நட்சத்திரா 8 -1

“சுமதிம்மா , நீங்க ஒண்ணும்  செய்யத் தேவேல்ல, அங்க வந்து எல்லாரோடையும் கதைச்சுக்கொண்டிருங்க.” மகளுக்கு உதவியாகச் சமையலறைக்குள் நின்ற சுமதியை அழைத்தபடி உள்ளிட்டான், டேமியன்.

“வாறன் தம்பி, இஞ்ச பிள்ளைக்குக் கொஞ்சம்  உதவிட்டு.” என்றவரை, அவன் முடிக்கவிடவில்லை.

“இங்க எல்லாம் தயாராத்தான் இருக்கு . உங்கட மகள் எல்லாத்தையும் பாத்து பாத்துச் செய்து வச்சிட்டா. நானும் பாத்துக்கொள்ளுவன். அங்க, வந்தவேயோட கதைக்க  அம்மாவும் இல்ல, வந்திருந்து கதையுங்கோ!” என்றவன், தயங்கிய சுமதியை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றான். 

அதுவரை, கல்யாணி அவன் புறம் திரும்பவில்லை. தாயோடு வெளியேறியவன் முதுகை முறைப்புப் பார்வையால் துளைத்தாள். எதிர்பார்த்தான் போலும். பட்டென்று திரும்பினான். சும்மா இல்லை, சிறு முறுவலும்  ஒற்றைப் புருவ உயர்த்தலுமாக.  இவள் வெடுக்கென்று திரும்பிவிட்டாள்.

 சில நாட்களுக்கு முன்னர் வரை, அவனோடு, இப்படியெல்லாம் உரிமையாகக் கோபித்துக்கொள்வாள் என்று எண்ணியிருக்கவில்லை. இப்போதும் கூட அது அவள் கருத்தில் பதியவில்லை. 

சுமதியோ, இப்படியான ஒன்றுகூடல்களை அறவே  விரும்புவதில்லை. வலு நாசுக்காகத் தவிர்த்துவிடுவார். ‘வேலை’, அதுபோக ‘மகள்’ என்ற இரு உலகங்களுமே அவருக்குப் போதுமாக இருந்தது. 

தன்னை, தான் கடந்து வந்த பாதையை, இழந்தவற்றை என்று நினைத்துக்  கொடும் வலியில் துடித்துக் களைத்துப் போன சீவன் அவர்.

களைக்க களைக்க ஓய்ந்துபோய் வீடு வருவார். மகளுக்கும் தனக்குமாகச் சமைப்பார். அதிகாலையில் வேலைக்குச் செல்பவராச்சே, சற்றே உறங்கியெழுவார். அதன்பின், வீட்டோடுள்ள பூந்தோட்டத்தில் இறங்கி கிண்டிக்கிளறி என்று வேலை பார்ப்பார். அப்படியே அவர் வேலை கிறிஸ்டினாவின் வீட்டைச் சுற்றியும் நகரும். அது முடிய, குளித்துவிட்டு ஒரு தேநீரை அருந்திய வேகத்தில் பின்னேர வேலை. 

பிறகென்ன? இரவில் அடித்துப் போட்டால் போன்ற உறக்கம்தான். மனதோரம் தொங்கிக்கொண்டிருக்கும் மகளின் வாழ்க்கை பற்றிய யோசனையும் கவலையும் கூட, அவரின், இந்த எண்ணையிட்ட சக்கரம் போன்ற நாளாந்த வாழ்வில் குறுக்கிடுவதில்லை.  அப்படியிருக்க, இன்று டேமியன் விடமாட்டேன் என்று நிற்கிறானே! 

 அவருக்கு, அவனிடம் மறுக்கவும் முடிவதில்லை. வேலை தந்த முதலாளியாகவும் சரி , இதோ, அண்மைய நாட்களில், அதுவும் மகளின் விபத்து நாட்களில் ஆரம்பித்து,  சொந்த  மகன் போல கரிசனையையும் கவனிப்பையும்  வழங்குபவனாச்சே! அவன் காட்டும்  அக்கறையைப் பார்த்து  இவரின் மறுப்பு எல்லாம் பின்வாங்கிப் பதுங்கிக்கொள்ளவே செய்தது.

சுமதி, மகளோடு அவர்களின் தோட்ட வீட்டில் வசிப்பது அநேகமாக எல்லோருக்கும் தெரியும். இப்போதோ, கல்யாணியின் அம்மா, எங்கட குடும்பத்தில ஒருவர் என்றுதான்   டேமியன் அறிமுகம் செய்து வைத்தான். 

பெண்கள் அறிமுகம் செய்துகொண்டு அளவளாவ, சுனிமல் வந்து அருகில் அமர்ந்துகொண்டான். சிறிதுநேரம் பொதுவாகத்தான் கதைத்துக்கொண்டிருந்தான். தூர நின்றிருந்தாலும் கல்யாணி அதைக் கண்டுவிட்டாள் என்று டேமியனுக்குத் தெரியும். அவன் என்ன செய்வது? இதில் அவன் பங்கு எதுவும் உண்டா என்ன? அது விளங்காது அவனிடம் முகம் நீட்டி முறைத்தால்! மனம் சுணங்கினான்.  

அவள் பார்வையும் உடல்மொழியும் மனத்துள் எதுவோ செய்ய, ஒரு அரை மணித்தியாலம் சென்றிருக்கும்  மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தான். 

எல்லா ஒழுங்கும் முடிந்திருக்க, கைப்பேசியைத் தட்டிக்கொண்டே சமையல் மேடையில் சாய்ந்து நின்றிருந்தாள், கல்யாணி.

“ இதுக்க நிண்டு என்ன செய்யிறீங்க? அங்க வெளிய வாங்கவன் கல்யாணி.”  மென்மையாக அழைத்தான்.

அவள் பதில் சொல்லவில்லை. ஏன், பார்வையை நிமிர்த்தவும் இல்லை. 

டேமியனுக்குச் சிரிப்பு வந்தது. அவனை விடவும் பெரிய பிடிவாதமும் கோபமும் கொண்டவளோ! முறுவலோடு சுவாரசியமும் சேர்ந்து கொள்ளவேதான் கதைத்தான். 

“சுனிமல் என்ர நல்ல  நண்பன்தான். ஆனா, நான் சொல்லிக்குடுத்து உங்களோட கதைக்கேல்ல கல்யாணி. அப்பிடியிருக்க, அவன் வந்து கதைச்சதுக்கு என்னில கோவிச்சாச் சரியா சொல்லுங்க? ப்ளீஸ் வெளில வாங்க , சரியில்ல எல்லா?” நக்கல் போல் ஆரம்பத்துவிட்டு, மீண்டும் மென் குரலில் தான் அழைத்தான்.

பதிலாக, “எல்லாரும் வந்திட்டா கேக் வெட்டலாம். கூட்டிக்கொண்டு வாங்க, கேக்க எடுத்து வைக்கிறன்.” என்றுகொண்டு  வீட்டினுள் சென்றவளை பிடித்திழுத்திட்டுக்கொண்டா செல்ல முடியும். பெருமூச்சோடு வெளியில் இறங்கினான், டேமியன்.

மீண்டும் அவன் வெளியில் இருந்தவர்களோடு உள்ளே நுழைகையில், பிள்ளைகள் கேக் வெட்ட ஆயத்தமாகி நின்றார்கள். 

புகைப்படங்கள் எடுப்பது தன் பொறுப்பென்று ஏற்கனவே கல்யாணி சொல்லியிருந்தாள். டேமியன் தன் புகைப்படக்கருவியைக் கொடுத்திருந்தான். அதோடு ஒரு ஓரமாக நின்றிருந்தவள், உள்ளே வந்த பெண்மணிகளோடு இன்முகமாகச் சில வார்த்தைகள் கதைத்தாள்.

ஆரவாரத்தோடு கேக் வெட்டினாள்,பபிதா. சகோதரிகளுக்கு ஊட்டிவிட்டு, கட்டிப்பிடித்துக் கொஞ்சி டேமியனுக்கு ஊட்டினாள். அதேநேரம் சின்னவர்கள் இருவரும் ஓடி வந்து இவளைப் பிடித்து இழுத்தார்கள்.

சுனிமல் வந்து ஈ என்றுகொண்டு கமராவை வாங்கக் கை நீட்டினான். பிள்ளைகளின் பிடியில் இழுப்பட்டவள்  வேறு வழியில்லாது கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

பெரியவள் கேக் ஊட்டி விட்டுக்கொண்டே கல்யாணி தீத்தியதை வாங்கிக்கொண்டாள். கழுத்தோடு கட்டிப்பிடித்துக் கொஞ்ச, மற்ற இருவரும் சேர்ந்து கொஞ்சினார்கள்.   மூவருக்குமாக, விரும்பியதை வாங்கச்சொல்லி  கிஃப்ட் கார்ட் கொடுத்தாள். சந்தோசமாக வாங்கிவிட்டு மீண்டும் கொஞ்சினார்கள்.

எந்த நேரமும் ஒட்டி உறவாடி என்றில்லாவிட்டாலும் அவர்களுள் நிலவும் அந்தப்  பிடித்தம் பார்ப்பதற்கு வெகு வெகு அழகாக இருந்தது. இதையெல்லாம், சற்றே தள்ளி நின்றிருந்த டேமியன் மனம், விழிகள் துணையோடு  வெகுவாகவே ரசித்தது.

“சரி அப்பிடியே இஞ்ச பாருங்க. சுமதிம்மா நீங்களும் இஞ்ச பாருங்க.” என்ற சுனிமல், “கல்யாணி, கொஞ்சமாச்  சிரிக்கலாம்.” என்றதும் தொடர்ந்து சில குரல்கள் அதையே சொல்லத் தொடங்கின. அவளுக்கோ, சிரிப்புக்குப் பதில் மனத்துள் எரிச்சல் தான் எழுந்தது. அது, வெளியேயும் கசிய முனைந்தது. 

டேமியன் அவளையேதான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். “சரி சரி எடுத்தாச்சுத்தானே?  நீங்க வாங்கோ.”  நண்பன் ஒருவன் குடும்பமாக வந்திருக்க அவர்களை அழைத்தான். புகைப்படக்கருவி கல்யாணி கைக்கு வந்திருந்தது.

 சுமதியோடு சென்றமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தான், சுனிமல். இதென்ன தலையிடியாக் கிடக்கு என்ற சினத்தோடு நின்றாள், கல்யாணி. 

தாய், கடந்த சில மாதங்களாக ஏதோ ஒரு கதையில் இவன் பற்றிக் கதைப்பதே இப்போதான் நினைவுக்கு வந்தது. வெளிப்டையாகத் தன்னிடம் கதைக்கத் தயங்கிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதும் விளங்கியது. இதை வளரவிடாதே கல்யாணி, முற்றுப்புள்ளி இட்டுவிடு என்று, அவள் மனம் எச்சரித்தது. 

டேமியன் ஏற்கனவே பார்பிகியூவில் கோழிக்கால்களை வேகவிட்டிருந்தான். Caprese Salad செய்ததும் அவன்தான். இது இரண்டும் தான் ஸ்டாட்டர். பெரியவர்கள் தாமே பரிமாறிக்கொண்டு உண்ணத் தொடங்கியிருந்தார்கள். 

 

error: Alert: Content selection is disabled!!