மறுநாள், டேமியனுக்கு வழமை போலவேதான் விடிந்திருந்தது என்று சொல்லவியலாது, கல்யாணி பற்றிய எண்ணங்கள் அப்பப்போ எட்டிப் பார்த்தபடியிருந்தன. வேறு ஒன்றுமில்லை, கால் இப்போ எப்படியிருக்கும் என்ற நினைவுதான்.
வழமைபோல், அதிகாலையில் ஓடிவிட்டு வந்தவன் பார்வை, என்றுமில்லாத வகையில் தோட்ட வீட்டுப் பக்கம் சென்று வந்தது. சுமதி, ‘சிலோன் டேஸ்ட்’ சென்றிருப்பார் என்பது தெரியும். அடிபட்ட கால் இப்போ எப்படியென்று கேட்டறியும் எண்ணத்தில் அவன் கால்கள் அந்தப் புறமாக நடந்தன.
கதவில் தட்ட நினைத்துக் கையை உயர்த்தியவன் அழைப்பு மணியைப் பார்த்தான். வீடு மிகவும் அமைதியாக இருப்பதில் அவள் நித்திரை என்று தெரிகிறதே! ஏன் வீணாகக் கரைச்சல் கொடுப்பான்? திரும்பி நடந்தான்.
அநேகமான காலை நேரங்களில், பிள்ளைகளைப் பாடசாலையில் விட்டுவிட்டு அப்படியே சிலோன் டேஸ்ட் சென்றுவிடுவான். கடைகண்ணிகளுக்குச் செல்வது தொடக்கம், நாளாந்த வேலைகள் நெருக்கமாக வரிசை கட்டி நிற்கும். இன்றோ, பிள்ளைகள் மூவரும் இவனுக்குக் கை காட்டிக்கொண்டு இறங்கிச் சென்ற பின்னும் காரைக் கிளப்பாது அமர்ந்திருந்தான்.
பார்வை மெதுவாகக் கைப்பேசியில். ‘ஒரு கோலைப்போட்டு இப்ப எப்பிடி எண்டு கேக்கலாம் தானே?’ மனம் முணுமுணுத்தது.
கல்யாணிக்கு அழைத்தான். மணி அடித்தோய்ந்தது.
“பச்!” அலுத்துக்கொண்டு காரைக் கிளப்பினான். வீடு நோக்கிச் செலுத்திக்கொண்டிருப்பதே அரை வழியில் தான் உறைத்தது.
நேரே கல்யாணி வீட்டுக்குச் சென்றவன், கதவில் தட்டினான். அழைப்பு மணியையும் அழுத்தினான். பதில் இல்லை.
விடுவிடுவென்று வீட்டுக்குச் சென்று, மாற்றுச் சாவியை எடுத்து வந்தவன் திறந்து உள்ளிட்டான்.
சிறு வரவேற்புப் பகுதி சுத்தமாக, அமைதியாக இருந்தது. “கல்யாணி” அழைத்துப் பார்த்தான். பதிலில்லை. ஒரே ஒரு அறைதான். அந்தக் கதவில் மெல்லத் தட்டிவிட்டுக் காத்திருந்தவன் பொறுமை போயிருந்தது.
“கல்யாணி” சற்று உரத்து அழைத்தபடி மெதுவாகக் கதவைத் திறந்தான். தலைவரை போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். அசைவு தெரிந்தது. விழிகளைத் திறக்காதே மெல்லத் தலையை உயர்த்தினாள்.
“கல்யாணி, கால் இப்ப எப்பிடி இருக்கு?” வாசலில் நின்றே கேட்டான்.
“ஆர் டேமியனா?” அவள் விழிகள் பட்டென்று திறந்து கொண்டன. சரேலென்று எழுந்து கொள்ள முயன்றாள். பழக்க தோசம் கால்களிரண்டும் கீழே வர முயன்றிருந்தன.
“ அய்…யோ…ம்மா!” மீண்டும் படுக்கையில் சரிந்து விழுந்தாள். கரமிரண்டும் இடக்காலுக்குச் சென்று பிடித்துக்கொண்டன. சில நொடிகள் தான். மீண்டும் உடம்பை நிமிர்த்தி ஒரு பக்க முழங்கையை ஊன்றிச் சரிந்து அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்தாள்.
“எனக்கு இப்ப நல்லம் டேமியன் . ஏதாவது அலுவலா?”
முதன் முதல் வீட்டுக்குள் வந்து நிக்கிறானே என்ற ஆச்சரியத்தோடு கேட்டவள், அவன் பதில் சொல்ல முதல் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டாள்.
“அம்மா வேலைக்கு வரேல்லையா என்ன? நான் சமாளிப்பன் எண்டு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டாவே! ” என்றவள், “அம்மா” சத்தமாக அழைத்தாள்.
“சுமதிம்மா வேலைக்குப் போய்ட்டா. கால் இப்ப எப்பிடியிருக்கு எண்டு கேக்க கோல் பண்ணினன், நீங்க எடுக்கேல்ல. அதான்… பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்.” சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான், அவன்.
“பாத்தா நல்லம் போல தெரியேல்லையே! காச்சல் அடிக்குதோ?” கிட்ட வந்து தொட்டுப் பார்த்தான். அதிர்ந்தான். அந்தளவுக்கு நெருப்பாகக் கொதித்தது.
“நல்ல காய்ச்சல். மருந்து ஏதாவது குடிச்சீங்களா என்ன? கால் இப்ப எப்பிடி? கண்ணெல்லாம் இப்பிடி இருக்கு, வடிவாத் துங்கேல்லையா? முதல் மெல்ல எழும்பி இருங்கோ, படுத்துக்கொண்டிருந்தா இன்னும் கூட வருத்தம் போல இருக்கும்.” கடகடவென்று உதிர்ந்த கேள்விகளோடு, அவளை எழுப்பி அமர்த்தினான்.
கல்யாணிக்கு உடலில் சக்தியே இல்லை. என்றாலும் அவன் இந்தளவுக்கு வந்து உதவுவது மிகவுமே அசௌகர்யமாக இருந்தது.
“நான்… நான் பாத்துக்கொள்ளுறன் டேமியன் . தேங்க்ஸ்!” என்றவள், போ … போய் உன்ர அலுவலப் பார் என்று, எப்படிச் சொல்வதென்று தெரியாது தடுமாறிவிட்டாள்.
உண்மையில் அவள், இப்படி யாரின் உதவியையும் எதிர்பார்ப்பவள் இல்லை. அடுத்தவர் உதவி என்பது மிகப்பெரும் சுமையென்று கருதுபவள். அவனோ, நெடுங்கால நண்பன் என்ற கணக்கில் அல்லவோ வந்து நிற்கிறான்.
“பரசிட்டமோல் இருக்கா? இல்ல எண்டா நான் எடுத்துக்கொண்டு வாறன்.” என்று நகர்ந்தவனை, “இஞ்ச இருக்கு டேமியன். அந்த லாச்சிக்க…” எழுந்து நின்று ஓரடி எடுத்து வைத்தவள் மற்றைய காலை நிலத்தில் மெதுவாகவேனும் ஊன்ற முடியாது தடுமாறினாள்.
“பச்! நீங்க இருங்கோவன் , எடுத்துத் தாறன்.” மிகவும் சுவாதீனமாக அவள் தோளைப் பற்றி அமர்த்திவிட்டான், அவன்.
மறுநிமிடமே, பரசிட்டமோல் இரண்டையும் தண்ணீர் கிளாசையும் நீட்டினான். வாங்கி விழுங்கியவள், கட்டிலோரமாக இருந்த ஸ்டிக்கை எடுத்து நீட்டினாள்.
“வோஷ் ரூம் போகப்போறன்.” அதை ஊன்றிக்கொண்டு மெல்ல எழுந்தவள், அப்போது சரி வெளியே போவான் என்று நினைத்தாள். அவள், இடக்காலை நிலத்தில் வைக்கவில்லை. விண்ணென்று கொதித்தது. அவன் பார்வை காலில்தான்.
“உண்மையாவே எனக்கு இப்ப ஓகே. வீக்கம், வலி எல்லாம் இல்ல.” சிரிக்க முயன்றாள்.
இடுப்பில் கை வைத்து நின்று முறைத்தான், டேமியன்.
“ நேற்றைய விடவும் கால் வீங்கி இருக்கு என்ன ? காச்சலும் இருக்கு, டொக்டர்ட்ட கதைச்சுப் பாப்பமா?” அரித்தெடுத்தவனைச் சிறு முறுவலோடு பார்த்தாள், கல்யாணி.
“ இல்ல, பாவமே எண்டு பாக்க வந்தா கனக்கத்தான் யோசிக்கிறீங்க. காசு எல்லாம் கேக்க மாட்டன் பா!”இலகுவாகச் சொன்னவன், நொண்டிக்கொண்டு பாத் ரூம் செல்ல முனைந்தவளை, கைத்தாங்கலாகக் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்.
“போகேக்க கதவைச் சாத்திட்டுப் போங்கோ!” என்றுவிட்டு, குளியலறைக் கதவைச் சாத்தினாள், கல்யாணி.
நேருக்கு நேராகப் பார்க்கையில், மரியாதைக்காக முறுவலித்தால் பதிலுக்குச் சிறு தலையசைப்புக்கே யோசிப்பவன், டேமியன். இன்று!
யோசனையோடு மெல்ல மெல்லக் காலைக்கடன்களை முடித்துவிட்டு அவள் வெளியில் வர, “கோப்பியும் க்ரோசோனும் சாப்பிடலாம் வாங்க.” என்றுகொண்டு வந்தவன் மிகையாகத் திகைக்க வைத்தான்.
மிகவும் சுவாதீனமாக வந்து, அவளைப் பிடித்துச்சென்று அங்குக் கிடந்த இருக்கையில் அமர்த்தினான், டேமியன்.
“சாப்பிடுங்க. என்ன தேவை எண்டாலும் கோல் பண்ணோனும் . அம்மாட்டையும் சொல்லிப்போட்டுப் போறன்.” என்று விடைபெற்றவனுக்குத் தலையசைக்க மட்டுமே இவளால் முடிந்தது.
மறுநாளில் இருந்து , கல்யாணியின் கால் ஓரளவுக்கு குணமாகும்வரை, காலையில் உணவகத்தைத் திறக்க, சுமதிக்குப் பதில் இன்னொருவரை நியமித்துவிட்டான், டேமியன்.
சுமதி கேட்காது, அவனாக யோசித்துச் செய்த செயல் உண்மையில் தாய்க்கும் மகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது.
சுமதியும் கல்யாணியும் சிரம துன்பங்களுக்கு புதியவர்கள் இல்லை. யார் உதவியும் எதிர்பார்த்து இருந்ததும் இல்லை. அப்படியிருந்தும் டேமியன் மற்றும் கிறிஸ்டினா தாமாகவே முன்வந்து முடிந்த உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். நீங்கள் இருவரும் எங்களுள் ஒருவர் என்று உணர்த்தும் விதமாகக் கரிசனையோடு நடந்துகொண்டார்கள்.
அவளுடைய காருக்கான காப்புறுதி தொடர்பான நடைமுறைகள், வேறு கார் வாங்குவது என்று எல்லாவற்றையும் தன் கண் பார்வையில் செய்தான், டேமியன்.
ஒன்றும் அவசரமில்லை, பொறுமையாகப் பார்த்து வாங்கிக்கொள்ளலாம் என்றாள்,கல்யாணி. அமைதியாகக் கேட்டுக்கொண்டவன், அப்படியே இருக்கவில்லை. இரு கிழமைகளின் பின், அவள் மீண்டும் வேலைக்குச் செல்கையில், அவர்களுடைய பொருளாதார நிலைக்கேற்ப காரொன்றை வாங்க வைத்திருந்தான்.
இப்படி, விபத்து அறிமுகப்படுத்திய இருவரும் நல்ல நட்பில் இணைந்திருந்தார்கள். வைத்தியசாலையில் விடுமுறை கிடைக்கையில் தாய்க்கு உதவியாகச் செல்வாள், கல்யாணி. இப்போதெல்லாம் ‘சிலோன் டேஸ்டில்’ கிட்டத்தட்ட பகுதிநேரமாக வேலை செய்பவளாக மாறியிருந்தாள். ஓய்வு ஒழிச்சல் இல்லாது, கண்டபடி அலைய நினைக்கும் மனத்துக்குக் களைப்பை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று நினைப்பவள், நல்ல சம்பளத்தோடு வேலை வந்தால் விடுவாளா?
அதுவே டேமியனோடு மேலும் இலகுவாகப் பழகச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தது.
அப்போதும் ‘நட்புக்கு எல்லையில்லை’ என்றதைப் பொய்யாக்கும் வகையில் தான் கல்யாணி நடந்துகொண்டாள். தனக்கான எல்லை வகுத்து நாசுக்காகப் பழகினாள். அதை, டேமியன் உணர்ந்துகொண்டான். தான் விளங்கிக்கொண்டதை வெளிக்காட்டிக்கொள்ளாதே, அந்த எல்லையில் இருந்து அவளை வெளியே இழுத்துவிடும்படியாக நடந்து கொண்டான்.
அப்படிப் பழக பழகத்தான் இருவருக்கும் நிறைய ரசனைகள் ஒத்துப் போவது தெரிந்தது. அதுவே, அவர்கள் நட்பு இறுக்கமாக வளரத் துணை புரிந்தது.