நட்சத்திரா 41 – 1

41

“சிஸ்டர் ப்ளீஸ்!” ஓரெட்டில் உதயாவின் தங்கையை வழிமறித்திருந்தான், டேமியன்.

“ப்ளீஸ்! கொஞ்ச நேரம் உங்கட ஃபாமிலியோட ரெஸ்ட்டோரன்டிலயே இருங்கவன். நான் சூர்யாவோட கதைச்சிட்டு வாறன். ப்ளீஸ் சிஸ்டர்.” கிட்டத்தட்டக் கெஞ்சினான்.

நடந்த பிரச்சினைகளில் அதிர்ந்து, கோபத்தில் ஆடிப்போயிருந்தாள், உதயாவின் கடைசித் தங்கை. அதிலும் கல்யாணியின் பேச்சிருக்கே, உச்சபட்ச வெறுப்படையச் செய்திருந்தது. வருடக்கணக்கில், அவளுக்காக இவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில், அவள் உயிரோடு இருக்கிறாள். கணவன், குழந்தைகள் என்று மகிழ்வோடு காண்கிறார்கள். அது கூட இருக்கட்டும். அதன் பிறகும் என்னவொரு எகத்தாளமான கதை, உடல்மொழி! கல்யாணியில் உள்ள அத்தனை கோபத்தையும் அப்படியே டேமியன் மீது துப்பிவிடத்தான் அவளுள்ளம் முனைந்தது. ஆனாலும் எதுவோ ஒன்று, அது டேமியன் கெஞ்சிக்கொண்டு நின்ற நிலையோ, என்னவோ தடுத்தது. சிறு தலையாட்டலோடு விறுவிறுவென்று நகர்ந்தாள்.

அதன்பின் டேமியன் தாமதிக்கவில்லை, B&B அப்பார்ட்மெண்ட் நோக்கி விரைந்து படியேறினான். அப்போது அவன் கைப்பேசி அருட்டியது. எடுத்துப்பார்த்தான்.
அவன் மனைவிதான். குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். ‘நான் அம்மாவையும் கூட்டிக்கொண்டே பிள்ளைகளோட விளையாட்டுப்போட்டிக்குப் போறன் டேமியன்.’ என்றிருந்தாள்.

‘சரி. கவனம் கல்யாணி. முழுநாளும் நிக்கத் தேவேல்ல. கெதியா வாங்கோ. ஒண்டும் யோசிக்கிறேல்ல. இது எல்லாமே கடந்து வந்திட்ட விசயங்கள். என்ர கல்யாணி தேவேல்லாமல் யோசிக்க மாட்டா எண்டு தெரியும். ’ என்று தட்டி அனுப்பிவிட்டுப் பார்த்தால் அடுத்த குறுஞ்செய்தி.

அவளுக்கு டேமியனைத் தெரியும். நிச்சயம் சூர்யாவோடு கதைப்பான். என் கல்யாணியை நீ பிழையாக விளங்கி வைத்திருக்கிறாய் என்று சொல்வான். அதுவே தொடர்ந்து தட்ட வைத்திருந்தது

‘அம்மா பற்றி, இதுக்கும் மேல ஆரோடையும் எதுவுமே கதைக்க எனக்கு விருப்பம் இல்ல டேமியன். உங்களுக்கு விளங்குது தானே? ப்ளீஸ்! வேணாம் சரியோ. எனக்கே தெரியாம நான் சூர்யா எண்டவரக் கடந்து வந்திட்டன் டேமியன். சரியான கொஞ்சக் காலம் தான், எண்டாலும் வர வச்சிட்டீங்க நீங்க. இந்தா, இப்ப யோசிச்சாலும் எப்படி எப்படி எண்டு எனக்கே மலைப்பா இருக்கு. அவருக்கு, இப்ப என்னில இருக்கிற கோவமும் வெறுப்பும் உதயவோடயும் பிள்ளைகளோடயும் இன்னும் இன்னும் நல்ல மகிழ்ச்சியா வாழுறதுக்குத் தூண்டுகோலா இருக்கும் டேமியன். அதுதான் என்ர விருப்பமும். ப்ளீஸ், அவேயோட ஒண்டுமே கதைச்சிராதீங்க!’ என்றிருந்தாள்.
டேமியன் விழிகள் கலங்கிவிட்டன. பெருமூச்சோடு அப்பார்ட்மெண்ட் கதவில் மெல்லத் தட்டினான்.

கதவு உடனே திறபடவில்லை. சில நிமிடங்களின்பின் கவிதான் திறந்தாள். தங்கையையும் மற்றவர்களையும் எதிர்பார்த்தாள் போலும். சட்டென்று தடுமாறினாள். பின் சீறலாகப் பார்த்தாள்.

“இன்னும் என்ன? நாங்க இப்ப வெகேட் பண்ணிருரம். ரி ஃபண்ட் எல்லாம் கேக்க மாட்டம் சரியோ.” சொல்லிக்கொண்டே, கதவைச் சாத்த முனைந்தாள். தடுத்துவிட்டு, “கொஞ்சம் தள்ளுங்க!” என்றவாறே உள்ளிட்டுவிட்டான், டேமியன்.

“உங்களுக்கு நான் கதைக்கிற தமிழ் விளங்கேல்லையா? அல்லது ஒருக்காச் சொன்னா விளங்கிக்கொள்ளுற அளவுக்கு அறிவு இல்லையா? அது இருந்திருக்க அந்த ஏமாத்துக்காரிய கட்டி இருப்பீங்களா? செய்க்!” என்றாளா.

“ஏய்ய்ய்! நானும் பொறுமையா இருப்பம் எண்டா என்ன கனக்கக் கதைக்கிற?” டேமியன் பொறுமை பறந்திருக்க உறுமிவிட்டான்.

“கவி என்னடி இதெல்லாம்?” என்ற அதட்டலோடு உதயா மட்டும் குறுக்கே வரவில்லையோ, டேமியன் என்ன செய்திருப்பானோ. நிச்சயம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பான்.

“ அண்ணா உண்மையாவே சொறி! அவள் விசரி! சொறி அண்ணா!” என்ற உதயா, சட்டென்று அவனுள் முகிழ்ந்துவிட்ட கோபத்தை அடங்கச் செய்திருந்தாள்.
வந்த வேகத்தில் முகம் கழுவி இருந்தாள் போலும். ‘பண்பட்ட மனத்தாள்’ என்று, அவள் சாந்தமான முகமே எடுத்துக் கூறியது.

“ உண்மையாவே இவா உங்கட தங்கச்சியோ? சான்ஸே இல்லை. சரியான அவசரக்குடுக்கை . ஒரு மனுசன் என்ன சொல்ல வாறான் எண்டு கேக்கிற அளவுக்குக் கூடப் பொறுமை இல்லாத நீங்க எல்லாம் என்ன செய்து எப்பிடி…” உதட்டைப் பிதுக்கியவன் கவியை முறைத்தான்.

“அதப் பற்றிக் கண்டவேயும் கவலைப்படத் தேவேல்ல. இவரிட …” சற்றும் தயங்காது சீறியவள், “சரி, வாய மூடிட்டன் போதுமா?” என்றாள் தமக்கையிடம், சற்றும் கோபம் குறையாது.

“நீங்க என்ன விசயம் எண்டு சொல்லுங்க அண்ணா,” என்ற உதயா, “சூர்யா” உட்பக்கமாகப் பார்த்து அழைத்தாள்.

“உங்கட அவரோட கதைக்கத்தான் தங்கச்சி வந்தனான்” என்றான் டேமியன்.

“என்ர அக்காட பெயர் உதயா. இப்பிடியெல்லாம் எங்களுக்கு ஒரு அண்ணா தேவையே இல்லை. தங்கச்சியாம் தங்கச்சி.” வெடுக்கென்று வாய்விட்டிருந்தாள்,கவி.

“தயவு செய்து நீ உள்ள போறியா கவி. இதான் கடைசித் தடவை.” தமக்கை அதட்டினாள்.

முறைப்போடு வாயில் கதவில் சாய்ந்து நின்றவளுக்கு, டேமியன் முகத்தில் அறம்பிறமாகக் குத்த வேண்டும் போலிருந்தது. பிறகு, அந்தக் கல்யாணிக்குப் பரிந்துகொண்டு வந்திருக்கிறான். இவனெல்லாம் என்ன டிசைன். மனிசி காதலிச்சு கழுத்தறுத்திட்டு வந்த கதை தெரிஞ்சு, கலியாணம் கட்டிக் குடும்பம் நடத்துறாராம். மனத்துள் டேமியனைப் போட்டுத் துவைத்தெடுத்தபடிதான் நின்றாள்.

மனைவியின் குரலுக்குச் சற்றுப் பொறுத்தே வெளியில் வந்தான், சூர்யா. டேமியன் முகத்தையும் பார்க்கவில்லை.

“உதயா, நான் ஆரோடையும் எதையுமே கதைக்க விரும்பேல்ல. தெரிஞ்சது எல்லாம் காணும்.” வெடுக்கென்று சொன்னவன் முகம் பாறை போலிருந்தது.
இவனுக்காக என்னை ஒதுக்கினாளா? சரி போகட்டும். இவன் அந்தளவுக்குப் பெரியவனாக, வசதி வாய்ப்புள்ளவனாகவே இருக்கட்டும். ஆனால், செத்துப்போனதாகச் சொல்லி என்னை வதைத்தாளே! அவளுக்காக, தெய்வீகமான அன்பு என்று கற்பனை பண்ணிக்கொண்டு நான் அழிஞ்சு போக இருந்தனே! உதயா மட்டும் இல்லையோ!

சூர்யாவால் மனத்தைத் தேற்றவே முடியவில்லை. கல்யாணியின் கழுத்தைத் திருக வேண்டும் போல் இருந்தது. அவளை இனம் கண்ட நொடி, அது கொடுத்த அதிர்வு இன்னமும் அவனுள் வியாபித்திருந்தது. அதையும் கடந்த கண்மண் தெரியாத ஆத்திரம் வேறு!

“நான் கனக்க ஒண்டும் கதைக்க வரேல்ல சூர்யா. தயவு செய்து… ஐஞ்சு நிமிசம்தான் . சரி, கதைக்கக் கூட வேணாம். இத ஒருக்கா வாசிச்சுப் பாருங்க.” தன் கைப்பேசியை அவனை நோக்கி நீட்டினான், டேமியன்.
இறுகி நின்றவன் அசையவில்லை. இரத்தச் சிவப்பு விழிகளோடு வேறு பக்கம் திரும்பிவிட்டான்.

“தயவு செய்து இவரப் போயிரச் சொல்லு உதயா. கொஞ்சத்தில நாங்க இஞ்ச இருந்து போயிருவம். பிள்ளைகள் இப்ப வந்திருவினம். இந்த அரியண்டங்கள எல்லாரும் பாக்கோணுமா? எல்லாத்தையும் விட, என்னக் கொலைகாரனா மாத்த வேணாம் எண்டு சொல்லு உதயா!” உறுமினான்.

“சூர்யா என்ன நீங்க?” கலங்கிய விழிகளோடு சென்று அவனைப் பிடித்து உலுக்கினாள் , உதயா. ஒரு கை அவன் முதுகோடு வளைத்திருக்க மறுகையால் தன்னுள் அடக்க முயன்றவளுக்கு, நெஞ்சு கிடுகிடுவென்று நடுங்கியது.

“என்ன எல்லாம் கதைக்கிறீங்க? இன்னொருக்கா இப்பிடியெல்லாம் கதைச்சீங்க…” விம்மினாள். மனைவியை அணைத்து அவள் தலையைத் தன் நெஞ்சில் அழுந்தச் சாய்த்துக்கொண்டவன் விழிகளால் கண்ணீர் உருண்டு தெறித்தது.
“நான் உண்மையா பழசுகள் ஒண்டையும் நினைக்கேல்லடி. சத்தியமாத்தான் சொல்லுறன். அவளத் தெய்வமா எல்லாடி நினைச்சிருந்தனான். என்னைப் போய் எப்படி ஈஸியா ஏமாத்தி இருக்கிறாள். அதான் தாங்கேலாமல் இருக்கு உதயா.” என்றவன் குரலின் வேதனை, டேமியன் விழிகளையே கலங்கடித்துவிட்டது.

error: Alert: Content selection is disabled!!