“பார்றா! கலைக்கிறீர் என்ன? சரி, நீங்க முடிச்சிட்டு வாங்கோ.” பிள்ளைகள் தலையில் தடவிவிட்டு, சுமதியிடமும் விடைபெற்றவன், “கார் வரைக்கும் வந்திட்டு வாருமன்.” அவள் கரத்தை விடாது இழுத்துக்கொண்டு நடந்தான்.
இணைந்து நடந்தவளுக்கும் அவனோடு சில நிமிடங்களேனும் தனிமை தேவைப்பட்டது. ஒற்றை வார்த்தை கதைக்காது அவன் நெஞ்சில் ஆழப்புதைந்து, விழிகளை மூடிக்கொண்டிருக்க வேண்டும் போலொரு ஆசை! அதுவரை வெளிக்காட்டாது சாதாரணம்போல் இருந்தவளுக்கு , விழிகள் கூட கலங்கிட, அதை, அவனுக்கு மறைக்கப் பெரும் பிரயத்தனம் செய்யவேண்டி இருந்தது.
“கார் எங்க நிப்பாட்டி இருக்கிறீங்க?”என்று கேட்டாள்.
“இஞ்ச பார்க்கிங் இல்ல. வெளில ரோட்டோரமா ஒண்டு கிடைச்சுது.” என்றவன், கதைத்துக்கொண்டே கார் வரை கூட்டி வந்திருந்தான். கதவைத் திறந்து ஏறும் படி சொல்ல, “எங்கயாவது போகவோ? அம்மாவும் பிள்ளைகளும் தனிய. சொல்லவும் இல்ல டேமியன்.” என்றவள் ஏறவில்லை.
“ப்ச்! சும்மா ஏறும் சொல்லுறன்.” என்று, வற்புறுத்தி காருக்குள் ஏற்றியவன் சாரதியாசனத்தில் ஏறியமர்ந்த வேகத்தில் கட்டிப்பிடித்திருந்தான், இறுக.
அதுவரை அவனுள் இருந்த அலைப்புறுதல் சர்ரென்று வடிய, அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன் அப்படியே இருக்க, அவளோ, கேவி அழத்தொடங்கியிருந்தாள்.
சற்றுமுன் அவளுள், இந்தக் கதகதப்புக்கான ஏக்கம் பிரவாகமாக வந்ததே! கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவளுக்கு, அவனும் தன்னைத் தேடியுள்ளான் என்றதும் அழுகை வலுத்தது.
அழாதே என்று சொல்லவும் மறந்துபோனான், டேமியன். அவன் விழிகள் கசிய, அவள் உச்சம் தலையில் கன்னம் வைத்து விழிகளை மூடிக்கொண்டான்.
காலையில், இன்னார் என்று தெரியாமல் கோபத்தை உருவாக்கியவன்,
‘சூர்யா’ என்றதும் அவன் காட்டிய உக்கிரமும் ஒருகணம் என்றாலும் இவன் உள்ளத்தை கிடுகிடுவென்று ஆட்டி விட்டிருந்தது. சுமுகமாகப் போகும் தங்கள் வாழ்வில் இதென்ன குழப்பம் என்று நினைத்தான் இவன்.
இப்போது ,இங்கு வரும்போது கூட, கல்யாணி எப்படியிருப்பாளோ என்ற கேள்வியும் தவிப்பும் எக்கச்சக்கமாக இருந்தது.
அவளைக் கண்ட பின்னர்தான் அது மெல்ல மெல்ல அகல ஆரம்பித்திருந்தது. இதோ, இப்போதுதான் நிம்மதியாக மூச்சு விடுகிறான்.
“டேமியன் …” மெல்ல அழைத்தாள், கல்யாணி. தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்துமிருந்தாள்.
“டோய் டேமியன்!” திமிறி விலகப் பார்த்தாள். அவன் விடவில்லை.
“டேமியன் என்ன நீங்க? சின்னப்பெடியனா நீங்க?” அவன் விலாவில் நுள்ளியபடி கேட்டிருந்தாள்.
நெளிந்தான். அவளை விலக அனுமதிக்கவில்லை.
“எனக்கு நீயும் உனக்கு நானும் எப்பவும் சின்னாக்கள்தான்.” எப்போதாவதுதான் இப்படி ஒருமை வரும் என்பது, இந்த ஒரு வருடத்தில் அவள் கண்டது. முறுவலோ விரிந்தது. முகத்தை அவன் நெஞ்சில் அழுத்தினாள்.
விடுங்க டேமியன்,நாரிக்க நோக்குதப்பா.” என்றதும் அவள்தான்.
“உங்களுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத வேலைய நான் செய்யிறன் பாருங்க.” சத்தமாகச் சிரித்துக்கொண்டே கரங்களைத் தளர்த்தினான், அவன்.
“அப்பாடா!” பொய்யாகச் சலித்துக்கொண்டாலும் கரம் ஒரு பக்க நாரியைத் தடவி விட்டது.
“என்ன பார்வை? உண்மையாவே நாரிக்க நொந்திட்டு. சொல்லாமல் கொள்ளாமல் திடுமென்று இழுத்துக் கட்டிப் பிடிச்சா இப்பிடித்தான்.” விழிகளைச் சுருக்கி அவனை வம்பிழுத்தவள் புதிதாகத் தெரிந்தாள், அவனுக்கு.
“டேமியன்! என்ன கண்ணெல்லாம் கலங்கிக் கிடக்கு?” பதறிப்போனாள், கல்யாணி.
“ப்ச்!” கண்களை இரு கரங்களாலும் அழுத்தமாகத் துடைத்துவிட்டு, சிரிப்போடு அவள் முகம் பார்த்தான்.
“ இல்ல, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உங்களப் பாக்கோணும் போல இருந்தது. அதான்….” என்றவன் மீண்டும் விழிகள் கலங்க, துடைத்துவிட்டான்.
அவளாகவே நெருங்கிவந்து அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள். கரமிரண்டும் அவனை வளைத்துக்கொண்டன.
“எனக்கும் உங்களப் பாக்கோணும் போல இருந்தது.” சின்னக் குரலில் சொன்னவள், சிறிது நேரத்தின்பின் அப்படியே இருந்து அவன் முகம் பார்த்தாள்.
“சூர்யா ஆக்கள் வக்கேட் பண்ணிட்டினமோ?” என்று கேட்டவள், அவன் பதில் சொல்ல முதல் தொடர்ந்தாள்.
“சத்தியமா நான் எப்பிடி மயங்கினன் எண்டு தெரியா டேமியன். நம்மட ரெஸ்ட்டோரண்டில சூர்யா வந்து நிக்க எப்பிடி இருந்தது தெரியுமா? எங்கயோ இருந்தவர் இஞ்ச…முதல், அது உண்மையா எண்டுதான் இருந்தது. அதோட தலை கிறுகிறுத்ததுதான் தெரியும்.” என்றவள். “ப்ச்! அத இனிக் கதைக்க வேணாம் என்ன. உதயாவும் சூர்யாவும் பிள்ளைகளோட எப்பவும் நல்ல மகிழ்ச்சியா இருக்கோணும் அவ்வளவுதான். நான் கெட்டவளாவே இருந்திட்டுப் போறன்.” மணியாக உருண்ட விழி நீரோடு அவனை ஏறிட்டவள், “போய்ட்டினமோ? பிள்ளைகள ஒருக்காப் பாத்திருக்கலாம். ப்ச் விடுங்க.” வழிந்த கண்ணீரை அவன் மேல் கையிலேயே துடைத்தாள்.
“அதெப்படி நான் விடுறது ..ம்ம்ம் அவரோட கதைச்சனான்.” என்றவன், அதிர்ந்து விலகியவளை மீண்டும் தன்னுள் கொண்டுவந்துவிட்டு, “நீங்க கெட்டவா, விரும்பிட்டு ஏமாத்தினவா அதும் வெளிநாடு வரோணும் எண்டு அவரக் கழட்டி விட்டுட்டிங்க எண்டதோட விட்டிருந்தா, தன்னையே ஏமாற்றியாச்சு என்றது, அவருக்குப் பெரும் காயமா இருந்திருக்கும் கல்யாணி. பிறகெப்பிடி அவையள் மகிழ்ச்சியா இருக்கிறது? அதான் கதைச்சனான்.” என்று, நடந்ததைச் சொன்னான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அவள்.
“அவருக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் அது பெரும் உறுத்தலா இருக்கும் கல்யாணி. அதான் கதைச்சன்.” என்றவன், “விரும்பிறவே எல்லாரும் சேருறது இல்ல. விரும்பிறதுகள், நினைக்கிறதுகள் எல்லாம் கிடைக்கிறதும் இல்ல. நடக்கிறதும் இல்ல. கிடைச்ச வாழ்க்கையை மகிழ்ச்சியா, அமைதியாக் கொண்டுபோகத் தெரிஞ்சவன் தான் புத்திசாலி. சூர்யா புத்திசாலி எண்டு நினைக்கிறன். மூண்டு நாளும் இருந்திட்டுத்தான் போவினம்.” என்றதோடு அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“தேங்க்ஸ் டேமியன்!” மெல்லச் சொன்னவள், சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டாள், மனத்துள் சூர்யாவுக்கும் உதயாவுக்கும் நன்றி சொல்லிக்கொண்டாள்.
“அம்மாதான் சரியா குழம்பிட்டா. வாய்விட்டுக் கதைக்கிறாவும் இல்ல. இரவுக்கு ஆளோட கதைக்கோணும்.” என்றாள், மெதுவாக.
“அதெல்லாம் ரெண்டு நாளில சரியாகீரும்.” என்றுவிட்டு, அப்படியே சில நிமிடங்கள் பொதுவாகக் கதைத்துக்கொண்டிருக்க , பபிதா அழைத்துவிட்டாள்.
“சரி, நீங்க போயிட்டு வாங்க. பின்னேரம் சந்திப்பம்.” அவனிடம் சொல்லிக்கொண்டு இறங்க, அவனும் சேர்ந்து இறங்கினான்.
“என்ன டேமியன் போகேல்லையா?”
“நானும் வாறன்” என்றான் அவன்.
“பிறகு நாளைக்கு மூச்சு விடவும் நேரமில்லாமல் வேலை செய்யவோ? கெதியாப் போகலாம்.” அவன் முதுகில் பட்டுப் பட்டென்று அடித்து, காருக்குள் ஏற்றிவிட்டு கைகாட்டிக்கொண்டே நடந்தவளை , பாதையின் சிவப்பு விளக்குக்காகக் காத்துநின்ற வாகனத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள், உதயாவும் சூர்யாவும்.
கல்யாணி நிறைவாக வாழ்கிறாள் என்பது பட்டவர்த்தனமாக அவர்களுக்குப் புரிந்தது. அவள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட சூர்யா மனம், அதே அன்போடு நிறைவாக உணர்ந்தது. அவளின் அகால மரணத்தை ஏற்கவே முடியாது இத்தனை வருடங்களாக ஏக்கத்தை, வருத்தம் வேதனையைச் சுவாசித்த அவனுள்ளம் நிம்மதியாக மூச்சு விட்டது.
உதயாவின் கரம் நகர்ந்து கணவன் கரத்தை அழுத்தமாகப் பற்றிப் பொத்திக்கொள்ள, விழிகளை மூடித்திறந்தவன் மெல்ல முறுவலித்தான்.

