நித்திலப் பேரொளி-1

சோழ ராஜ்யங்களின் தன்னிகரில்லாத் தடயங்களை தன்னுள்ளே தாங்கி ஓங்கி உயர்ந்து நின்றது ராஜராஜேஸ்வரத்தின் பிரகதீஸ்வரர் ஆலயம்.

சோழப் பேரரசின் கட்டிடக்கலையின் மேன்மைகளை தன் மேனி முழுவதும் விழுங்கி விரிந்து பரந்து கிடந்தது அக்கோயில்.

மிதமான குளிரும் இதமான சூரியனும் கட்டிக் கொண்டு ஒட்டி வந்த மாதிரியான ஒரு காலை வேளை.

தாண்டவத்திற்கு சொந்தக்காரனான சிவபெருமானின் சன்னதியில்

‘காத லாகிக்

  கசிந்துகண்ணீர்மல்கி

ஓது வார்தமை

  நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும்

  மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம்

  நமச்சி வாயவே’

திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தை தன் கணீர் குரலில் ஓதுவார் பாட, கண்கள் மூடி ஊனும் உயிரும் உருக கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் ஆறடி இரண்டு அங்குல உயரமும், திண்ணிய மார்பும், கம்பிரம் என்னிடம் கடன் பெற வேண்டும் என்னும் நெஞ்சுரம் கொண்ட தோற்றமும், தீடசண்யம் நிறைந்த முகமும் தாங்கி, மாநிற சோழ ராஜன் இப்படித் தான் இருந்திருப்பானோ என்று ஐயம் கொள்ளும் விதமாக ஒரு ஆண்மகன்.

“ஐயா சேரா, இந்தாய்யா விபூதி” எண்பதுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த பட்டர் நமச்சிவாயம் அழைக்க

“கொடுங்க சாமித்தாத்தா, நம்ம ஓதுவார் பாடியதில் சிவன் மேல காதலாகி கசிந்துருக்கிட்டேன்” சிரித்துக் கொண்டு வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டான் ஆதேஷ் சேரமான்.

“ஹாஹாஹா, சேரன் பத்து வயதில் இருந்து இது தான் சொல்றார்.  இந்த சிவன உன் நெஞ்சுக்குள்ள கட்டி வச்சுருக்க, பாரு நீ வந்தா மட்டும் இவன் எப்டி பிரகாசிக்கிறான்னு” என சன்னதியைச் சுட்டிச் சொல்ல

“ஹாஹா..என் பத்து வயதிலிருந்து நீங்களும் இது தான் சொல்றீங்க”  என்று கூறிக் கொண்டிருக்கும் போது அவனது தொலைபேசி அழைத்தது.

“ஹலோ, ம்ம் சொல்லு லிங்கா, ம்ம் பிரகதீகிட்டத் தான் அப்பாயின்மெண்ட்.  பார்க்க வந்தேன். வரேன்டா. பேசிட்டே இருந்தா மணி தான் ஆகும். அவர் என்னைக்கு கத்தாம இருந்திருக்கார். இன்னைக்கு புதுசா சொல்ற. எஸ் ஜஸ்ட் புட் ஆப் தெ போன் மேன்”  புன்முறுவலோடு சொல்லியவன் பட்டர் நமச்சிவாயத்திடம் சொல்லிக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வந்தான்.

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து சூழலின் இதத்தை தன் நுரையீரலில் நிரப்பியவன் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தான்.

இது பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றால் வியக்காமல் இருக்க முடியவில்லை.  வெறும் ஏழு வருடங்களில் இத்தனை  அற்புதமான கோவிலைக் கட்டினார்கள் என்றால் மெய் சிலிர்த்தது அவனுக்கு.  எத்தனை அறிவுசார் சமூகம் நம் முப்பாட்டன்கள் என எப்போதும், போல் இப்போதும் வியக்க ‘டேய் அப்பா சேரா, உன் முப்பாட்டனுக்கு துதி பாடுவது இருக்கட்டும். கிளம்பு முதல்ல.  காலையிலேயே கச்சேரிக்கு ஜதி  சேர்க்கப் போறார். கேட்கணுமா உனக்கு’ அவனது மனசாட்சி மந்திரிக்க தலையசைத்து சிரித்துக் கொண்டவன் தன் கருநீல நிற பிஎம்டபிள்யூவைக் கிளப்பிக் கொண்டு விரைந்தான்.

பழங்கால அரண்மனையை இன்றைய நவீன வசதிகளுடன் கட்டினால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது அந்த பங்களா.

நீண்டு நெடுகிய ஓடு பாதையைக் கடந்து வீட்டின் உள்ளே செல்ல முன் வரவேற்பு அறையிலேயே கைகளைப் பிசைந்த வண்ணம் முகத்தில் டென்ஷன் நிறைந்திருக்க நின்று கொண்டிருந்தார் வசந்த நாச்சியார்.

ஆதேஷைப் பார்த்ததும் விரைந்து வந்தவர், “ஏன் பெரியவனே என்னை டென்ஷன் பண்ற, வா வா அப்பா வரப் போறார்” இவன் கைகளைப் பிடித்துக் கொண்டவர் முன்னே செல்ல முயன்றார்

தாயைச் சீண்டிப் பார்க்கும் ஆவல் கொண்டவன் நின்ற இடத்திலிருந்து அசையாமல், “உங்க மன்னர் மேல் உங்களுக்கு இருக்கிறது காதலா இல்ல பயமா?” நக்கல் தெறித்தது இவனில்

“ம்ம்ம் ரெண்டும் தான், இப்ப இது ரொம்ப முக்கியம்.  பேசாம வா” தாய் இவன் கையைப் பிடித்து இழுக்க

“பட் எது அதிகமாக இருக்கு” கால்களை ஊன்றி நின்று கொண்டான்

“ஒரு உதை கொடுக்கப் போறேன் நான் இப்போ” வசந்தாவின் முகம் பயத்தை காட்ட

“ஹாஹாஹா…இருபத்து ஒன்பது வருஷமா இதே டயலாக் சொல்லுங்க.  பட் செய்திருக்கிறீர்களா ராணி” மகன் கிண்டல் செய்தான்

“வாம்மா…” தாய் பாவமாகப் பார்க்க

அதற்கு மேல் வாதாடாமல் இணைந்து நடந்தான்

அந்த பெரிய உணவுக் கூடத்திற்குள் நுழைய, “வா கண்ணா, கொஞ்சம் முன்னவே போய்ட்டு வர மாட்டயா? ஏன் அண்ணியை தினமும் டென்ஷன் பண்ற” கடிந்து கொண்டார் கூட்டத்தில் இருந்த சாப்பாட்டு மேசையின் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த வசுந்தரா நாச்சியார்

“நான் என்ன ஊரையா சுத்திட்டு வரேன்.  என் பிரகதீயைப் பார்க்கப் போனேன். அட்வைஸ் எனக்கு மட்டும் தான்.  உன் அண்ணன்ட ஒரு வார்த்தை பேசறியா”  அருகில் அமர்ந்து தன் இடது கையை அவரின் தோளில் போட்டுக் கொண்டான்.

“ச்சூ…கேள்பிரண்ட் மாதிரி பொண்ணு பெயரைச் சொல்லிட்டு.  கையை எடு ராஜா.  வரப்போறார்”

“யாரு மன்னரா” நக்கல் இவனில்

இவன் கன்னத்தில் செல்லமாக ஒன்று போட்டவர் இவனது கையை எடுத்து கீழே விட்டார்.

“ஹலோ கைய்ஸ்” தன் ஆர்ப்பாட்டமான குரலோடு உள்ளே வந்தாள் இருபத்து மூன்று வயது மதிக்கத்தக்க யுவதி ஒருத்தி

“வாய்ல போடப் போறேன் நயன்” அமர்ந்திருந்த வசுந்தரா குரல் தர

“ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையில் பிழை” என சொல்லிக் கொண்டு தோள்களைக் குலுக்கிக் கொண்ட நயனா ஆதேஷின் அருகில் வந்து,

“இங்கி பிங்கி பாங்கி, இது ஒரு டாங்கி, நான் இல்ல மங்கி, நான் போட்டுருக்கேன் அங்கி, இப்போ போகப்போறேன் வங்கி… இங்கி பிங்கி பாங்கி” என ஆதேஷையும் அவனுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த அவனது இரட்டையான லிங்கேஷ் சேரமானையும் தன் ஒரு விரல் காட்டி மாற்றி மாற்றிச் சொல்லியவள் இறுதியில் அவளது சுட்டு விரல் ஆதேஷில் முடிய அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“ஹாஹாஹா”ஆதேஷ் சிரித்தான் இவளின் வழமையான காலை நேர கலாட்டாவில்

எதிரே இருந்த லிங்கா முறைக்க, தன் நாக்கை இடது வலமாக நீட்டி பழிப்புக் காட்டினாள்.

“ஐயோ இந்த இங்கி பிங்கி இன்னைக்கும் என் அண்ணா பக்கத்தில் உட்கார்ந்துட்டாளா, ஹும்” தன் ஒரு காலை தரையில் உதைத்தவாறு  வந்து லிங்கா பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் இருபது வயது நிரம்பிய ஜான்வி

“ஜானு ஒரு ஜோக் சொல்லவா” அவளது வலப்புறம் அமர்ந்திருந்த அவளது இரட்டையான பிருத்வி சேரமான் கேட்க

“வேணாம்னா விட வா போகிறீர், சொல்லும் சொல்லித் தொலையும்” ஜான்வி  அலுப்பாகச் சொன்னாள்.

“மழை மேகத்திற்கு ஆப்போசிட் என்ன?” என பிருத்வி கேட்க

“ம்ம்ம்…வெள்ளை மேகம்?” ஜான்வி அவனைப் பார்த்தாள்

“நோ..நயன்க்கா நீ சொல்லு” பிருத்வி நாயனாவைப் பார்க்க

“ம்ம்ம் கொளுத்துர வெயில் சரியா?”

“நோ..இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் அமைச்சரே” பிருத்வி நாயனாவிடம் கேலி செய்ய

தலையைச் சொறிந்தவள், “தெரியலடா பிரு” உதட்டை சுளித்தாள்

“அடுத்தவங்கள கிண்டல் பண்ண மட்டும் தெரியும் உனக்கு” முறைத்தான் லிங்கா

“ஓ நல்லா தெரியும், இப்போ என்ன அதுக்கு” நயனாவும் முறைத்தாள் பதிலுக்கு

“ஷ்ஷ்…டேய் இடியட் சொல்லித் தொலையேன்டா, சண்டைக்கோழிகள் சிலிர்க்குதுங்க”   என லிங்காவையும் நாயனாவையும் சுட்டிக் காட்டி பிருத்வியிடம் ஆதேஷ் சொல்ல

“மழை மே கம்  அதுக்கு ஆப்போசிட் மழை மே நாட் கம்” சிம்பிள் தோள்களைக் குலுக்கினான் பிருத்வி

“உன்னை கொல்லப் போறன்டா கோட்டி பாய்” அருகில் இருந்த ஜான்வி பிருத்வியின்  புஜத்தில் குத்த

அறைக்கு வெளியே இருந்து ஆட்கள் வருவதற்கான ஓசை கேட்டது

“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரம சேர பரம்பரையின் நூற்று இருபதாம் தலைமுறை ராஜா சேதுபதி சேரமான் பராக் பராக் பராக்” என மெல்லிதாக கூறினாள் நயனா

“ஷ்ஷ்… ஷட் அப்” சிரித்துக் கொண்ட ஆதேஷ் அவளை அதட்ட, வாயை கப்பென மூடிக் கொண்டாள் பெண்

அறையின் உள்ளே எண்பது வயது சேதுபதி சேரமானும், அவரைத் தொடர்ந்து  அவரது மூத்த மகனான விக்ரமச் சேராமானும், இளைய மகனான  விஜயலாயன் சேராமனும், மருமகன்  அருள்மொழியும் வந்தனர்

சேதுபதி சேரமான் அந்த நீள் செவ்வக சாப்பாட்டு மேசையில் நடுநாயகமாக அமர்ந்து கொள்ள, அவரின் இரு புறமும் மகன்கள் அமர்ந்து கொண்டார்கள்.  அருள்மொழி விக்ரமனை அடுத்து அமர்ந்து கொள்ள பணியாளர்களோடு வந்தார் சேதுபதியின் மனைவி இந்த குடும்பத்தின் தலைவி கோப்பெருந்தேவி நாச்சியார்.

அனைவரும் அமர்ந்து கொள்ள, அதுவரை சலசலத்த இளைய தலைமுறை தங்கள் சேஷ்டைகளை நிறுத்திக் கொண்டனர்.  அன்றைய நாளுக்கான உணவு படலம் இனிதே ஆரம்பமானது.

இளையவர்கள் விளையாட்டாக கேலி செய்தாலும் உண்மையும் அதுதான்.  இக்குடும்பம் சேர பரம்பரையின் வழித்தோன்றல்கள் தான்.

சேதுபதி சேரமான் வீட்டின் மூத்தவர் அவருக்கு விக்ரமச் சேரமான், விஜயாலயச் சேரமான் மற்றும் வசுந்தரா நாச்சியார் மூவரும் பிள்ளைகள்.

மூத்தவர் விக்ரமனின் மனைவி வசந்தா நாச்சியார், இவர்களது புதல்வர்கள் இரட்டையர்களான ஆதேஷ் மற்றும் லிங்கேஷ்.

அதற்கு அடுத்தவர் விஜயாலயன் அவரது துணைவி சங்கமித்ரா நாச்சியார், இவர்களது பிள்ளைகள் இரட்டையர்களான பிருத்வி மற்றும் ஜான்வி.

கடைசிப் பிறப்பான வசுந்தரா நாச்சியாரின் கணவர் அருள்மொழி மற்றும் இவர்களுக்கு ஒரே ஒரு புதல்வி நயனா.

மூத்த அண்ணனுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட வசுந்தரா, தனது கணவருக்கு பெற்றோரோ உடன் பிறந்தோர்களோ இல்லாத காரணத்தால், அந்த வீட்டிலேயே வாழ்கிறார் குடும்பத்துடன்.

பாரம்பரியமும், பாசமும், வலது கை கொடுப்பதை இடது அறியாது தானம் செய்வதிலும் இக்குடும்பம் பெயர் பெற்றது.

வழி வழியாக இவர்கள் செய்யும் குடும்பத் தொழிலான சேரன் ஜவுளி கடைகளும், ஆடை தயாரிப்பு நிறுவனங்களும்  மாநிலம் முழுவதும் அமைந்திருக்கிறது.

வீட்டின் சிறியவர் முதல் பெரியவர் வரை தொழில் மற்றும் படிப்பில் பிஸியாக இருந்தாலும், காலை மற்றும் இரவு நேர உணவின் போது பெரியவர் வருவதற்கு முன் கூடிவிட வேண்டும் என்பது அக்குடும்பத்தின் எழுதப்படாத சட்டம்.

அந்த எழுதப்படாத சட்டத்தை எப்போதும் கேள்விக்குறியாக்குவதே நம் நாயகன் ஆதேஷின் ஆதர்ச வேலை.

காலையில் அவனது பிரகதியைக் காணாது அவனது நாட்கள் நகராது.  அப்படி என்றாவது தாமதம் ஆகிவிட்டால், இருக்கின்ற பெண்மணிகளுக்கு எப்போதும் பதட்டம் தான்.

ஏனென்றால்,  தந்தை விக்ரமனுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது எப்போதும் ஆதேஷ் தான்.  குடும்பத் தொழிலில் விருப்பமில்லை, எனக்கான அடையாளத்தை நானே உருவாக்குவேன் என அவன் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்க, தந்தையின் அதிருப்திக்கு ஆளானான்.

சொல் பேச்சை தட்டாமல் கேட்கும் லிங்கேஷ் தான் அவரின் பிரியமான பிள்ளை என்றால் மிகையாகாது.

இதனால் இருவருக்கும் எப்போதும் கருத்து மோதல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

இருவருக்குமான பேச்சு வார்த்தைகள் கூட அதிகபட்சம் இரண்டு வரிகளுக்குள் நின்றுவிடும்.

தந்தை வடக்கு என்றால், தனயன் தெற்கு என்று நிற்பான்.

இவர்களின் இருவருக்கும் இடையில் கிடந்து அல்லாடுவது என்னவோ வாயில்லா பூச்சி வசந்தா தான்.

தந்தை மகனிடையே ஒரு தடித்த அன்பிருந்தாலும், அதை என்றும் தந்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை.  அன்பைத் தாண்டி விக்ரமனின் ‘என் சொல்லைக் கேட்க வேண்டும்’ என்னும் ஆளுமையும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது.

ஒரு அழகான பாசமான கூட்டுக் குடும்ப அமைப்பில் அன்பும் வம்பும், கருத்து மோதலும், கருணையின் காதலும் கவிழ்ந்து கிடப்பது இயற்கை தானே.

error: Alert: Content selection is disabled!!