நள்ளிரவு கடந்திருந்தது. அவ்வீடும் தோட்டமும் மாலை நடந்த கொண்டாட்டம், விருந்து என்று எதினதும் சாயலற்றிருந்தன. இருளில் மூழ்கிக் கிடந்த வீட்டின் பின்புற மின்குமிழ்கள் இன்னமும் விழிப்பில் இருந்தன. அங்கு கிடந்த சாய்வான கதிரைகளில் இரண்டு மட்டும் நிறைந்திருந்தன.
டேமியனும் கல்யாணியும் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். இருவர் விழிகளும் தெள்ளத் தெளிவாய்ப் பரந்து கிடந்த வானத்தில், அதில் ஊர்ந்து கொண்டிருந்த வெண்ணிலாவில்.
மதியவன் குளிர்மையை வாரியிறைத்தான். அச்சுற்றமே மயங்கிக்கிடந்தது. கல்யாணி, டேமியன் மனங்களில் மட்டும் இழப்பின் வெம்மை பொங்கி வழிந்துகொண்டிருந்தது.
மௌனமும் தனிமையும் இருவருக்குமே பழகியதுதான். அவற்றுக்கு ஆட்பட்டுத் துவண்டு போவதும் வலிக்க வலிக்கப் பிடுங்கி உதறி விடுபடுபவதும் அவர்களுக்கு ஒன்றும் இயலாத காரியமன்று.
ஆனால் இன்று, அருகில் ஆள் …அதுவும் நட்பில் இணைந்தவர்கள் இருக்கவே மௌனித்திருந்தார்கள். அக்கணம், இருவரையும் தனிமையுணர்வு கவ்வி இழுத்ததா என்றால் இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. தாம் இழந்தவைதான் பூதாகரமாகத் தெரிந்தன.
செருமல் ஒன்றில் அமைதியைக் கலைத்தான், டேமியன். கையிலிருந்த கோப்பிக்கோப்பையை முன்னால் எட்டி மேசையில் வைத்துவிட்டுச் சாய்ந்து கொண்டான். பிடரிக்குச் சென்ற இரு கரங்களும் முண்டு கொடுக்க உதவின. அப்போதும் பார்வை தெளிந்த வான்பரப்பில்!
கல்யாணியோ, எழுந்து போவோமா என்று, தொண்டைவரை வந்த வார்த்தைகள் செயலிழந்து போக அசையாதிருந்தாள். உள்ளங்கைக்குள் வெது வெதுப்பில் இருந்த கோப்பி, அவள் உதட்டில் பார்வையிருக்கச் சலிப்போடு கிடந்தது.
அவளைத் திரும்பிப் பார்த்தான், டேமியன். அவனையும் அறியாதே வாய் திறந்திருந்தான்.
“இப்பிடி எத்தனையோ நாள்கள் விடிய விடிய வாய் ஓயாமல் கதைச்சுக்கொண்டு நாங்களும்… நானும் பியங்காவும் இருந்திருக்கிறம்.” என்றவனுக்கு, தம்மிருவருக்கும் இடையிலான நெருக்கமான தருணங்கள் நினைவில் வந்து வதைத்தன. விழிகளோரங்கள் கசிந்தன. ஐந்து நீண்ட ஆண்டுகளாயிற்றே! துணையின்றி, அவன் அன்பு மனைவியின் அருகண்மையின்றி எப்படித்தான் இருந்தானோ என்றிருந்தது. நினைவுகள் பின்னிப்பிணைந்து ஆழியின் கொந்தளிப்போடு புரண்டெழுந்தன.
கல்யாணி திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் வெதும்புவது,துயருருவது அப்பட்டமாகத் தெரிந்தது. பியங்கா, இவன் மனைவி. இத்தாலி நாட்டுப் பெண். ஒரு ஆசிரியை.பனிச்சரிவில் இறந்தாள் என்றது மட்டுமே இவளுக்குத் தெரியும். அதற்கு மேலும் அறிந்துகொள்ளும் ஆவல் இதுவரை எழுந்ததில்லை. இப்போதும் தான். ஆனால், அவனுக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கிறதே! அது அவனுக்குப் பெரும் ஆதரவாக இருப்பின், அவள் எவ்வளவுக்கும் கேட்டுக்கொள்ளத் தயார்!
மனைவியின் இழப்பின் பின் இப்போதுதான் அவள் பற்றி வாய் திறக்கிறான், டேமியன்.
“அங்க சுத்தி இங்க சுத்தி எங்கட எதிர்காலம் பற்றி நிறையவே கதைப்பம் கல்யாணி. எவ்வளவு திட்டங்கள்! அத்தனையும் ரசித்து ரசித்துப் போட்டாள். எல்லாம் இவ்வளவு கெதியா என்னைவிட்டுப் போயிரத்தானோ! இப்பவும் அவள் என்னோட இல்லை எண்டதை, அவள் இல்லாம ஐஞ்சு வருசங்களா நான் வாழ்ந்திட்டன் எண்டதை நம்ப ஏலாமல் இருக்குக் கல்யாணி.”என்றவன் குரல் கரகரத்து நலிந்தொலித்தது.
உருவம் போல், அவன் குரலிலும் எப்போதும் கம்பீரம் தொனிக்கும். நறுக்குத் தெறித்தாற் போன்றுதான் கதைப்பான்.அவளறிய, இப்படி, நீளமாகக் கதைப்பதே இதுதான் முதல் தடவை.
மேல் கைகளால் மாறி மாறி விழிகளைத் துடைத்துக்கொண்டான்.
பியங்காவை முதன் முதலில் சந்தித்த நாளை நினைவு கூர்ந்தான். சின்னக் குரலில் பகிர்ந்து கொண்டவன் முகத்தில் பதிந்த விழிகளை அகற்ற முனையாது அமர்ந்திருந்தாள், கல்யாணி.
தம் இருவருக்குமிடையிலான நல்ல நட்பு அதுபாட்டில் அடுத்த கட்டம் நகர்ந்ததாம். இருவருக்குமே அதில் வியப்பாம். ‘ சிலோன் டேஸ்ட்’ டேமியன் தந்தை நடத்திக்கொண்டிருக்கையில், அங்கு, இருவரும் வேலை செய்தார்களாம்.
ஒருநாள், அவள் ஆசையாகக் கேட்கிறாள் என்று குழல் பிட்டும் நண்டுக்குழம்பும் சமைத்துக் கொடுத்தானாம். சாப்பிட்டவள் உறைப்பில் துள்ளினாலும் ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டாளாம். தான், அவனை நேசிப்பதாகச் சொன்னாளாம். சுற்றி நின்றவர்கள் ஆரவாரித்தது, தந்தை அதிர்ந்து உறைந்து போனது என்று, கண்முன்னால் காட்சிகளைக் கொண்டுவந்து கடைபரப்பினான், டேமியன்.
சட்டென்று மாறியொலித்த அவன் குரலே , அவன் எப்பேர்ப்பட்ட காதலன் என்றுணர்த்தியது. பியங்காவில் அவன் வைத்துள்ள நேசத்தையும் தான். இத்தாலி நாட்டுப் பெண்ணென்று வீட்டில் பலமாகவே எதிர்த்ததையும் மீறிக் கல்யாணம் செய்ததையும் சொன்னான்.
இவள் விழிகள் கலங்கிக் கசிந்தன. அவன், மடை திறந்த வெள்ளமாகச் சொல்லிக்கொண்டு செல்வது, தன் சிறு அசைவாலும் தடைபட்டுவிட்டால் என்று, மூச்சைக் கூட சத்தமாக இழுத்துவிடவில்லை. ஆடாது அசையாதிருந்து கேட்டுக்கொண்டிருந்தாள், கல்யாணி.
நிமிடங்கள் உருள உருள, அவள் மனம் எவ்வளவு சொன்னாலும் சொல் கேட்காது தலைகுப்புற விழுந்து பிரண்டு பிடிவாதம் செய்து, சூர்யாவின் கரத்தை இறுக்கப் பற்றிக்கொள்ள ஆசைகொண்டு அந்தரித்தது. எதிர்காலம் பற்றிய அவர்களின் அளவளாவல்கள் ஒன்று ஒன்றாகப் பசுமையாக மனத்தில் வலம் வர, சிலைபோல் அமர்ந்திருந்தாள், கல்யாணி.
“எங்கட கலியாணத்துக்குப் பிறகுதான் மிகச் சாதாரணமா இருந்த இந்த டேமியன் முன்னேறத் தொடங்கினான், கல்யாணி. இப்ப இருக்கிற ‘பெட் அண்ட் பிரேக்பாஸ்ட்’(B &B ) அப்பார்ட்மெண்ட்ஸ் தொடங்கி, இந்த வீடு கூட ரெண்டு பேருமாச் சேர்ந்து வாங்கினதுதான். இந்த வீட்டில ஒவ்வொரு மூலையையும் பார்த்து பார்த்துக் கட்டினவள் அவள்.” கசங்கியொலித்த குரலில் சொன்னான்.
“எல்லா விசயத்திலும் எனக்குச் சரிசமனா நிண்டவள், உழைச்சவள் சாவில மட்டும் என்ன விட்டுட்டுப் போய்ட்டாள்.” என்றபோது, விழிகளால் நீர் உருண்டு தெறித்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“குறையெண்டு ஒண்டு …அதெல்லாம் ஒரு குறையே இல்ல எண்டு நான் சொன்னாலும் பியங்கா எப்பவும் கவலைப்படுவாள். அதிலும் என்னைப் போல ஒரு மகன் வேணும் எண்டு நெடுகிலும் சொல்லுறவள். எங்களுக்கு எண்டு ஒரு குழந்தை …அந்தக் குடுப்பின இருக்கேல்ல! கடைசிவரை அவளுக்கு அதான் பெரிய குறையா இருந்தது.” என்று அவன் சொல்லவும் திடுக்கிட்டுப்போனாள், கல்யாணி.
“பிள்ள இல்லையா…அப்ப இவே மூண்டு பேரும் ஆர்? அவையள் உங்கட பிள்ளைகள் இல்லையா டேமியன்? அப்ப அவேட அப்பா அம்மா ஆர்?” என்றவளுக்கு, அவன் உடனே பதில் சொல்லவில்லை. முகம் இறுக அமைதியாக இருந்தான்.
அவன் மனத்தில், ஏன், இன்று இதில் அமர்ந்து, இவளோடு கதைக்க ஆரம்பித்தான் என்ற கேள்வி முளைத்து முழித்துப் பார்த்தது.
“ சுனிமல் இனி ஒண்டும் கதைக்கமாட்டான், தயவு செய்து வந்து பரிசுகள பிள்ளைகளோட நிண்டு குடுத்திட்டுப் போங்க கல்யாணி.” என்று, வற்புறுத்தித்தான் அழைத்து வந்தான்.
“ எனக்குப் பிடிக்கேல்ல எண்டுறத அவரிட்டச் சொல்லிட்டன், பிறகென்ன திரும்ப திரும்பக் கதைக்கிறது?” என்ற முணுமுணுப்போடு வந்தவள், டேமியனும் அவனும் கதைப்பதைக் கண்டாள்.
அதன்பின், சுனிமல் இவளை அணுகவில்லை. முகம் இறுக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போயிருந்தான். எல்லோரும் சென்றபின், சுமதியும் விடிய வேலைக்கு எழ வேண்டும் என்று சென்றுவிட, வீட்டையும் சமையலறையும் ஒதுக்க உதவிக்கொண்டு நின்றாள், கல்யாணி. எல்லாம் முடியவிட்டுப் புறப்பட்டவளை, “கோப்பி ஒண்டு குடிச்சிட்டுப் போங்க கல்யாணி” என்று டேமியன் சொன்னதும் அவனோடு வந்தமர்ந்திருந்தாள்.
அருகில் வந்தமர்ந்தவனுக்கு, தன்னைப்பற்றி எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல வேண்டும் போலிருந்த உணர்வை என்னவென்று வரையறுத்துச் சொல்வான்!