43
அன்று மாலை, ஆறரை மணி அளவில் ஏற்கனவே பதிவு செய்திருந்த உணவகத்துக்குச் சென்றுவிட்டு வருகையில் ஒன்பது மணியாகியிருந்தது.
பிள்ளைகளுக்கு நல்ல களைப்பு. வீட்டுக்குள் உள்ளிட்ட கையோடு, தூங்கப் போவதாகச் சென்றவர்கள், கிறிஸ்டினா அழைத்திருக்க, திரும்பவும் கீழே வந்திருந்தார்கள்.
அன்றைய விளையாட்டுப் போட்டி பற்றிய கதைகளில் ஆரம்பித்து, சற்று முன்னர் வெளியே சாப்பிடச் சென்றுவந்தது வரை மாறி மாறிச் சொன்னார்கள்.
சகோதரன், சகோதரி கதைக்க ஒரு ஓரமாக அமைதியாக இருந்த பபிதா, சிறிது நேரத்தில், தூக்கம் வருவதாகச் சொல்லி எழுந்து சென்றுவிட்டாள். சிசிலியா கையிலிருந்த கைப்பேசி டேமியன் கைக்கு வந்திருந்தது. கிறிஸ்டினா கொடுக்கச்சொல்லி இருப்பார் போலும்.
வந்ததும் களைப்போடு வரவேற்பறையில் அமர்ந்துவிட்ட சுமதி எழுந்து செல்லப்பார்த்தார். காலையில் அவர் பட்ட வேதனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்று, தெளிவாகவே உணர்த்தும் வகையில் டேமியன் நடந்திருந்தான். அதில் நிறைந்த மனத்தோடு இருந்தவர், கிறிஸ்டினா கதைப்பதைக் கேட்டு, அதைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. பலவேளைகளில் தாயும் மகனும் அலைபேசியிலேயே சீறுப்படுவது தெரியுமே!
அதுபார்த்தால், அசைய முடியவில்லை. ஒருபோதும் இன்றி அவர் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தாள், கல்யாணி.
“குஞ்சு, விடன தூங்குவம். விடியவெள்ளன எழும்பவும் வேணும்.” என்று,மெல்லச் சொன்னாலும் சுமதியின் கை, மகளின் தலையைப் பரிவோடு கோதியபடியிருந்தது. அதுவே கல்யாணிக்குக் கண்களைச் சொக்க வைப்பதாக இருந்தது. அதையும் மீறி, அவள் பார்வை கணவனில் தான் நிலைத்திருந்தது.
என்னவென்று விழிகளை அசைத்துக் கேட்டவன் பார்வையும் அவளில் பட்டுப்பட்டே விலகியது.
பட்டென்று கைப்பேசியைப் பறித்திருந்தாள், சிசிலியா.
அதேவேகத்தில், “இண்டைக்கு பப்பாக்கும் கனி அன்ரிக்கும் வெடிங் அனிவர்சரி அப்பம்மா . நீங்க விஷ் பண்ணேல்லையா?” அதட்டலாகக் கேட்டும் இருந்தாள்.
கதைத்துக்கொண்டிருந்த கிறிஸ்டினா வாய் திறக்கவில்லை. அவருக்கு அது நினைவில்லையா என்ன? அவர் மகனை அவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்த நாளாயிற்றே! அது, அவர் உயிர் இருக்கும் வரை நினைவில் இருக்குமே! இந்தா, அவர் வளர்த்த மூத்த பேத்தி பபிதா கூட அளந்துதான் வார்த்தைகளை உதிர்க்கிறாள். கதைக்கவேண்டுமே என்று கதைக்கிறாள். பார்வையாலேயே தள்ளி நிற்பதை உணர்த்துகிறாள். பிறந்த அன்றிலிருந்து பெற்ற அன்னைக்கு நிகராகப் பார்த்துக்கொண்டு அப்பம்மாவை ஒதுக்குகிறாள். எல்லாம் யாரால், யாருக்காக ? நேற்று அறிமுகமான கண்டறியாத கனி அன்ரிக்காக.
விழிகள் நிறைந்து வழிய அமைதியாக இருந்தார்,கிறிஸ்டினா. அதுமட்டுமா? அவர் மகனையே எதிர்க்க, கண்டபடி பேச, உச்சபட்சமாக, பெற்ற தாய் அவரே,
‘மலடன்’ என்று விளிக்க எல்லாம் மூலகாரணமே அந்த எளிய இரு பெண்களும் தானே?
சில மாதங்களுக்கு முதல், கனடா வந்திருந்த பியங்காவின் பெற்றோரைச் சந்தித்தபின், அவர் உதிர்த்த ‘மலடன்’ என்ற வார்த்தையே அவரை வதைத்துக் கொண்டிருக்கே! மீண்டும் மகன் அதுபற்றிக் கதைத்தபோதும் இல்லாததையா சொன்னேன் என்று எந்தளவுக்கு இகழ்வோடு கேட்டிருந்தார்.
“அம்மாவ மன்னிச்சுக்கொள்ளுங்க தம்பி.” என்று, வார்த்தைகளாகக் கேட்டு, மகன் மனத்தில் உள்ள வடுவை அவரால் போக்கிடவா முடியும்? இப்படி, தினம் தினம் மருகலோடு கழிகிறது அவர் பொழுதுகள்.
எத்தனை காலம் போனாலும் அவர் மனத்தில் உண்டான இந்தக் காயங்கள் மாறப்போவதில்லை. அமைதியாக வாழ்ந்த அவர் வாழ்வையே புரட்டிப் போட்டிருந்த அந்த இரு பெண்கள் மீதான வெறுப்பு மறையப் போவதும் இல்லை. அந்த இரு பெண்களும் அவரை நெருங்கவும் இயலாது.
அதற்கென்று மகனை முழுமையாக விட்டும் கொடுக்க முடியாது. இப்போதெல்லாம் இந்த எண்ணம் தான். ஆனாலும் அந்தப் பெண்கள் உள்ள வீட்டுக்குள் புகவோ அவர்களோடு சேர்ந்து இருக்கவோவும் அவர் தயாராக இல்லை. இப்படித்தான் தினமும் அழைத்துத் தன்னிருப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறார்.
அவர் இப்படி அதையிதை நினைத்திருக்க, தாயின் மௌனம் டேமியனுக்கு மிகவுமே எரிச்சல் கொடுத்தது. ‘இப்பிடி நடந்து கொள்ளுறதில எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் எண்டால் தாராளமா இப்பிடியே இருந்து கொள்ளுங்கோ அம்மா.’ என்று மனத்தில் முணுமுணுத்தவன், “வேறென்ன அம்மா வைக்கிறன். கவனமா இருங்கோ!” பதிலுக்குக் காத்திருக்கவில்லை, அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அதுவரை நின்றுவிட்டு, டேமியனைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிவிட்டு, மீண்டும் ஒரு தடவை வாழ்த்தினார்கள், இளைய பிள்ளைகள் இருவரும். கல்யாணி, சுமதியையும் கொஞ்சி, இரவு வணக்கம் சொன்னவர்கள் மாடியேறி மறையவும் கரம் இரண்டையும் தூக்கி நெட்டி முறித்தபடி எழ முயன்றான், டேமியன்.
“தூங்கவோ டேமியன்? கொஞ்ச நேரத்தால போவமே!” என்றாள், கல்யாணி.
டேமியன் நெற்றி சுருங்கியது. இருந்தாலும் அமர்ந்துகொண்டான். ‘சரி இருக்கலாம். அதுக்காக அம்மாட மடியிலயா படுத்திருக்கோணும்? எங்களிட்ட மடி இல்லையா என்ன?’ மனத்துள் முணுமுணுத்துக்கொண்டவன் பார்வை, அடிக்கடி மனைவியிடம் சென்றுவிட்டு தொலைக்காட்சிக்கு இடம் மாறியது.
கல்யாணிக்குச் சிரிப்பு. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாள். சுமதிக்குமே மருமகன் பார்வை விளங்கியது.
“இஞ்சேம்மா, சின்னப்பிள்ள போல அலும்பு பண்ணாம எழும்பன. எனக்குக் கண்ணைச் சுழட்டுது.” என்று சொல்லியும் அவள் அசைகிறாள் இல்லையே! அவதியாக டேமியனைப் பார்த்துச் சிரித்து வைத்தார்.
“ குட்டி பேபி அம்மாட மடியில படுத்திருக்கிறா. குழப்பாதீங்க சுமதிம்மா. பேபிக்கு பால் போச்சி கொண்டுவந்து தரவோ?” வம்பிழுத்தான், அவன். அதன் பின்னால் இருந்த கடி விளங்காதா என்ன.
“உங்களுக்குச் சரியான எரிச்சல். என்ர அம்மாட மடியில நான் கிடக்கிறன். உங்களுக்கு இப்ப என்ன வந்தது?” வெடுக்கென்று மகள் கேட்கப் பதறிப்போனார், சுமதி.
“ இதென்ன கதை பிள்ள? அடிதான் வாங்குவ இப்ப. முதல் எழும்பு எண்டுறன்.” வலுக்கட்டாயமாக அவள் தலையைத் தூக்கி நிமிர்த்திவிட்டுக் கண்டிப்போடு பார்த்தார், சுமதி.
அவளோ, முறுவலோடு எழுந்தமர்ந்தவள் இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, “ ரெண்டு நிமிசம் இருங்கோ, இந்தா வந்திருரன்.” என்றவள், சமையலறைப் பக்கமாக ஓடினாள்.
போன வேகத்தில் திரும்பி வந்தாள். கைகள் இரண்டும் பின்புறம் இருந்தன. அவள் முகத்தில் இதுவரை கண்டிராத அளவு மகிழ்வும் பளபளப்பும். சுமதியும் டேமியனும் ஒருவர் ஒருவரைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் அனிவெர்சரிக்கு கிஃப்ட் தந்தீங்க. நான் ஒண்ணும் தரேல்லயே!” என்றவளை, என்ன செய்வது என்று பார்த்தார் சுமதி. கல்யாண நாளன்று, அவள் கணவனுக்குப் பரிசு கொடுக்கையில் அவர் எதற்காம்? ‘இந்தப் பிள்ளய என்ன செய்யிறது ?’ மனத்துள் முணுமுணுத்தபடி, எழுந்துகொள்ளப் பார்த்தார்.
“ம்மா, இருங்கோ எண்டுறன். டேமியன், நீங்க அம்மாக்குப் பக்கத்தில போய் இருங்கோவன்!” அதட்டினாள்.
“விசரே பிள்ள உனக்கு? அஞ்சு வயசுப் பிள்ளபோல நடக்கிற.” என்ற சுமதி எழுந்துவிட்டார். டேமியன் என்ன நினைத்தானோ, “சரி சரி, இருங்கவன் சுமதிம்மா. அவவிட ஆசையை ஏன் கெடுப்பான்.” என்று சொல்லி அவரை அமர்த்திவிட்டு, அருகில் அமர்ந்தவன் கை நீட்டினான்.
“கெதியாத் தந்தா பாத்திட்டு நாங்க தூங்குவம். உங்களுக்கு என்ன, நாளைக்கு வேல இல்லையப்பா. எங்களுக்கு வேலை இருக்கு.” என்றான் நக்கலாக.
முகத்தில் ஒளிர்வோடு உதட்டில் ஒரு பக்கத்தைக் கடித்துத் தன்னைக் கட்டுக்குள் வைத்தபடி, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவர்கள் முன்னால் வந்து நின்றாள், கல்யாணி.
பார்த்திருந்த இருவருக்குமே இந்தக் கல்யாணி மிக மிகப் புதியவள். அவள் நடந்து கொண்ட விதம் பபிதாவின் அக்கா போல் இருந்தது. இதுவரை ஒரு நாளும் தன் நடத்தையில், கதை பேச்சில் சிறுபிள்ளைத்தனத்தைக் காட்டியவள் அல்லளே! அதுவே, தம்முள் பார்த்துக்கொள்ள வைத்திட்டு.
அவர்கள் எதிரே வந்து நின்றவள், மெதுவாக இடக்கரத்தை முன்னால் கொண்டு வர, இருவர் பார்வையும் அதில். வெறுமையாக இருக்கவும் முறைத்தார், சுமதி.
“நேரம் கெட்ட நேரத்தில என்னம்மா இது விளையாட்டு?” கேட்கவும் செய்தார்.
அவள் அதே பாவனையோடு நின்றாள். பார்வை டேமியனில் நிலைத்திருக்க, வலக்கரத்தை விருட்டென்று முன்னால் கொண்டு வந்திருந்தாள். தாயைப் பார்த்து “எப்பிடி?” என்றாள்.
அக்கையில் சிறு பரிசுப் பெட்டியொன்று இருந்தது. அதை அவர்கள் முன்னால் நீட்டியவள் முகத்தில் அத்தனை மகிழ்வு என்றால், விழிகளில் கண்ணீரும் மகிழ்வும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. நீட்டியிருந்த கரத்தில் கூட சிறு நடுக்கமோடியது.
“கல்யாணி!” என்று டேமியன் எழுந்த அதேநேரம், “என்ன குஞ்சு இப்ப. கண் கலங்கிக்கொண்டு?” என்றுகொண்டு சுமதியும் எழுந்துவிட்டார்.
அவள் நீட்டிய பரிசை மேவி, அவள் கண்ணீர்தான் அவர்கள் கண்களுக்குத் தெரிந்திருந்தது. பரிசு என்னதென்று தெரிந்த பின்னரும் இப்படியே வினையாற்றுவார்களா? நினைத்தவள் கண்ணீரோடு போட்டி போட்டது விரிந்த முறுவல்.
“ப்ச்! ஒண்ணும் இல்ல எண்டுறன் . முதல் ரெண்டுபேரும் இருங்கோ!” அமர்த்தியவள், “ உங்கள் ரெண்டு பேருக்கும் தான் இது.” கட்டுப்படுத்த முயன்றும் இயலவில்லை, தழுதழுத்தபடிதான் சொல்ல முடிந்தது. இருவர் கரங்களையும் பிடித்து அச்சிறு பரிசுபெட்டியை வைத்துவிட்டாள்.
மகள் விழிகளால் கண்ணீர் உருண்டு விழுவதைப் பார்த்த சுமதி, “அடிதான் வாங்கப்போற பிள்ள. கண்ணத் துட முதல்.” அதட்டினார். டேமியன் அந்தப் பரிசைப் பிரிக்க ஆரம்பித்திருந்தான்.
அதை, கல்யாணி தந்த விதம் அப்படி என்னதான் உள்ளே உண்டு என்று பார்க்கும் ஆவலை எக்கச்சக்கமாக்கி இருந்தது.
மேலே, மென் நீலமும் வெள்ளையும் றோஸ் வண்ணமுமாக இருந்த மின்னித்தாளை உரித்தெடுத்தவன், குட்டியாக மேலே இருந்த ரோசாவை எடுத்து அருகில் வைத்தான். உள்ளே சிறு நகைப்பெட்டி.

