சிரிப்போடு மனைவியைப் பார்த்தவன், “சுமதிம்மா எனக்கும் உங்களுக்கு வைரத்தில கிஃப்ட் போல!” என்றவனை முறைத்தாள் கல்யாணி.
“என்ன சேட்டையா? நினைச்சா அதும் தருவன் சரியோ. ஆனா இது…அது எல்லாத்தையும் விட பெறுமதி கூட!” என்கையில் அவள் விழிகள் முத்து முத்தாக விழிநீரைத் தள்ளின.
“இப்பிடி அழுதபடி பரிசு தந்தா அது எங்களுக்கு வேணாம் என்னம்மா?” மீண்டும் அவளிடமே நீட்டினான், அவன். “அதான் , எங்களுக்கு இது ஒண்ணும் வேணாம். நீங்க மகிழ்ச்சியா இருக்கிறத விட அம்மாக்குப் பெரிய பரிசு வேற என்ன குஞ்சு!” என்றார் சுமதி.
“பச்! விளையாடாமல் திறந்து என்ன எண்டு பாருங்க எண்டுறன்.” என்ற அவள் அதட்டலில் மெல்ல அந்தப் பெட்டியைத் திறந்துகொண்டு, “உங்களுக்கு வைரத் தோடு இருக்கும் சுமதிம்மா. நீங்களே முதல் பாருங்க.” என்று அவர் புறம் அவன் நீட்ட, “நோ நோ!” அவன் கரத்தைப் பிடித்து அந்தப் பரிசுப்பெட்டியைப் பொத்திக்கொண்டவள் கணவனை உண்மையாகவே முறைத்தாள்.
“என்ன சொல்லுறன் எண்டு விளங்கேல்லையா ? ரெண்டு பேருமே ஒரே நேரத்தில பாக்கோணும் எண்டுறன், விளையாடுறீங்க டேமியன்.” என்றவள்
உதடுகள் நடுங்க, புதிதாகச் சுரந்தன, விழிகள்.
இந்தளவுக்கு அவளை உணர்ச்சிவசப்படுத்தும் பொருள் என்ன என்ற ஆர்வம், சுமதிக்கும் டேமியனுக்கும் . இருவரும் ஒருமனதாக நகை என்றமுடிவில் இருந்தார்கள்.
பரிசுப் பெட்டியை மெல்லத் திறந்தான், டேமியன்.
அடுத்த நொடி அவ்விடத்தில் அப்படியொரு அமைதி!
நிமிர்ந்து மனைவியைப் பார்த்த டேமியன் விழிகள் சரசரவென்று கண்ணீரைச் சொரிந்தன. மனைவியின் பார்வையில் குத்திட்டு நின்ற அவன் பார்வையில் அசைவே இல்லை. எழுந்து அவளை கட்டிப் பிடித்துத் தன்னுள் கொண்டுவர நினைத்தான். ஆசை கொண்டான். அசைய முடியவில்லை. இதயம் மகிழ்வில் நிறைந்து, கனத்து எதற்குமே அனுமதிக்கவில்லை.
கணம் அதிர்ந்தாலும், “என்ர ராசாத்தி! உண்மையாவோ!” என்று எழுந்த சுமதி, தள்ளாடி விழுந்துவிட இருந்தார். கல்யாணி பிடித்துக்கொண்டாள். தாயின் கேள்விக்கு ‘ஓம்’ என்று தலைதான் ஆட்டினாள். பார்வை என்னவோ
கணவனில். அவன் நிலை அவளுக்கு விளங்காது எவருக்கு விளங்கும்?
மகிழ்வில் பொங்கித் தத்தளித்த அவன் மனத்தில் கிறிஸ்டினாவும் அவர் உதிர்த்த ‘மலடன்’ என்ற வார்த்தையும் கூட வந்து போயிற்று. பியங்காவின் பெற்றோரைச் சந்தித்ததாகச் சொன்ன கிறிஸ்டினா, “பியங்காவுக்குத்தான் பிரச்சின எண்ட எவ்வளவு பெரிய விசயத்த மறைச்சிட்டீங்களே தம்பி” என்றதும் நினைவிலாடியது. அப்போது கூட, ஒண்டுக்கு ஐஞ்சு பேரப்பிள்ளைகள் எனக்கு இருக்கு. நீ இப்ப கட்டியிருக்கிறவள் தப்பித் தவறி ஒண்டப் பெத்தா அது எல்லாம் பேரப்பிள்ளை எண்ட என்ர சொந்தமா எனக்குத் தேவையே இல்ல. அது அந்த சீரழிஞ்சவளிட பேரப்பிள்ளையா மட்டும் தான் இருக்கும்.’ என்று தாய் நினைத்ததை அவன் அறியான். எதிர்காலத் தவிர்ப்பில் அறிந்துகொள்வான்.
இப்படி, மின்னலாக ஓடித்திரிந்த அவன் நினைவுகளை கல்யாணிமீது இழுத்து நிறுத்தியது, சுமதியின் குரல்.
“அம்மாள் ஆச்சி! முருகா!” வாய்விட்டு அரற்றியபடி மகளைக் கொஞ்சினார், அவர். கொடும் துன்பங்களை எல்லாம் உணர்வுகளை வெளிக்காட்டாது தாங்கிய அந்த இதயத்தால் இந்தப் பெரு மகிழ்வைத் தாங்க முடியவில்லை. ஆண்டுக்கணக்காக ‘கடவுள்’ என்ற ஒன்று இல்லை என்று இருந்த சுமதி, இக்கணம் அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதிருக்கும் அந்தச் சக்தியையே உருப்போட்டார்.
“இதால தான் காலம என்ர குஞ்சுக்குத் தலை சுத்தி இருக்கு. ஆச்சி எத்தின கிழமை? எனக்குக் கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல.” என்று புலம்பி, மகள் முகம் வருடிக் கொஞ்சியவருக்கு அப்போதுதான் மகளின் கணவன் நினைவிலேயே வந்தான்.
“அச்சோ தம்பி நீங்க கதையுங்க. நான் ஒரு விசரி பாருங்க. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா!” அவன் தலையில் நடுங்கும் கரம் பதித்து அழுத்தமாக வருடியவர், விறுவிறுவென்று தன்னறை நோக்கிச் சென்றார். கல்யாணி மட்டும் அல்ல, டேமியனுமே அவரைத்தான் திரும்பிப் பார்த்திருந்தான்.
பத்து என்ன இருபது வயது குறைந்த உற்சாகம் அவரில்.
அவர் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திய மறுகணம், கணவனை நோக்கி அவள் நகர முதல், எழுந்தவன் கைச் சிறைக்குள் அகப்பட்டிருந்தாள், அவன் மனைவி.
ஒரு வார்த்தை கதைக்கவில்லை, அவன். மனைவியின் தோள் வளைக்குள் முகம் புதைத்தவனின் மகிழ்வின் ததும்பல், விம்மலாக வெளிப்பட அவளுள் புதைத்திட முயன்றான்,டேமியன்.
தம் உதிரத்தில் ஒரு உயிர் வேண்டுமென்ற பெரும் ஆசை இருவருக்கும் இருந்தது. நம்பினார்கள். மாதங்கள் ஒன்று ஒன்றும் உருள உருள அவன் நம்பிக்கை என்னவோ ஆட்டம் கண்டுவிட்டது என்பதே உண்மை. இருந்தும் இதுபற்றி இருவரும் வெளிப்டையாகக் கதைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் கல்யாணி பெரும் நம்பிக்கையோடு இருப்பது அவனுக்குத் தெரியும்.
திருமணம் ஆன அன்றே, பியங்காவுக்குத்தான் பிரச்சினை. அதையிட்டு, அவளை எவரும் வருத்திவிடக் கூடாதென்றுதான் வெளியில் சொல்லவில்லை என்று சொல்லியிருந்தான். மறுவாரமே, கைனகொலஜிஸ்ட்டிடம் அழைத்துப் போயிருந்தாள், கல்யாணி. அவர் கொடுத்த நம்பிக்கையை அவள் பற்றிப் பிடித்திருந்தாள். அவள் வயதைக் கருத்தில் கொண்டு அவர் சொன்னதன் படி உணவு, உறக்கம், உடற்பயிற்சி, ஓய்வு என்று எல்லாமே பார்த்து பார்த்துச் செய்து கொண்டிருந்தாள். எல்லாவற்றுக்கும் பலன் அதுவும் அவர்களின் முதலாவது கல்யாண நாளில்.
“டேமியன்!” முதுகை வருடிக் கொண்டிருந்தவள் மெல்ல அழைத்தாள்.
“காலம சின்னதாச் சந்தேகம் வந்திச்சு . கிட் வாங்கிக்கொண்டுபோய் மைதானத்தில் வச்சுத்தான் செக் பண்ணிப் பாத்தனான்.” என்றதும் நிமிர்ந்தவன் முறைத்தான்.
“இவ்வளவு நேரமா சொல்லாமல் இருந்திருங்கிறீங்க. உங்கள” கண்ணீரோடு அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கிள்ளினான்.
“ம்ம் …கார்ல இருக்கேக்க சொல்ல வந்திட்டு, அம்மாக்கும் உங்களுக்கும் ஒண்டா ஒரே நேரத்தில சொல்ல நினைச்சு இருந்திட்டன். கோவம் இல்லையே!” அவன் தலைமயிருக்குள் விரல்களைப் புகுத்திக் கலைத்துவிட்டபடி கெஞ்சலாகக் கேட்டவளை, அப்பிடியே கைகளில் அள்ளிக்கொண்டான், டேமியன்.
“டேமியன் இறக்கி விடுங்கோ! அச்சோ விழுந்திரப்போறன் .” என்றவள், அவன் படியேறத் தொடங்க, இருக்கரங்களாலும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனுள் சுருண்டு கொண்டாள்.
“எவ்வளவு மகிழ்சியான விசயத்த இவ்வளவு நேரமும் மறைச்சதுக்கு இருக்கு இண்டைக்கு” என்றுகொண்டே தம் அறைக்குள் நுழைந்தவன், கணவனாக அவளைத் தண்டித்தான், மென்மையாக!
இழப்புகள் வேதனைகள் சகிக்க
முடியாத சோதனைகள் எல்லாம்
தடைகளாக விழுந்தவண்ணம் இருந்தாலும்
படிகளாகப் பாவித்து
கடந்து ஏறி
வாழ்வின் எல்லை வரைக்குமான துணையாக வரித்தவனையே உதறி வந்து
தாயவளுக்காகவே வாழ்ந்த உயிர் அவள்
ஆண்டுகள் பல கடந்தும்
முதல் நேசம் அழியாது வாழ்ந்துகொண்டிருக்க
தன்னுள் இழுத்து வைத்திருக்க
துடித்துத் தவித்திருந்தவள்,
வாழ்க்கைத் துணையின் இழப்பால் அமிழ்ந்து நடமாடியவனைக் கை பிடித்ததே ஒரு விந்தைதான்
ஆண்டுகள் நான்கே நான்கு கழிந்திருக்கையில்
அந்த வாழ்வின் மகிழ்வின் பரிசு
ஒன்றல்ல இரண்டாகி இருக்க
அவன் பிள்ளைகளாக வரித்த மூன்று குழந்தைகளோடு
பெற்ற குழந்தைகள் இரண்டு என்று
எல்லோருக்கும் அச்சாணியாய் அவள்
நட்சத்திரா
சூரியன் இருக்கையில் அவள்
வரவில்லை என்றிருந்தது போய்
பகலவனையும் வென்று எப்போதும்
கண்சிமிட்டும் நட்சத்திரமாய்!
முற்றும்

