Skip to content
வீட்டின் அருகிலிருந்த டைல்ஸ் பதித்த இடத்தில் இரு நீண்ட மர மேசைகளில் பிள்ளைகள் அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கென்று பார்த்து பார்த்துத் தயாரித்திருந்த உணவு வகைகளை எடுத்து வைத்தாள், கல்யாணி. சுமதியும் உதவ, சுனிமலும் வந்துவிட்டான்.
‘தள்ளிப் போய் வந்த வேலையப் பாரடா மரமண்டை’ என்று, மனத்துள் சீறிய கல்யாணி, வெளியில் கருமமே கண்ணாக இருந்தாள்.
Mac + Cheese, Grilled Chicken, Cheese Pizza, Grilled Sausage இவற்றோடு பிரௌனி, கரட் கேக், பிஸ்கட், சிப்ஸ் என்று இருந்தவற்றை, ஆவலோடு தத்தமக்குப் பரிமாறிகொண்ட பிள்ளைகள் கலகலப்பாகச் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.
“இங்கதான் நிறைய வகைகள் இருக்குப் போல! நானும் இங்கயே இருந்து சாப்பிடப் போறன்.” சத்தமாக அறிவித்தான், சுனிமல். “சாப்பிடலாமா கல்யாணி?” விழிகள் சுருங்கிய முறுவலோடு கேட்டுவிட்டுப் பதிலை ஆவலோடு எதிர்பார்த்தும் நின்றான்.
இவனை, வழிசல் கேஸ் என்றவகையில் நிச்சயம் சேர்க்க முடியாதுதான். இருந்தாலும் எதிரில் நிற்பவள் உன்னைத் தவிர்க்கிறாள் என்று தெரிந்துகொள்ள முடியாத மடையனா என்ன? தெரிந்தும் தொடர்ந்து நெருங்க முயன்றால்?
காதே கேளாத பாவனையில், “ நட்ஸ் ஐஸ்கிரீமும் நானே செய்த gelato வும் டெஸெர்ட்க்கு இருக்கு பிள்ளைகள்.” என்று, அவர்களோடு கதைத்தபடி நகர்ந்தாள், கல்யாணி.
சுமதி மெல்ல அப்பால் நகர்ந்தார். அவருக்கே சுனிமலைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இனம், மதம், மொழியென்று எல்லாம் பாகுபாடு பார்க்கும் நிலையில் அவரில்லை. வாழ்வில், கொடிய மிருங்களால் கோரமாகக் கடிபட்ட பெண்மணி அவர். மனிதம் உள்ளவனாக இருந்தால் மட்டும் போதும் என்பதுதான் அவர் தீர்க்கமான முடிவு. இன்று எப்படியும் சுனிமல் பற்றி மகளோடு கதைக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டார்.
பெரியவர்களுக்கும் சுவையான உணவுகள் இருந்தன. இலங்கை உணவுகளைச் சுனிமல் விரும்பி உண்டான். அது கல்யாணியின் கைவண்ணம் வேறா. அவளை அழைத்துப் பாராட்டவும் செய்தான். எல்லோருக்கும் முன்னால் முகம் திருப்ப முடியாது இளித்து வைத்தாள், அவள்.
“என்ன கல்யாணி நீங்க ஒண்ணுமே சாப்பிடேல்ல? இதைச் சாப்பிடுங்க.” என்று, சாலட்டோடு இறால், கணவாய் என்று போட்ட பார்பிகியூ தட்டோடு சுனிமல் வந்து நின்ற போது அவள் பொறுமை பறந்துவிட்டிருந்தது.
பற்கள் அரைபட்ட ஒலி சுனிமல் காதுகளிலும் விழுந்தது. வெடுக்கென்று கதைக்க முயன்றவளை, “கல்யாணி” என்று அழைத்த சுமதியின் கண்டிப்பான குரலும் பார்வையும் கட்டுப்படுத்திட்டு.
தட்டை வாங்கினாள். சுனிமல் மகிழ்வோடு நகர்ந்தான். அப்படியே சிறுவர்கள் அமர்ந்திருந்த மேசையில் தட்டை வைத்துவிட்டாள், கல்யாணி.
சுனிமல் அதைக் கவனித்தும் அமைதியாகவில்லை. வட்டிலப்பம் உண்டுவிட்டு அவன் இரசித்துச் சொன்ன விதம் இருக்கே, வேண்டுமென்றே தன்னைச் சீண்டுகிறான் என்ற கோபத்தில் கொதித்துப் போனாள், கல்யாணி.
அவனோ, தலைக்கு மேல் போயிற்று, சாண் என்ன முழம் என்ன என்ற நிலையில் இருந்தான். அவளிடம் வந்தான். “ கல்யாணி, தயவு செய்து உடனே எதிர்மறையா ஒண்டும் சொல்லீராதீங்க . வடிவா யோசிச்சிட்டுச் சொல்லுங்க. எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு. என்ர அம்மா அப்பா அக்கா எல்லாருக்கும் நான் உங்கள விரும்பிறன் எண்டு தெரியும். ஆருமே எதிர்கேல்ல, சந்தோசம் தான். அதோட, நாங்க இங்கதான் இருக்கப் போறம். எங்கட வீட்டு மனிசரோட பழக வேணும், அது சிரமமான வேலை எண்டு எல்லாம் யோசியாதீங்க .” என்று, அவசரம் அவசரமாகச் சொல்லிவிட்டு நம்பிக்கையோடு நகர்ந்துவிட்டான்.
அதன்பின் கல்யாணியால் அங்கு நிற்க முடியவில்லை. “ வீட்ட ஒருக்காப் போய்ட்டு வாறன் அம்மா.” என்றுவிட்டு நகர்ந்திருந்தாள்.
சென்றவள் சென்றவள்தான். வரவேயில்லை. சுமதியிடம் வந்து கேட்டான், டேமியன்.
“எல்லாரும் வெளிக்கிடப்போகினம் சுமதிம்மா, கல்யாணிதான் கிஃப்ட் பொக்ஸ் போட்டு வச்சவா. அதான்.” என்றவனிடம் எதைச் சொல்வது? கல்யாணி இனி வரப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும்.
“தலையிடி எண்டுட்டுட்டுத்தான் போனவள், தம்பி. வாங்க, நான் எடுத்துக்கொடுக்க உதவுறன்.” என்றார்.
“ஓ …சரி இருங்கோ கூப்பிடுறன்.” என்றுவிட்டு நகர்ந்தவன் சென்று நின்றது கல்யாணி வீட்டுக்கு முன்னால்.
மீண்டும் மீண்டும் அழைப்பு மணி ஒலிப்பது கேட்டும் அசையாது அமர்ந்திருந்தாள், கல்யாணி. தாயாகத்தானே இருக்கும், இருந்தாலும் எழுந்து சென்று திறக்கவிடாது பிடித்து வைத்திருந்தது அவள், கடந்தகால காலம். அவள் மறுத்து உதறியது,விலகாது பின்தொடர்கிறதே!
சூர்யாவின் மகிழ்வான வாழ்வைப் பார்த்தபின், அவளுள் உள்ள அவன் பற்றிய நினைவுகள் குற்றக் குறுகுறுப்பை ஏற்படுத்தித் தொலைக்கின்றன. ஆனாலும் அந்நாட்களின் நினைவுகளின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பார்கள், கைசேராக் காதல் நினைவுகளில் இருந்து விடுபடவும் ஏதாவது உதவினால்?
கோடாக வழிந்த கண்ணீரைத் துடைக்கமறந்து அமர்ந்திருந்தவளை, தொடர்ந்து தட்டுப்பட்ட கதவு விருட்டென்று எழுந்து நகரச் செய்திருந்தது.
“வாறன் அம்மா”என்றபடி சென்று கதவைத் திறந்தவள், அங்கு, டேமியனை எதிர்பார்க்கவேயில்லை. அதுவரை கழிவிரக்கத்தில் உழன்றுகொண்டிருந்தவளை இப்போது கோபம் ஆட்கொண்டது.
“உங்கட கண்டறியாத ஃபிரண்ட் என்ன நினைச்சிட்டான். செய்க் சவத்த! வழியல் எரும! கதைக்கப் பேசவே எனக்கு விருப்பம் இல்லை எண்டு செய்கேல காட்டுறன். உன்ர மனசில இருக்கிற நினைப்பு மண்ணாங்கட்டிக்கு நான் பொறுப்பு இல்ல எண்டுறன். அதுக்குப் பிறகும் ஒட்டுண்ணி கணக்கில பின்னால வாறான். நீங்கதானே அவன வந்து என்னோட கதை எண்டனீங்க. மரியாதையாச் சொல்லி அவன இனி என்ர பக்கமே பாக்கக் வேணாம் எண்டு சொல்லுங்க. இல்லையோ, உங்கட ஃபிரண்ட் எண்டும் பாக்க மாட்டன் செருப்புப் பிஞ்சிரும்.” என்றுவிட்டுச் சரேலென்று உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் உக்கிரமான கோபத்தில் டேமியன்தான் அரண்டு போய் நின்றிருந்தான்.
error: Alert: Content selection is disabled!!