42
அங்கிருந்து வந்த டேமியானால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
மயங்கிச் சரிந்ததில் இருந்து அழுது துவண்டு நடுங்கினாலும் சூர்யா முன்னால் சுதாகரித்து, வெட்டொன்று துண்டு ரெண்டு என்று கதைத்துவிட்டுச் சென்ற மனைவியைப் பார்க்க வேண்டும், அவளோடு இருக்க வேண்டும் போலிருந்தது.
அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தான். அவள் அருகண்மைக்கான தேடல் அதிகரித்ததுதான் மிச்சம். உதடுகளில் முறுவல் வந்தமர்ந்துகொண்டது.
சிலோன் டேஸ்டில் சுமதியும் இல்லையே, திலினி சமாளிப்பாள் என்று தெரியும். என்றாலும் அப்பகுதிக்குள் நுழைந்தான். அதுவரை, அப்பகுதிக்குள் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத குழப்பம். கல்யாணி வேறு மயங்கி விழுந்து இருந்தாள். சுமதி அப்படியே சென்றுவிட்டார். பிரச்சனை எதுவுமோ என்றுதான் கதைத்துக்கொண்டார்கள். என்ன ஏதென்று அறியும் ஆவல்.
இப்போது டேமியனின் முகம் பார்க்கையில், அப்படி எதுவும் தெரியவில்லை. சற்றே மலர்வு கூடித்தான் தெரிந்தான். திலினி மறுத்தும் கேட்காது அப்பகுதியில் அவனே நின்று உதவிகள் செய்துவிட்டு, காரில் ஏறியவன், விளையாட்டு மைதானம் நோக்கி காரைச்செலுத்தினான்.
திலினிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, உணவகத்தின் பிரதான பகுதியால்தான் வெளியே வந்திருந்தாள், கல்யாணி. பிள்ளைகள் வெளியில் நிற்கவே அழைத்துக்கொண்டு அப்படியே வந்துவிட்டாள்.
மற்றைய பகுதிக்குச் சென்று திலினி ஆட்களின் மேலதிக விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லவோ, உதயாவின் உறவுகளைச் சந்திக்கவோ, என்ன ஏதென்ற கதைகளை வளர்க்கவோ அவள் விருப்பவில்லை.
விண்ணென்ற தலையிடி வேறு. நடந்த எதுவம் தெரியாத பிள்ளைகள் தமக்குள் கலகலத்தபடி இருந்தார்கள். சுமதியும் இடையிடை நெற்றிப் பொட்டை அழுத்தியபடியே தான் அமர்ந்திருந்தார். கல்யாணி அவதானித்தாள். ஒன்றுமே கதைக்க வரவில்லை.
அவரும் கதைக்கவில்லை. மகள் துவண்டு விழ என்னவோ ஏதோவென்று பதறியதைக்கூட அவர் மறந்து போனார்.
எங்கோ இருக்கிறான் என்றது கடந்து, சூர்யா நினைவிலேயே இல்லையே! முதல், குடும்பம் பிள்ளைகுட்டி என்றானவனை எதற்காக இவர்கள் நினைவில் இருத்த வேண்டும். அவனில் கோபம் கூட வந்திட்டு. மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான். அவரோடு, கணவனும் மனைவியும் கதைத்ததில் அவர் அதையுணர்ந்துமிருந்தார். பிறகு என்ன?
இப்படித் திடுமென்று வந்து கொதித்து ஆவேசமாக நின்றால் மகள் வாழ்க்கை என்னாவது? கொஞ்சம் முதல் தானே அந்தளவுக்கு மகிழ்வாக இருந்தார். சுற்றி சுற்றி அவர்களுக்கே எல்லாம் வர வேண்டுமா? அவரால் தாங்கவே முடியவில்லை.
இதையெல்லாம் டேமியன் எப்படி எடுத்துக்கொள்வான். இனி, இதனால் என்ன என்ன பிரச்சினைகள் வரும். இதுதான் என்று வரையறை செய்ய இயலாத கலக்கம் அவருக்கு.
கல்யாணிக்கு அருகில் தான் அமர்ந்திருந்தார். பாதையில் கவனமாகக் காரோடும் மகளை, இலேசாக விழிகளைத் திருப்பிப் பார்த்தார். முதலில் கலங்கினாலும் அவள் அந்தச் சூழ்நிலையைக் கையாண்ட விதத்தில் நிம்மதியே! அவர்கள் வாழ்வில் டேமியனுக்குத் தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. புரிந்து கொள்வான் என்று, தன்னைத்தானே சமாதானப்படுத்த விழைந்தார். ஆழமான பெருமூச்சோடு, கண்களை மூடி, தலையை இருக்கையில் சாய்த்துக்கொண்டார்.
“ம்மா, நீங்க ஓகே தானே? ஒண்டும் இல்ல சரியா?” அவர் மேற்கையில் பரிவோடு தடவியவள் விழிகளை நிறையச் செய்தாள்.
விழிகளைத் திறந்தார். பட்டென்று கண்ணீர் வழிந்தோடியது. மறுகணமே துடைத்துவிட்டார்.
“ப்ச்! ஒண்ணும் இல்ல ஆச்சி. இன்னும் நாங்க காண இருக்கோ எண்டு நினைச்சன். விடு!” நிமிர்வாகக் கதைக்க நினைத்தாலும் முடியவில்லை. தழுதழுப்போடு சொல்லி மகள் தலையை மெல்ல வருடிவிட்டு விழிகளை மூட நினைத்தார்.
“சுமதிம்மா, நீங்க ஓகேவா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” சிசிலியாவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. தனது கலக்கத்தைத் துளியும் காட்டாது மறைக்க வேண்டிய கட்டாயம் சுமதிக்கு. பிள்ளைகள், தம் கதைகளுள் அவரையும் இழுத்து உதவினார்கள்.
வழியில் காரை நிறுத்திவிட்டு மருந்தகத்துக்கு ஓடிவிட்டு வந்தாள், கல்யாணி. ஏறியதும் பனடோல் இரண்டைத் தாயிடம் கொடுத்தவள், “பபி, சுமதிம்மாக்கு தண்ணி குடுங்கோ.” என்றபடி காரை எடுத்தாள்.
விடுமுறையில் நிற்கும் பிள்ளைகளுக்கு என்று, ஒழுங்கு செய்த விளையாட்டிக் போட்டிதான் என்றாலும் நிறையப் பிள்ளைகள் வந்திருக்க, இவர்கள்தான் கடைசி போலிருந்தது.
பிள்ளைகள் மூவரும் தத்தம் வயதினரோடு சென்று விளையாட்டுகளில் கலந்துகொள்ள, தாயும் மகளும் மாறி மாறி நின்று பார்ப்பதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் நேரம் கடந்தது. அதுவே, காலையில் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியில் இருந்து சற்றேனும் வெளியில் இழுத்து வர உதவியது.
“அம்மா பாத்துக்கொள்ளுங்கோ, டொய்லெட்டுக்கு போயிட்டு ஓடி வாறன்.” என்று, கல்யாணி செல்ல, ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட ஜெரிக்சனை, பபிதா, சிசிலியாவோடு சேர்ந்து உற்சாகப்படுத்துவதில் குறியாக நின்றார், சுமதி.
பின்னால், சத்தமே செய்யாது வந்து நின்ற டேமியனை யாருமே காணவில்லை. கழிவறை சென்று வந்த கல்யாணி உண்மையாகவே டேமியனை அங்கு எதிர்பார்க்கவில்லை. சற்றுமுன் அவனைக் காணத்துடித்தாளே! விழிகள் கலங்கிவிட்டன.
அவள் வாழ்வில் இவன் மட்டும் வராது இருந்திருந்தால், இன்று, சூர்யா உதயா குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியம் இல்லை. அவனை, முதுகோடு அப்படியே இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல் உள்ளம் பரபரக்க கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக நின்றுகொண்டாள்.
தற்செயலாகத் திரும்பிய சிசிலியா, “பப்பா!” என்று கூவினாள்.
“தம்பி! நீங்க எப்ப வந்தனீங்கள்? நானும் விட்டுட்டு வந்திட்டன், அங்க எல்லாம் ஓகே தானே?” என்ற சுமதிக்குப் பதில் சொன்னவன், மனைவியைதான் எங்கே என்று கேட்டான்.
“அப்பவே டொய்லெட்டுக்கு எண்டு போன பிள்ளைய இன்னும் காணேல்ல.” என்றவர், பின்னால் திரும்பி விழிகளைச் சுழற்றினார். சேர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பினான்,டேமியன். சற்றே நகர்ந்து, ஆட்களுள் மறைந்து நின்றுகொண்டாள், கல்யாணி. அவளையும் அறியாது அவளுள் சிறுபிள்ளையின் குதூகலம்.
கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்,டேமியன். எடுக்கவில்லை என்றதும் சற்றே பதற்றம் கொண்டவன் கழிவறைக்கே சென்று பார்ப்போம் என்று நினைத்துத் திரும்ப, அவன் முதுகில் சின்னத் தட்டோடு வந்து அருகண்மையில் நின்றாள், அவன் மனைவி.
அவளை ஒரு தடவை ஆராய்ந்துவிட்டே கதைக்க ஆரம்பித்தான்,அவன்.
“இப்ப ஓகேவா நீர்? தலைச்சுற்று ஒண்டும் இல்லையே! வேணும் எண்டா நான் பிள்ளைகளோட நிக்கிறன் , சுமதிம்மாவோட வீட்ட போங்கோவன்.” என்றான், அவள் முகத்தையே பார்த்தபடி.
“இப்ப ஏன் அப்பிடிப் பாக்கிறீங்க?” மெதுவாகக் கேட்டவள் விழிகள் சுருங்க முறுவலித்தாள். அக்கணம் வெகு வெகு வடிவாகத் தெரிந்தாள். அப்படியே இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல் மனமும் கரங்களும் பரபரத்துப் போகத் தடுமாறியது டேமியன்தான்.
“எனக்கு உண்மையாவே ஒண்டுமில்ல டேமியன்.” என்று சொல்லி, அவன் தோளோடு இடித்துக்கொண்டு நின்றாள். அவன் கரம் அவள் கரத்தைத் தன்னுள் பொத்திக்கொண்டது. மனம் அதிலெல்லாம் சமாதானம் அடையேன் என்றது.
“நிறைய அலுவல் இருக்கு எண்டீங்க எல்லா? நீங்க போங்கோ, நாங்க கொஞ்சம் நேரத்துக்கே வரப்பாக்கிறம்.” அவன் பார்வையிலும் கரத்தில் கொடுத்த அழுத்தத்திலும் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு சொன்னாள்.
“வேலைகள் எல்லாம் நாளைக்குச் செய்யலாம். டேமியன் இண்டைக்கு லீவு!” என்றுவிட்டான் அவன்.
“ப்ச், என்ன விளையாட்டு இது டேமியன்? அதும் சின்னப்பெடியன் போல!” விழிச்சுருக்கத்தோடு முணுமுணுத்தவள், “கெதியா நடவுங்கோ எண்டு சொல்லுறன்.”உறுக்கல் போட்டாள்.

