்மிக்கொண்டு, கணவன் மேல் கரத்தில் முகத்தைப்புதைத்துக்கொண்டாள்.
கல்யாணிக்கு, பாய்ந்து சென்று அவளை இறுகக் கட்டிப்பிடிக்க வேண்டும் போலிருந்தது.

“உதயா…” மெல்ல முணுமுணுத்தவள் ஒரு கரம் அவளை நோக்கி நீண்டிருந்தது. சரேலென்று கணவனிடமிருந்து விலகி அவளை நோக்கி முன்னேற முயன்றாள், உதயா. அவள் கணவன் விடவில்லை. பிடித்து நிறுத்தியிருந்தான்.

“சூர்யாவா!” என்ற டேமியன் உடல்மொழி சட்டென்று மாறிவிட்டிருந்தது. மனைவியைத் தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டவன், சிலகணங்கள் அவள் விழிகளோடு தன் பார்வையை உறவாட விட்டான். அவள் தலையை தன் நெஞ்சோடு அழுத்தித் தடவினான். உலகம் மிக மிக மிகச் சிறிது. மீண்டும் உணர்த்திவிட்ட தருணம் இது. மனைவியால் இத்தருணத்தைக் கடக்க இயலும் என்ற நம்பிக்கை அவனுக்குண்டு. ஆனால் சூர்யாவுக்கு? இருக்க வேண்டும் , அதுவும் கட்டாயமாக என்றது, அவன் மனம்.

சூர்யா இது எதையும் கவனிக்கவில்லை.

“மூண்டு வருசத்துக்கு மேல, பேயனா விசரனாத் திரிஞ்சனான். உன்னால. மரியாதையாப் பாசமாப் பாத்த சனம், சொந்த பந்தமெல்லாம் குடிகாரன் எண்டு தூற்றினவேயடி, தூற்றினவே! பெத்த அம்மாவே என்ன என்ன எல்லாம் சொல்லி இருக்கிறா தெரியுமா உனக்கு? இவள் இவள…நான் கலியாணம் கட்டி என்ன பாடுபடுத்தினன் தெரியுமாடி? எல்லாம் உனக்காக! அது எல்லாம் என்னை, காலில பட்ட தூசு போல தட்டிப்போட்டுப் போன ஏமாத்துக்காரிக்காக எண்டு நினைக்க நினைக்க…” என்று சொல்லி, தட் தட்டென்று தன் முகத்தில் அறைந்தவனை, ஓடி வந்து பிடித்து நிறுத்தி இருந்தான், டேமியன்.
சூர்யா நல்ல பலசாலி. ஆனாலும் அவனால் டேமியன் பிடியை உதற முடியவில்லை. அதையும் விட, டேமியனின் பார்வை சூர்யாவின் உள்ளத்தின் ஆழம் வரை சென்று தொட்டது.

“ப்ளீஸ் சூர்யா, நடந்த ஒண்டுமே உங்களுக்குத் தெரியாது. ப்ளீஸ்! வார்த்தைய விட்டிராதீங்க, அவள் தாங்க மாட்டாள்.” ரகசியமாகத்தான் சொன்னான்.
சுமதிக்கு, அஞ்சும் கெட்டு அறிவும் கெட்ட நிலை. இரு கரத்தாலும் வாயைப் பொத்திக்கொண்டவருக்கு, தடாலென்று விழுந்துவிடுவோமோ என்ற பயம். மெல்ல நகர்ந்து, சற்றுமுன் மகள் அமர்ந்திருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்துவிட்டார். முழந்தாளில் ஊன்றிய கரங்கள் வலுவிழந்த நிலையிலும் அவர் முகத்தைத் தம்முள் பொத்தித் தாங்கிக்கொண்டன.
கல்யாணி அப்படியே நின்றிருந்தாள். உதயாவின் வார்த்தைகள் ஒன்று ஒன்றும் அவள் காதுகளில் ரீங்காரம் இட்டபடியிருந்தன. ஆக, சூர்யா இன்றளவும் மரித்துப் போனவளை மறக்கவில்லை. விழிகள் சுரக்க, அழுத்தமாகத் துடைத்துக்கொண்டாள்.

அவளளவில்,எப்போ டேமியனைக் கட்டினாளோ , இல்லை இல்லை விரும்ப ஆரம்பித்தாளோ , அன்றிலிருந்து, முதல் காதல் எங்கோ ஒதுங்கிச் சென்றிருந்தது. காதலுக்குரியவனும் தான். வெகுவெகு தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தான். சின்னஞ்சிறு புள்ளியாக, அதைக் கூட, தெளிவாக இனம் காண அவளுக்குச் சந்தர்ப்பமோ நேரமோ அமையவும் இல்லை. ஆனால், சூர்யா அப்படி இல்லையோ! ஏனோ, அது அவளுக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை.
“ஓம்! நான் உங்கள விட்டு விலக அப்போதைக்குச் சும்மா ஒரு பொய்யச் சொன்னனான். அதுக்கு இப்ப என்ன எண்டுறீங்க?” என்றுகொண்டு அவர்களை நோக்கி நிதானமாக அடியெடுத்து வைத்தாள், கல்யாணி.

“ நீங்க சொன்னதுகள் எல்லாமே சரிதான். வெளிநாடு, நல்ல வாழ்க்க எண்டு வரேக்க ஆர் விடுவினம். வந்திட்டன் போதுமா? உங்கட அக்கா தங்கச்சி மட்டும் தான் நல்ல வாழ்க்கை வாழோணுமா? நான் உங்களக் கட்டி அஞ்சுக்கும் பத்துக்கும் சிங்கி அடிக்கோணுமா? அதான் கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தப் பாவிச்சு வெளிநாடு வந்தனான்.” என்று கதைத்தவள் குரலில் இகழ்ச்சி.

“ நான் செத்த கவலையில இவர் குடிச்சு அழிஞ்சாராமே. அந்த அளவுக்கு லவ், ம்ம்ம். ஆருக்கு விடுறியல்? செத்துப் போகேல்ல எல்லா? உதயாவக் கட்டினனீங்க தானே? இந்தா, பிள்ளைகளோட ஊர் உலாப்போய்க்கொண்டு நல்லாத்தானே வாழுறீங்க? பிறகு, இஞ்ச கதைக்க வாறீங்க.” சீறிவிட்டாள்.

“இன்னொண்டு, உங்களைப் பற்றி நானே என்ர புருசனுக்குச் சொல்லீட்டன் போதுமா? என்ர வாழ்க்கையில, என்ர புருசனுக்குத் தெரியாத பக்கம் எண்டு ஒண்டு இல்ல. போதுமா? கிளம்பி, வந்த வேலையப் பாருங்க.” என்றவள் , சூர்யாவுக்குப் புதியவள் அல்ல. அவள் திடம் பற்றி அவனுக்குத் தெரியாதா? ஆனால் இப்படிப்பட்டவளா? அதிர்வோடு நின்றான். பெண்களும்தான் .

டேமியன் விழிகள் கலங்கிப் போக, சுமதியைத் திரும்பிப் பார்த்தான். அவரில் அசைவே இல்லை.

“கல்யாணி கிளம்புங்கோ. பிள்ளைகள் வெளிய நிக்கினம் எல்லா? சுமதிம்மாவப் பாருங்க. கூட்டிக்கொண்டு போங்க முதல்!” என்றவன் குரல், இப்போது வலு கண்டிப்போடு இருக்க, அவள் அங்கு தாமதிக்கவில்லை.

விறுவிறுவென்று நகர்ந்தவள், “ம்மா எழும்பி வாங்க, எவ்வளவு பார்த்திட்டம்.

இதுக்கெல்லாம் இப்பிடி இருந்து கொண்டு.” அதட்டித்தான் கை பிடியில் அவரை அழைத்துச் சென்றாள். மறந்தும் அங்கு நின்றவர்களை அவள் பார்க்கவில்லை.
சுமதியோ, வெளிறிய முகத்தோடு கண்ணீர் வழிய வழிய சூர்யாவையே பார்த்துக்கொண்டு மகள் பிடியில் இழுப்பட்டுச் சென்றார்.

“சுமதிம்மா, ஒண்ணும் இல்ல சரியோ. அங்க போயிருந்து யோசிச்சுக்கொண்டு நிக்கிறேல்ல.” என்ற டேமியன், அவர் தோளில் ஆதரவாகத் தட்டிவிட்டு, “கவனமாப் போங்க, வீட்ட போறது எண்டாலும் போங்க. நான் கொஞ்சத்தில வாறன்.” கல்யாணியின் தலையில் பரிவோடு வருடிச் சொன்னான்.

மீண்டும் உடைந்துபோக முயன்ற உள்ளத்தைக் கட்டுப்படுத்தத் தடுமாறியவள், தலையசைத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறினாள்.

“இனி இஞ்ச எங்களுக்கு என்ன அலுவல் அக்கா. தங்கிறதுக்கு வேற இடமா இல்ல? மாமா வாங்க.” விசுக்கென்று வெளியே இழுத்துக்கொண்டு நடந்த கவி, “நீ போய் அவே எல்லாரையும் கூட்டிக்கொண்டு வா. இந்த நரகத்துக்க இருந்து முதல் வெளில போகோணும் எனக்கு.” சூர்யாவைப் பிடித்த பிடியை விடாது இழுத்துக்கொண்டு விடுவிடுவென்று B&B அப்பார்ட்மெண்ட் செல்லும் படிகளில் ஏறினாள்.

error: Alert: Content selection is disabled!!